Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

சரியும் சாம்ராஜ்யங்கள்; வெல்லும் சூத்திரன்

ஆனாரூனா

பிரிட்டிஷ் ஆட்சி இங்கே நிலவியபோது, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்கிற முழக்கம் நாடெங்கும் எதிரொலித்தது. ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்கிற முழக்கம் ஒன்றாக இருந்தபோதிலும் அதன் சாரப் பொருள் இரண்டாக இருந்தது. ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்றால் சோஷலிசம் மலர்க’ என்கிற பொருளில் அதனை முழங்கினார்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரோ ‘ஏகாதிபத்தியம் ஒழிக; ஏகாதிபத்தியம் வளர்வதற்காக’ என்கிற முனைப்பிலேயே இருந்தார்கள்.

‘அவர்கள்’ ‘சுதந்திரப் பிரஜை’களாக இருக்க விரும்பினார்கள். ‘இவர்கள்’ ‘சுதந்திரக் கொள்ளையராக’ வளர ஆசைப்பட்டார்கள். ஒருவழியாக இருபிரிவினரும் எதிர்பார்த்த அந்த நள்ளிரவு வந்தது. ‘யூனியன் ஜாக்’ இறங்கி, மூவண்ணக் கதர்க்கொடி ஏறியது. ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று கூச்சலிட்டவாறு சின்னப் பிள்ளைகள் மிட்டாய் சப்பினார்கள். ‘பெரிய இடங்களில்’ போதை ஏறிய உற்சாகம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னணிப் படையாய் நின்ற வியர்வைக் குலமோ, திகைப்பில் ஆழ்ந்தது. “நாம் எதிர்பார்த்த சுதந்திரம் இதுதானா?’’ தேசிய விடுதலை என்பது வேறு, சுதந்திரம் என்பது வேறு என்று பலருக்குப் புரிய ஆரம்பித்தது. தேசிய விடுதலை என்பது அதிகார மாற்றத்தைக் குறிப்பதாகவும், சுதந்திரம் என்பது சமூக மாற்றத்தைக் குறிப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் கூறினார்கள். சுதந்திரத்துக்கு முன்னிபந்தனை சோஷலிசமே என்பதை வலியுறுத்தினார்கள்.

ஆனால் அது காலம் கடந்த ஞானோதயம் ஆனது. ஆட்சி மாற்றத்தால் அதிகாரம் பெற்றவர்கள் சுதந்திரத்துக்கு ஆசைப்பட்ட மக்களை மிருகங்களைப் போல் வேட்டையாடினார்கள். அந்த மக்களுக்காகப் போராடிய தலைவர்களின் தலைகளுக்கு விலை வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அடக்கு முறைகளைவிட இந்திய அடக்கு முறைகள் பயங்கரமாய் இருந்தன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொன்ற இந்தியர்களை விட இந்திய ஏகாதிபத்தியம் கொன்ற இந்தியர்கள் ஏராளம். ஆனாலும் சுதந்திரப் போர் தொடர்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம் இந்திய ஆதிக்க சக்திகளுக்கெதிராகத் திரும்பியிருக்கிறது. இந்திய விடுதலைப் போர் அதன் இலக்கைத் தவறவிட்டுவிட்டது. விடுதலை சிலருக்கு ‘சொர்க்கத்தையும்’ பலருக்கு ‘நரகத்தையும்’ தந்தது.

வறுமை, அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், ஊழல், லஞ்சம், போலீஸ் அராஜகம், சமான்யர்களுக்கு நீதி மறுப்பு... அவலங்களும் அக்கிரமங்களும் தொடர்கின்றன. இந்த முரண்பாடுகளுக்கும் முடிவில்லாத் துயரங்களுக்கும் காரணம் என்ன? சுதந்திரதேவி இங்கே ஆதிக்க சக்திகளின் ஆசை நாயகியாகிவிட்டாள். ஆதிக்க சக்திகள் என்றால்? பண்ணைப் பிரபுக்கள், மிட்டா மிராசுகள்,ஆலை அதிபர்கள், கோடீஸ்வரக் கோமான்கள் என்று இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் அடையாளம் காட்டப்பட்டார்கள். வேறு சிலர் இன்னும் விரிவாக அரசியல் விஞ்ஞானப் பார்வையில் இந்திய அரசு பற்றி விளக்கம் தந்தார்கள். இது பூர்ஷுவா அரசு; இல்லை; இது தரகு முதலாளித்துவ அரசு. தவறு; அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனித்துவ அரசு. சமூக அக்கறையும், அரசியல் ஆர்வமும் உள்ள மத்திய வர்க்கத்துப் படிப்பாளிகள் அரசு பற்றிய தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

தந்தை பெரியாரோ, படித்தோர்க்கும் பாமரர்க்கும் புரிகிறமாதிரி இந்திய விடுதலைப் போராட்டத்தின் புறத்தோற்றத்தையும் உள்ளீடுகளையும், வர்க்கத் தன்மைகளையும், தத்துவப் பின்னணிகளையும், தலைமைப் பண்புகளையும் இம் மாதிரியான சொல்லாடல்களைத் தவிர்த்து, முகத்தில் அறைகிறமாதிரி இந்திய ஆதிக்க சக்திகளை அடையாளம் காட்டினார்.

பார்ப்பனர்
பனியாக்கள்
பார்சிகள்

இந்த முக்கூட்டணியின் முரட்டுப் பிடிக்குள் சிக்கியே இந்தியநாடும் மக்களும் வதைபடுகிறார்கள். அரசியல் கட்சிகள் எத்தனை இருந்தாலும், அரசதிகாரம் யாருக்குத் தரப்பட்டாலும், அரசு எந்திரம் இவர்களுக்காகவே நடத்தப்படுகிறது; இவர்களாலேயே நடத்தப்படுகிறது.

மிக நுட்பமான, ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட, வாதப் பிரதிவாதங்களால் ஒதுக்கித் தள்ள முடியாத நிதர்சன உண்மை இது! இந்தியாவின் எந்தத் தொழிலும் டாட்டாவிடமிருந்து தப்பியதில்லை. உணவுப் பொருள்கள், உல்லாசப் பொருள்கள், அவசியப் பொருள்கள் அலங்காரப் பொருள்கள் எல்லாம் டாட்டாவிடமிருந்துதான். தரையில், கடலில், நதியில், மலைகளில், வான வெளியில் எங்கும் டாட்டாவின் ஆதிக்கம்தான்.

தமிழ்நாடு, கேரளம், கன்னடம், வங்கம், டார்ஜிலிங், அசாம் என்று மலைப்பிர தேசங்கள் அனைத்தும் டாட்டாவுக்குச் சொந்தம். காபி, தேநீர், பால், சர்க் கரை, சிமெண்ட், இரும்பு, உப்பு, மருந்து மாத்திரை, கண்ணாடி, காகிதம், பேருந்து, கார், விமானம், ரயில் என்று சிறிய பெரிய அத்தனை தொழில் துறைகளும் டாட்டாவின் ஆதிக்கத்தில்.

இந்திய மக்களின் பிறப்பு, வளர்ப்பு, வனப்பு, வைத்தியம், பைத்தியம், இயற்கைச் சாவு, தற்கொலைகள், படு கொலைகள் எல்லாம் டாட்டாவாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. ஏகபோகம், ஆதிக்கம் என்கிற அரசியல் பதப்பிரயோகங்களுக்கெல்லாம் எளிதில் புரிகிற உதாரணம் டாட்டா குழுமம்தான். டாட்டாவும் அவர்தம் பரிவாரங்களும் பார்சிகள்.

அடுத்து பிர்லா குழுமம். காந்தியடிகளையே மயக்கிய கூட்டம். என்னை மனிதனாக மாற்றுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான். பிர்லா என்று பிர்லாவுக்குத் துதிபாடினார் காந்தியார். இந்த இறைதூதரின் அந்தரங்க லீலைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்ட நாட்களிலேயே ‘பிர்லா மாளிகை மர்மங்கள்’ என்கிற தலைப்பில் புத்தகமே வெளியிடப்பட்டது.

இன்றைக்கும் இந்தியாவில் பெருவணிகராக தரகுமுதலாளிகளாக, வட்டிக்கடை முதலாளிகளாக, அரசியல் வியாபாரிகளாக விளங்குகிறவர்கள் இந்த பனியா - மார்வாடி கூட்டமே!

ஷேக்ஸ்பியர் சித்திரித்த ஷைலக் கதாபாத்திரத்து வாழும் ஆதாரங்கள் இந்த மார்வாடிகள். இந்தியாவில் கோடிக் கணக்கான குடும்பங்கள் இவர்களிடம் அகப்பட்டு, வட்டிகட்ட முடியாமல், இருந்த எல்லாவற்றையும் இழந்து கதியற்றுக் கண்ணீர் வடிப்பது இவர்களால்தான். வட்டிக்கு, வட்டி, அது போட்ட குட்டி என்று பணம் கொட்டினாலும், வடநாட்டுக் கொள்ளைக் கூட்டத்துக்குப் பயந்து தமிழகம் வந்த இவர்கள், தமிழர்களின் மூலை முடுக்கெல்லாம் பரவி விட்டார்கள். நிலங்கள், வீடுகள் என்று பலவிதத்திலும் தமிழக நிலப்பரப்பை இன்று வளைத்துப் போட்டுக் கொண்டார்கள். தமிழகமே இன்று ‘சௌகார்பேட்டை’ யாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழக நில உரிமையாளர்களாக மார்வாடிகள் இருப்பார்கள். தமிழர்கள் வாடகைக்குக் குடியிருப்போராக மாற நேரிடும் என்று சிலர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது மெய்ப்படவும் வாய்ப்புண்டு. இன்னொரு கூட்டம் மங்கை உருவில் மகான் உருவில் இந்த மண்ணை வளைத்த மாபாவிகள் என்று கலைஞர் அறிமுகப்படுத்தினாரே அந்த ‘வசந்தசேனை’ வம்சத்தார்.

“கைவிரித்து வந்த
கயவர் நம்மிடைப்
பொய் விரித்து,
நம்புலன்கள் மறைத்து,
தமிழுக்கு விலங்கிட்டுத்
தாயகம் பற்றி,
நமக்குள உரிமை
தமக்கென்பார் எனில்
வழிவழி வந்த உன்
மறத்தனம் எங்கே?
மொழிப் பற்றெங்கே?
விழிப் புற்றெழுக’’

- என்று புரட்சிக் கவிஞர் இந்த வந்தேறிகளுக்கு எதிராகப் போர் முரசு கொட்டியது வெறும் இனத் துவேஷத்தால் அல்ல! வேத முழக்கங்களோடும், மோக வலைகளோடும் எந்த அரசுக்குள்ளும் - அது முடியரசாக இருந்தாலும் சரி, குடியரசாக இருந்தாலும் சரி - நுழைந்துவிடும் சாமர்த்தியம் இவர்களுக்கே உண்டு.

திராவிட மன்னர்களுக்கு இவர்கள்தான் ராஜ ரிஷிகளாக, ஆசி வழங்குகிறவர்களாக, சாபமிடுகிறவர்களாக சகல மரியாதைகளோடும் விளங்கினார்கள். அறிவுக்கும் புகழுக்கும் வீரத்துக்கும் வெற்றிக்கும் நாங்களே தெய்வீக உரிமை பெற்றவர்கள் என்பது இவர்களது நம்பிக்கை; வாதம்.

மாமன்னன் சந்திரகுப்தன் வீரத்துக்கும் விவேகத்துக் கும், மனிதாபிமானத்துக்கும், மாட்சிமைக்கும் சான்றாக விளங்கியவன். ஆனால், சந்திரகுப்தனின் வெற்றிக்கும் விசால சாம்ராஜ்யத்துக்கும், சாணக்கியவன்தான் மூலவிசை என்றே இன்றுவரை பொய்யுரைத்து வருகிறது ஒரு வரலாற்றுப் புரட்டுக் கூட்டம். உண்மையில் சந்திர குப்தன் அரசியலில் வெறுப்புற்றுத் துறவியாகி மடிந்ததற்கு சாணக்கியனின் அயோக்கியத்தனங்களே காரணம்.

அது எப்படி இருந்த போதிலும் சந்திரகுப்தனை, பிந்துசாரனை, அசோகனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவுக்கு சாணக்கியன் சாகசம் நிறைந்தவனே! இந்தியாவின் பல நாடுகளை ஆண்ட மன்னர்கள், மொகலாயப் பேரரசர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், பிரெஞ்சு, டச்சு ஆட்சியாளர்கள் என்று அதிகார பீடங்களில் இருந்த அத்தனை பேருக்கும் உல்லாசம் தருகிறவர்களாய், ஊக்கம் தருகிறவர்களாய், போதனை செய்கிறவர்களாய், மர்ம மாய்ச் சதி புரிகிறவர்களாய் விளங்கியதும், விளங்குவதும் இந்த சாகச சதிக் கூட்டமே!

எப்படியாவது என்னை எம்.பி. ஆக்குங்கள் என்று கலைஞரின் கழுத்தில் மாலைபோட்டு கையைப் பிடித்துக் கெஞ்சிய வெங்கட் ராமன்தான் எந்த முகாந்தரமும் இல்லாமல், அரசியல் சாசன விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கலைஞர் ஆட்சியைக் கவிழ்த்தார்.

ஏடறிந்த வரலாற்றில் குடிலன் (குடிலன் என்றால் தமிழில் கொடியவன். இதன் வடபுலத்து உச்சரிப்பு கௌடில்யன்) காலத்தில் தொடங்கி இன்று குரு மூர்த்தி சோவானவர்கள் வரை இந்த மர்மக் கலைகளில் தேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பார்சி - பனியா - பார்ப்பனக் கும்பல் எதிர்த்ததற்கு உண்மையான காரணம் ஏகாதிபத்தியம் கூடாது என்பதற்காக அல்ல. ஏகாதிபத்தியத்தின் இடத்திற்குத் தாங்கள் வரவேண்டும் என்ப தற்காகத்தான்.

1947 இல் நடந்த அதிகார மாற்றம் அவர்கள் ஆசைகளுக்குச் சாதகமாகவே இருந்தது. ஆனால், பிரதமர் நேரு ஃபேபியன் சோஷலிஸ்ட் என்பதால் அவரை அவர்கள் வெறுப்புடனேயே தாங்கிக் கொண்டார்கள் என்ற போதிலும் டாட்டா பிர்லா அக்கிரகாரத்து நடவடிக்கைகள் தடையில்லாமல் போய்க் கொண்டுதான் இருந்தன. இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் “பாரம்பரியம் மிகுந்த(?) டாட்டா குழுமத்தையே மிரட்டுகிறார்கள். அடுக்குமா இந்த அக்கிரமம்? ஏ அக்கினி பகவானே வா, அக்கிரமங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்ற பெத்த பெருமாளே வா! சூத்திரர்களால் எங்களுக்குப் பாதுகாப்பில்லை. இவர்களை இப்படியே விட்டால் இனிமேல் (எங்களில்) யாருமே தொழில் செய்ய முடியாது. அதாவது விரும்பியபடியெல்லாம் கொள்ளையடிக்க முடியாதே! ஏய், மன்மோகன், ஏய், அப்துல்கலாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள்தான் இந்தியா! எங்களுக்காகத்தான் இந்தியா! தெற்கிலிருந்து வந்த ஒரு சூத்திரன் எங்களுடன் மோதலாமா?’’ என்று பார்சி, பனியா, பார்ப்பனக் கும்பல் மூன்றும் கட்டித் தழுவி கத்திக் கதறும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் இரு இளைஞர்கள். அவர்கள்தான், மாறன் சகோதரர்கள் - கலாநிதி, தயாநிதி!

ஆதிக்கக் கோட்டைகளும், இரக்கமற்ற இதயங்களும், பிறவிப் பெருமையில் திளைக்கும் அக்கிரகாரத்து வக்கிரங்களும் அதிர்ச்சியில் கலங்கி ஆத்திரத்தில் உளறுகிறார்கள் என்றால், அதற்குக் காரணமான கலாநிதியும் தயாநிதியும் தொடங்கியிருக்கும் ‘சூத்திர’ வியூகம் ஸ்பார்ட்டகஸின் போர் முழக்கத்துக்கு இணையானது. ‘பாஸ்ட்டில்’ தகர்ப்புக்கு இணையானது. இந்த ‘சூத்திர எழுச்சி’யைக் காணவும் கொண்டாடவும் அந்தோ, இன்று தந்தை பெரியார் இல்லையே!

“டாடாவை மிரட்டினாரா தயாநிதி மாறன்? பரபரப்புத் தகவல்கள்’’ - என்கிற தலைப்பில் தினமணி நாளிதழ் (ஏப்ரல் 2, 2006) ஒரு கதையை வெளியிடுகிறது. வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வகை செய்யும் திட்டத்தை டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்ப்பந்தம் செய்து மிரட்டல் விடுத்தது உண்மையா என்பது குறித்து பரபரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன... என்று தொடங் கும் அந்தக் கதை மேலும் தொடர்கிறது.

வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்புத் திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி டாட்டா குழுமத்தை நிர்ப்பந்தம் செய்து மிரட்டியதாக ஒரு புகார் கிளம்பியதாம். (எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆடிட்டர் குருமூர்த்தியும், துக்ளக் சோவும் தங்கள் ‘ஏஜெண்ட்’ மூலம் கிளப்பியதுதான்.) இந்தப் புகார் உண்மை தானா என்பதை அறிந்து கொள்வதற்காக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு பத்திரிகை கேள்விப் பட்டியலை அனுப்பியதாம். இதற்கு உடனடியாக டாட்டா குழுமத்திடமிருந்து பதில் வந்ததாம். “நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம் பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்ப வில்லை’’ - என்று அந்தப் பதில் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்ததாம்.

இப்புகாரை டாட்டா குழுமத்தினர் மறுக்காத காரணத்தால் புகார்களை அவர்கள் உறுதி செய்ததாகவே முடிவு செய்ய வேண்டியுள்ளது, என்று முடிவு கட்டுகிறது தினமணி. முத்தாய்ப்பாக, நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்டு வரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதிமாறன் சிக்கி விட்டதால் இது பெரும் பிரச்சினையாகும் என்பது நிச்சயமாகி விட்டது என்று தினமணி சூளுரைக்கிறது. டாட்டா விவகாரத்தில் ஒருவர் தலையிட முடியுமா? அப்படித் தலையிடுகிறவரை சும்மா விட்டு விடுவோமா? பெரும் பிரச்சனையாக்கி இந்தியாவையே ஸ்தம்பிக்க வைப்போம் - என்று தோள் தட்டுகிறது தினமணி. தினமணியின் செய்திக்காகவே காத்திருந்தவர் மாதிரி; சோவானவர் கொதித்தெழுகிறார்: “டாட்டாவையே மிரட்டுகிறவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டில் யாருமே இனி தொழில் செய்ய முடியாது என்று தொலைக்காட்சியில் ஆவேசம் காட்டுகிறார்.

தொடர்ந்து தூய்மைக்குப் பெயர்போன பாரதீய ஜனதா கட்சி தயாநிதிமாறன் மீதான புகார் குறித்து பிரதமர் விசாரிக்க வேண்டும். தயாநிதி மாறனின் இலாகா மாற்றப்பட வேண்டும் என்று புழுதி கிளப்புகிறார்கள். கருணாநிதியை எனக்குப் பிடிக்கவில்லை என்று ஆங்கிலப் பத்திரிகையின் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ பகுதிக்கு ஓர் அஞ்சல் அட்டை எழுதிப் போட்டாலே ஆட்சியைக் கவிழ்க்கும் ‘அரசியல் கலை’ தெரிந்தவர்கள் நாங்கள். இம்முறை தயாநிதிமாறன் தப்ப முடியாது.

“நேர்மையுடனும் நெறி முறைகளுடனும் (சிரிக்காதீர்கள்!) செயல்பட்டு வரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதிமாறன் சிக்கி விட்டதாகக் கருதப்படுவதால் இது பெரும் பிரச்னையாக உருவாகும் என்பது நிச்சயமாகி விட்டது’’ என்று தினமணி எழுதித் தள்ளிக் குதித்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகவில்லை. எக்ஸ்பிரஸ் சந்திக்கிறது. சோவும் கைக்கூலிகளும் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். பா.ஜ.க. பிரதமர் வரை பிரச்னையைக் கொண்டு செல்கிறது. எல்லாம் டாட்டாவுக்காக. டாட்டாவுக்காக மாத்திரம் தானா?

டாட்டாவுக்குப் பின்னால் கோயங்கா குடும்பமும், குருமூர்த்தி சோ போன்றவர்களும், இதர கைக்கூலிகளும், பா.ஜ.க. தலைவர்களும் ஓரணியில் நின்று ஆவேசம் கொண்டெழுவது தங்களுக்காகவும் தான். ஆனால், தனக்குப் பின்னால் ஒரு பரிவாரமே கூச்சலிடும்போது டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா மௌனம் சாதிப்பது ஏன்? “நீங்கள் (எக்ஸ்பிரஸ் குழுமம்) அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம் பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்ப வில்லை’’ என்று பத்தினித்தனமாக ஒதுங்கிக் கொள்வது ஏன்?

ஒரு பெண், “சபாபதி என் கையைப் பிடித்து இழுத்தார் என்று ராமசாமி புகார் சொல்கிறார். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்தப் புகார் குறித்து நான் கருத்து ஏதும் கூறமாட்டேன்’’ என்று சொன்னால், இந்த விவகாரத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னையோ? நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் தொழில் செய்யும் அவள் வீதிக்கும் வெளிச்சத்துக்கும் வர விரும்புவாளா? டாட்டாவுக்கும் அப்படிச் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், டாட்டா தொடர்பான ஒரு பிரச்னையில் டாட்டாவுக்கு இல்லாத அக்கறை கோயங்கா குழுமத்துக்கு ஏன்? கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ்குழுமம் என்பது இந்திய மொழிகள் பலவற்றில், ஒவ்வொரு மொழியிலும் மூன்று நான்கு பத்திரிகைகள் வெளியிடும் ஒரு பத்திரிகை சாம்ராஜ்யம். பிர்லா மாளிகையில் காந்தி தங்கினாரென்றால், ‘எக்ஸ் பிரஸ் டவரில்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன் தங்குவார். அதாவது இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட் டது என்பது மாதிரி, இந்திய அரசியலைத் தன் தொழுவத்தில் கட்டிப்போடும் வலிமையான நிறுவனம் எக்ஸ்பிரஸ்நிறுவனம்.

கோயங்காவின் மரணத்துக்குப்பின் வாரிசுகளின் சொத்துச் சண்டையில் நிறுவனம் கலகலத்து விட்டது. குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகளின் கருத்துத் திணிப்புகள் பத்திரிகைகளின் தரத்தையும் விற்பனையையும் பாதித்தன. சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது. எக்ஸ்பிரஸ் குழுமப் பத்திரிகைகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய அதே சமயத்தில் வேறொரு நிகழ்ச்சி. முன்னாள் தமிழக அமைச்சர் கே.பி.கந்தசாமி தமது இறுதி நாட்களில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளால், வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த அவருடைய தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகள் முந்திய விற்பனையை எட்ட முடியாமல் பொருளாதார இழப்பில் சிக்கிக் கொள் கின்றன.

கே.பி.கே.யின் மகன் தமது உறவினரான பத்திரிகை அதிபரிடம் போய் நிற்க விரும்பவில்லை. அவருடைய சுயமரியாதை உணர்வும் கடந்த கால கசப்பான அனுபவங்களும் தடுக்கின்றன. அதனால் சன் டி.வி. இயக்குநர் கலாநிதி மாறனுடன் பேசி தினகரனையும் தமிழ் முரசையும் சன் டி.வி. குழுமத்துக்கு விற்கிறார். தமிழ் முரசையும் தினகரனையும் புதிய வடிவில் வெற்றிகரமான பத்திரிகையாக்கிக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார் கலாநிதி மாறன். அவர் விடாமுயற்சி யும், கடின உழைப்பும், எடுத்த காரியம் நினைத்த மாதிரி அமைய வேண்டும் என்பதில் வைராக்கியமும் உடையவர். ‘பூமாலை’ என்கிற பெயரில் ஒரு வீடியோ பத்திரிகை தொடங்கி, இதெல்லாம் இங்கே எடுபடுமா என்று அலட்சியமாக நினைத்தவர்களே பிரமிக்கும் விதத்தில் அதை மெல்ல மெல்ல வளர்த்து சன் டி.வி.யாக மலர்வித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அவர் பொறுப்பில் தமிழ் முரசு இரண்டு ரூபாய் விலையிலும், தினகரன் ஒரே ஒரு ரூபாய் விலையிலும் அச் சுக்கலையின் நேர்த்தியுடன் விற்பனைக்கு வந்தபோது பத்திரிகை படிக்கும் பழக்கமே இல்லாதவர்கள்கூட வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ் முரசும் தினகரனும் புதிதாய்த் தொடங்கிய இரண்டு மூன்று வாரங்களிலேயே பல இலட்சம் பிரதிகளைத் தாண்டிவிட்டன.

தயாரிப்புச் செலவை ஈடு கட்ட விலையை உயர்த்துவது; அதனால் கணிசமான வாசகர்களை இழப்பது; இந்த இழப்பைச் சமன் செய்ய மறுபடியும் விலையை உயர்த்துவது என்கிற நிர்வாக முறையைத் தவிர்த்து, பொருளாதாரச் சுமையை வாசகர் தலையில் ஏற்றுவதற்கு மாறாக, குறைந்த விலையில் அதிகமான வாசகர்களை ஈர்ப்பதன் மூலம் பொருளாதார வெற்றியை எய்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார் கலாநிதி.

புதிய சிந்தனைகளுக்கோ, பரிசோதனைகளுக்கோ இடம் தராமல் பழகிய தடங்களிலேயே அலுப்புடன் நடந்த பல பத்திரிகை அதிபர்கள் தினகரன், தமிழ் முரசின் குதிரைப் பாய்ச்சலைக் கண்டு திகைத்தார்கள்; எரிச்சலடைந்தார்கள்; சபிக்கத் தொடங்கினார்கள். சன் குழுமத்தால் தங்கள் வாழ்வே அ°தமித்து விட்ட தாக ஆத்திரம் கொண் டார்கள்.

தனது மரணத்தை முன்னதாகவே அறிந்து கொண்ட வக்கிரமனம் கொண்ட நோயாளியைப்போல் எக்ஸ்பிரஸ் குழும நிர்வாகிகள், ஆடிட்டர்கள், மனம் போன படியெல்லாம் சிந்தித்தார்கள். திராவிட இயக்கம், சோஷலிசம், லெனின், பெரியார், கலைஞர், புதிய சிந்தனை, புதிய உலகம் எல்லாவற்றையுமே மனுதர்மப் போதையில் எரித்துவிடத் துடிக்கும் ஆடிட்டர் குரு மூர்த்தி அதே வார்ப்பில் வெளிவந்த சிலருடன் விவாதித்தார். நம் குலமென்ன, கோத்திரம் என்ன? அந்தஸ்தென்ன, அதிகாரம் என்ன? ஒரு சூத்திரனுக்கு முன்னால் தோற்று நிற்பதா? சன் குழுமத்தை மாத்திரமல்ல திராவிட இயக்கத்தையே அசிங்கப்படுத்தி அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

அயோத்தியா மண்ட பத்தில் ஒருவர் தும்மினால், நாடாளுமன்றமே ஸ்தம் பிக்க வேண்டும். ஆனால், ஆளப்பிறந்தோரின் ஆதிபத்திய உரிமையே இரு சூத்திரர்களால் இன்று கேள்விக் குறியாகி இருக்கிறது. அந்தச் சிறுவன் தயாநிதிமாறனுக்குத்தான் பிரதமரிடம், சோனியாவிடம் எத்தனை நெருக்கம்? தாங்கிக் கொள்ள முடியவில்லை. தகிக்கிறது.

“கூட்டணி அரசியலில் வால் நாயை ஆட்டும் கதை இது!’’ (தினமணி 2, மே 2006) என்று இழிசொற்களால் எழுதித் தீர்க்கிறது. அறிவெல்லை கடந்த ஆத்திரமும் ஆற்றாமையும் தினமணியின் ஒவ்வொரு சொல்லிலும் பொங்கி வழிகிறது. அரசு என்பது எப்போதும் டாட்டா, பிர்லா, கோயங்கா, அக்கிரகாரக் கும்பலுக்கு அதாவது பார்சி, பனியா, பார்ப்பனர் என்னும் எஜமானர்களின் நலன்களைப் பாதுகாக்கும் காவல் நாயாக இருக்க வேண்டும். அந்த நாயின் - அதாவது, மத்திய அரசின், அல்லது பிரதமரின், வால், அதாவது தயாநிதி, எஜமான விசுவாசத்தைக் காட்டும் அடையாள உறுப் பாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தினமணி எக்ஸ்பிரஸ் சாம்ராஜ்யத்தின் சனாதன தர்மம்; மீறக் கூடாத அரசியல் சாசனம்.

ஆனால், இன்று என்ன நடக்கிறது. ‘வால் நாயை ஆட்டு கிறது’ ஒரு நாய் வால் (தயாநிதி மாறன்) மத்திய அரசை ஆட்டுவிக்கிறதாம். பொங்கிப் புகைந்து ஆற்றாமையில் அரற்றுகிறது தினமணி. கண்ணியம், தரம், நேர்மைத் திறம் என்றெல்லாம் தனது பத்திரிகா தர்மம் குறித்து பகட்டிய தினமணி அந்த ஒப்பனைகளையெல்லாம் கலைத்துக் கொண்டு சுய ரூபத்தில் கத்துகிறது: “மத்திய அரசு ஒரு நாய்; தயாநிதி மாறன் ஒரு நாய்வால்!’’

நன்று. இந்த ‘நாய்வால்’ (தயாநிதிமாறன்) பல சாம்ராஜ்ய வாதிகளையும் மனுவாதிகளையும் புலம்பித் தவிக்க விட்டிருக்கிறது என்பதில் ‘சூத்திரவம்சம்’ பெருமை கொள்கிறது. மாறன் சகோதரர்களின் வெற்றியால் கோயங்கா பரிவாரம் எந்த அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டி ருக்கிறது என்பதை அதன் குற்றச்சாற்றிலிருந்தே புரிந்து கொள்ளலாம். “கலாநிதிமாறன் தயாநிதிமாறன் ஆகி யோரது குடும்பம் ஒரு கட்டுக்கோப்பான குடும்பம். இவர்களது தயார்தான் குடும்பத் தலைவர். இருவரும் தாய்க்குக் கட்டுப்பட்ட பிள்ளைகள்’’ தினமணி. 2, 5. 2006. (‘குடும்பத்தொழில்’ என்கிற தனிக் குற்றச் சாற்றில்)

இப்படியெல்லாம் ஒரு குடும்பம் இருக்கலாமா? தாய்க்குக் கட்டுப்பட்ட பிள்ளைகளாய் இருப்பது எத்தனை பெரிய பாவம்? (ஐயோ, பாவம் தினமணி.) கோயங்கா கும்பலின் கோபத்துக்கான காரணங்களையும் அது உளறி வைக்கிறது: “மாறன் குடும்பத் துக்குச் சொந்தமான சன் டி.வி.யும் அதன் பல்வேறு துணை நிறுவனங்களும் பத்தாண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் ஒரு மிகப் பெரிய மீடியா நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தென்னிந்தியாவில் டி.வி. தொழிலில் அது ஆதிக்கம் வகிக்கிறது. தமிழ் நாட்டில் பத்திரிகைத் தொழிலிலும் அது ஆதிக்கம் செலுத்த முனைந்திருக்கிறது.’’

தினமணியின் புகைச்சலுக்கும், ‘புலனாய்வுக்கும்’, புழுதிவாரித் தூற்றும் பலவீனத்துக்கும் அடிப்படைக் காரணம் இதுதான். தொழிற் போட்டியில் தோல்வி. தமிழன் ஜெயித்துக் காட்டுகிறானே என்கிற பொறாமைத் தீ. இந்த இரு உணர்வு களால் சாம்ராஜ்யவாதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது

இந்த மனநிலையில்தான் ‘டாட்டா விவகாரத்தை’ சந்திக்கு இழுத்து விடுகிறது தினமணி.சித்த சுவாதீனம் இழந்த ஒரு மனநோயாளியின் பொருளற்ற புரளி என்று அதை ஒதுக்கித் தள்ளிவிடுவது எளிது. ஆனால், ‘நெருப் பில்லாமல் புகையுமா?’ என்று ‘நடுநிலை ரிஷிகள்’ வம்பு வளர்ப்பார்கள் என்பதால், டாட்டா குழுமத்தை அமைச்சர் தயாநிதிமாறன் மிரட்டினார் என்கிற குற்றச் சாற்றுக்குள்ளும் நுழைவோம்.

தினமணியும் இதர ‘நடுநிலை’வாதிகளும், நற்சான்றிதழ் வழங்குவது போல் டாட்டா குழுமத்தின் நிதி ஆதாரம் என்பது ‘நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்ட’தால் வந்ததல்ல. எல்லா ‘மூலதனங் களின்’ கதைகளைப் போன்றதே டாட்டா குழுமத்தின் கதையும். ‘ரிஷிமூலம்’ ஆராயக் கூடாது என்பார்கள். அது பக்தியின் அடையா ளம்; சந்தேகத்துக்கு அப் பாற்பட்டது என்பதால் அல்ல. ஆராய்ந்தால் ‘புனித நம்பிக்கைகள்’ உடைந்து நொறுங்கி விடும் என்பதால் தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஒருவர் கோடீஸ்ராக இருந்தார். அவர்களாலேயே அவருடைய தொழில் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை...? என்று தொடங்கு வது டாட்டாவுக்கு ஒன்றும் பெருமை சேர்ப்பதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் ‘பிரிட்டிஷ்காரராக’ வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் பொருள். பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துப் போயிருந்தால் வ.உ.சிதம்பரம் என்னும் தமிழன் டாட்டாவைவிடப் பெரும் கோடீஸ்வரராக வளர்ந்திருக்க முடியாதா? ஆதலினால், டாட்டா வின் பெருமை குறித்து யாரும் நீட்டி முழக்க வேண்டாம். இன்றையப் பிரச்னைக்கு வருவோம்!

இல்லத்துக்கே நேரடித் தொடர்பு (DTH.) உரிமம் கேட்டு டாட்டாவை ஏன் ஒருவர் அணுக வேண்டும்? டாட்டாவைப் போலவே சன் டி.வி. நிறுவனமும் டி.டி.எச். உரிமம் பெற்றது தான். தொலைக்காட்சித் துறையில் வேறு எந்த நிறுவனமும் தொடமுடியாத உயரத்தில் நிற்பது சன் டி.வி.தான். சன் டி.வி. தொடங்கிய போது அதற்கு எந்த அரசி யல் செல்வாக்கும் கிடை யாது. பல சோதனைகளுக் கும் அடக்குமுறைகளுக்கும் இலக்காகியிருந்தது அவர்கள் சார்ந்துள்ளதாகச் சொல்லப்படும் கட்சி. அப்போது முரசொலி மாறனோ தயாநிதி மாறனோ மத்திய அமைச்சர்களாக இல்லை. கடின உழைப்பும் வெகுஜன ஆதரவும்தான் சன் டி.வி.யின் வெற்றி. தொலைக்காட்சி என்றால் சன் டி.வி. சன் டி.வி. நிகழ்ச்சிகளை அடியொற்றியே இதர தொலைக்காட்சிகள். பின் தொடர்கின்றன எனும் அளவுக்கு அது முன்னணியில் நிற்கிறது.

(சன் டி.வி. நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் அவை பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய தமிழிய - பகுத்தறிவு - சமதர்ம விழிப்புணர்வுகளுக்குத் துணையாக இல்லை என்பதில் எமக்கு வருத்தமும் உண்டு. அதற்குக் கண்டனம் தெரிவிக்கவும் தயங்கவில்லை. ஆனால், சன் டி.வி.யால் வாழ்வும் வசதியும் பெற்ற கூட்டம் இப்போது எதிர்ப்பதுதான் வேடிக்கை.)

“பத்தாண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் ஒரு மிகப்பெரிய மீடியா நிறுவனமாக வளர்ந்துவிட்டது சன் டி.வி.’’ என்று தினமணியே எழுதும் ஒரு நிறுவனம் தயாநிதிமாறன் அமைச்சரான பிறகு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தான் வளர்ந்தது என்பது போல் கதை கட்டுவது அற்பத்தனமானது மட்டுமல்ல; அரசியல் - தேசிய இனக் காழ்ப்புணர்ச்சியும் கொண் டது.

புதிய பொருளாதாரக் கொள்கை என்கிற பெயரில் நேரு கனவுகண்ட ‘ஜனநாயக சோஷலிச’ அரசுக் கொள்கை கள் தகர்க்கப்பட்டன. தனி யார் மயமாக்கலில் தாராளத் தன்மை காட்டப்பட்டது. தொலைபேசித் துறையில் பல தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. டாட்டா குழுமமும் ‘தொலைபேசி’ தொடங்கியது. பா.ஜ.க.வின் ‘வசூல் சக்ர வர்த்தி’ என்று பெயரெடுத்த பிரமோத் மகாஜன் மூலம் வெளிநாடுகளுக்கான உரிமம் டாட்டாவுக்குத் தரப்பட்டது. அரசு நிறுவனம் கூட (பி.எஸ்.என்.எல்.) வெளி நாட்டு அழைப்புகளுக்காக டாட்டாவுக்குக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு - தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற தயாநிதி மாறன் ‘ஒரே தேசம்; ஒரே ரூபாய்’ திட்டத்தின் மூலம் தொலைபேசிக் கட்டணங்களைக் குறைத்தார். இந்திய மக்கள் அனை வரும் இதனால் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்தின்படி வெளிநாட்டுக்கான கட்டணங்களும் குறைந்தன. டாட் டாவின் கொள்ளையடிக்கும் சுதந்திரம் தயாநிதிமாறனால் கட்டுப்படுத்தப்பட்டது. டாட்டாவின் வரு மானத்தில் ஒருவர் கை வைக் கலாமா?

ஆனால், டாட்டாவால் இதை வெளியே சொல்ல முடியவில்லை. இதைக் கிளப்பினால் டாட்டாவின் பல மர்ம நாடகங்கள் அம் பலமாகும் என்கிற அச்சம். இதனால் டாட்டாவின் ‘கைக்கூலிகள்’ மூலம் தயாநிதி மாறன் மீது அவதூறு பொழிய ஏற்பாடாகி இருக்கிறது. தயாநிதிமாறன் டாட்டாவை மிரட்டினார் என்று தினமணி - எக்ஸ்பிரஸ் குழுமம் பரப்பும் செய்தி எந்தப் பின்னணியில் புனையப்பட்டது என்றாலும், இந்திய வரலாற்றில் முதன் முதலாக டாட்டாவை ஒரு தமிழன் நடுங்க வைத்திருக்கிறான் என்பது தெரிய வருகிறது. கலாநிதிமாறன் ஒரு ரூபாய்க்குப் பத்திரிகை தந்தால் கோயங்காவுக்குக் குலை நடுங்குகிறது. தயாநிதிமாறன் ‘ஒரு ரூபாய்க்குத் தொலைபேசி’ என்று கொண்டு வந்தால் டாட்டாவுக்குத் தலைசுற்றுகிறது.

சன் டி.வி.யையும் தயாநிதி மாறனையும் விட்டு வைத்தால் நாட்டில் இனி யாருமே தொழில் செய்ய முடியாது என்று சோவிலிருந்து அத்வானிவரை, கோயங்காவிலிருந்து டாட்டா வரை புலம்புவது சமூக மாறுதலுக்கான ஒரு முன்னறிவிப்பே!

ஏகபோகக் கும்பலும், ஏகாதிபத்தியவாதிகளும் தயாநிதிமாறன் மீது தொடங்கியிருக்கும் கேவலமான போர் முறை தமிழினத்துக்கு எதிராக பார்சி, பனியா, பார்ப்பனக் கூட்டின் சதித் திட்டமே என்பதை இனி யாரும் மறைக்க முடியாது. அரசியல் பொருளாதாரத் துறையில் தமிழர் களின் வளர்ச்சியை ‘ஏக போகம்’ என்று சித்திரிப் போர் தனியுடைமைக்கும், தனிச் சொத்துரிமைக்கும் எதிராகக் குரல் எழுப்பத் தயாரா?

அவர்களின் சேவகன் அல்ல நான்!

‘ஒரே இந்தியா’ திட்டத்தை தடுத்து நிறுத்தவே இவர்கள் அனைவரும் சதி செய்கின்றனர். இந்தத் திட்டத்தை நான் அறிமுகப்படுத்திய போதே பல தடைகளை இவர்கள் ஏற்படுத்தினர்.

அதையும் மீறி அந்த திட்டம் நிறைவேற்றப் பட்டது. தங்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைகிறதே என்பதால் பலருக்கு இத்திட்டம் பிடிக்கவில்லை. அவர்களுக்காக நான் மத்திய அமைச்சராக வில்லை. இந்திய மக்களுக்குப் பணியாற்றவே நான் மத்திய அமைச்சரானேன்.

பத்திரிகையாளர் மத்தியில் தயாநிதிமாறன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com