Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

கச்சத்தீவு - உண்மை வரலாறு
ம.மு.தமிழ்ச்செல்வன்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பாக் நீர்ச்சந்தியில் - நீரிணைப்பில் இந்தியத் தெற்குக் கடற்கரையில் இருக்கும் பாம்பனுக்கும் இலங்கையின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் டெல்த் என்ற தீவிற்கும் இடையே சமதொலைவில் உள்ள சிறு தீவு கச்சத்தீவு. ஒரு மைல் நீளம்; 900 அடிகள் அகலம்; 3.75 சதுர மைல்கள் பரப்பு, கச்சத் தீவு ஒரு சிறு தீவு. 26-6-1974 அன்று இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்கு கச்சத் தீவை தாரைவார்த்துக் கொடுத்தார். அவற்றின் வரலாற்றையும் நமது உரிமையையும் காண்போம்.

1955ஆம் ஆண்டு, இலங்கை அரசு திடீரென்று, கச்சத் தீவினைத் தன் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகத் தேர்ந்தெடுத்தது. இந்திய அரசு அந்த முடிவைக் கண்டித்தது. 1956ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசு மீண்டும் கச்சத் தீவைக் கடற்படைப் பயிற்சிக்குப் பயன்படுத்த முடிவெடுத்தது. இந்த முடிவை இந்திய நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.

அன்றிலிருந்துதான் கச்சத்தீவு விவகாரம் வெளிப்படையாக இந்தியப் பொதுமக்களுக்குத் தெரியவந்தது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “இலங்கை அரசு இந்திய எல்லைக்குள் இருக்கும் போர் முக்கியத்துவம் வாய்ந்த கச்சத் தீவில் நுழையப் பார்க்கின்றது’’ என்று இலங்கை அரசைக் கண்டித்தார்கள். ஆனால் அப்போது இந்திய அரசு கச்சத்தீவுப் பிரச்சனையில் போதுமான செய்திகள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தது. இந்தியத் தூதர் மூலம் கச்சத்தீவு உடைமை பற்றி முடிவெடுக்கும் வரை இலங்கைக் கடற்படையினர் அங்கே பயிற்சி பெறுவதற்கான முயற்சிகளை ஒத்திப் போடுக என இலங்கை அரசுக்கு இந்தியா தெரிவித்தது. இலங்கை அரசோ, தன் முடிவை ஒத்திப் போட்டு விட்டோம் என்றும், ஆனால் கச்சத்தீவு தன்னுடையது தான் என்றும் இந்திய அரசுக்குச் சொன்னது.

கச்சத்தீவின் முக்கியத்துவம்:-

1. பாக்சந்தி, மன்னார் வளைகுடா - ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது, அதன் மையங்களில் ஒன்றாக இருக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் - ஐரோப்பிய இந்தோனேசியத் தீவுகளில் அமைக்கப்படும் ஏவுகணைத் தளங்களின் இலக்குகளுக்கு நேர்எதிராக ஏவுகணைத் தளம் அமைக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.

2. இலங்கையில் எந்த வல்லரசு நாட்டின் வல்லாண்மையாவது மிகுந்து செயல்படும்போது அதனால் நேரக் கூடிய போர் அச்சங்களைத் தகர்க்க உதவும் இடமாகவும், அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும்,

3. கப்பற் படைக்கும் நீர் மூழ்கிக் கப்பல் படையினருக்கும் பயிற்சிக் களமாக இருக்கவும், நீர்மூழ்க்கி கப்பல்கள், போர்ப் படகுகள் செப்பனிடும் இடமாக இருக்கவும்,

4. போர் விமானங்கள் தற்காலிகமாக இறங்குவதற்கான திட்டு அமைக்கவும்,

5. செய்தித் தொடர்பு நிலையம், தொலைநிலை இயக்கமானி நிலையம் ஆகியவை அமைக்கத் தகுந்த இடமாகவும்,

6. கடலில் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகள், கப்பல் - படகுகள் நிலைப்படுத்தப் பயன்படும் மிதவைகள் ஆகியவற்றின் மையமாகவும்,

7. ‘கடல்’ உணவு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம்’ அமைப்பதற்கேற்ற இடமாகவும், கச்சத்தீவு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. இதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கச்சத் தீவினை போர்முகாமை வாய்ந்த தீவு’ என்று நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டனர். ஆஸ்திரேலியாவிலிருந்து ஈரான் வரை உள்ளிட்ட சின்னஞ்சிறு தீவுகளைப் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பயன்படுத்த முனைவதனைக் கவனித்தாலே கச்சத் தீவின் சிறப்பு நமக்குத் தெளிவாகும்.

இந்தியாவிலிருந்து தென் மேற்கில் 1500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் டிகோ கார்சியா தீவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தளம் அமைவதைக் கண்டு அலறிப் புடைக்கும் மத்திய அரசு நம் கடலோரத் தீவான கச்சத்தீவைப் பற்றி எவ்வளவு கவலைப்பட்டிருக்க வேண்டும்.

ஆவணங்கள்

கச்சத்தீவு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளுக்கு வருவாய் தரும் தீவாக இருந்த ஒன்றாகும். 1947இல் ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டம் வரும் வரை, சேதுபதி ஆட்சியில் இருந்த இந்தத் தீவு, முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கின்றது. இங்கே பரவலாகக் காணப்படும் ‘உமிரி’ என்ற செடிவகையை இராமநாதபுரம் மக்கள் மருத்துவத்திற்குப் பயன்படுத்துவதுண்டு. அவர்கள் தீராத நோய்களுக்கு ‘உமிரி’ பயன்படும் என்று நம்பினார்கள். எனவே இராமநாதபுர மக்கள் உமிரிச் செடியைக் கொண்டுவர கச்சத்தீவுக்குக் செல்வதுண்டு. ‘சாயா வேர்’ போன்ற வேர் வகைகளும் இராமநாதபுரம் மக்களுக்குப் பயன்பட்டன. இந்த வேர் வகைகளைக் கொண்டு வருவதையே வணிகத்தொழிலாகச் சோழமண்டல மரக்காயர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

கச்சத்தீவில் முத்துக் குளிக்க, அங்கேயிருந்த வேர்கள், செடி வகைகள் போன்றவற்றைக் கொண்டு வர, மீன்பிடித் துறையாக அதனைப் பயன்படுத்த எவரேனும் விரும்பினால், சேதுபதியின் இசைவைப் பெற்றாக வேண்டும். சேதுபதி ஆட்சி அந்தத் தீவினைக் குத்தகைக்கு விட்டு, வருவாய் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல உள்ளன.

ஜனாப் முகமத் அப்துல் காதர் மரக்காயர் முத்துசாமி பிள்ளை என்பவர்களுக்காகச் கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்குக் குத்தகையாக ஒப்பாவணம் செய்து கொள்ளப்பட்டது. நாள்: 23-6-1880, இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகம்; 2-7-1880 ஆம் நாளைய ஆவண எண்: 510/80.

இராமநாதபுரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 4-12-1885ஆம் நாளன்று கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது./ ஆவண எண்: 134/85.

1-7-1947 - இலிருந்து 30-6-1949 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது. குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள்: 26-7-1947. இராமநாதபுரத் துணைப் பதிவாளர் அலுவலக எண்: 278/48.

19-2-1922-இல் இராமநாதபுரத்தின் திவானாக இருந்த திரு. ஆர்.சுப்பையா நாயுடு என்பவர், ஆர்.இரா ஜேசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த விளக்கங்களில் கச்சத் தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது. ஏற்பிசைவு செய்து கொள்ளப்பட்ட நாள் : 27-2-1922.

இராமநாதபுரம் இராஜாவின் ஆட்சிச் செயலாளர் 20-4-1950-ல், எஸ்டேட், மேலாளர்க்கு எழுதிய மடலில் (Letter ROC No. 445/A2/50) 1929 - 1945 ஆம் ஆண்டுகளில் மீன்பிடித் துறைகளைப் பற்றிய கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத்தீவைப் பற்றியது ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் இருந்த முத்து மீன்வளத்துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு.ஆர். கணேசன் என்பவர் தயாரித்த நிலப்படத்தில் கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.

1913ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குள்ளான 15 ஆண்டுகளுக்குச் சங்கு, சிப்பி, மீன் வளத்துறைக்கான பிரிட்டிஷ் அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. 1936 இல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்டபோதும் கச்சத்தீவு அந்தக் குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.

இராமநாதபுரச் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1822ஆம் ஆண்டிலிருந்து வரையறையான சான்றுகள் உண்டு.

கிழக்கு இந்தியக் கம்பெனி 1822இல் ‘Isthimirer Sanad’ என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுரம் இராசாவிடமிருந்து கச்சத் தீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. அறுபத்தொன்பது கடற்கரை ஊர்களும் எட்டுத் தீவுகளும் சேதுபதிக்கு உரியனவாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத் தீவு. சேதுபதியிடம் 69 கடற்கரை ஊர்களில் வாணிபம் செய்யவும், தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இசைவைப் பெற்றிருந்தது.

பி.பி. பியரிஸ் சொன்னது:

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும், இராமநாதபுர அரசரைப் பற்றியனவற்றில், கச்சத்தீவு அவருக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாளைய இலங்கை அமைச்சரவைத் செயலாளர் பி.பி.பியரிஸ் அவர்களே உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்கண்ட பியரிஸ் அவர்களின் சொற்களே கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து என்பதற்குப் போதுமான சான்றாகும்.

1947 டிசம்பர் திங்களில், சண்முக இராஜேஸ்வர சேதுபதி அவர்களிடமிருந்து, வி.பொன்னுசாமி பிள்ளை கே.எஸ்.மொகாமத் மீர்சா மரக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தார்கள்.

1921ஆம் ஆண்டிலிருந்து 1923 வரை இந்தியாவிற்கான அரசுச் செயலாளரின் குறிப்பேடுகளைப் பார்க்கும்போது, அவற்றில் கச்சத் தீவை இலங்கைக்குரியது என்ற சொற்களோ, திசையோ இல்லை. 1913ஆம் ஆண்டிலிருந்து 1928 வரை அதாவது 15 ஆண்டுகளுக்குக் கச்சத் தீவைக் குத்தகையாக இந்தியாவிற்கான அரசுச் செயலாளர் சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.

இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களிலோ, ஏன் நூல்களிலோ, கச்சத்தீவைப் பற்றிய விவரம் ஏதுமில்லை. அப்படி இருப்பதாகவும் இதுவரை இலங்கை அரசு அறிவிக்கவில்லை. டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் இலங்கையை ஆண்டபோது, அவர்களின் ஆளுகைக்குக் கச்சத்தீவு உட்பட்டிருக்கவில்லை. அவர்களின் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ கச்சத்தீவைப் பற்றிய பேச்சே இல்லை.

அதுமட்டுமின்றி, டச்சுக்காரர்களும், போர்ச்சுகீசியர்களும் தேசப்படங்கள் தயாரிப்பதை இன்றியமையாத தேவையாகக் கருதி வந்தவர்கள். அவர்கள் இலங்கையைப் பற்றிய தேசப்படங்களில் கச்சத்தீவைக் குறிக்கவே இல்லை. நிலப்படங்களில் இந்தியத் தீவைப் போய் இலங்கையுடன் சேர்க்க அவர்கள் சிங்களவர்களா என்ன?

பர்னோஃபின் தேசப்படம்

பதினோழாம் நூற்றாண் டின் இறுதியில் பர்னொஃப் எனும் வரலாற்று ஆய்வா ளர் இலங்கைக்கு வந்தார். இலங்கைத் தீவு முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இதன் கடற்கரை எல்லையை ஆராய்ந்த வண்ணம் அந்த நாட்டைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தார். கப்பல் பயணத்தின் போதே சமஸ்கிருதம், பாலி, சிங்களம் ஆகிய மொழிகளை நன்றாகப் பயின்றார். இலங்கையிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்து ஐரோப்பாவிலிருந்து வருவோருகெல்லாம் அவர்தான் பார்க்க வேண்டிய இடங்களை, அவற்றின் சிறப்பியல்பை எல்லாம் விளக்குவார்.

பர்னொஃப் இலங்கைக்கெனத் தேசப்படம் வேண்டுமே என்று விரும்பினார். இலங்கைத் தேசப் படம் ஒன்றை உருவாக்குவதில் கடுமையாக ஈடுபட்டார், ‘சமஸ் கிருத, பாலி, சிங்கள நூல்களையும் இலங்கை வரலாற்றாய்வாளர்களையும் துணைக்கொண்டு இலங்கைத் தேசப்படத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்தார். மகாவம்சம் இராஜாவளி இராஜரத்னாசரி ஆகிய இலங்கை வரலாற்று நூல்கள் அவருக்கு மனப்பாடமாயிருந்தன. பல ஆண்டுகள் கழித்து இலங்கைத் தேசப் படத்தை பர்னொஃப் உருவாக்கி முடித்தார். அவருடனிருந்த உதவியாளர் எம். ஜுல்ஸ் மோல் என்பவர் அந்தத் தேசப்படத்தை ‘Recherches surla Geographic ancienne de Ceylon’ என்ற இதழில் 1857-ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியிட்டார்.

“Lanka or Tambraparani according to the SanscritPali and Singhalese Authorities’ எனும் அந்தத் தேசப்படத்தில் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு குறிக்கப்படவில்லை. தமிழகத்தின் தீவு கச்சத்தீவு என்பது வரலாற்றறிஞர் பர்னொஃப் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

கடற்கரையைச் சுற்றிலும் அப்பாலும் உள்ள சின்னஞ்சிறு பாறைகளையும் அவர் தம் தேசப்படத்தில் குறிக்கத் தவறவில்லை. கடலினிடையே ஏறக்குறைய 1/4 சதுர மைல் பரப்பளவுள்ள பாறைகளைக் கூடக் குறிக்காமல் விட்டதில்லை. எடுத்துக்காட்டாக கடம்பு ஆறு கடலில் புகும் துறைக்கு அப்பால் இருக்கும் (முத்துக் குளிப்பதற்கு ஏற்றதான) பாறைத் தொடரினையும் அவர் குறித்துள்ளார்.

‘யானைப் பாறைகளைக் கூட அவர்தம் தேசப்படத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தப் பாறைகள் இரண்டும் ஒரு சதுர மைல் பரப்புக்கும் உட்பட்டவையே! ஒரு சதுர மைல் பரப்புக்கும் உட்பட்ட பல மைல்கள் இடைவெளியில் இருந்த பாறைகளைக் குறித்தவர் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு இலங்கைக்கு உரியதாக இருந்திருந்தால் குறிக்கத் தவிர்த்திருப்பாரா? மூன்று மொழிகளில் உள்ள சான்றுகளைக்கொண்டு, குறிப்பாக சிங்கள வரலாற்றறிஞர்களுக்கொப்ப பர்னொஃப் தயாரித்த தேசப் படத்தில் ‘டெல்த் தீவு’ வரை தான் இலங்கையினுடையது என்பது தெளிவாக்கப்பட்டு உள்ளது.

டெல்த் தீவிற்கு அப்பால் உள்ள கச்சத்தீவைத் தமிழகத்தின் தீவு என்பதனாலேயே அவர் குறிப்பிடவில்லை. இந்தத் தேசப்படத்தை டர்னொர் போன்றோர் ஆய்ந்து உறுதிப்படுத்தினர். இலங்கைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும் ஐரோப்பியர்களும் வணிகத்திற்காக வந்த வண்ணம் இருந்தனர் அவர்களின் கண்களில் படாத இடமே இல்லை. இலங்கையின் கடற்கரை எல்லையில் அவர்களுக்குத் தெரியாத இடமே இல்லை. இரண்டாம் நூற்றாண்டில் அவர்களைப் பின்பற்றி வந்த தாலமி, பிளினி என்போர் இலங்கையின் கடற்கரைப் பகுதிகள், உட்பகுதிகள் ஆகியவற்றைத் தேசப் படங்களாக வரைந்தனர்.

அவர்கள் வரைந்த இலங்கைத் தேசப்படத்தில் கடல் இடையே இருக்கும் பாறைகள், மிகவும் சின்னஞ் சிறிய தீவுத் துணுக்குகள் ஆகியவனவற்றையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்.

கடலின் அடிப்பரப்பின்...!

1945-க்குப் பின்னர், அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி உலகெல்லாம் பரவி வளர்ந்துள்ளது. அதன் காரணமாகவே கடலினிடையே இருக்கும் தீவுகள், சிறு தீவுகள், பெரும் பாறைகள் ஆகியனவற்றைக் கடற்கரை நாடுகள் கடலில் பூத்த பொன் மலர்களாகக் கருதுகின்றன கடலின்மேல் உள்ள சின்னஞ்சிறு தீவுகளையும் அவற்றைச் சுற்றி நீருக்கடியில் பரந்துட்ட கடற்படுகைகள் அடிப்பரப்பு, கடற் குன்றுகள் ஆகியனவற்றையும் வைரச் சுரங்கங்களாகவே பல நாடுகள் கருதுகின்றன.

கடலின் உயிரின வளப் பாதுகாப்புத் திட்டங்கள்

கடலில் உள்ள மீன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை இன்று உலக நாடுகள் பல உணர்ந்திருக்கின்றன. அதுவும் தம் கடற்கரையோரக் கடல் பரப்புகளின் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகவே பெரும் பெரும் திட்டங்களைப் போட்டு இயங்குகின்றன அந்தத் திட்டங்களின் விளைவாக அருகருகே உள்ள கடற்கரை நாடுகள் ஒன்றுக்கொன்று வஞ்சகங்களை எதிர்த்துப் போர்களும் நடைபெற்றன. நடைபெறுகின்றன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு ரோம் நகரில் 1955ல் உலக நாடுகள் ஒன்றுகூடின. தங்களின் கடல், உயிரினப் பாதுகாப்புத் திட்டங்களால், எந்தவொரு கடற்கரை நாட்டிற்கும் ஊறு நேரக்கூடாது என்று முடிவெடுத்தன.

இந்த முடிவினையே மீண்டும் ஜெனிவாவில் 1958ல் கூடியபோது, உலக நாடுகள் மீண்டும் வற்புத்தின. ஆனால் இந்த மாநாட்டிலோ, “நாட்டுரிமைக் கடல் பரப்புக்கு அடுத்துள்ள கடலிலும் ஒரு கடற்கரை நாட்டுக்கு அக்கறை உண்டு’’ என்ற தீர்மானம் வந்தது. இவ்வாறு உலக நாடுகள் ‘கடல் உயிரின வளப் பாதுகாப்புத்திட்டங்களுக்காக, பிற நாடுகளின் திட்டங்களின் வஞ்சகங்களை ஒடுக்குவதற்காக, நாட்டுரிமைக் கடல் பரப்புக்கு அப்பாலும், தமக்குச் செல்வாக்கும், அக்கறையும் ஆட்சியும் வேண்டும் என இயங்குகின்றன. ஆனால் இந்திய அரசோ, கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இதனால் இலங்கை நாளை செய்யப்போகும் கடல் உயிரின வளப் பாதுகாப்புத் திட்டங்களால், பாக் சந்தி, மன்னார் வளைகுடா முழுவதிலும் தமிழகத்தின் எதிர்காலக் கடல் உயிரினப் பாதுகாப்புத் திட்டங்கள் நசியப் போகின்றன!

கச்சத்தீவை இழந்தது என்பது, இதன் எதிர்கால வாழ்வுக்குக் கொழு கொம்பாக நிற்கக்கூடிய ‘கடல் உயிரின வளத்தை இழந்தது’ என்றே பொருள்.

தமிழகக் கடற்கரை பெறும் பேறு!

உலகின் கடல்களில் உள்ள மீன்கள், பிற உயிரினங்கள் அனைத்தும் இன்று தமிழகக் கடற்கரையை நோக்கித்தான் வருகின்றன! கடல்களின் ‘நீரோட்டத்தின் மாற்றம்’ காரணமாக, இந்தப் பெரும் பேர் பயனைத் தமிழகம் அடைகின்றது! உலகிலேயே கடல் மீன் உயிரின வளத்தில் தலை சிறந்து நிற்கவேண்டிய வாய்ப்புத் தமிழகத்திற்குக் கிட்டியுள்ளது. ஆனால் கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கி விட்டதால், நாளை அந்நாட்டின் கடல் உயிரின வளப் பாதுகாப்புத் திட்டங்களால், தமிழகம் வஞ்சிக்கப்படப் போகின்றது!

ஏகத் தடுப்பு

உலக நாடுகளில் பெரும்பாலானவை பெட்ரோல் எண்ணெயை இறக்குமதி செய்கின்ற நாடுகள்தாம். அரேபிய நாடுகளிடமிருந்து ஏற்றுமதியாகும் எண்ணெய் கப்பல்கள் மூலம்தான் எல்லா நாடுகளுக்கும் செல்கின்றது. இந்த எண்ணெய் கடலில் வீழ்வதனால் அங்கே தூய்மை கெட்டு உயிரினங்களும் மடிகின்றன. கடலின் இந்தக் கெடுதலைத் தவிர்ப்பதற்காக 1954ல் இலண்டனில் உலக நாடுகள் ஒன்று கூடி ஆராய்ந்தன. எண்ணெயினால் உலகின் கடற்கரை நாடுகள் அடையும் தீமைகள் பலவாக இருப்பதை அம் மாநாடு தெளிவாகவே உணர்ந்தது. அதே நாடுகள், ஜெனீவா மாநாட்டில் (1958) ‘எண்ணெய்க் கப்பல்கள், எண்ணெய்க் குழாய்களிலிருந்து வழியும் எண்ணெயால் ஏற்படும் கெடுதலைத் தடுக்க, ஒவ்வொரு நாடும் விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்’’ என்று முடிவெடுத்தன.

மற்ற நாடுகள் ‘கடல் உயர் பரப்பைப்’ பயன்படுத்துவதில் கெடுதல் ஏற்படச் செய்யும் செயல்களைத் தவிர்க்க வேண்டிய வரம்புக்கு உட்படவேண்டும். இவ்வண்ணம் உலகின் கடற்கரை நாடுகள் தங்களின் கரையோரக் கடற்பரப்பில் தூய்மை கெடக்கூடாது என்பதில் தீவிரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது, மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த அணுயுகத்தில், ஒவ்வொரு நாடும் அணுவாற்றல் நாடாக விளங்க முயல்கின்றது. வளர்ந்து வரும் நாடுகளே இன்று அணுவெடி ஆய்வுகளைச் செய்து வெற்றியைக் காண்பதில் கருத்தாக இருக்கின்றன. அணுவெடி ஆய்வுகளைச் செய்வதினால் வரும் கதிரியக்க கழிவினை கடல்களில் கொட்டி விடுகின்றன. இதனால் அந்தக் கடல்களின் கரையோர நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். இந்தக் கொடிய அபாயத்தைத் தடுப்பதை உலக நாடுகள் முக்கியமென்று கருதின. “ஒவ்வொரு நாடும் அத்தகைய அபாயத்தைத் தடுப்பதற்காகச் சட்டங்களை இயற்றலாம் என்றும் ஒப்புக் கொண்டன.

இவ்வாறு உலக நாடுகள் அணுவெடி ஆய்வுகளால் நீர் வளிக்குண்டு ஆய்வுகளால் நேரும் தீமையைப் போக்கக் கருத்தோடு செயல்படும்போது - மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதனால் நாளை இலங்கையின் அத்தகைய ஆய்வுகளின் விளைவுகளைச் சந்திக்கும் நிலைக்கு எதிர்காலத் தமிழகத்தை மத்திய அரசு தள்ளி விட்டது!

வான்வெளி

கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கி விட்டது மட்டுமல்ல, அந்தத் தீவினைச் சுற்றியுள்ள பகுதியின் மேலே உள்ள வான்வெளியையும் சேர்த்து மத்திய அரசு வழங்கிவிட்டது என்றே பொருள். இந்தியா தன் தீவையும் இழந்து, வான் வெளியையும் இழந்து விட்டது. கச்சத் தீவின் மேலே வான்வெளியைப் பயன்படுத்த இனி இந்தியா, கனவிலும் நினைக்க முடியாது! கச்சத் தீவை இழந்ததால்-

கடல் அடிப்பரப்பை இழந்து,
கடற்கரையைச் சார்ந்த மணல் மேட்டு நிலப் பரப்பை இழந்து,
இவற்றின் கனி வளத்தை இழந்து,
கடலின் உயிரின வளப் பாதுகாப்பை இழந்து.
கடலின் மேலே வான் வெளியையும் இழந்து விட்டோம்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்காகக் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரசு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது பற்றிப் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி (காங்கிரசு) கேள்வி எழுப்பினார். “தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே பாக் நீரிணை அருகே அமைந்துள்ள கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி, அப்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும் அதிகரித்துள்ளது. அண்மையில்கூட கன்னியாகுமரி மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் கலைஞர் பிரதமருக்கு மடல் எழுதினார். அதைத் தொடர்ந்து 47 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட தமிழக அரசும், நடுவண் அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்புக்காக அங்குக் கடலோரக் காவல்படையினரை நிறுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அவருக்கு ஆதரவாகத் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். அதிமுக உறுப்பினர் மலைச்சாமி குறுக்கிட்டுப் பேசும்போது, “கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானதாகும். ஆனால், 1974களில் கச்சத்தீவை நடுவண் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்துப் பெரிய தவற்றைச் செய்து விட்டது. அப்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவித்து கச்சத்தீவு திரும்பப் பெறப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.இராசாவும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தார்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com