Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

அடையாளம் இழந்து வரும் தமிழர்களின் தலைநகர்

சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் தனிவீடு கட்டி வாழ்வது என்பது இயலாத நிலையாகிவிட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவரும் சூழ்நிலையில் சில குறிப்பிட்ட கட்டுமான நிறுவனங்கள் சென்னை நகரில் முக்கிய பகுதிகளில் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தமிழர்கள் என்றால் இடம் இல்லை’ என்று மறுக்கின்றனர் என்ற செய்தி திடுக்கிட வைக்கிறது. சென்னை சவுகார்ப்பேட்டை நாராயண முதலித் தெருவில் அமைந்துள்ள ஒரு கட்டுமான நிறுவனம், பேசின் பாலச் சாலையில் 2-3 படுக்கை அறைகள் கொண்ட 145 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி வருகிறது.

அந்தக் குடியிருப்பில் வீடு வேண்டும் என்று தமிழர் ஒருவர் சென்று கேட்டதற்கு, இங்கே வடமாநிலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு சமூகங்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களுக்கு மட்டும்தான் இங்கு வீடு என்றும், தமிழர்களுக்கு இடம் கிடையாது என்றும் அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

சென்னை தமிழகத்தின் தலைநகரம், இங்கு வசிக்கும் தமிழர்களின் வரிப்பணத்தில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்து வசதிகளும் தமிழர்களின் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. தமிழர்களின் வரிப் பணத்தில் கிடைக்கும் இந்த வசதிகளால் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கட்டுகிற குடியிருப்புகளில் தான் தமிழர்களுக்கு வீடு இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

வணிகம் செய்வதற்காக வந்த வடமாநிலத்தவர்கள் சவுகார்பேட்டை போன்ற சில பகுதிகளில் மட்டுமே வணிகத்தலங்களை அமைத்துப் பெரும் தொழில்கள் மூலம் பணம் ஈட்டி வருகின்றனர். இந்தப் பகுதிகளில் எல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சென்னை நகரில் சில பகுதிகள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் வணிக மண்டலமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது தாங்கள் வாழும் பகுதியையும் தமிழர்கள் அல்லாத பகுதியாக மாற்றிட முயற்சி செய்கின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளான புரசை, தங்கசாலை, சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் சங்கம் திரையரங்கு பின்புறம், அபிராமி திரையரங்கு முன்புறம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ் பண்பாடு வாசனையே இல்லாமல் மும்பை, கொல்கத்தா, சூரத், அகமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற வெளிமாநில நகரங்களில் நிலவும் சூழலைப் போல அமைந்துள்ளது என்பதை கண்கூடாக காண முடிகிறது.

இங்கெல்லாம் தமிழ் மொழி பேசுவோரைப் பார்ப்பதுவே மிகவும் அரிதாக உள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சக்திகள் திட்டமிட்டு அவர்கள் வாழும் பகுதியை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி கட்டடங்கள் எல்லாம் தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல. அனைத்தும் வெளிமாநிலத்தவர்களுக்குச் சொந்தமாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களிடம் உள்ள இடங்களை அதிக விலை கொடுத்து வாங்கி அங்கிருந்து தமிழர்களை வெளியேற்றி விட்டு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள்.

ஆனால், அந்தக் குடியிருப்புகளில் தமிழர்களுக்கு இடமில்லை என்று கட்டுப்பாடு விதிப்பது அவர்களிடம் உள்ள செல்வச்செழிப்பால் அந்தப் பகுதியின் வாழும் நிலையை உயர்த்தியதின் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து புறநகர் பகுதிகளுக்கு இடம்தேடி அலையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் சென்னை நகரம் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்.

சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதும் தமிழர்களின் தலைநகர் என்பதும் புத்தகத்தில் மட்டுமே இருக்கும். கட்டடங்கள் எல்லாம், வாழும் குடியிருப்புகளெல்லாம் வெளிமாநிலத்தவர்களுக்குச் சொந்தமாக மாறிவிடும். இது மிகுந்த கவலை அளிக்கக் கூடிய சிக்கல். இப்போதே தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் தலைநகரம் தமிழர்களுக்கே சொந்தம் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து செயல்பட வேண்டும். இதற்காக மும்பை நகரைப் பின்பற்றி இங்குள்ள வெளிமாநிலத்தவர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதல்ல.

வடமாநிலத்தவர்களே கூட்டம் கூட்டமாக ஒன்றாக ஒரே இடத்தில் வாழும் துணை நகரங்கள் உருவாகி தமிழ் பண்பாடு, மொழி, ஆகியவை முற்றிலும் இல்லாத தீவுப் பகுதிகளைக் கொண்ட நகரமாக சென்னை மாநகர் வளர்ந்து வருவது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழர்கள், வீடு வாங்கி வாழ முடியாத சூழல் உருவாகி வருவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் வேளாண் நிலங்களை உழவர் இல்லாத ஒருவர் வாங்க கட்டுப்பாடு விதித்து சட்டம் இயற்றியதின் விளைவாக நடிகர் அமிதாப்பச்சன் வாங்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் திருப்பிக் கொடுக்கும் நிலை உருவானதைப் போன்று தமிழக அரசு கட்டுமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: ‘தமிழ் ஓசை’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com