Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

தமிழ்வழிக்கல்வி - தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!
இளவேனில்

தமிழ்ச்சான்றோர் பேரவை 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவுடன் வருடந்தோறும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகப் பெருவிழாவை நடத்தி வருகிறது. மாதாந்திர கூட்டங்கள், தமிழகமெங்கும் கிளைகள் தொடங்கப் பெற்றன.

1999 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப்பாடம் என்பதை வலியுறுத்தி 100 தமிழ் உணர்வாளர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு இருந்து உயிர் துறப்பது என்று தீர்மானித்தது. அவற்றின் விளைவாக பேரவையின் தொடர் பிரச்சாரம், உண்ணாநிலை அறப்போர், அரசு நிலை, தமிழக அரசின் மோகன் குழு, அரசு ஆணை, அதைத் தொடர்ந்து தமிழ் நாடு மெட்ரிக்குலேசன் சங்கம் தொடுத்த உயர்நீதிமன்ற வழக்கு, அதன் தீர்ப்பு, அதைத் தொடர்ந்து தமிழக அரசும், தமிழ்ச் சான்றோர் பேரவையும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீடு ஆகியவற்றை காண்போம்.

நூறு தமிழ் உணர்வாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மிக சீரிய முறையில் தொடங்கியது. தமிழகமெங்கும் பரவிய பிரச்சாரக் கூட்டங்களுக்கு இடையே இன்தாம் இணையமும் - தாகம் இதழும் இணைந்து தமிழ்வழிக் கல்வி ஆதரவு மாநாடு ஒன்றை 21-3-1999 ஆம் நாள் சென்னைத் தொலைக்காட்சி அருகில் உள்ள அண்ணா அரங்கில் நடத்துகின்றன. மாநாட்டில் மிக முக்கியமான தமிழறிஞர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டு அரங்கில் நிறைந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழுணர்வாளர்களிடம் 23-3-1999 ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரைப் பற்றியும் தமிழ் வழிக் கல்வி பற்றியும் விரிவாக எழுச்சியோடு எடுத்துரைக்கின்றனர்.

மாநாட்டிற்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முதன் முதலாக நாள் குறிப்பிடப்படுகிறது. 1999 ஏப்ரல் 25 ஆம் நாள் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நூறு தமிழுணர்வாளர்கள் சாகும்வரை பட்டினிப் போரை மேற்கொள்வர் என அறிவிக்கப்படுகிறது. அம்மாநாட்டிலும், அதற்கு முன்னதாகவும் 23-3-1999 ஆம் நாள் நாடுதழுவிய அளவில் பல்வேறு ஊர்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போரில் சிறப்புரையாளர்களாகப் பங்குபெற வேண்டியவர்களின் பட்டியல், ஊர் விவரங்கள் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் உரிய ஊர்களின் களப்பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் அடையாளப் பட்டினிப்போர் குறித்த அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதுடன் அவை தமிழ்ச் சான்றோர் பேரவை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

23-3-1999 ஆம் நாள் தமிழ்நாட்டின் 74 முக்கிய ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும் சராசரி நூறு தமிழுணர்வாளர்கள் பங்கேற்க ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போர் மாநிலத்தையே குலுக்கும் வகையில் நடைபெறுகிறது. சென்னையில் குறளகம் அருகில் நடந்த பட்டினிப் போரில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டிருக்கிறார்கள். பேரவையின் கூட்டங்களில் சென்னையில் வழக்கமாகக் கலந்து கொள்ளும் முக்கியமான தமிழுணர்வாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையிலும் சென்னையில் அடையாளப் பட்டினிப் போர் பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது.

சென்னை சட்டக் கல்லூரி, கிறித்தவக் கல்லூரி மாநிலக் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் அடையாளப் பட்டினிப் போரிலும், அதற்கு முந்தைய பிந்தைய போராட்டச் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விடுகின்றனர். த.மா.கா., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் சென்னையில் அடையாளப் பட்டினிப் போர்ப் பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவித்து உரையாற்றுகின்றனர்.

தவிர, ஏப்ரல் 9 ஆம் நாள் பட்டினிப் போர் மறவர்கள் நூற்றுவரின் பெயர்ப் பட்டியலைப் பத்திரிகைகளுக்கு வெளியிடுவதென்றும், ஏப்ரல் 10 ஆம் நாள் தமிழகமெங்கும் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளச் செய்வதென்றும், ஏப்ரல் 17 ஆம் நாள் தமிழகம் தழுவிய வாகனப் பிரச்சாரத்திற்குத் திட்டமிட வேண்டுமென்றும் தீர்மானித்த அக்கூட்டம், ஏப்ரல் 4 ஆம் நாள் நடவடிக்கைக் குழு கூடிப் பட்டினிப் போராளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்கிறது.

ஏப்ரல் 4 ஆம் நாள், சென்னை தேனாம்பேட்டை, மாணவர் கணினி அலுவலகத்தில் நடவடிக்கைக் குழுக் கூட்டம் கூடுகிறது. அதன் உறுப்பினர்கள் ஒன்பது பேர்களும் அதில் கலந்து கொள்கிறார்கள். தமிழ் வழிக் கல்விக்காகச் சாகும்வரை பட்டினிப் போரில் பங்கேற்க விரும்பி தமிழ்ச் சான்றோர் பேரவைக்கு எழுதப்பட்ட நூற்று எழுபதுக்கும் மேற்பட்ட கடிதங்களில் இருந்து நூற்று ஆறு தமிழுணர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். போடி, திருமரைக்காடு, குற்றாலம் ஆகிய ஊர்களில் இருந்து 17-4-1999 ஆம் நாள் தொடங்க உள்ள வாகனப் பிரச்சாரத்திற்கு வழித்தட ஊர்களும் பிரச்சாரத் திட்டங்களும் வரையறுக்கப்படுகின்றன.

கோரிக்கைகள் நிறைவேறினாலன்றி எக்காரணத்தை முன்னிட்டும் பட்டினிப் போரைக் கைவிடுவதில்லை என்று மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. அடுத்ததாக 9-4-1999ஆம் நாள் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதென முடிவெடுக்கப்படுகிறது. 9-4-1999 ஆம் நாள் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம், தமிழ் வழிக் கல்விப் போராட்டம் பற்றி நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வாயிலாக மிகப் பரவலாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் போராட்டக் களங்களை மேலும் மேலும் வலுப்படுத்தும் நிலையில் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில் கூட்டப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டினிப் போரில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட நூற்று ஆறு தமிழுணர்வாளர்களின் பெயர்ப் பட்டியல் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

10-4-1999 ஆம் நாளிதழ்களில் நூறு தமிழுணர்வாளர்கள் தமிழ் வழிக் கல்விக்காகப் பட்டினிப் போர் மேற்கொள்ள இருக்கும் செய்தி வெளியாகிறது. அதே நாளில் (10-4-1999) தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளும், தமிழுணர்வாளர்களும் அவரவர் பகுதிகளில் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான மிதிவண்டிக் குழுக்கள், ஆயிரக்கணக்கான மிதிவண்டிகளில் தமிழகம் முழுவதும் செய்த பிரச்சாரம் தமிழர்களிடையே பெரும் எழுச்சியைத் தோற்றுவிக்கிறது.

17-4-1999 ஆம் நாள், குற்றாலம், திருமரைக்காடு, போடி ஆகிய ஊர்களில் இருந்து பல லட்சக்கணக்கான துண்டறிக்கைகளுடன் மூன்று வாகனங்களில் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. வாகனப் பிரச்சாரக் குழுவினர்களுக்கு உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள். ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பிரச்சார வாகனங்களில் செல்லும் ஊர்களில் எல்லாம் கூட்டம் நடத்தித் துண்டறிக்கைகளை விநியோகம் செய்கிறார்கள் வாகனப் பிரச்சாரக் குழுவினர்.

அதற்கு முன்னதாக 13-4-1999 ஆம் நாள் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னையை நோக்கி தமிழ் வழிக் கல்விப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கின்றனர். வழக்குரைஞர் சேவியர் அருள் ராசு, திரு. ச.மெல்கியோர் போன்ற அவ்வியக்கத் தலைவர்களின் முன் முயற்சியால் திட்டமிடப்பட்ட அந்த மிதிவண்டிப் பிரச்சாரப் பயணத்தை, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா.அருணாசலம் அவர்கள் கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார். பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றுகிறார். மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் ஆயிரக்கணக்கான கிராமங்களின் வழியாகச் சென்னை வரும்போது முப்பது நகரங்களில் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களும் அறிஞர்களும் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். பாவலர் பல்லவன் தலைமையில் மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வரை நடைபெற்ற மிதிவண்டிப் பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். கிறித்துவக் கல்லூரி மாணவர் பாரதி பிரபு தலைமையில் ஆங்காங்கே தெருமுனை நாடகங்களும் சிறப்புடன் நடத்தப் பெற்றன. வழக்கறிஞர் ஓ.சுந்தரம் தலைமையில் சென்னையிலும் மிதிவண்டிப் பயணம் சிறப்புடன் நடைபெறுகிறது.

இறுதிப் போருக்கு முன்பாக...

போராட்ட நாளான ஏப்ரல் 25 ஆம் நாள் மிகவும் நெருங்கி விட்ட சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ் வழிக் கல்விக்காகத் தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்த இருக்கும் தமிழுணர்வாளர்களின் சாகும்வரைப் பட்டினிப் போரைப் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படுகிறது. மிதிவண்டி, மற்றும் வாகனப் பிரச்சாரக் குழுக்கள் நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

24-4-1999 ஆம் நாள் காலை 10-00 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ‘குட்ஷெப்பர்டு’ கல்யாண மண்டபத்தில் பட்டினிப் போராளிகள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். போராளிகள் அனைவரும் கூடியிருந்தவர்களுக்கும், சக போராளிகளுக்கும் வலுவான கையொலிக்கிடையில் அறிமுகம் செய்யப்படுகின்றனர். பட்டினிப் போராளிகளின் கூட்டத்திற்குப் பேராசிரியர் தமிழண்ணன் தலைமை தாங்குகிறார். அன்றைய கூட்டத்திலும் பல புதிய தமிழுணர்வாளர்கள் பட்டினிப் போரில் தம்மையும் இணைத்துக் கொள்ளும்படி ஒப்புதல் கடிதங்களைத் தருகிறார்கள். ஆயினும், இறுதியாகத் தேர்வு பெற்றவர்களின் பட்டியலில் அனைவருமே பங்கு பெற உறுதியாக இருந்ததால் போரில் பங்கு பெறும் வாய்ப்பின்றிப் போய்விடுகிறது.

அன்றயை நாளிதழ்களில், தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான வழி வகை குறித்து அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதால் தமிழ்ச் சான்றோர் பேரவையினர் தமது பட்டினிப் போரை ஒரு நாள் அடையாள பட்டினிப் போராக முடித்துக் கொள்ள வேண்டுமெனக் கோரும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வேண்டுகோள் வெளியாகிறது.

25-4-1999 ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை சைதை கலைஞர் கருணாநிதி வளைவின் அருகில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் பேரணியாகப் புறப்படத் தயாராகத் தத்தமது பதாகைகள், மற்றும் தாம் சார்ந்த இயக்கக் கொடிகளுடன் அணி திரள்கின்றனர். பட்டினிப் போரில் ஈடுபடவுள்ள நூறு தமிழ் உணர்வாளர்கள் இரண்டு வாகனங்களில் முன்னே செல்ல அதைத் தொடர்ந்து அய்யா அருணாசலம், பழ.நெடுமாறன், தமிழண்ணல், மானமிகு ஆனூர் செகதீசன், வே.ஆனைமுத்து, திரைப்பட இயக்குநர் வி.சேகர் போன்ற தமிழுணர்வாளர்கள் தலைமையில் பேரணி புறப்படுகிறது. பட்டுக்கோட்டையில் இருந்து அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரி சுடர் ஏந்தி வந்த தமிழ்வழிக் கல்வி பிரச்சார வாகனம் பேரணியின் முகப்பில் செல்கிறது.

நாடறிந்த கல்வியாளர்களும், தமிழறிஞர்களும் பெருவாரியாகப் பங்கு பெற்ற அப்பேரணி கட்டுப்பாடும், தூய்மையும், உறுதியும் நிறைந்ததாக ஒரு நதியைப் போல நகர்ந்து செல்கிறது. பேரணியின் பயணப் பாதையான அண்ணாசாலை, வெங்கட நாராயணா சாலை, திருமலைப் பிள்ளைத் தெரு போன்ற சாலைகள் நெடுகிலும் காவல் துறையினர் பேரணிக்கு உரிய பாதுகாப்பு வழங்குகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலைத் துச்சமென நினைத்துத் தளராமல் நடக்கின்றன தமிழர்களின் கால்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு தெரிந்த பேரணியில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான இயக்கங்களின் பல்வேறு வகையான கொடிகளும், பதாகைகளும் அந்த வெயிலிலும் வாடா மலர்களாகத் தமிழ் வழிக் கல்வி கோரி அசைகின்றன.

பெரும் எழுச்சியுடன் நகரமே குலுங்கும் வண்ணம் நடைபெற்ற பேரணி வள்ளுவர் கோட்டத்தை அடையும்போது பகல் பதினொன்றரை மணியாகிறது. வள்ளுவர் கோட்டத்தின் வலப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் பட்டினிப் போராளிகள் அமர்கிறார்கள். பட்டுக்கோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சுடர், போராட்டத் தலைவர் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களிடம் வழங்கப்படுகிறது. பட்டினிப் போராளிகளுக்கு நெஞ்சார்ந்த ஆதரவை அளிக்கும் விதமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள் உணர்ச்சிகரமாகத் திரண்டு நின்று தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தியும் தமிழ்ச் சான்றோர் பேரவையை வாழ்த்தியும் முழக்கமிடுகின்றனர்.

பேரணி யில் பங்கு பெறுவதற்காக வெளியூர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்த வாகனங்கள் வள்ளுவர் கோட்டப் பகுதியைச் சுற்றி உரிய இடங்களில் நிறுத்தப்படுகின்றன. போராட்டப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பட்டினிப் போராளிகளை இடியென முழங்கும் கையொலிக்கிடையே ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறார் தோழர் பெ.மணியரசன். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா உணர்ச்சிகரமான தமிழுணர்வுப் பாடல்கள் சிலவற்றை இசைக் கருவிகள் ஏதுமின்றி பார்வையாளர்களை நெகிழ வைப்பதுபோல் பாடுகின்றார்.

பட்டினிப் போராளிகளுக்குத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் அடையாள அட்டை அணிவிக்கப்படுகிறது. பட்டினிப் போராளிகள் நூறு பேர் என்று தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தநிலையிலும் கூடுதலாகவே இரண்டு உணர்வாளர்கள் விடாப்பிடியுடன் போரில் இணைந்து விடுகின்றனர். போராளிகளின் எண்ணிக்கை 102 ஆக உயர்கிறது. பட்டினிப் போருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே அன்று முழுவதும் பல்வேறு தமிழறிஞர்கள் தமிழ்வழிக் கல்வி குறித்து எழுச்சிகரமாக உரையாற்றுகின்றனர்.

24 ஆம் நாளே போராளிகள் உண்ணாதிருந்தாலும் அவர்களின் முகங்களில் ஒரு துளிச் சோர்வும் தென்படவில்லை. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் கொதிக்கும் தார் சாலையிலேயே அமர்ந்து அறிஞர்களின் ஆவேச உரைகளைக் கேட்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள். கருத்துக்கும், கண்ணுக்கம் விருந்தாக, கிறித்துவக் கல்லூரி மாணவர்களின் நாடகம், திரு. பாரதிப் பிரபுவின் முயற்சியால் அரங்கேறுகிறது.

மாலை சுமார் 6.30 மணிக்கு அரசு போராட்டக் குழுவினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. அதை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குப் போன போராட்டக் குழுவினர் அமைச்சர் தமிழ்க்குடிமகன் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபின் எந்தவிதமான மனநிறைவும், கோரிக்கை மீது வெற்றியும் கிட்டாமல் போராட்டத்தைத் தொடரும் உறுதியோடு போராட்டப் பந்தலுக்குத் திரும்புகின்றனர். அன்றைய இரவு புதிரும், பொருளும் நிறைந்ததாகக் காணப்படுகிறது. “வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் தமிழுணர்வாளர்கள் அவரவர் ஊருக்குத் திரும்பி ஆங்காங்கே சென்னையில் நடக்கும் இப்போராட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்துப் பரப்பும் பணியை மேற்கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் உணர்வாளர்களைக் கொண்டு நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்’’ என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார்.

கூட்டம் அசையவோ, கலையவோ இல்லை. என்ன நடந்தாலும் இருந்து சந்திப்பது என்ற முடிவுடன் அமர்ந்திருக்கிறார்கள் கூடியிருந்த தமிழுணர்வாளர்கள். இரவு 8.30 இரவு 9.30 மணிவரை களைத்துப் படுத்திருக்கும் போராளிகளுக்கும் அமர்ந்திருக்கும் தமிழுணர்வாளர்களுக்குமாக உரை நிகழ்த்திய வண்ணமிருக்கிறார்கள் பல்வேறு தமிழறிஞர்கள். அன்று இரவு (25-4-99) போராளிகள் உறங்கியபின் அவர்களுக்கு அரணாக ஏனைய தமிழுணர்வாளர்கள் சாலையிலேயே படுத்து விடுகின்றனர்.

26-4-1999 ஆம் நாள் காலை அமைச்சர் தமிழ்க்குடிமகன் போராட்டப் பந்தலுக்கு வந்து அரசின் நிலையை விளக்கியும், தமிழ்ச் சான்றோர் பேரவையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்றும் உரையாற்றி தமிழ்ச் சான்றோர் பேரவை தனது போராட்ட முடிவை மறுபரிசீலனை செய்து தமக்குத் தெரிவித்தால் அதையறிந்து கொண்டு புறப்படுவதாக அறிவித்துவிட்டு உண்ணா நோன்புப் பந்தலிலேயே அமர்ந்து கொள்கிறார். போராட்டம் தொடர்பான முடிவுகளைப் போராட்டக் குழுவைக் கூட்டித்தான் அறிவிக்க முடியும். எனவே, போராட்டக் குழுவைக் கூட்டி எடுக்கப்படும் முடிவுடன் தங்களை வந்து சந்திக்கிறோம் என்று அமைச்ச் தமிழ்க்குடிமகனை வழியனுப்பி வைக்கிறார்கள் போராட்டக் குழுவினர்.

அரசு சார்பான 41,417 பள்ளிகளிலும் இப்போது தமிழே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள மெட்ரிகுலேஷன் முதலான 240 பள்ளிகளில் மட்டுமே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று முதல் ஐந்து வகுப்புக்குரிய தொடக்கப் பள்ளிகள், நாடு முழுவதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி ‘தமிழ்’ மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற கொள்கையில் தமிழ் அறிஞர்களுக்கும் - தமிழக அரசுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. இக் கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு ஏப்ரல் 30-க்குள் ஒரு குழு அமைக்கப்படும். மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து பரிந்துரை அறிக்கை பெற்று, வரும் கல்வியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு செய்யும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியவாறு பட்டினியிருக்கும் தமிழ் அறிஞர்களோடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவாகும் இது (ஒப்பம்) அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன்.

26-4-1999 ஆம் நாள் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிவித்த அறிவிப்புகளின் முக்கிய குறிப்புகள், விவரம் பின்வருமாறு:

1) தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1991-லேயே எங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். எனவே, எங்களுக்குக் கொள்கையில் வேறுபாடு கிடையாது. இதைச் செயற்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக வேறொரு மாநிலத்தில் அரசாணை பிறப்பித்திருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது நல்ல கொள்கை என்பதால் இதை எந்த வகையில் செயற்படுத்தலாம் என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்து நடைமுறைப்படுத்த அரசு ஆவன செய்யும்.

2) பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள வகுப்புகளுக்கு மேலாகக் கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதற்குக் கேட்கப்பட்டது. இத்திட்டத்தினை, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு மறுத்து விட்டது. என்றாலும் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடனும் என்னுடனும் போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளாகவே வருமாறு செய்தால், நாமே செய்துவிடலாமே? அல்லது தில்லியில் இசைவைக் கேட்கலாமா என்பது குறித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் மற்றும் உயர்கல்விச் செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசப்பட்டது.

இப்பாடத்திற்குரிய அனைத்து நூல்களும் தயாராக உள்ளன. மாணவர்களுடைய ஆர்வத்திற்கும் குறைவில்லை. வெகு விரைவில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, உயர்கல்விச் செயலாளர் வரும் 29-4-99 அன்று தில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார். இங்கும் உரிய அறிஞர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

3) போராட்டக் குழுவினரின் முக்கிய, முதலாவது கோரிக்கை 1 முதல் 5 வரை தமிழ், பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். அரசின் சார்புடைய பள்ளிகள் மொத்தம் 41,317 உள்ளன. இவற்றில் ஏற்கனவே தமிழ்பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கிறது. நாம் முடிவெடுக்க வேண்டி யது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் - 2,187; சி.பி.எஸ்.இ. - 194, ஆங்கிலோ இந்தியர்கள் பள்ளி - 41, ஆக மொத்தம் 2,422 பள்ளிகள் ஆகும்.

தமிழ் வழியில் பயிற்றுவிப்பது தொடர்பாக எங்களுக்கு இரண்டாவது கருத்தே கிடையாது. காந்தியடிகள் ஏற்கனவே நாம் தாய்மொழியில் படிக்காததால் அனைவரும் கோழைகள் ஆகிவிட்டோம். வீறார்ந்த உணர்வை இழந்து விட்டோம் என்று தெளிவாக ‘மாணவர்களுக்கு’ என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதிலும் சட்டச் சிக்கல் இருக்கின்றது. மொழிச் சிறுபான்மையினர்களுக்கான பள்ளிகள் மேற்கண்ட 242-இல் அடங்கும். தங்களுக்கு உரிமை உண்டு. மழலையர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை தமிழைப் பயிற்று மொழியாக்க ஆணையிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மெட்ரிகுலேசன் மற்றும் பிற பள்ளிகளுக்கு எடுத்துக் கொள்வோம், தமிழறிஞர்கள் இதையும் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

முதல்வர் அவர்கள் இந்த வாரத்திற்குள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள், சான்றோர் பேரவையில் சில உறுப்பினர்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் அடங்குவர். குழு இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும். இந்தக் குழு முறையாகக் கூடி, ஆய்வு செய்து, சட்டப்படியான சிக்கல் என்ன என்பதையும் அந்தத் தரப்பினருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கும்.

தலைவர்(கலைஞர்) அவர்களின் கருத்துப்படி வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக சூன் மாதத்திற்குள் சட்டப்படியான சிக்கல் தீர்க்கப்படுவதற்கு ஆவன செய்யப்படும். எனவே, மேற்கண்ட விளக்கங்களை ஏற்று அவர்கள், போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது. 1008 மொழிச் சிறுபான்மையர் பள்ளிகள் அனைத்திலும் தமிழாசிரியர் பணியிடங்கள் அமர்த்தப்பட்டால், அவர்கள் தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்துடன் தமிழையும் ஒரு பாடமாக நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

16-11-98 இல் கலைஞர் அவர்கள் அறிவித்த முடிவினை அனைவரும் (மொழிச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் - தெலுங்கு, கேரள சமாஜம், உருது மொழி ஆசிரியர் கூட்டமைப்பு போன்றவர்கள்) வரவேற்றுள்ளனர். மேற்கண்ட அமைப்பினர் தமிழாசிரியர் பணியிடம் தந்தால், தமிழ்ப்பாடம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக வெகு விரைவில் முடிவெடுக்கப்படும். எனவே, பேராட்டக் குழுவினர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என நம்புகிறோம் என்று அமைச்சர் தமிழ்க்குடிமகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வழக்குரைஞர் பொ.வெ.பக்தவச்சலம் அவர்களின் இல்லத்தில் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆழமானதும், பொருள் பொதிந்ததுமான விவாதங்களுக்குப் பிறகு, முடிவாக –

“எங்கள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பாகப் போராட்டக் குழுவினர் முன் வைத்த மூன்று கோரிக்கைகளைப் பற்றி அரசு மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும், மாண்புமிகு அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் நேரில் வந்து விளக்கியமைக்கும் நன்றி. நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில், உயர்கல்வியில் தமிழ்வழி எனும் எமது இரண்டாவது கோரிக்கை குறித்தும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனும் மூன்றாவது கோரிக்கை குறித்தும் அரசின் சார்பில் விளக்கம் அளித்ததை ஏற்று அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி இரண்டு கோரிக்கைகளில் உள்ள சட்டம் மற்றும் தொழில்நுட்பரீதியான சிக்கல்களை ஆய்வு செய்து படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்த ஆவன செய்வதாக அரசு உறுதியளித்திருந்தது. எங்களது முதற்கோரிக்கையாகிய குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வி தமிழுலகு தழுவிய மிக உயிரான கோரிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். ஒன்று முதல் ஐந்து வகுப்புக்கு உரிய தொடக்கப் பள்ளிகள், நாடு முழுவதும் பரவியுள்ள நர்சரி பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் அரசு எங்களிடம் தெரிவித்ததுபோல் ஏப்ரல் 30-க்குள் குழு அமைக்க வேண்டும் என்றும் மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்றும், அவ்வறிக்கையின் அடிப்படையில் ஆணை பிறப்பித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் விழைந்து வேண்டுகிறோம். இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் - என்று தீர்மானம் செய்யப்படுகிறது.

போராட்டக் குழுவினரின் தீர்மானிக்கப்பட்ட, சமரசமற்ற கோரிக்கைகளுடன் போராட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தமிழ்க்குடிமகனைச் சந்திக்கின்றனர். முதல்வரைக் கலந்து ஆலோசித்துவிட்டுப் போராட்டக் குழுவினருடன் கோரிக்கைகள் குறித்து உரையாடுகிறார் அமைச்சர் தமிழ்க்குடிமகன். “தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில், தமிழ்வழிக் கல்விக் கொள்கையில் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கும், தமிழக அரசுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தமிழ் வழிக் கல்வி நடைமுறைக்கு வருவது குறித்த சாத்தியக் கூறுகள் அனைத்தையும் ஆராய்வோம்’’ என்று தமது உணர்வைத் தெளிவுப்படுத்திய அமைச்சர் தமிழ்க்குடிமகன், தமிழக முதல்வர் கலைஞருடன் கலந்தாலோசித்துத் தயாரித்திருந்த தமிழ் வழிக் கல்வி குறித்த அறிக்கையைப் போராட்டக் குழுவினரிடம் வழங்குகிறார்.

அரசு அறிவிப்பும் போர் நிறுத்தமும்

அரசுச் சார்பான 41,417 பள்ளிகளிலும் இப்போது தமிழே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள மெட்ரிகுலேசன் முதலான 2,402 பள்ளிகளில் மட்டுமே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று முதல் ஐந்து வகுப்புக்குரிய தொடக்கப்பள்ளிகள், நாடு முழுதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் வரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘தமிழ்’ ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற கொள்கையில் தமிழ் அறிஞர்களுக்கும் - தமிழக அரசுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. இக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு ஏப்ரல் 30-க்குள் ஒரு குழு அமைக்கப்படும். மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து பரிந்துரை அறிக்கை பெற்று வரும் கல்வியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு செய்யும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியவாறு உண்ணா நோன்பிருக்கும் தமிழ் அறிஞர்களோடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவாகும் இது. அரசின் அறிக்கையை எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் போராட்டப் பந்தலுக்குத் திரும்புகின்றனர். போராட்டப் பந்தலில் பட்டினிப் போராளிகளுக்கும், தமிழ்வழிக் கல்விப் போருக்கும் ஆதரவாகவும், அரணாகவும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டிருந்த தமிழுணர்வாளர்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டப் பந்தலுக்குத் திரும்பிய போராட்டக் குழுவினரைக் கண்டதும் பெரும் பரபரப்படைகின்றனர். அரசின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டு அலைமோதுகின்றனர்.

போராட்டத் தலைவர் தமிழண்ணல் ஒலிபெருக்கி முன்பாக வந்து நின்றவுடன் அவரது வார்த்தைகளின் வருகைக்காக மிகவும் ஆழ்ந்த அமைதி தோற்றுவிக்கப்படுகிறது. “என் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்வுப் பூர்வமாக இங்கே திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்களே! பட்டினிப் போராளிகளே! உன்னதமான உங்கள் தமிழுணர்வுக்கும், எழுச்சிமிக்க உங்கள் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்று சொல்ல, போராட்டப் பந்தல் வெகு நேரக் கரவொலியால் அதிர்கிறது.

தொடர்ந்து, தாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களைச் சொன்ன பேராசிரியர் தமிழண்ணல் அரசு போராட்டக் குழுவினருக்கு எழுத்துப் பூர்வமாக அமைச்சர் தமிழ்க்குடிமகன் கையொப்பத்துடன் அளித்த அறிக்கையை அனைவரும் கேட்கும் வண்ணம் படிக்கிறார். கையொலியாலும், வெற்றியுணர்வாலும் போராட்டப் பந்தல் திணறிக் கொண்டிருந்த அவ்வேளையில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் பட்டினிப் போரை முடித்து வைக்கும் பொருட்டு அங்கே வருகை தருகிறார். வலுவான கையொலி எழுப்பி அவரை வரவேற்கிறார்கள், அங்கு திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்கள்.

போராட்டம் குறித்து அரசு எடுத்துள்ள உடன்பாடான முடிவுகளை விளக்கிச் சில நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர், போராட்டத் தலைவர் தமிழண்ணல் அவர்களுக்குப் பழச்சாறு தந்து பட்டினிப் போரை முடித்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து பட்டினிப் போராளிகள் அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்படுகிறது. நிறைவான மனதுடனும் வெற்றிப் பெருமிதத்தோடும் கைகுலுக்கி, வணக்கம் சொல்லி விடைபெறுகிறார்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரண்ட 102 பட்டினிப் போராளிகளும், ஆயிரக்கணக்கான தமிழுணர்வாளர்களும்.

28-4-1999 ஆம் நாள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்ட உயர்நிலைக் குழு தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் தமிழ்வழிக் கல்விப் போராட்டத்திற்கு ஆதரவளித்து, அரணாக நின்று பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தும், அரசு அமைக்க இருக்கும் குழுவில் அரசு அறிவித்துள்ளபடி தமிழ்ச் சான்றோர் பேரவையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இளவரசு, புலவர் த.சுந்தரராசன், தோழர் தியாகு, பேராசிரியர் சோ.விருத்தாசலம், வழக்குரைஞர் சேவியர் அருள்ராசு, புலவர் கி.த.பச்சையப்பன் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனும் கோரிக்கையுடன் முனைவர் தமிழண்ணல் தலைமையில் போராட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அமைச்சர் தமிழ்க்குடி மகனைச் சந்தித்துக் கோரிக்கையை அவரிடம் அளிக்கின்றனர்.

அரசின் ஆய்வுக்குழு

30-4-1999 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வியை நடை முறைப்படுத்திட ஏதுவாக அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு, நீதிபதி மோகன் தலைமையில், முனைவர் தமிழண்ணல், புலவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ச.முத்துக்குமரன், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை அமைத்துச் செயல்படப் பணிக்கிறது அரசு. 13-4-1999 ஆம் நாள் அனைத்து முன்னிலை நாளிதழ்களிலும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வாயிலாக அறிவிப்பு ஒன்று இவ்வாறு வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு அறிவிக்கை

பள்ளிக்கல்வித் துறை 3-5-1999 நாளிட்ட அரசாணை எண் 117-இன்படி, மழலையர் பள்ளிகள் முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி வரையில் தமிழ் மொழி வழி கற்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்திட உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் மோகன் அவர்களைத் தலைவராகவும் அறிஞர்கள் நால்வரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

மேற்படி குழு தமிழ்வழிக் கல்வி குறித்து, பொதுமக்கள் கருத்துக்களை நேரில் கேட்டறியக் கருதியுள்ளதால், மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் மாலை 3-00 மணி முதலாக சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள கல்வி இயக்குனர் வளாகத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்ட மாளிகை மாநாட்டுக் கூடத்தில் அந்தக் குழுவைப் பொதுமக்கள் நேர்முகமாகக் காணலாம். பொதுமக்கள் நேரில் வந்து வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்காணும் அறிக்கை தமிழறிஞர்களையும், தமிழுணர்வாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. தமிழ் வழிக் கல்வி என்பது தமிழர்களின் உரிமை. இந்த உரிமையை அளிப்பதற்குக் கருத்துக் கணிப்பு நடத்துவது அதையும் தமிழ்நாட்டில் தமிழர்களிடமே நடத்துவது என்பது நமது நியாயமான உரிமையின்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றே பலரும் உணர்ந்தனர்.

இந்நிலையில் 14-5-1999 ஆம் நாள் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அரசு நடத்த முயலும் கருத்துக் கணிப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்புக் குறித்த நீதிபதி மோகன் குழுவில் பிற உறுப்பினர்களுடன் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதாகவும், கருத்துக் கணிப்பு 18, 19, 20-5-99 ஆகிய நாள்களில் நடைபெறுவது தள்ளி வைக்கப்பட்டு 20, 21, 22-5-99 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது என்றும் பேராசிரியர் தமிழண்ணல் தெரிவித்தார்.

கருத்துக்கணிப்பு பற்றிய அரசு விளம்பரம் ஆங்கிலப் பள்ளிகள் நிறைந்த சென்னை நகரில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால் அதில் பொதிந்துள்ள உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்துத் தமிழ் உணர்வாளர்களுக்கும் இந் நிகழ்வைத் தெரிவித்து அவர்களையும் கருத்துக் கணிப்பில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.

அதன்படி கருத்துக் கணிப்புப் பற்றிய சுற்றறிக்கையைத் தமிழகம் முழுவதுமுள்ள உணர்வாளர்களுக்கு அனுப்பி வைக்கிறது தமிழ்ச் சான்றோர் பேரவை. 20, 21, 22-5-99 ஆகிய நாள்களில் தமிழ் வழிக்கல்வி பற்றிய கருத்துக் கணிப்பு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அரசு, நாளிதழ்களில் விளம்பரம் செய்கிறது. அரசு அறிவித்தபடி மே மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டுப் பள்ளிகளில், பிள்ளைகளுக்குத் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற தமது கருத்துக்களை உறுதியாகப் பதிவு செய்கின்றனர். ஆங்கில வழிக் கல்வி ஆதரவாளர்களாக வந்த சிலரும் சில ஆங்கிலப் பள்ளி நிர்வாகிகளும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டாலும் தொண்ணூறு விழக்காடு கருத்துக்கள் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாகவே பதிவாகின்றன.

மறுநாள் 23-5-99 ஆம் நாள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் கூட்டப்படுகிறது. முந்தைய மூன்று நாள்களில் நடந்த கருத்துக் கணிப்பு பற்றி அக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழ் வழிக் கல்வியைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் எனும் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் நிலவுகிறது. அரசு என்ன செய்யப்போகிறது எனும் எதிர்பார்ப்பு, கடிதங்களாக உருப்பெற்று தமிழ்ச்சான்றோர் பேரவை அலுவலகத்திற்கு வந்து குவிகின்றன.

இந்நிலையில் 12-6-99 ஆம் நாள் மீண்டும் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டையில் கூடிக் கலந்தாய்வு செய்கிறது. அடுத்ததாக 21-6-99 ஆம் நாள் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ள தமிழ் வழிக் கல்வி குறித்த மோகன் குழு அறிக்கையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதுமாறு நானூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கம், உணர்வாளர்களுக்கும் கடிதம் அனுப்புகிறது தமிழ்ச் சான்றோர் பேரவை. அதன்படி பல நூற்றுக்கணக்கான கடிதங்களைத் தமிழக அரசுக்கும், அதன் நகல்களைத் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கும் அனுப்புகின்றனர் தமிழகம் முழுவதிலுள்ள தமிழுணர்வாளர்கள்.

21-6-99 ஆம் நாள் காலை 9-30 மணிக்குப் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொலைக்காட்சி நிறுவனத்தினர் சூழ, தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையைப் பெற்றுக் கொள்கிறார் தமிழக முதல்வர் கலைஞர். 6-7-99 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையை வெளியீடுமாறும், நடைமுறைப்படுத்துமாறும் அரசுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதப்படுகின்றன. அவற்றின் நகல்கள் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கு அனுப்பப்படகின்றன. அதன்படி 15-7-99 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையை வெளியிட்ட முதல்வர், பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் இது குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து முடிவு செய்து அறிவிப்பேன் என்று அறிவிக்கிறார்.

15-8-99 ஆம் நாள் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுடன் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி, தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய நூற்றியிரண்டு தமிழுணர்வார்களின் சாகும்வரை உண்ணாநோன்பு அறப்போரின் முடிவில் தமிழக அரசு அளித்த உறுதிமொழிகளின்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயக் குறிப்பிட்ட நாளில் நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைத்ததற்கும், குறிப்பிட்டபடி அக்குழு பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டமைக்கும் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டக் குழு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்தக் கல்வி ஆண்டிலேயே (1999-2000) குழுவினது அறிக்கையை நிறைவேற்றி, அரசு கொடுத்த உறுதிமொழியின்படி, ஓர் அவசரச் சட்டம் இயற்றித் தமிழ்வழிக் கல்வியை நிலை பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டக் குழு அரசைக் கேட்டுக் கொள்கிறது. தமிழ்ச் சான்றோர் பேரவையின் தமிழ்வழிக் கல்விப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது - எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com