மனித வாழ்வின் பெருமை எது?
தந்தை பெரியார்
தாய்மார்களே! தோழர்களே! இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் அழைக்கப்படுவதன் மூலம் பலர் இதுவரை நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியைச் செய்து வந்த முறைகளில் உள்ளவைகளை விளக்கி அவைகள் நமது அறிவுக்குப் பொருத்தமானவைகளா, இல்லையா என்பதைச் சிந்திக்கும்படி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
நான் பேசுகிறவைகள் இதுவரை இருந்து வந்த பழக்கவழக்கங்களுக்கு மாறான முறைகளில் இருக்கும். இப்படிக் கூறுவது நான் வேறுயாரையும் ஆதாரங்காட்டியோ, முனிவர்கள் - பெரியவர்கள் சொன்னார்கள் என்பதைக் காட்டியோ, அல்லது பழைய புராணங்கள் கூறுகின்றன என்பதைக் காட்டியோ இல்லை. என்னுடைய மனதிற்குத் தென்பட்டவைகளைக் கூறுகிறேன். “நீ உன்னுடைய மூளைக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்; இல்லையேல் சும்மா இரு,’’ என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். அன்றி “நீ நம்பத்தான் வேண்டும். நான் கூறுவதுதான் முடிந்த முடிவு. ஆகவே நம்பு! நம்பினால் மோட்சம்! நம்பாவிடில் நரகம்’’ என்று கூறுவதில்லை.
நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் என் வேலை. எத்தனை நாளைக்குத்தான் மக்கள் மடையர்களாக இருக்கப் போகிறார்கள்? என்றைக்காவது ஒருநாள் மனதில் பட்டு தங்கள் கருத்துக்குச் சரியென்று தோன்றாதா? அதன் மூலம் என்றைக்காவது நம் மக்கள் நாகரிகத்துடன் பகுத்தறிவு பெற்றவர்களாக வாழ மாட்டார்களா என்ற விருப்பத்தைக் கொண்டே எங்கிலும் என் கருத்துக்களைச் சொல்லி வருகின்றேன்.
பொதுவாக மனித ஜீவனுக்கு எதையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவுத்தன்மை இயற்கையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மனிதனைத் தவிர மற்ற ஜீவன்களெல்லாம் அப்படி இல்லை. அவை என்றென்றும் ஒரே விதமான வாழ்க்கையிலேயே இருக்கின்றன. ஆனால் மனிதனோ ஆண்டுக்கு ஆண்டு மாற்றமடைகிறான். 50 வருடத்திற்கு முன் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வருடத்திற்கு வருடம் புதுப் புதுவிதமாக வாழுகிறான். மணிக்கு மணி எவ்வளவோ மாற்றத்தை அடைகிறான். இப்படி மிக வேகமாக மனித சமுதாயத்தில் புதிய மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
கட்டை வண்டியில் இருந்த வாழ்க்கை இன்று இரயில், மோட்டார், ஆகாய விமானத்தில் பறக்கும் அளவுக்கு வந்துவிட்டது. நாய் கூட ஆகாய விமானத்தில் மணிக்கு 500-600 மைல் வேகத்தில் பறக்கிறது. சக்கி முக்கி கல் இருந்த காலம் போய் இன்றைக்குப் பெட்ரோமாக்ஸ் லைட், மின்சார விளக்கு முதலியவை வந்து விட்டன. இரவு பன்னிரண்டு மணி நேரத்தில் ஒரு மயிர்க் கால் நுனியில் வெளிச்சத்தைக் காட்டி அந்நேரத்தை பகல் 12 மணி நேரத்தின் வெளிச்சத்திற்கு ஒப்பிடும்படியான மின்சார விளக்குச் சாதனங்களைக் காண்கிறோம்.
சுருட்டு, பீடி, சிகரட் ஊதும் மைனர்கள் பாக்கட்டிலிருந்து சிறிய தகர டப்பாவைப் போன்றுள்ள கருவியை எடுத்து ஒரு தட்டுத் தட்டினால் குப்பென்று எரியும் கருவியைக் கையாளுகின்றனர். இங்கிருந்து இரவில் அயல் ஊருக்குச் செல்லுகையில் வெளிச்சத்திற்காக முன்னெல்லாம் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு செல்வார்கள். இப்போதோ இரண்டு ரூபாயில் “பேட்டரி லைட்’’ கையில் நாசுக்காக வைத்துக் கொண்டு பொத்தானை அழுத்தினால் பளிச் சென்று வெளிச்சம் வருகிறது.
இது மட்டுமா? இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலிஃபோன் (தொலை பேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து வடகோடி இமயமலை அடி வாரத்தில் உள்ளவரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.
இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயா ஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் காரணம் மனித வாழ்க்கையே! மற்ற ஜீவன்களின் வாழ்க்கையைவிட மாறானது; எதையும் தன் அறிவு கொண்டு ஆராயும் தன்மையுடன் இருப்பதால் இப்படி அதன் பலனால் மாறிக் கொண்டே போகிறான்.
மற்ற ஜீவன்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கின்றன; ஏதாவது ஓரிரு மிருகம் தன் வாழ்க்கையில் சிறிது மாற்றமடைந்திருக்குமானால் அது மனிதனால் புகுத்தப்பட்டிருக்கும். அதை அன்றி அதற்குத் தன் சொந்தமான புத்தியை உபயோகித்து நல்லது கெட்டது உணர்ந்து அதன்படி நடப்பது கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட உயர்ந்த குணத்தையடைந்த மனிதனின் வாழ்க்கை உள்ள நிலை இன்றைக்கு நம் நாட்டில் மிக மோசமாக இருக்கிறது.
இதுவரை கூறிய அதிசய அற்புதங்களில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்த அறிவாளி நம் நாட்டு மனிதனாக இருக்கவில்லை. எல்லாம் மேனாடுகளில் தான் பகுத்தறிவாளி தோன்றுகிறான். அயல்நாட்டில்தான் விஞ்ஞானி தோன்றுகிறான்; பெரிய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனங்களைக் காணும் அறிவுபெற்ற நிபுணர்கள் தோன்றுகிறார்கள். ஆனால் இந்நாட்டில் இதுவரை தோன்றியவர்கள் எல்லாரும் பக்தர்கள், பரமாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள், ரிஷிகள், முனிவர்கள்; இப்படிபட்ட அயோக்கியர்கள் தான் தோன்றியதாகப் பார்ப்பனப் புராணங்கள் கூறுகின்றன. அதுவும் இன்றி இப்போது நம் கண் முன்பாகவே தோன்றிய மகாத்மா இராமராஜ்யத்தை உண்டாக்கத் தோன்றினார்.
இன்னும் இப்போதுள்ள மந்திரிகள் அரசியல் தலைவர்கூட காந்தி ஏற்படுத்திய இராமராஜ்யத்திற்குதான் தலைவர்களே அன்றி ஜனநாயக நாட்டிற்குத் தலைவர்கள் அல்லர். இராமராஜ்யத்தில் எந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதோ அதே முறையைத் தான் இன்றைய ஆட்சியிலும் கையாளுகின்றனர். இப்படி நம் நாட்டில் ஒன்றுக்கும் உபயோகமற்ற அயோக்கியர்கள்தான் இதுவரைக்கும் தோன்றி நம் நாட்டைப் பாழாக்கி விட்டனர். இதனால் யாரைக் கேட்டாலும் சாஸ்திரம் சொல்லுகிறது; புராணம் சொல்லுகிறது; ரிஷிகள் சொன்னார்கள்; கடவுள் அவதாரங்கள் சொன்னார்கள் என்று தான் கூறுகிறார்களே அன்றி ஏன் அப்படி சொன்னார்கள்? அதனால் நன்மை என்ன தீமை என்ன என்பவைகளை ஆராய்ந்து சொல்வது கிடையாது.
இப்படியே நம் மக்கள் முன்னோர்கள் சொன்னதையும், பார்ப்பனர்கள் சொன்னதையும் ஆராய்ந்து பார்க்காமல் இன்றைக்கும் மடையர்களாக இருக்கிறார்கள். மேனாட்டில் காணப்படும் புதிய முறைகள் இங்கேயும் ஏன் தோன்றக்கூடாது? அந் நாட்டில் உள்ள மனிதன் அநேக அதிசய அற்புதத்தைக் காணுகிற போது உன்னாலும் ஏன் காண முடியாது? காரணம் அறிவைப் பயன்படுத்தாததே.
அதற்கேற்ற வண்ணம் பாழாய்ப் போன சாஸ்திர புராணங்களும் கடவுள்களும் இந்நாட்டில் மலிந்து விட்டன. கடவுள் என்ற சொல்லப்படாத பொருளே இல்லை. மரம், கல், சாணி, முதற்கொண்டு எல்லாம் கடவுள்; காக்காய், கழுகு, மாடு முதற்கொண்டு எல்லா மிருகங்களும், எல்லா பட்சிகளும், மரம், கொடி, செடி, புல்பூண்டு முதல் உயிருள்ள பொருள் அத்தனையும், மற்றும் உயிரற்ற பொருள் சாணி, மூத்திரம் வரை எல்லாம் கடவுள்கள் மயமாகவே இருக்கின்றன. இப்படி எண்ணிக்கையற்ற கடவுள்கள், பேர் சொல்லத் தெரியாத கடவுள்கள் எங்கும் கடவுள்கள் மயமாகவே இருந்தும், இதுவரை ஒரு விதப் பலனும் ஏற்படவில்லை என்பதுமட்டுமல்ல; நம் மக்களைப் புத்தியற்றவர்களாகவே ஆக்கிவிட்டன. சுலபத்தில் திருத்தமுடியாத அளவுக்கு இத்தனையும் சேர்ந்து நம் மக்களின் அறிவைப் பாழாக்கிவிட்டன.
இத்தனையும் இந்நாட்டில் நிலைபெற்றிருந்தால் தான் ஒரு சிலர் சுகமாக வாழமுடியும். அவர்களின் வாழ்க்கைக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமோ. அவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் புராணங்கள் எழுதப்பட்டன. எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் எண்ணற்ற கடவுள்கள் இருப்பதற்குக் காரணம் வேண்டும்? எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருப்பதே அதற்குக் காரணம். கடவுள்களும், சாஸ்திர புராணங்களும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சுக வாழ்க்கைக்கும் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட வைதீகத் தன்மைகளை நிலைநாட்டவே மோட்சம், நரகம் உண்டாக்கப்பட்டன. ‘சாஸ்திர புராணங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது. காதால் கேட்கவும் கூடாது; படித்துப் பார்க்கவும் கூடாது’ என்ற நிபந்தனையும் ஏற்படுத்தி அவைகளுக்கு இன்னின்ன தண்டனைகள் என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள். மனிதன் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் கூறியபடி கேட்க வேண்டும்; கடவுள் கூறியதற்கு மாறாக நடக்கக்கூடாது. அப்படி நடந்தவன் நரகம் சேருவான்; பார்ப்பனப் புரட்டுகளை ஒப்புக் கொள்கிறவன் மோட்சம் சேருவான் என்பதையும் கூறினர்.
மேலும் மதம், மக்களை மடமையிலேயே என்றென்றும் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்பதற்கே ஏற்படுத்தப்பட்டது. அவனவன் ‘என் மதத்தில் கூறி இருக்கிறது. அதன் உட்பிரிவுகளான பல்வேறு’ ஜாதிகளைக் காட்டி ‘என்னுடைய ஜாதி பழக்க வழக்கம்’ என்று கூறி கண் மூடத்தனமாகப் பின்பற்றுதலும் அறிவை உபயோகிக்காததேயாகும். எதற்காக அப்படிச் சொல்லி இருக்கிறது என்பதைச் சிந்திப்பதே இல்லை. எனவே இன்றைக்கு நடைபெறும் இதுபோன்ற நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சிக்குக் கூட இங்கு ஒரு பார்ப்பான் வந்து நடத்துவானாகில் இயற்கை எய்தியவர் என்ன ஜாதி, அவர் ஜாதிக்கு என்ன பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டு வந்தார்கள் என்பதை அனுசரித்தே நடத்துவான்.
இதனால் என்ன விளங்குகிறதென்றால், இயற்கை எய்தியவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதையும், அந்த ஜாதிப் பழக்க வழக்கம் என்பதால் அந்த ஜாதி மறைந்துபோகாமல் என்றைக்கும் இருக்க வேண்டும் என்பதற்குமே செய்யப்படுகிறது. இப்படியே இன்னமும் கல்யாணம், கருமாதி, திவசம், இப்படிப் பலவகைகளை உண்டாக்கி அவைகளில் அந்த ஜாதிக்கு ஒவ்வொரு முறையை உண்டாக்கி அந்த ஜாதிகளை நிலைநாட்டவே செய்யப்படுகின்றன.
இப்படிப்பட்ட நிலை இன்றைக்கு மாற்றமடைந்து கொண்டுதான் வருகின்றது. எங்களின் முயற்சியும் ஓரளவு பயன் அளித்துக் கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பான்மையினர் முன்பு இருந்ததைப் போன்று பயங்கொள்ளாமல் துணிந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் கூட்டம் என்றால் வருவதற்கே மக்கள் பயப்படுவார்கள். எங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயப்படுவார்கள். அது மட்டும் அல்ல. நாங்கள் பேச முடியாதபடி தொல்லைகள் கொடுப்பார்கள். அப்படியெல்லாம் செய்த இதே மக்கள் இன்றைக்கு எங்கள் கூட்டம் என்றால் வேறு எந்தக் கூட்டத்திற்கும் இல்லாத முறையில் அதிக அளவு வந்து குவிந்து விடுகின்றனர்.
நாங்கள் பேசுவதில் என்ன தான் உண்மை இருக்கிறது என்பதைக் கேட்கும் அளவுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் நாத்திகர்கள்; எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று தூற்றிய மக்களே மன தைரியம் கொண்டு எங்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்; அது மட்டும் இல்லாமல் இன்றைக்கு எங்கள் கருத்தைக் கடைபிடித்து அதன்படி நடக்கும் பகுத்தறிவு கொண்டவர்கள் மலிந்து விட்டார்கள். வீண் வெளிப் பகட்டுக்கும், பிறரை ஏமாற்றவும், காசு சம்பாதிக்கவும், மற்றவன் தயவு வேண்டும் என்பதற்காக மட்டும் சாம்பலைப் பூசியும், கொட்டையைக் கழுத்தில் கட்டிக் கொண்டும் திரிகிறார்களே அன்றி உண்மையில் பக்திக்காக என்று கூறுவதற்கு இல்லை. இன்னமும் சிலர் பார்ப்பனத் தெருவில் பொறுக்கித் தின்னலாமே என்பதற்காக எங்களிடம் வெறுப்புக் காட்டுகிறார்களே அன்றி உண்மையில் வெறுப்பு என்று கூற முடி யாது.
பார்ப்பான் கூட எங்கள் பேச்சுக்களை மறுத்துக் கூறமுடியாது; இன்றைக்கு இதுவரை நாங்கள் ஆராய்ச்சி செய்து விளக்கிக் கூறி இராமாயணத்தைப் பற்றி யாருக்காவது சரியானபடி யார் ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள்? சென்னையில் பார்ப்பனத் தெருவில் இராமாயணத்தின் யோக்கியதைகளை எடுத்துக் கூறினோம். அதைக் கேட்ட பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் “இராமசாமி உண்மையைத்தான் சொல்லுகிறான். நாம் என்ன செய்ய முடியும்? இராமாயணப் புத்தகத்திலேயே பக்கம் பக்கமாக எடுத்துக்காட்டி அல்லவா சொல்லுகிறான்? நாம் என்ன அதற்குச் செய்ய முடியும்?’’ என்றுதான் கூறினார்களே அன்றி ஆதாரத்துடன் என்னிடம் நேரில் மறுத்துக் கேட்க முடியவில்லை.
எனவே இன்றைக்கு எங்களின். பிரச்சாரத்தின் பலனாய், பார்ப்பனர்கள் “இனி மேல் நம் அயோக்கியத்தனம் எல்லாம் இவர்களிடம் செல்லாது’’ என்று உணர்ந்து கொண்டது மட்டுமன்றிப் பார்ப்பனப் புரட்டுகளையே நம்பி அறிவற்றவர்களாக இருந்தவர்கள் எல்லாரும் ஒருவாறு தம் சொந்தப் புத்தியை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனியும் இந்நிலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
மனிதன் ஒருவன் இயற்கை எய்தியவுடன் அதற்கு இறந்தார், செத்தார் என்றும், ஈசன் திருவடியை அடைந்தார் - பரமபதம் அடைந்தார், வைகுண்ட பதவி அடைந்தார் - இப்படிப் பலவிதமான பெயர்களைக் கூறுவார்கள். மனிதன் பிறக்கிறான் என்றவுடன் அவன் இறந்துவிடுதல் என்பதும் அதில் மறைந்துதான் நிற்கிறது. எப்போது பிறப்பு ஏற்பட்டதோ அதற்கு இறப்பு என்பது உண்டு என்பதும் இயற்கையின் தன்மையாகும். இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் இருக்கும் சம்பவம் வாழ்வது என்பது. இந்த வாழ்க்கையில் மனிதன் இன்பமடைய விரும்புதல் இயற்கையாகும். எந்த மனிதனும் சுகமாக வாழுவதை விரும்பாமல் இருக்க மாட்டான். இந்த இன்பத்தைத் தேடும் பொருட்டே வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் ஈடுபடுகிறான்.
மேலும் ஜீவராசிகளுக்கு இயற்கையில் பசி, தாகம், காம இச்சை இவைகள் உள்ளன. இவைகள் அத்தனையும் அதனதன் பருவத்திற்கும் சமயத்திற்கும் தக்கப்படி உண்டாக்கப்படுகின்றன. மனிதனுக்கு எப்போதும் பசி ஏற்படுவதில்லை. அதைப் போல எப்போதும் தாகம் எடுப்பதும் இல்லை. அவையவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் உண்டாகும். காம இச்சை வருவதும், தக்க பருவம் வந்த பின்புதான் வருவது இயற்கையாகும். இப்படி வரும் காலத்தில் பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதன் மூலம் மனிதன் இன்பமடைகிறான். இவ்விதம் மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு இச்சைகளைக் கொண்டவனாக இருக்கிறான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|