Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

சாவது புதுவதன்று
கவிஞர் பல்லவன்

மக்கள்
சாரிசாரியாகப்
போய்க்கொண்டு
இருந்தார்கள்.
அந்தக்
கிராமத்தில்
தங்கியிருக்கும்
புத்ததேவனைத்
தரிசிப்பதற்காக!

அங்கே
சோக முகத்தோடும்
சொட்டும் கண்ணீரோடும்
கனத்த இதயத்தோடும்
கதறலோடும்
கைக்குழந்தையைச்
சுமந்தவாறே
உள் நுழைகிறாள்
தாய் ஒருத்தி
ஓட்டமும் நடையுமாக!

ஓராயிரம் மலர்கள்
ஒருசேரப்
பூத்துக் குலுங்கும்
முகம்
அருளொழுகும்
அமுதவிழிகள்
கருணைமழை பொழியக்
காத்திருக்கும்
விரிவானமாய்
அமைதி அரசோச்சும்
ஆழ்கடலாய்
அங்கே புத்ததேவன்
வீற்றிருந்தார்!

கதறியும் பதறியும்
கையேந்தி வந்த
அந்தக் குழந்தையைப்
புத்தரின் காலடிகளில்
கிடத்தினாள்
அந்த அன்னை!

ஐயனே!
எனக்கென்று இருந்த
ஒரே மகனைச்
சாவு விழுங்கிவிட்டது!
அனாதையாகி விட்டேன்
நான்!
என் ஆருயிர்
பறிக்கப்பட்டது!

நான் செத்தொழிய
முற்பட்டேன்.
அப்போது கேள்விப்பட்டேன்
தாங்கள் இந்த ஊரில்
காலடிகள் பதித்திருப்பதாய்.
என் குழந்தையின்
உயிரை மீட்டுத்
தாருங்கள்!
எனக்கு உயிர்ப்பிச்சை
அளியுங்கள்!

விம்மி வெடித்து
விடுமோ
அவள் இதயம்!
விபரீதம் ஏதேனும்
நிகழ்ந்து விடுமோ?
சூழ்ந்திருந்த மக்கள்
அச்சப்பட்டனர்!

அவளை
ஆசுவாசப்படுத்திவிட்டு
ஐயன் பேசினார்.

இந்த
மழலை அரும்புக்கு
மறுவாழ்வு
தரமுடியும்.
நீ மடிசுமந்த இந்த
மாணிக்கப் புதையலை
மீட்டெடுத்து
உன்னிடம் தரமுடியும்!

கிழக்கு வானத்தின்
ஒளிக்கீற்று
அவள் முகத்தில்
சுடர்விட ஆரம்பித்தது!

சாக்கிய மாமுனி
மேலும் பேசினார்.

ஒரே ஒரு
கைப்பிடி கடுகு
இந்தக் கிராமத்தில்
எவர் வீட்டில்
இருந்தேனும் நீ
வாங்கி வந்தால் போதும்
உன் குழந்தை
உயிர் பெற்றுவிடும்.
ஆனால்...
ஒரு நிபந்தனை
தாயே!
நீ கடுகு வாங்கிவரும்
வீட்டில் எவரும்
இறந்து இருக்கக்
கூடாது.
அப்படிப்பட்ட வீட்டில்
வாங்கப்படும் கடுகே
மரணத்தை வெல்லும்
மருந்தாக முடியும்!

புறப்பட்டாள்
அத்தாய் புயல் வேகத்தில்!
ஒரு வீட்டின் முன்
கையேந்தினாள்
கடுகுக்காக
கிழவர் ஒருவரைக்
கடந்த மாதம்
இழந்திருக்கிறோம்!

அடுத்த வீட்டின்முன்
நின்றாள்
நேற்று எங்கள்
தாயைப் பறிகொடுத்து
விட்டோம்!

மூன்றாவதாக
ஒரு வீட்டுக்குப் போனாள்.
அங்கே கேட்ட
ஒப்பாரி ஓலம்
அவளை உலுக்கியெடுத்து
விட்டது!
அங்கே
பிணமாகிக்
குழந்தை ஒன்று
கிடந்ததைக் கண்டு
துணுக்குற்றாள்!

வீடு வீடாக ஏறி
இறங்கியதுதான் மிச்சம்!
சாவு விழாமல்
எந்த வீடும் இல்லை!
சாவு புதிதல்ல
எனது வீட்டுக்கு
மட்டுமே அது
வந்துவிட வில்லை!
இறப்பு என்பது
இயற்கைதான்!
அது எல்லோருடைய
வீட்டுக் கதவையும்
தட்டியே தீரும்!
அதனிடமிருந்து
எவரும்
தட்டிவிட முடியாது!

அழுது புரண்டாலும்
என் அருமைக்
குழந்தைக்கு
உயிர் வந்து விடாது!
போன உயிரை
மீட்டுத் தருவது
என்பது
புத்ததேவனாலும்
முடியாது.

கடுகுதானே
வாங்கிவந்து விடலாம்
என்றுதான் கிளம்பினோம்
ஆனால் கிடைக்க
முடியாத மனப்பக்குவத்தை, தெளிவை,
ஞானத்தை அல்லவா
வாங்கிவரச் செய்துவிட்டார்
புத்தர் பெருமான்!

கைக்குழந்தையைத்
தூக்கிக் கொண்டு
அவள் கால்கள்
சுடுகாட்டுக்கு
நடையிட்டன!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com