Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2008

தமிழன் கோவிலில் தமிழில் வழிபட உரிமை இல்லையா?
இளவேனில்

சிதம்பரம் நடராசரின் தூக்கிய திருவடிகளைப் பார்த்தபடியே, சிற்றம்பல மேடையில் அன்று தேவாரம் பாடினார் அப்பர். இன்று அதே மேடையில் காவலர்களின் பாதுகாப்போடு தேவாரம் பாட முனைந்த ஓதுவார் ஆறுமுகசாமியையும், தமிழ் உணர்வாளர்களையும் ஈவு இரக்கமில்லாமல் தாக்கியுள்ளது தீட்சிதர் கும்பல்...

சிதம்பரம் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் தேவாரம் பாடி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் கோயில் பூசாரிகளான தீட்சிதர்கள் சிற்றம் பல மேடையில் தமிழில் தேவாரம் பாடி வழிபடுவதை தடுத்து விட்டனர். இந்நிலையில் சிதம்பரம் நால்வர் மடத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட முயற்சி செய்தார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேவாரம் பாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் தீட்சிதர்களின் முறையீடு அளித்தனர். அவரும் தடை விதித்தார்.

இந்தத் தடையை எதிர்த்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டியிடம் ஆறுமுகச்சாமி மேல்முறையீடு செய்தார். பிச்சாண்டி இணை ஆணையரின் தடையை நீக்கி தேவாரம் பாட இசைவளித்துத் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளரிடம்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறி தீட்சிதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அறநிலையத்துறைச் செயலாளர் சந்தானத்திடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். இதில் தீர்ப்பளித்த செயலாளர் சந்தானம் நடராசர் கோயில் சிற்றம்பலத்தில் பூசைகள் முடிந்தவுடன் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடி வழிபடலாம். அதைப் பாடக்கூடாது என்று கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும் என்று தீர்ப்பளித்தார்.

தமிழில் தேவாரம் பாட தீர்ப்புக் கிடைத்ததைத் தொடர்ந்து ஓதுவார் ஆறுமுகச்சாமி தமிழ் ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாப்பு இயக்கம், திராவிடர் கழகம், பா.ம.க. இந்திய சனநாயக வாலிபர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளின் தொண்டர்களோடு யானையில் ஊர்வலமாக நடராசர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். தாரை தப்பட்டைகள் முழங்க 300-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.

ஆறுமுகச்சாமியுடன் கோயிலுக்குச் சென்ற அவர்கள் சிற்றம்பல மேடையில் ஏற முயன்றனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் சிற்றம்பல மேடையின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆறுமுகச் சாமியை ஏற விடாமல் தடுத்தனர். அப்போது காவல் அதிகாரிகள் பிரதீப்குமார், செந்தில்வேலன் ஆகியோருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு மேலாக காவல் அதிகாரிகள் தீட்சிதர்களுடன் பேச்சு நடத்தியும் பயனில்லாமல் போனது.

அவர்கள் ஒன்று சேர்ந்து ஆறுமுகச்சாமியை சிற்றம் பலத்தில் தமிழில் தேவாரம் பாட விடமுடியாது. அது தீட்டு என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து காவல் அதிகாரிகள் பிரதீப்குமாரையும், செந்தில்வேலனையும் அவர்கள் தாக்கினர். இதைத் தொடர்ந்து காவலர்கள் படியில் நின்றிருந்த தீட்சிதர்களை அப்புறப்படுத்தி விட்டு 5 பேர் துணையுடன் ஆறுமுகச்சாமியை சிற்றம்பல மேடையில் ஏற்றினர். அதனை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்த்து காவலர்களுடன் கைகலப்பு மோதலில் ஈடுபட்டனர். வெளியில் இருந்தவர்கள் காவல் அதிகாரிகளையும், ஆறுமுகச்சாமியையும் தாக்கிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடியது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி தீட்சிதர்கள் பிற்பகலில் கோயிலைத் தண்ணீர் விட்டு கழுவி விட்டதுடன், தீட்டுக்கழிக்க வேள்வியும் நடத்தினர்.

ஆறுமுகசாமி உள்ளிட்ட 35 பேரையும், அவர்களைப் பாடவிடாமல் தடுத்த தீட்சிதர்கள் 11 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர். கோயிலில் நுழைய முயன்றவர்களையும் போலீஸாரையும் தீட்சிதர்கள் தாக்கிய செய்தி வெளியானதுமே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘கோயிலை அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டதோடு, ‘நந்தனார் வழிபட்ட வாயிற்கதவை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று அனல் கக்கினார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாசு, “தேவாரம் பாடுவது தடுக்கப்பட்டது, தமிழினத்துக்கு விடப்பட்ட சவால். இந்தப் பிரச்சனையில் அறநிலையத்துறை எடுத்த முடிவு சரியானது’’ என்று கருத்துத் தெரிவித்தார். அத்துடன், “அங்கு ஆறுமுகசாமி உள்ளிட்டவர்கள் வந்து பாடியதால் தீட்டுப்பட்டு விட்டது என்று கோயிலில் பரிகாரம் நடந்தது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது’’ என்றார். இதனால் தீட்சிதர்கள் தரப்பு ரொம்பவே அதிர்ந்து போனது. தேவாரம் பாடுவதில் ஆரம்பித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, நந்தனார் வழிபட்ட வாயிலைத் திறப்பது குறித்தும், கோயிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்தும் திரும்புவதைப் பார்த்த தீட்சிதர்கள், தங்கள் கெடுபிடியைக் கொஞ்சம் தளர்த்தினர். கோயிலில் தேவாரம் பாட வந்தபோது நடந்த தள்ளுமுள்ளுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இதற்கிடையே தமிழக அரசும் தன் பங்குக்கு சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதை யார் தடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம், ஆறுமுகச்சாமியின் ஆதரவாளர்கள் 5-3-2008 ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு மறுபடியும் கோயிலுக்குள் சென்று தேவாரம் பாடப் போவதாக அறிவித்தனர். கோயிலில் நுழையவே கூடாது என்று சொன்ன தீட்சிதர்கள், பாடவந்தவர்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்று பாடவைத்தனர்.

அப்படிப் பாடும்போது நடராஜருக்கு தீபாராதனை செய்தனர். பாடியவர்களுக்குப் பட்டு அங்கவஸ்திரம் சார்த்தி மாலையும் போட்டுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தத் தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதும், சிறையிலிருக்கும் ஆறுமுகச்சாமி மற்றும் ஆதரவாளர்களையும், தீட்சிதர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. சிறையிலிருந்து விடுதலையானவுடன் ஆறுமுகச்சாமி நேராக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சென்று தேவாரம் பாடினார். இப்பிரச்சனை தொடராமல் இருக்க கோவிலில் தேவாரம் பாட அரசு சார்பில் ஓதுவாரை நியமித்து, அவற்றை கட்டாயமாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். அக்கோயிலை இந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர உடனே சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்ச்சான்றோர் பேரவை வலியுறுத்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com