Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2006

மனுதர்மம் காத்த நீதிபதி

இளவேனில்

“என் சகோதரிக்கு நேர்ந்த கொடுமை நாளை யாருக்கும் ஏற்படலாம். பண பலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள எவனும் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம். நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஆரவார மிரட்டல்களுடன் ஒரு படுகொலை நடைபெறும். ஆனால் சாட்சி இல்லை; ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கொலையாளியை விடுதலை செய்யும். இந்த நாடகத்தை நடத்துவதில் காவல்துறை சிறப்பாகப் பணியாற்றும். இதுதான் இந்த நாட்டில் நடக்கிறது. கொலை செய்யப்பட்டது ஜெஸ்ஸிகா மாத்திரமல்ல; போலீஸ், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான்...’’

Jessica Lal ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்டு நீதி தேவதையால் கைவிடப்பட்ட குடும்பத்தினருடன் டெல்லி ‘இந்தியவாயில்’ அருகே திரளாகக் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலே கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு துயரமும் ஆவேசமும் கலந்த உணர்ச்சிப் பெருக்கில் பேசினார் ஜெஸ்ஸிகாவின் சகோதரி சப்ரினா.

ஜெஸ்ஸிகா என்ற இளம் பெண் ஒரு ‘விளம்பர அழகி! (மாடல்)’ அந்தத் தொழிலில் வருமானம் போதாததால் நட்சத்திர விடுதி ஒன்றில் பணிப்பெண்ணாகவும் வேலையில் இருந்தார். ஒருநாள் கேளிக்கை விடுதியில் பலரும் பார்த்துத் திகைக்கும் விதத்தில் ஒருவன் ஜெஸ்ஸிகாவைத் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அவன் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மகன். பெயர் ‘மனு’.

‘மனு’ என்றால் இந்தியாவே தலை வணங்க வேண்டாமா? சோ போன்ற ஆரிய திலகங்கள் போற்றிப் புகழும் அரசியல் பொருளாதார, சமூக, சட்ட, தார்மீக நெறிகளை வகுத்த ஆசாரியன். மனுவாதியாய்ப் பிறந்த ஒருவன் பூரண சுதந்திரம் பெற்றவன் (அவர்கள் பார்வையில்) அவனே அனைத்துக்கும் அதிபதி. அவன் கடவுளின் அம்சம். கடவுள் தனது காரியம் எதற்கும் விளக்கம் தர வேண்டுமா என்ன? ஆனாலும் ஜெஸ்ஸிகாவைக் கொன்ற மனு என்பவன் காரணம் சொன்னான். குடிப்பதற்கு அவன் கேட்ட மதுவுக்குப் பதிலாக வேறொன்றைக் கொண்டு வந்துவிட்டாள் ஜெஸ்ஸிகா. கொன்றுவிட்டான் மனு.

இந்தக் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதான் ஜெஸ்ஸிகாவைக் கொன்றான் என்று நிரூபிப்பதற்கு சாட்சிகள் இல்லை; சான்றுகள் இல்லை. போலீஸ் தரப்பில் நிறுத்திய சாட்சிகள் ‘தெரியாது, பார்க்கவில்லை, என்று கதையை மாற்றி விட்டார்கள்.

குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்ட 9 பேரும் நிரபராதிகளாகி, விடுதலையாகிவிட்டார்கள். பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ஒருவன் சாட்சிகளை மறைக்க முடியும்; சட்டத்தை வளைக்க முடியும்; நீதி தேவதையை நிர்வாணப்படுத்தி மூலையில் உட்கார வைக்கவும் முடியும் என்பதை இந்திய சமூகம் பல முறை கண்டிருக்கிறது. ஜெஸ்ஸிகா கொலை வழக்கில் அது மறுபடியும் நிரூபணமாகியிருக்கிறது. மனித உரிமை, மறுக்கப்பட்ட நீதி, சீருடை அணிந்த அரசாங்க ரௌடிகளின் ஒழுங்கீனம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அழலாம்; ஆவேசப்படலாம்; பிரார்த்தனைகூட செய்யலாம். பிரச்னை தீருமோ?

நூறு குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது தான் நீதித்துறையின் அச்சாணி என்று சட்ட நிபுணர்கள் சமாதானம் சொல்வார்கள். கோடீஸ்வரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள் என்பதும் நீதித்துறையின் நிலைப்பாடுதான். வெண்மணிப் படுகொலையை நடத்தியவன், ஏராளமான சொத்துள்ளவன். அப்படிப்பட்ட ஒருவன் இம்மாதிரியான கீழ்த்தரமான காரியங்களைச் செய்யமாட்டான் என்று தான் நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது.

Manu எந்த அளவுக்கு ஒருவன் சொத்து வைத்திருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் நீதிமானாகவும், தேச பக்தனாகவும் கருதப்படுகிறான். சொத்து இருந்தால் நீதி உங்களைக் காப்பாற்றும்; தேசபக்தி உங்களைப் பாதுகாக்கும். அப்படி இல்லாமல் தலையில் முளைத்த முடியைத் தவிர வேறெதுவும் இல்லாதவனுக்கு நீதியும் கிடைக்காது; தேசபக்தியும் கைகொடுக்காது. அப்புறம்? திக்கற்றோருக்குத் தெய்வமே துணை என்பீரோ? பிரார்த்தனைதான் அருமருந்தா?

பிரார்த்தனையால் ஒரு நரைத்த முடியைக் கூடக் கறுப்பாக்க முடியாதே! ஆனால் ‘கண்ணீர்த்துளிகள்’ ஒன்றுபடும்போது, புதிய கருத்துக்களால் மக்கள் உரமேற்றப்படும்போது, மனுதர்மம் ஒழியும்; மானுடம் வெல்லும்!

ஜெஸ்ஸிகா வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கி ‘குற்றவாளிகள்’ அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி பயானா, டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி பதவியிலிருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கிறார். இவர் நேர்மையானவர் அல்ல. பதவி உயர்வு கூடாது என்று வழக்கறிஞர் அசோக் அரோரா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது. இந்தத் தீர்ப்பு நீதித் துறைக்கே அவமானம் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தா கூறியிருப்பது குறிப்பிட்டத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com