Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2006

ஊருக்குள் நுழைந்த ஹனிபால்

இளவேனில்

Bush இந்தியா எந்த அளவுக்கு மானங்கெட்ட நாடாக மாறியிருக்கிறது? அது தன்னிடம் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறதா, அல்லது நேரு காலத்து நினைப்புடனேயே - ‘தேசியப் பெருமிதம்’ - சுயச்சார்பு - சோஷலிசம் - அணிசாரா நாடு என்கிற ‘இலட்சியவாதத்துடனேயே’ - இருக்கிறதா? என்பதை நேரிலேயே தெரிந்து கொள்வதற்காக வந்தது போல் வந்தார்; வாலை ஆட்டும் நாய்களைப் பார்த்து விட்டுச் சென்றார் புஷ். இந்த இந்திய விஜயம் அவருக்கு மனநிறைவைத் தந்ததா, இல்லையா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும்.ஆணவம் மிகுந்த ஒரு படையெடுப்பாளனின் நாகரிகமற்ற நடவடிக்கைகளை புஷ்ஷின் ஒவ்வோர் அசைவிலும் காண முடிந்தது.

நூற்றுக் கணக்கான நவீன ரகத் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பரிவாரங்கள். அவர்கள் சந்தேகப்படும் யாரையும், எந்த இடத்தையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைப்பது; தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளின் சமாதியையே பயிற்றுவிக்கப்பட்ட நாய்களைக் கொண்டு சோதனை போடுதல் என்று - ஒரு சக்ரவர்த்தி தனது பாளையக்காரனிடம் நடந்து கொள்வதுபோல் - அட்டகாசம் செய்தது புஷ்ஷின் பரிவாரங்கள்.‘காந்தி சமாதியை நாய்கள் மோப்பமிட்டு சோதனையிட்டது, தேசிய அவமானம்;’ இவர் காந்திக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எந்த நாய் அழுதது? என்று ஆவேசப்பட்டவர்களின் குமுறலை எந்த நாயும் அறிந்திருக்க முடியாது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் என்று தெரிந்தும் ஜார்ஜ் பெர்னாண்டசை, ஒரு கஞ்சா கடத்தல் பேர்வழியைப் போல் சோதனையிட்டது அமெரிக்க சுங்க இலாகா. விதிமுறைகளின்படி யாரும் சோதனைக்கு உட்பட வேண்டும் என்பது சரிதான். ஆனால், விருந்தினரை - உறவினரை - நண்பரை அவ்வாறு சோதனையிடுவது நாகரிகமன்று. ஆனால், ‘பயங்கரவாத அச்சுறுத்தல்கள்’ மிகுந்திருக்கும் இன்றையச் சூழலில் சந்தேகப்படுவது தவிர்க்க முடியாதது என்று சமாதானம் சொல்லப்படலாம்.

இந்த அளவுகோல் இந்தியாவுக்கும் பொருந்தும் தானே? புஷ்ஷை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டிருக்க வேண்டாமா? அவர் நுழைகிற ஒவ்வொரு இடத்திலும் அந்தச் சோதனை நடந்திருக்க வேண்டாமா? என்று மான உணர்ச்சியுள்ள யாராவது முனகினால் அதைத் தவறு என்று ஒதுக்கி விட முடியுமா? ஆனால், அவ்வாறெல்லாம் எந்தவித நாகரிகமற்ற நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இது பண்பாட்டு முதிர்ச்சி என்றும் கொள்ளலாம்; பண்ணையடிமை மனோபாவம் என்றும் சொல்லலாம்.

bush இவ்வாறு இருவேறு கருத்துக்கள் புஷ்ஷின் இந்திய வருகையால் ஏற்பட்டதற்குக் காரணம், இங்கே இரண்டு இந்தியா இருக்கிறது என்பதுதான். ஒன்று ‘அரசாங்க இந்தியா; மற்றொன்று ‘மக்கள் இந்தியா.’ கிழக்கிலிருந்து மேற்கு வரை, தெற்கிலிருந்து வடக்கு வரை இந்திய நிலப்பரப்பிலுள்ள அத்தனை மக்களும், அத்தனை கட்சிகளும், அத்தனை குழுக்களும் இதயமற்ற ஒரு ஹனிபாலை வெறுப்பதுபோல் புஷ்ஷுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.

இந்திய அதிகார பீடத்தின் மனோபாவமும் மக்கள் உணர்வும் வெகுதூரம் விலகிச் சென்றிருப்பதை மன்மோகன் புரிந்து கொள்ள மறுப்பார். ஆனால், ‘பாரம்பரியம் மிக்க’ காங்கிரஸ்காரர்களாவது இந்த அபாயத்தை உணரவேண்டும். பொருளாதார வளர்ச்சியை பொருளாதார மேதைகளின் காகிதக் கட்டுக்களில் தேடக் கூடாது. இந்தியாவில் நடைபாதை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா? கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் உண்டா? எளிய மனிதர்களுக்கு மருத்துவ வசதி உண்டா? பாரபட்சமற்ற நீதி கிடைக்கிறதா?

புதிய தொழிற்சாலைகள் எத்தனை தொடங்கப்பட்டிருக்கின்றன? தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்புண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ப.சிதம்பரம் ‘ஆம்’ என்று ஆதாரங்களுடன் பதில் தருவார். இறுக்கமான அரசியல் சூழலில் நகைச்சுவை நல்லதுதான். ஆனால் பசித்த வயிறுகளுக்குத் தேவை நகைச்சுவை அல்ல.

Bush தங்கள் எதிர்காலம் குறித்துச் சிந்திக்க முடிகிற இந்திய இளைஞர்களும், தொழிலாளர்களும் விவசாயிகள் மத்திய தர வர்க்கத்தினரும், அறிவுஜீவிகளும், சமூக அக்கறையுள்ள சகல மக்களும் இந்திய அரசு அமெரிக்கப் பாதையில் நடைபோடுவதைக் கண்டு அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டிருக்கிறார்கள். விசுவாசமுள்ள அடிமைகள், ஒற்றர்கள் என்கிற முறையில் இந்தியர்கள் சிலர் எதிர்காலத்திலே அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகக் கோடிக்கணக்கான இந்தியர்கள் கண்ணீரிலும் இரத்தத்திலும் மூழ்கடிக்கப்பட வேண்டுமா? நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. பிரிட்டிஷ் விலங்கை உதறியது அமெரிக்க விலங்கை மாட்டிக் கொள்வதற்காக அல்ல. இந்த உணர்வுதான் புஷ்ஷுக்கு எதிரான பேரலையாக இந்தியா முழுவதும் வீசியடித்தது.

‘விடுதலை வாங்கித் தந்த கட்சி’ என்கிற வெகுளித்தனமான அபிப்பிராயம், ஜவஹர்லால் நேருவின் சோஷலிச மனோபாவம், மதச்சார்பின்மை எந்த வல்லரசுடனும் கூட்டுச் சேராக் கொள்கை என்கிற பல அம்சங்கள்தான் இந்திய மக்களில் பெரும்பான்மையினரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக உருவாக்கியிருந்தன. நேரு காலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் பலருக்கு மத நம்பிக்கை இருந்தாலும் நேருவை நினைத்து மதபீடங்களுக்கு முன் மண்டியிடுவதைத் தவிர்த்து வந்தார்கள்.

பாகிஸ்தான் பிரிவினையோ, காஷ்மீர் பிரச்னையோ இந்திய முஸ்லீம்களிடம் கசப்புணர்வையோ காங்கிரஸ் எதிர்ப்புணர்வையோ உருவாக்கியதில்லை. ஆனால், நேருவுக்குப்பின் காங்கிரசுக்குள்ளேயே இந்துத்துவ ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல வளரத் தொடங்கினார்கள். நரசிம்மராவோ ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்பட்டார். பாபர் மசூதி இடிப்பு என்பது சங்கப் பரிவாரங்களால் நரசிம்மராவ் அரசின் பாதுகாப்புடனேயே நடந்தது என்று இஸ்லாமியச் சகோதரர்களின் நெஞ்சில் குத்திய முள்ளை இன்று வரை காங்கிரஸ் அகற்றுவதற்கு முன்வரவில்லை.

சங்கப் பரிவாரங்களுக்கு வேத மதத்தின்மீது எவ்வளவு வேகமும் வெறியும் கலந்த ‘பற்று’ உண்டோ, அதே வேகமும் வெறியும் இஸ்லாமியருக்கு இருக்கக் கூடாது என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது. இந்துத்துவ வெறி இந்தியர்களை முகம் சுளிக்க வைத்தாலும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை இழுத்து எழுப்பி விட்டது. இந்துத்துவ வெறியை அணைக்காமல், பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தணித்துவிட முடியாது.

bush இது உள்நாட்டுப் பிரச்னை என்றால், அமெரிக்காவுடன் இந்திய அரசு கொண்டிருக்கும் உறவும் நெருக்கமும் இஸ்லாமியர்களிடையே தங்களுக்கு இனி பாதுகாப்பில்லையோ என்கிற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே சமயம் பல இந்து அமைப்புகளுக்கு யூதர்கள் தாராளமாக நிதியுதவி செய்வதையும் அவர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். இஸ்லாமியரின் இந்த அமெரிக்க - யூத எதிர்ப்புணர்வு இந்தியாவுக்குள் கடும் விளைவுகளை ஏற்படுத்தாமல் போகாது.

யூத - ஆரிய - இஸ்லாமிய மதவெறிக்கு இந்தியா களமாக இருக்கலாமா? இந்தியா அணு ஆயுத நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் மன்மோகனுக்கும் வேறு சிலருக்கும் விபரீத ஆசைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ரௌடித்தனம் என்பது பெருமைக்குரியதல்ல.

ஒரு ரௌடி வளர்வதற்கு இன்னொரு ரௌடி உதவுவான் என்று நம்புவது அறிவெல்லை கடந்த பேதைமையாகும். புஷ்ஷும் மன்மோகனும் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவை வளர்க்கப் போகிறார்களாம். புஷ் இந்தியாவுக்கு வந்து மன்மோகனுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முறைகூட சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை.

உதவியாளர்கள்கூட இல்லாமல் தனியாகப் பேசினார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
மர்மமான சந்திப்புகளும், ரகசியப் பேச்சுகளும் ராஜிய உறவுகளில் நல்லதல்ல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com