Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2006

தமிழ்த்தாயின் இதயம் துடிக்கிறது

துரைமுருகன்

தமிழனுக்குத்தான் எப்போதுமே போறாத காலம்! போராட்ட காலம் ஆயிற்றே! இலத்தீன் மொழியையும் - கிரேக்க மொழியையும், அந்த மொழிக்குச் சொந்தக்காரர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே செம்மொழியாக்கிவிட்டார்கள். இந்தியாவில்கூட வடமொழி, அரபிய மொழி, பாரசீக மொழி ஆகியவை செம்மொழித் தகுதியைப் பெற்றன. இப்படிப் பெற்றதில் பாதி புண்ணியம் ஆரியர்களுக்குச் செல்கிறதென்றால், மீதிப் புண்ணியம் ஆங்கிலேயர்களுக்குச் செல்கிறது.

Duraimurugan வடமொழி தேவ பாஷையாக்கப்பட்டது ஆரியர்களால். இந்த வடமொழியில்தான் வேதம் இருக்கிறது. வைகுண்டம் இருக்கிறது. மண்ணுலகம், விண்ணுலகம் பற்றிய கதைகள் இருக்கின்றது என்பார்கள். அதனால், கல்யாணத்தில் இருந்து கருமாதி வரை - கோவில்களில் கருவறை வரையில், இந்த மொழியே ஆக்கிரமித்தது. ஆதிக்கம் செலுத்தியது.

போதாக்குறைக்கு, வெள்ளையன் வந்தான். நாடு பிடிக்க முற்பட்டபோது, சில பிரிவு மக்களைக் கைவசப்படுத்த நினைத்தான். எனவே, இந்துக்களை சமஸ்கிருதம் ‘செம்மொழி’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான். அரபி மொழியும் - பாரசீக மொழியும் ‘செம்மொழிகள்’ எனச் சொல்லி முஸ்லீம்களை மகிழ்ச்சியூட்டினான். நான் இப்படிச் சொல்வதால், அரபிய மொழிக்கோ... பாரசீக மொழிக்கோ... செம்மொழியாகும் தகுதிகள் இல்லை என்பது என் கருத்து என்று யாரும் அன்பு கூர்ந்து நினைக்க வேண்டாம். இப்படி அறிவிக்கப்படும் வாய்ப்பு - பெறும் வாய்ப்பு, தமிழனுக்கு - தமிழுக்கு இல்லாமல் போய் விட்டதே என்பதைச் சுட்டிக்காட்டத்தான்! இங்கே இன்னொன்றையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

18ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி, ‘இந்த நாட்டில் கல்விப் பணி துவங்கப் போகிறோம். எந்த வகையான கல்வி முறை வேண்டும்?’ எனக் கேட்டது. நம்மவர்கள் - அதாவது, கீழ்த்திசையாளர்கள், இந்தியமொழி - இலக்கியம், தத்துவம் சார்ந்த கல்வி முறைதான் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டார்கள்.
மற்றொரு பிரிவினர்கள் - ஆங்கில முறை சார்ந்தவர்கள், ஆங்கில மொழிக் கல்வி முறையே வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் பொறுப்பிலிருந்த ‘லார்டு மெக்காலே’ ஆங்கிலக் கல்வி முறைக்கே பச்சைக் கொடி காட்டினார். இந்தக் காலகட்டத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையகம் கல்கத்தாவில் இடம் பெற்றிருந்தது. தமிழர்களைப் பொறுத்தவரை இது ஒரு கெட்ட காலகட்டம் என்றே கூறலாம். காரணம் ஆங்கிலேயர்களின் அரசியல் ஆதிக்கம், ஆங்கில மொழி ஆகியன கல்கத்தாவைச் சுற்றியிருந்த வடக்குப் பகுதியிலேயே வேகமாகப் பரவியிருந்தது.

1784இல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற நீதிபதி, கல்கத்தாவில் ‘‘ஆசியக் கல்விக் கழகம்’’ என்கின்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மாக்ஸ் முல்லர், கோல் புரூக் போன்றவர்களும் மற்ற இலக்கியவாதிகளும், இந்திய நாட்டு இலக்கியங்களைக் கற்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில், அவர்களிடம் இந்திய இலக்கிய - தத்துவ நூல்களாகத் தரப்பட்டவை அனைத்தும் வட மொழியில் இருந்த வேதங்கள் - உபநிடதங்கள், அர்த்த சாஸ்திரம், பஞ்ச சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், மகாபாரதம், இராமாயணம் போன்ற நூல்கள் மட்டுமே! காளிதாசனின் இலக்கிய படைப்புகளும் கூடவே தரப்பட்டன. இதன் விளைவாக, ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு போன்ற பல ஐரோப்பிய மொழிகளில் இந்த வடமொழி நூல்கள் மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் ஐம்பது தொகுதிகள் வெளியிடப்பட்டன. இவற்றை வெளியிட்டவர் மாக்ஸ் முல்லர். இதன்மூலம் வடமொழிக்கு அந்தக் காலத்தில், இங்கேயிருந்த ஐரோப்பியர் மத்தியில் மட்டுமல்ல, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்த எல்லா நாடுகளின் இலக்கிய வட்டாரங்களிலும் வடமொழி மட்டும் தான் இந்தியாவின் பழம் பெரும் மொழி, இலக்கிய இலக்கண வளம் வாய்ந்த மொழி. ஆரியர்கள் மட்டுமே இந்தியாவின் மூத்த நாகரிக மக்கள் என்ற எண்ணம் வேகமாகப் பரவி, ஆழமாக வேரூன்றிக் கொண்டது.

இங்கே இன்னொரு செய்தியையும் நான் கூற விரும்புகிறேன். 1784-ல் கல்கத்தாவில் ஆசியக் கல்விக் கழகத்தை நிறுவிய நீதிபதி, சர்வில்லியம் ஜோன்சுக்கு இலண்டனில் ஒரு சிலை வைத்தார்கள். வடமொழி இலக்கியங்கள் ஐரோப்பாவிற்கு கிடைக்கக் காரணமாக இருந்தவர் என்பதால், அந்தச் சிலையின் கையில் ஒரு புத்தகம் இருப்பது போல வடித்திருந்தார்கள். அப்படி அந்தச் சிலையின் கையில் பிடித்திருந்த புத்தகம் எது தெரியுமா? நண்பர்களே... நம் ஊரைச் சேர்ந்த சாட்சாத் மனுதர்ம சாஸ்திரம் என்ற நூல்தான்! ஆங்கிலேய அரசியல் ஆதிக்கம் வடபுலத்தில் பரவியிருந்த அந்த ஒரே காரணத்தால், வடமொழிக்கு இத்தனை அங்கீகாரம் கிடைத்துவிட்டது; இதன் விளைவு என்ன தெரியுமா? இந்தியா என்றால் சமஸ்கிருதம். இந்தியா என்றால் ஆரியர்கள், இதைத் தவிர இந்தியாவில் வேறு தகுதியும் புகழும் வாய்ந்த இனமோ, மொழியோ இல்லை என்ற ஒரு நம்பிக்கை ஐரோப்பாவில் பரவிவிட்டது.

நீங்கள் எல்லாம் கேட்கலாம். ‘ஏன், நம்மவர்கள் எல்லாம் ‘நம்முடைய தொல்காப்பியத்தையோ, சங்க இலக்கியங்களையோ கொண்டுபோய் காட்ட வில்லை? என்று. வைதீக மொழியில் சொல்வதானால், அங்கேதான் நம்முடைய துரதிர்ஷ்டமே குறுக்கே நின்றது. ஆசியக் கல்விக் கழகம் தோன்றிய ஆண்டு 1784. அதன்பிறகு ஓர் நூற்றாண்டு கழிந்த பிறகு தான்; அதாவது, 1889ல்தான் நமக்குப் பத்துப்பாட்டே கிடைக்கிறது.

1892ல் தான் சிலப்பதிகாரமே கிடைக்கிறது.
1889ல் தான் மணிமேகலையே கிடைக்கிறது.
1904ல்தான் புறநானூறே கிடைக்கிறது.
1903ல் தான் ஐங்குறுநூறே கிடைக்கிறது.
1904ல் தான் பதிற்றுப்பத்து நூலே கிடைக்கிறது.
1918ல்தான் பரிபாடல் கிடைக்கிறது.
1937ல்தான் குறுந்தொகை கிடைக்கிறது.

இப்படி கிடைத்ததெல்லாம்கூடத் தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் தூங்காத - ஓயாத - இடைவிடாத பெரிய முயற்சியில்தான். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாம் எல்லாம் முகவரி இல்லாத நாடோடிகளாகத்தான் கருதப்பட்டிருப்போம்.

நாம் நம் இலக்கிய ஏடுகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலேயே, ஆசிய கல்விக் கழகத்தின் புண்ணியத்தால், வடமொழிக்கு அங்கீகாரமும் கிடைத்து, ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பவனி வரவும் துவங்கி விட்டிருந்தது. புரிகிறதா! நண்பர்களே... எங்கெல்லாம் தமிழன் விழுந்து இருக்கிறான்! எங்கெல்லாம் தமிழனைக் காலம் ஏமாற்றியிருக்கிறது என்பது!

‘‘விதியே...! விதியே...! தமிழ்ச் சாதியை
என்செய்ய நினைத்தாய்...? எனப் பாரதிப் புலவன் புலம்பியதன் பொருளை நம்மால் இப்போது உணர முடிகிறதல்லவா? ஆனால், இத்தனை இடர்பாடுகளையும் மீறி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்வதைப் போல, ‘தடையுண்டு, என்றாலும் உடைத்து முன்னேறத் தடந்தோள்கள் உண்டு’ என்ற போக்கில் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

திருக்குறள் உலக இலக்கியம் என்கின்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக - ஆய்வு நூல்களாக சிம்மாசனம் ஏறியிருக்கின்றன. ஆனால், எல்லாம் இருந்தும் - எல்லாத் தகுதிகளும் இருந்தும், தமிழ் ‘செம்மொழி’ என்கிற அங்கீகாரத்தை மத்திய அரசு நேற்று வரை தராமலேயே இருந்தது. தமிழனும் அதைப் பெறமுடியாமலேயே இருந்தான்.

அந்தத் தகுதியைத் தமிழன்னை பெறுவதற்குக் காரணமாக நின்றவர் தலைவர் கலைஞர். தமிழ்மொழி வரலாற்றில் இது ஒரு மைல் கல். இந்த மைல் கல்லை நாம் வாழும் காலத்திலேயே - நம் தலைமுறையிலேயே கடப்பதற்கு நம்முடைய தலைவர் கலைஞர் உதவியிருக்கிறார். ஒவ்வொரு தமிழனும், தான் பிறந்த தேதியை மறந்தாலும் கூட - தன்னையே மறக்கும் நினைவிழப்பு நிலை ஏற்பட்டாலுங்கூட, தமிழ் செம்மொழியான அந்தத் தேதியை, மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி என்றைக்கு ‘செம்மொழி’ என்ற தகுதியைப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது? 12.10.2004.

தமிழர்களே...! உங்களை நீங்களே மறந்து... மங்கி... உறங்கியிருந்தது போதும்! விழித்தெழுங்கள்! உங்களையெல்லாம் இறுதியாக ஒன்று வேண்டிக் கொள்கிறேன். பாரசீக மொழியில் ஸாஅதி என்ற கவிஞர் ஜூலைகா என்ற காவியத் தலைவியின் வாயிலாக, காவித் தலைவன் யூசுப்பிடம் ஒரு காதல் விண்ணப்பம் வைக்கிறான். அதைச் சற்றே மாற்றிச் சொல்கிறேன்.

‘‘உங்கள் எண்ணங்கள் காய்ந்திருக்கின்றன - அவற்றில்
செந்தமிழைத் தைத்திங்கள் குளிர் நீராய்ப் பாய விடுங்கள்...!
தமிழ்த் தாயின் ஆன்மா
பசியில் துடித்துத் தவிக்கிறது.
மொழி உணர்வையும், இனஉணர்வையும்
உணவாய்ச் சமைத்து அவளுக்குப் பரிமாறுவோம்!’’

இப்படி பரிமாறுவோமானால், உங்களிடையே ஒரு வின்சென்ட் ஸ்மித் உருவாகக் கூடும். அதன்மூலம் தமிழ் இனத்திற்கென ஒரு முறையான வரலாறும் சீக்கிரமே எழுதப்படும் காலமும் வரும்...!

(வேலூர் - ஊரீஸ் கல்லூரியின் தமிழ் மன்ற விழாவில், ‘‘அரிமா நோக்கு’’ எனும் தலைப்பில், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் ஆற்றிய உரை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com