Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மார்ச் 2006

தண்ணீர் தண்ணீர்

ஆனாரூனா

இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி களுக்கும் ஆட்சிக் கனவு நீடிக்கும்.

தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுதான், மொழி வழித் தேசிய உணர்வு தான் இந்தக் கட்சிகளின் தோல்விகளுக்கும் காரண மாகின்றன. ஆகவே `இந்திய தேசிய’ ஆதிக்க சக்திகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் அதே நேரம் தேசிய இனச் சிக்கல்களையும் வளர்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.

இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் போன்ற சிக்கல்கள்... மொழிவழித் தேசிய அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது இந்த தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக அல்ல. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும், ஆந்திரமும் ஒன்றாக இருந்தால் இந்தி - இந்திய - இந்துத்துவ ஆதிக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி தலையசைத்தது.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நியாயங்கள் புறக்கணிக்கப் பட்டன. தேவிகுளம் பீர்மேடு எனும் மலைசார்ந்த தமிழ்ப் பகுதிகள் கேரளத்துக்குத் தரப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு கேள்வி எழுப்பிய போது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் பதிலளித்தார். ``குள மாவது குட்டையாவது, மேடாவது பள்ளமாவது. எது எங்கே இருந்தால் என்ன? எல்லாம் இந்தியா வுக்குள்தான் இருக்கிறது’’ என்றார் காமராசர். தேவிகுளம் பீர்மேடும், முல்லைப் பெரியாறும், காவிரியும், பொதுவாக கேரளமும், தமிழ்நாடும், கன்னடமும் இந்தியாவுக்குள் இருப்பதால்தான் இத்தனை சிக்கல்கள்; இத்தனை மோதல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்கிறவர்களின் உணர்வுகளை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது.

மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் மலையாளி. தேவிகுளம் பீர்மேடு கேரளத்துக்குப் போவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளத்துக்குத் தரப்படவில்லை என்றால் கேரளத்தைத் தனிமாநிலமாகப் பிரிப்பதில் அர்த்தமே இல்லை என்றார் வர்கீஸ்.

பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். குறித்துப் பிரச்சனை வந்தது. அப்போது கேரள முதலமைச்சரும் மலையாளி. தமிழக முதலமைச்சரும் மலையாளி. தமிழக அரசின் சார்பாகப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் அந் தோணியும் மலையாளி. முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், பொறியாளர்கள் எல்லோருமே மலையாளிகளாக இருந்த சூழலில் எந்த உணர்வில் பேச்சு வார்த்தை நடந்திருக்கும்?
இந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தீவிர சிந்தனைக்குரியது.

கேரளத்தில் ஒரு மலையாளிதான் அந்த நாட்டின் முதலமைச்சராக முடிகிறது. கன்னடத்தில் ஒரு கன்னடியர்தான் முதலமைச்சராக முடிகிறது. ஆந்திரத்தில் ஒரு தெலுங்கர்தான் முதலமைச்சராக முடிகிறது. மராட்டியத்தில், வங்கத்தில்... என்று இந்தியாவின் எந்த நாட்டிலும் அந்தந்தத் தேசிய இனத்தலைவர்களே முதலமைச்சராக முடிகிறது. இதுதான் இயல்பானது; இதுதான் முறையானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடிகிறது.
இது தமிழர்களை மானக்கேடானவர்களாகவும் மடையர்களாகவும் அடை யாளப் படுத்துகிறதா?

தமிழர்கள் விரிந்த சிந்தனையாளர்கள்; விசால மனம் படைத்தவர்கள் என்று உலகுக்கு உணர்த்துகிறதா? ஆனால் பண்பாடுள்ள மக்கள் வரலாறு முழுவதிலும் படையெடுப்பாளர்களாலும், போக்கிரிகளாலும் வெல்லப்படுகிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்று ஆதாரங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு `தேசிய உணர்ச்சி’ என்கிற பெயரில் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் எதிராகப் புரட்டுரை செய்கிறவர்களும், பாசிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலித்தமிழர்களும் கூலித்தமிழர்களும் உண்மையில் தேசியப் பெருமிதத்தால் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிப்பதும், அழிப்பதும்தான்.

கம்பன் கவிநயத்தால் உயர்ந்த பீடத்தில் அமரத்தகுந்தவன்தான். ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றியதில் கால்டுவெல்லும், வீரமாமுனிவனும் மிக உயரத்தில் இருக்கிறார்கள். கம்பனோ பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான்.

தமிழினத்தை மானமும் அறிவும் உள்ள சுதந்திர இனமாக மாற்றுவதற்குப் போராடுவதில் தந்தை பெரியாருக்கு இணையாக யாருண்டு இங்கே?

ஆனால் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளும், தமிழினத் துரோகிகளும் பெரியாரின் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போதெல்லாம் அவர் கன்னடத்துக்காரர் என்று கூறித் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தவறியதில்லை.

இவர்களுடைய பெரியார் எதிர்ப்புக்கும் திராவிட இயக்க எதிர்ப்புக்கும் ஆணி வேராக, அச்சாணியாக இருப்பது தமிழ்த்தேசிய உணர்வல்ல, பாசிசப் பற்று; புரட்சிகரமான சிந்தனைகளின்மீதும் இயக்கங்களின் மீதும் உள்ள வெறுப்பு.

இவர்கள் இருத்தல்வாதிகள், அல்லது பிழைப்புவாதிகள். பெரியாரை விமர்சிப்பதன் மூலம் நாங்கள் அடிமைத் தொழிலுக்கும் அதைவிடக் கேவலமான காரியங்களுக்கும் பயன் படக்கூடியவர்கள் என்று யார் யாருக்கோ தெரியப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!

தண்ணீர் எங்களுக்குத் (கேரளத்துக்கு) தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்துக்குப் பயன்படக் கூடாது என்கிற தோரணையிலேயே கேரளம் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று 30 ஆண்டுகளாகக் கேரளம் பிடிவாதம் செய்து கொண்டிருக்கிறது. அணை பலவீனமாக இருக்கிறது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து கேரளமே மூழ்கி விடும் என்பதுபோன்ற அதீதக் கற்பனைகளை முன் வைத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. அணை உறுதியாக இருப்பதாக வல்லுநர்கள் சோதித்து உறுதியளித்த பிறகும் கேரளம் ஒப்புக் கொள்ள வில்லை.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ள லாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கர், பி.கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

அந்தத் தீர்ப்பில் -
``நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்வதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.’’
- என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.

(அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண் டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை முதல் கட்டமாக 142 அடியை எட்டியிருக் கிறது.)

ஆனால், உச்சநீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பை முறியடிக்கக் கேரளம் துணிந்து நிற்கிறது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதன் அடிப்படையில் கேரள சட்டமன்றத்தில் கேரள மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி எந்தச் சூழலிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது என்று போர் முரசு கொட்டத் தயாராகிவிட்டது.

இந்தியக் கட்டமைப்பில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஏழை எளிய கேட்பாரற்ற மக்களைத்தான் கட்டுப்படுத்தும், தண்டிக்க முடியும் என்பதைப் பல வழக்குகளில் கண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புகள் ஒரு திரைப்பட விமர்சனம் என்பதற்கு மேலாக அது ஒன்றும் விளைவையோ தீர்ப்பின் நோக்கத்தையோ எட்டியதில்லை.

காவிரி பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வாங்கிய செருப்படிகள் கொஞ்சமல்ல. நரேந்திரமோடி போன்ற பல குற்றப் பின்னணியுடைய முதல்வர்களை எந்தத் தீர்ப்பும் அசைத்துவிட முடிய வில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அல்லது நீதித் துறையுடன் மோதிப் பார்ப்போரை எச்சரிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் தெம்பில்லை.காவல் துறையும், நீதித் துறையும் லஞ்சப் பேர்வழிகளாலும், ஊழல் மன்னர்களாலும் மரியாதை கெட்டுக் கிடக்கிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே மனங் கசந்து சொல்லி அழுதிருக்கிறார்கள்.

பல தீர்ப்புகளுக்குப் பின்னால் நீதிபதிகளே லஞ்சம் பெற்றிருந்தார்கள் என்பது இங்கே மறைக்க முடியாத விகாரமாகும்.

நீதித்துறையிலுள்ள இந்தப் பலவீனத்தால் அது பல வழக்குகளில் நீதி போதனைக் கதைகளைச் சொல்ல முடிகிறதே தவிர தீர்க்கமான தீர்ப்பெழுத முடிவதில்லை. எழுதிய தீர்ப்பும் தனக்குப் பிடித்த கவிதை என்பதற்கு மேலாக அதைப் பெரிதாக எண்ணுவ தில்லை.

மத்திய அரசோ நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம்போல் ராஜநடை போடும் `உதார்’ நிலையிலேயே இருக்கிறது.சான்றாக, மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலுவையும், முரசொலி மாறனையும் மாநிலப் போலீசார் பந்தாடினார்கள். குற்றவாளிகளாகக் கைது செய்து வழக்குப் போட்டார்கள். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் உண்டா? என்று கேட்கக் கூட மத்திய அரசுக்கு வக்கில்லை. அந்த அமைச்சர்களும் தமக்கு நேர்ந்த அவமானத்துக்காக ஆத்திரப் படவும் இல்லை.

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவில் ஒரு கஞ்சா கடத்தல் ஆசாமிபோல் சோதனையிடப்பட்டார். வாய்திறக்க வில்லை மத்திய அரசு. இப் போது மன்மோகன் தலைமையில் மத்திய அரசை எந்த வெளிநாட்டுக்காரனும் மிரட்டலாம். அம்பாசி டர்கூட இந்திய அமைச்சர்களை எச்சரிக்கலாம். மத்திய அரசு அதுகுறித்து விளக்கம்கூடக் கேட்க முடியாது.

இந்தச் சூழலில், தைரியமுள்ள எந்த முதல்வரும் மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலை.
கேரளமும், கர்னாடகமும், ஆந்திரமும் தமிழகத்துடன் `போர் தொடுப்பதற்கு’க்காரணம் இந்திய அரசால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கைதான்.

தமிழகம் பாலைவன மாகிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வஞ்சித்து பகைமை பாராட்டும் மாநிலங்களுடன் பரிவுடன் நடந்து கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

இந்திய நாடுகளிலேயே தமிழ் நாடுதான் இந்தி ஆதிக்கத்தையும் சமஸ்கிருத அவலத்தையும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சாம்ராஜ்யக் கனவுகளுக்கு இங்கேதான் எதிர்ப்பும் அடிகளும் வலுக்கின்றன. இதனால் இந்திய ஆதிக்க சக்திகளுக்குத் தமிழ் நாட்டின்மீது தனிப்பட்ட முறையில் பழி தீர்க்கும் ஆசையும் உண்டு.

பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஓர் அராஜக அரசின் மிரட்டலுக்குப் பயந்து முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்தார் ஜாகிரா என்ற பெண்மணி. இதனால் பொய் சாட்சி அளித்த குற்றத்துக்காக ஜாகிராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.

இந்தத் தீர்ப்புடன் நீதி மன்றம் என்றால், என்ன தெரியுமா? அதற்கு எத்தனை ஆற்றல் உண்டு தெரியுமா? என்றும் உரத்த குரல் எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

``நீதிமன்றம் என்பது இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் ஒரு எந்திரமல்ல. வழக்கின் நடவடிக்கைகளில் செயலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. நீதிமன்றங்களின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக் கைக்குக் கேடு ஏற்படாமல் காக்கவும், நீதியை நிமிர்த்தும் வகையிலும் நீதிமன்றம் செயல்படும்’’ என்று ஜாகிராவுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகள் சினமேறி நின்றிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தன்னிலை விளக்கம் நியாயமானதும், அவசிய மானதும் ஆகும். அந்த உரிமை அதற்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதெல்லாம் அளவுக்கு அதிகமான ஆசை என்று சொல்லும் அளவுக்கே நீதிமன்றங்களின் கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

இப்போதாவது, தனது அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்குரியதாக்கும் விதத்தில் கேரள சட்ட மன்றம் அணைகள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரும் என்று அறிவித்திருப்பதை உச்சநீதி மன்றம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் புதிய சட்டம் கொண்டு வருவோம்; மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கேரள அரசு பேச முடியும் என்றால், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் உரிமையில் எந்த நீதி மன்றமும் தலையிட முடி யாது. தமிழக கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும் எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவோம் என்று தமிழக அரசு சொன்னால் அது தவறாகுமா?

தமிழ்வழிக் கல்விக்குத் தடை விதிக்கும் எந்தத் தீர்ப்பையும் எதிர்ப்போம் என்று தமிழகம் பொங்கி எழுந்தால் அந்த அறச்சீற்றம் குற்றமாகி விடுமா? மாநில அரசுகள் துணிந்து நின்றால் நீதி தேவதையும் முடங்கிப் போவாள். பாரத தேவியும் பதுங்கிக் கொள்வாள் என்பதுதான் நடை முறை. தமிழகம் என்ன செய்யப் போகிறது?

உலகில் பல நாடுகளின் வழியே ஓடுகிற நதிகள் பல உண்டு. இந்த நாடுகளுக்கிடையே போர் நடந்தால்கூட அந்த நதிகளை எந்த நாடும் தடை செய்ய முடியாது. இதுதான் நதிநீர் தொடர்பான சர்வதேச விதி.

சவுதி அரேபியா, ஈராக், குவைத் நாடுகளுக்கிடையே போர் நடந்தபோது, அமெரிக்கக் கூட்டணி ராணுவமே போரில் ஈடுபட்டபோதும் கூட மூன்று நாடுகளுக்கிடையே ஓடும் நதிநீரை யாரும் தடுத்ததில்லை. எந்த விதிமுறைகளையும் மீறும் அதிகாரம் தனக் குண்டு என்று `உலக போலீஸ்காரன்’ அல்ல `சர்வதேச ரௌடி’யின் தோரணையில் மிரட்டும் அமெரிக்காவுக்குக்கூட அந்த அத்துமீறும் உரிமையை உலக நாடுகள் அனுமதிக்காது.

சிந்துநதியை பாகிஸ் தானுக்குள் விட முடியாது என்று இந்தியா மறுத்துவிட முடியாது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை கர்நாடகத்தால் மறுக்க முடிகிறது. முல்லைப் பெரியாற்றில் தமிழகத்துக்குள்ள உரிமையைக் கேரளம் மறுக்கிறது.

இந்த விதிமீறல்களும், நேர்மை மறுப்பும், எப்படி நடக்க முடிகிறது?கன்னடமும் கேரளமும், தமிழகமும் வேறுவேறு நாடுகள் அல்ல என்கிற காரணத்தால், தமிழகத்துள் பாயும் நதிகளை மறிக்கவும் திருப்பவும் முடிகிறது.

இந்திய ஒருமைப்பாட்டுக்காகத் தமிழகம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தான் சுமந்து தீர்க்க வேண்டும்? உரிமைகளை இழந்தேனும் ஒற்றுமை காப்போம் என்பது பெருமைக் குரியதல்ல.

தனது விலங்கை மெச்சிக் கொள்ளும் அடிமையை வரலாறு வாழ்த்தியதில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com