Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

புகைக்கல்லில் ஓர் புகைச்சல்
ந. நஞ்சப்பன்

குடகுமலையில் பிறக்கும் காவிரித்தாய், கர்னாடகாவில் தவழ்ந்து தமிழகத்தில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் கால் பதிக்கிறாள். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வீழ்ச்சியாய் ஆடி, பாடி, குதித்து விளையாடி மேட்டூர் அணை இல்லத்தில் தங்கிச் செல்கிறாள். கொள்ளிடத்தில் பிரிந்து கல்லணையில் நின்று திருச்சி, தஞ்சைத் தரணியைச் செழிப்பாக்கி பூமித்தாயைப் பூத்துக் குலுங்கச் செய்து கூடுமிடம் நோக்கி விரைந்தோடுகிறாள்.
புகைக்கல் ஒகக்கல் என்றாகியது. தமிழில் புகை கன்னடத்தில் (ஒகை) ஒக என்றாகிறது. புகைக்கும் கல் - புகை நல்கும் கல் என்பதே ஒகேனக்கல் என்றாகி ஒகேனக்கல் என்ற பெயர் நிலைத்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் மிக உயர்ந்த இடங்களிலிருந்து வீழ்வதால் நீர்த்திவலைகள் புகைபோலே உயரே எழுந்து அற்புத அழகைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

1956இல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட போது தமிழகத்திற்கும், கர்னாடகத்திற்கும் எல்லை பிரிக்கப்பட்ட போது காவிரி ஆற்றின் மையப்பகுதியே எல்லையாக வகுக்கப்பட்டது. ஆற்றின் இரு கரைகளை வைத்தே எல்லை பிரிக்கப்பட்டது. காவிரி பிறக்கும் இடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் வரை கர்னாடகாவில் எத்தனை நீர்வீழ்ச்சிகள், அணைகள், அழகான பூங்காக்கள், அழகுக்கு அழகு செய்து ஓடும் காவிரி பூத்துக் குலுங்கச் செய்யும் இடங்கள் எத்தனை எத்தனை! காவிரி என்றாலே பூங்காக்களை விரித்துச் செல்வதாகத்தானே பொருள். காடு மலைகளிலெல்லாம் தவழ்ந்து பலருக்கு புண்ணிய தீர்த்தமாகவும் காட்சியளித்து, வழிபடும் இடங்கள், கோயில் - குளங்கள் எத்தனை எத்தனை! அழகு படைத்த அற்புதக் காட்சிகள் கர்னாடகாவிலே ஏராளமாக இருக்கின்றன. இன்னும் மேம்படுத்த வேண்டிய அற்புதக் காட்சிகளைக் கொண்ட எவ்வளவோ பகுதிகள் இருக்கின்றன.

ஆனால், இதை எல்லாம் வைத்துக் கொண்டு குறுகிய கண்ணோட்டத்துடன் கர்னாடகத்தில் கடைக்கோடியில் தமிழகத்திற்குள் ஓடும் ஒரு நீர்வீழ்ச்சியில் புதிய உரிமை கொண்டாடி சில தனி நபர்களின் தவறான கருத்துகளுக்கு வடிவம் கொடுத்து, கர்நாடக அமைச்சர்களே எல்லைப் பிரச்சனையை உருவாக்கி வருவதுதான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. காவிரி ஆற்றுநீர் பிரச்சனையில் நாம் நொந்தது போதாதென்று துரும்பளவும் உண்மையில்லா ஒரு பிரச்சனை எழுந்து நிற்கிறது.

மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப் பகுதிகள் தமிழகத்திலேயே உள்ளடக்கியுள்ளது. மொழிவாரி மாநிலம் உருவானபோது தமிழகத்துப் பகுதிகள்தான் கர்நாடக வசமாயின. பின், கோவை மாவட்டத்தில் ஒரு வட்டமாக இருந்த கொல்லேகால் பகுதி தமிழகத்திலிருந்து கர்னாடகாவிற்குள் தள்ளப்பட்டு விட்டது.

இதைக் குறிப்பிடுவதால் மீண்டும் அப்பகுதிகள் தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று கோருவதற்காக நாம் கூறவில்லை. அத்தகைய முறையில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் தமிழகத்திலிருந்து வெட்டப்பட்டாலும் தமிழர்கள் அமைதி காட்டினார்கள் என்பதை நினைவுப்படுத்தவே குறிப்பிடுகிறோம்.

தமிழகத்தின் பகுதிக்குள் அடங்கி இருந்த மாதேஸ்வரன் மலை பறிபோனது, பொன்னாசி மலை பறி போனது. மைலமலையும், நாக மலையும், நாகமலையிலுள்ள நாகாளம்மன் வழிபாட்டிடமும், தமிழகத்திலிருந்து பறிக்கப்பட்டன. நாகமலையிலுள்ள நாக அம்மனை தமிழகப் பகுதியிலிருக்கும் மக்களும், கர்நாடக எல்லையில் வசிக்கும் தமிழ் மக்களும் இன்றைக்கும் வழிபட்டு வருகிறார்கள். ஆலம்பாடி கோட்டை, கோயில் வழிபாட்டு இடங்கள் போயின.

பழனிமலையில் சித்தர் இருந்ததுபோல மாதேஸ்வரன் மலையிலும் ஒரு சித்தர் இருந்தார். அவர் சித்தி அடைந்த இடமே கோயிலாயிற்று. அதுவே மாதேஸ்வரன் மலையான, வழிபாட்டுத்தலமாக, சிவனை வழிபடும் புண்ணிய தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. தொன்று தொட்டு தமிழக மக்கள் மாதேஸ்வரன் மலைக்குச் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

கர்நாடகப் பகுதியிலிருந்து கோயிலுக்கு மக்கள் வருவதை விட பன்மடங்கு தமிழக மக்களே சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சுற்றுலாத்துறை மேம்படுத்திய பிறகே கர்னாடகப் பகுதியிலிருந்து பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால், சாலை, பேருந்து இல்லா காலத்திலேயே இலட்சக்கணக்கான தமிழக மக்கள் தமிழகத்திலிருந்து நடந்தே சென்று வழிபட்டு வந்தனர். அந்த இடம் கர்நாடகாவுக்குப் போன பிறகும் அதே நிலை நீடிக்கிறது.

தற்போதும் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மக்களும், வனங்களில் வாழும் பழங்குடி மக்களும் குலதெய்வமான மாதையனை வணங்க மாதேஸ்வரன் மலைக்குச் செல்கிறார்கள். சிவன்ராத்திரி, யுகாதி பண்டிகை காலங்களில் தமிழகத்து மக்கள் மாதேஸ்வரன் மலையில் நிறைந்து விடுகிறார்கள். இம்மலைப் பகுதியில் வாழ்பவர்களில் தமிழர்களே அதிகம்.

மாதேஸ்வரன் மலை கோயிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் லிங்காயத்துகள், (லிங்காயத்து ஐயர்கள்). இவர்கள் மற்ற கர்நாடக, தமிழகப் பகுதியில் உள்ள லிங்காயத்துகளோடு ரத்த உறவுள்ளவர்கள் அல்ல. ஒரு காலத்தில் பழங்குடிகளாக இருந்த இவர்கள் வீர சைவத்திற்கு மாற்றப்பட்டவர்கள். இவர்கள்தான் கோயில் பூசாரிகள். இவர்களோடு கோயிலுக்கான சேவையைச் செய்பவர்கள் பழங்குடி மக்களான சோளகர்களாவர். பூசாரிகளான லிங்காயத்து ஐயர்களும், சேவை செய்யும் சோளகர்களும் தமிழகப் பகுதியான ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவர்மலை, தாமரைக்கரை, ஒண்ணகரை, தம்புரட்டி, ஊசிமலை, பர்கூர் ஆகிய ஊர்களிலிருந்தே சென்று பூசை செய்கிறார்கள். அனைவரும் சகோதர உறவு உள்ளவர்களே. இவ்வூரைச் சேர்ந்த பூசாரிகள் சிலர் மாதேஸ்வரன் மலையிலேயே தங்கி விட்டார்கள்.

இதேபோல இன்னொரு கோயில் கருலுவாடி பிரமேஸ்வரம் கோயில். இதுவும் கர்னாடகாவுக்குப் போய்விட்டது. இந்தக் கோயில்களுக்கும் பூசாரிகளாக இருப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த கொங்காடைமலை, பர்கூர், செங்கலம் பகுதியிலிருந்துதான் சென்று வருகிறார்கள். மற்றொரு கோயில் ரங்கசாமி கோயில். இதுவும், மாநில எல்லை பிரிக்கும்போது கர்னாடகாவுக்குள் அடங்கப்பட்டு விட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களான சோளகர்களே இக்கோயில் பூசாரிகள், சல்லிபாளையம், (ஜல்லிபாளையம்) ஊகியம் வழியாகவும், இராமாபுரம், மின்னம் வழியாகவும் சென்று மலைமேல் உள்ள ரங்கசாமியை வழிபடுகிறார்கள். ஈரோடு மாவட்டம் தம்புரட்டி, சோள கணை, ஊசிமலையிலிருந்து பூசாரிகள் சென்றே இக்கோயிலுக்குப் பூசை செய்து வருகிறார்கள்.

நெல்லூரில் பசேஸ்வரன் (பசு-ஈஸ்வரன்) கோயில் உள்ளது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது நெல்லூரின் பாதி பகுதி கர்னாடகாவுக்குப் போய்விட்டது. பாதிப்பகுதி தமிழ்நாட்டிற்குள் இருக்கிறது. சிறிய ஆற்றின் இருகரைகளிலும் அமைந்துள்ள இவ்வூர் ஆற்றிற்கு மேற்கில் உள்ளது கர்நாடகாவுக்கும், கிழக்கில் உள்ளது தமிழகத்திற்கும் அமைந்து விட்டது. ஆனால், இரு கரைகளிலும் தமிழ்மக்களின் குடும்ப உறவினர்களே வாழ்கிறார்கள். தமிழகப் பகுதியில் ஆற்றங்கரையில் பசேஸ்வரன் கோயில் உள்ளது. இதற்குப் பூசாரிகளாக இருப்பவர்களும், ஈரோடு மாவட்டம் ஊசிமலை மக்களே. இரு பகுதியில் உள்ள தமிழ் மக்களும் வழிபட்டு வருகிறார்கள்.

தமிழ் மக்கள் நிறைந்து வாழும் கௌதள்ளி, தண்டள்ளி, மாவட்டள்ளி, ராமாபுரம் ஒடுக்காம்பள்ளம் மற்றும் கொல்லேகால், சாம்ராஜ் நகர் பகுதியில் பல கிராமங்களிலும் மற்றும் தமிழக எல்லையை ஒட்டி பல ஊர்களில் தமிழ் மக்கள் நிறைந்து வாழ்கிற பகுதியாக உள்ளது. இவை அனைத்தும் கர்நாடகப் பகுதிக்குள் அடைக்கப்பட்டு விட்டது.

இன்னொரு வழிபாட்டு இடம் ஆலம்பாடி. பழைய கோயில் கோட்டைகள் காவிரி ஆற்றுநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட அகழிகள் என பெரும் நிலப்பரப்பில் அமைந்த ஊர் ஆலம்பாடி, தேர்வீதியுடன் அமைந்திருந்த நகரமான ஆலம்பாடி அன்னியர் படையெடுப்பால் மங்கி பொலிவிழந்து விட்டது. தமிழர் ஆட்சிக்குப் பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்டனர். ஆங்கிலேயர் ஆட்சியில் நகரமே அழிந்து காடாகி விட்டது.
ஆலம்பாடியில் உள்ள கோயில் அரங்கநாதர் கோயிலாகும் கர்நாடகாவில் உள்ள சிறிரங்கம் (ஸ்ரீரங்கம்), ஆலம்பாடி தமிழ்நாட்டில் உள்ள தென்கரைக் கோட்டை முன் கோயில்களையும் கட்டியவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிற்பி என்ற வரலாற்றுச் செய்தியும் உண்டு.

அரங்கநாதருக்கு கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் ஒரு கோயிலும், ஆலம்பாடியில் ஒரு கோயிலும், தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கோயிலும் ஆக மூன்று கோயில்கள் காவிரிக்கரையில் உள்ளன. ஆலம்பாடி அரங்கநாதர் கோயிலில் அற்புதமான கல் சிற்பங்கள் படைக்கப்பட்டன. ஆனால் தற்போது பல கல் சிலைகளை கொள்ளை கொண்டு விட்டனர். பக்தர்களுக்கு அரங்கநாதர் மீது அவ்வளவு அன்பு!

தமிழகக்கரையும், ஆலம்பாடி என்றே அழைக்கப்படுகிறது. கர்னாடகக் கரையில் உள்ள ஆலம்பாடியில் தமிழ் மக்களே வாழ்ந்து வருகிறார்கள். சங்கப்பாடி கோட்டை யும், ஆலம்பாடி கோட்டையும், கங்கபாடியையும், நுளம்பபாடியையும் ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுக்குரிய பகுதி என்றும் கூறுகிறார்கள். ஆலம்பாடியிலும், அதன் சுற்றுப்புறப் பகுதியிலும் ஏராளமான நடுகற்கள், கல்வெட்டுகள் நிறைந்து கிடக்கின்றன.

அதியமான் மகன் எழினி எருமைநாடு வரை படை நடத்திச் சென்றான். எருமைநாடு என்பது மைசூர் பகுதியாகும். அதியமான் நெடுமான் அஞ்சியின்நாடு அஞ்செட்டி (அஞ்சி அட்டி) மற்றும் ஆலம்பாடி வனப்பகுதியிலும் பரவி இருந்தது என்று கூறுவோர் உண்டு. பிறகு, தோழர்கள் படை நடத்தி இப்பகுதி வழியாகச் சென்று வெற்றி நாட்டியதும் உண்டு.

அதற்குப் பிறகு தமிழ் அரசர்கள் ஆட்சியில்தான் இப்பகுதி இருந்து வந்தது. பிறகு, நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். நாயக்க மன்னர்களுக்குள் நடந்த போட்டியில் ஆலம்பாடி நாயக்க மன்னனைக் கொலை செய்ய சதி நடந்தது. அச்சதியை முறியடித்து அரசனைப் போராடிக் காத்தவர்களும் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் - செப்புப்பட்டயங்கள் உள்ளன. பிற்காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் இந்த நகரமும் கோட்டை கொத்தளமும், அழகிய கோயிலும் சிதைந்தே போய்விட்டது.

இவைகளை எல்லாம் நினைவுபடுத்தக் காரணம் பழைய பாரம்பரியத்தைக் கூறி பரம்பரை உரிமையை மீட்க அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் கன்னட அரசு ஆட்சி இப்பகுதியில் இருந்ததில்லை. அவர்களின் ஆளுமைச்யின்கீழ் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே குறிப்பிடுகிறோம். மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது இந்தப் பகுதி எல்லாம் கர்நாடக மாநிலத்திற்குள் அடைக்கப்பட்டாலும், அதைக்கூட ஒரு பிரச்சனையாக எழுப்பாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை நினைவூட்டவே விரும்புகிறோம்.

மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது ஆறு மலைகளை எல்லைகளாக வைத்தனர். தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக - தமிழக எல்லை வகுக்கப்பட்ட போது காவிரி ஆற்றின் இருகரைகளை வைத்து ஆற்றை மையப்படுத்தி எல்லைகளை வகுத்தனர். காவிரி ஆறு ஒகேனக்கலுக்கு வரும்போது ஊட்டமலைக்கு மேலிருந்தே அகலப்படத் தொடங்கிவிடுகிறது. நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வரும்போது அகன்ற நிலையில் ஆறு அமைகிறது. கர்நாடகாவில் காவிரியிலும், காவிரி துணை ஆறுகளிலும் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி தடுத்து நிறுத்தாத காலத்திற்குமுன் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றின் நீர்ப்பரப்பு அதிகம்.

எல்லை வகுக்கப்பட்ட காலத்தில் இரு கரைகளிலும் வெள்ளம் தொட்டு பாய்ந்தோடும். அன்றைக்கு அத்தகைய அளவில் ஆறு பரந்திருந்தது. நீர்வீழ்ச்சியாய் முழக்கமிட்டு விழும் ஓசை இருபது கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்கும். நீர்த்துளிகள் விண்ணில் தொடுவதுபோல் குபுகுபுவென மேலே எழுந்து ஒகேனக்கல்லே புகை மண்டலமாகக் காட்சி யளிக்கும். ஆற்றின் கரைகளில் சில்லேன நீர்மென்திவளைகள் வந்து மேனியைச் சிலிர்க்க வைக்கும்.

தற்போதெல்லாம் ஒலி அவ்வளவாகக் கேட்பது இல்லை. புகை மண்டல நீர்த் துளிகள் நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. பல அணைகள் கர்நாடகாவில் கட்டப்பட்டு நீரைத்தேக்கி முடக்கி வருவதால் காவிரியின் பழைய வடிவமே மாறிப்போய் விட்டது. ஒகேனக்கல் பகுதியில் விரிந்து ஏராளமாக நீர்வீழ்ச்சிகள் வீழ்ந்து வந்தன. நீர்வரத்து குறைந்துபோய் அந்த நீர்வீழ்ச்சிகளெல்லாம் வலுவிழந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. காலப்போக்கில் சில காணாமல் போய்விட்டன.

இதனால் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாறைப்பகுதி தமிழகப் பகுதியைவிட சற்று மேடான பாறைகளாக இருப்பதால் வருகின்ற காவிரி நீரும் தமிழக எல்லைக்குள் விழுகின்றது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் விழுகின்றன. கர்நாடக நீர்ப்பரப்பில் ஓடும் ஆற்றுப் பகுதியிலும் சிறிய சிறிய நீர்வீழ்ச்சிகள் விழுகின்றன. நீர் அதிகமாக வரும்போது இன்னும் பல இடங்களில் அருவியாய் கொட்டுகின்றது. கர்நாடக நிலப்பரப்பில் செல்லும் காவிரிநீர் தமிழகத்துப் பகுதியான பெரியபாணியில் கலந்ததுபோக கர்நாடகப் பகுதியில் உள்ள கொட்டைக்கல் செலம்பு நீர்வீழ்ச்சிப் பகுதியில் வீழ்ந்து கூடுதுறையில் கலக்கின்றது.

தமிழகப் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றுநீர், நீர்வீழ்ச்சிகளில் வீழ்ந்து சின்னபாணி, பெரியபாணி என இரண்டாகப் பிரிகின்றது. சின்னபாணியிலிருந்து செல்லும் தண்ணீர் ஒரு பிரிவு பெரியபாணியில் கலக்கிறது. அதோடு கர்நாடக பகுதியிலிருந்து வரும் ஆற்றுநீர் பெரியபாணியில் ஒரு பகுதி கலக்கிறது. மூன்று பிரிவுநீரும் கலந்து கூடுதுறை நோக்கிச் செல்லும்போது கூடுதுறைக்கு அருகே கர்நாடகப் பகுதியிலிருந்து வரும் ஆற்றுநீர் கொட்டைக்கால்செலம்பு நீர் வீழ்ச்சி ஆற்றுநீரும் கலக்கிறது.

ஆற்றின் மேற்குப் பகுதியிலிருந்து காவிரி நீர்வீழ்ச்சியாய் பெரியபாணியில் குதிக்குமிடம் ஐவாளைபாணி என்று அழைக்கப்படுகிறது. நீர்விசை அதிகமாகவும், ஆழமாகவும் இருக்குமிடம். இங்கே ஐவாளை (வாளை மீனின் ஒரு ரகம்) மீன்கள் அதிகமாக (பாதுகாப்புடன்) தங்குமிடமாகையால் ஐவாளைபாணி என்று பெயர். ஐவாளை பாணியை அடுத்து அமைந்துள்ள நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பச்சைப்பாணி என்று பெயர். அதை அடுத்த பகுதிக்கு பெரிய நீர்வீழ்ச்சி (மெயின் பால்ஸ்) அதற்குப் பக்கத்தில் ஐந்தருவி இவை அனைத்தையும் உள்ளடக்கியது பெரியபாணியாகும்.

குளிக்கும் முக்கிய நீர்வீழ்ச்சிக்கு மேலே வடபுறம் செல்லும் காவிரி தண்ணீர் சின்னாற்றில் கலக்கிறது. பிறகு சின்னபாணியிலிருந்து வரும் ஆற்று நீருடன் இணைகின்றது. சின்னபாணியில் ஆடுதாண்டிக் கல் அமைந்துள்ளது. சின்ன பாணி, பெரியபாணி இரண்டு பகுதியிலிருந்து வரும் காவிரி நீர் கூடுதுறையில் கூடுகிறது. இது கூட்டாறு என்றும், கூடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கூடுதுறைக்கு அருகே மேற்கில் கர்நாடகப் பகுதியில் ஓடும் காவிரிநீர் கலக்கிறது.

பெரியபாணி, சின்னபாணி இரண்டும் கூடுவதற்கு இடையில் அமைந்திருப்பது இடைத்திட்டு (எடத்திட்டு) என்று அழைக்கப்படுகிறது. தமிழகப் பகுதியில் காவிரி இரண்டாக பெரியபாணி, சின்னபாணியாக பிரிந்து மீண்டும் கூடும் ஆற்றுநீருக்கு இடையே உள்ள இடைத்திட்டு தீவு என அழைக்கப்படுகிறது. இந்தத் தீவின் தென்பகுதியின் ஒருபகுதி மணல் மேடாக இருக்கிறது. இதற்கு மணல்திட்டு என்று பெயர். மேட்டூர் அணையில் நீர் நிறைந்து இருந்தால் மணல்திட்டு மூழ்கிவிடும். நீர் குறைந்துவிட்டால் மணல்திட்டு வெளிப்படும். இந்த மணல் திட்டு வரை தமிழகத்தின் பாரம்பரிய அனுபவத்தில் இருந்து வருகிறது.

கூடுதுறையில் காவிரி ஆறு பிரிந்த பகுதிகள் ஒன்றாகி கூடி மேட்டூர் அணையை நோக்கி ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. கூட்டாற்றுக்கு கீழ் மீண்டும் ஒன்றாக ஓடும் காவிரியில் எல்லை வழக்கம் போல் தொடருகிறது. இந்தக் கூட்டாறுப் பகுதி அகன்று இருக்கிறது. மேட்டூர் அணையில் நீர் நிரம்பித் தேங்கினால் இப்பகுதியில் நீரோட்டம் தேக்கமாக நிற்கும். அப்போது படகுப் போக்குவரத்து கூடுதலாக அமையும். தேக்கம் வரும்போது விசைப் படகையும் பயன்படுத்தலாம். தேக்கம் குறைந்துவிட்டால் சிறு பரிசல்கள் மட்டுமே போக முடியும். மற்ற நேரங்களில் நீர் விசை அதிகமாக இருப்பதாலும், பாறைகள் நிறைந்த மேடு, பள்ளமான பகுதியாக இருப்பதாலும் சிறுபரிசல் (படகு) மூலம்தான் பயணிகள் போய்வர முடியும்.

ஆழமான பகுதி பெரிய பாணி, சின்னபாணி பகுதியாகும். குறிப்பாக பெரிய பாணி 300, 400 அடிக்குமேல் ஆழம் உள்ள பகுதி. நீர்வீழ்ச்சி இந்தப் பகுதியில்தான் குதிக்கிறது. இயற்கையாக பாறைகளை அறுத்துக் கொண்டு இருகரைகளும் பாறைகளாக அமைந்து, காவிரிநீர் குதித்து பாறையை ஆழம் காண முடியாத அளவுக்கு ஆழ்ந்து நீர் நிரம்பி ஓடுகிறது. அகன்று ஆழமான பகுதியாக இருப்பது பெரியபாணி, சற்று அகலம் குறைந்தது சின்னபாணி. சின்னபாணியைவிட பெரிய பாணியில் அதிக அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் காவிரி ஆறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்களில் ஒன்றாக ஒகேனக்கல் திகழ்கின்றது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஒகேனக்கல்லுக்கு வருகிறார்கள். குறிப்பாக தமிழக - கர்நாடக மக்கள் ஒகேனக்கல் இயற்கை அழகைக் கண்டு களிக்க திரளாக வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த நீர்வீழ்ச்சிகளில் ஆண்டு முழுக்க தண்ணீர் திமுதிமுவென கொட்டிக் கொண்டே இருக்கும்.

நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் குளிக்க தற்போது பயன்படுவது ஒரு நீர்வீழ்ச்சி மட்டும்தான். இந்த ஒரு நீர்வீழ்ச்சியிலும் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும், சிறுவர்களுக்கென்றும் தனித்தனி குளியல் பகுதிகள் அமைந்துள்ளன. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்போரின் ஆனந்தமே தனிதான். ஆனந்தக் குளியலில் இறங்கி விட்டால் சீக்கிரம் வெளியே வர மனமே வராது. அத்தகைய அற்புதமான நீர்வீழ்ச்சிகள்.
சிறுவர்களுக்கென (மற்றவர்களும் குளிக்கலாம்) சிறிய நீர்வீழ்ச்சிப்பகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது சினிபால்ஸ் என்றும் சிற்றருவி என்றும் அழைக்கப்படுகிறது.

அதற்கு அருகே நீர்வீழ்ச்சி அழகை எல்லாம் மக்கள் கண்டுகளிப்பதற்காக பார்வை கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா நீர்வீழ்ச்சிகளும், மிகுந்த வேகத்தில் ஆழமான பகுதியில் விசையுடன் வீழ்வதால் இதில் குளிக்க இயலாது. இந்நீர்வீழ்ச்சிகளில் நீர்மின் உற்பத்தி செய்ய வேண்டுமெனவும், அணையைக் கட்டி புனல்மின் உற்பத்தி செய்ய வேண்டுமெனவும் நாம் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம்.
இந்த ஒகேனக்கல் பகுதியில் தான் தற்போது சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.

புதியதாக கர்நாடகாவுக்குச் சொந்தம் கொண்டாடி பிரச்சனை கிளப்பப்பட்டு வருகிறது. தமிழகப் பகுதிகளைக் கர்நாடகப் பகுதி என கர்நாடக மாநில அரசு அலுவலர்கள் சிலர் திடீரென வருவதும், போவதும் பிரச்சனைகளை உருவாக்குவதுமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில அமைப்புகளைச் சார்ந்த நபர்கள் இந்தப் பிரச்சனையைக் கையிலெடுத்து முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளார்கள்.

கர்நாடகா திடீரென உரிமைக் கொண்டாடும் பகுதிகள் எதுவும் கர்நாடகா அனுபவத்தில் எப்போதும் இருந்ததில்லை. தமிழகத்தில் காவிரி அடி எடுத்து வரும் இடத்தை அடுத்து தப்பக்குழி, உகிணியம், அஜ்ஜிப்பாறை, உடிப்பட்டி, ராசிமணல், கோட்டைத்துறை, பிளிக்குண்டு, மொசல்மடுவு (முயல்மடு), தொங்குபாவி வழியாக ஆலம்பாடியைக் கடந்து ஊட்டமலை வழியாக ஆலம் பாடியைக் கடந்து ஊட்டமலை வழியாக ஒகேனக்கல் வருகிறது.

இந்தக் காவிரியின் வழித் தடங்களில் உள்ள கர்நாடகப் பகுதி பெரும் வனப்பரப்பாகும். அதில் ஊர்களே இல்லாத பகுதியாகும். தமிழக எல்லைப்பகுதியில் எல்லை நெடுக வனமும் வனத்திற்கு இடையே ஊர்களும் ஏராளமாக இருக்கின்றன. உகிணியம், தெப்பக்குழி, ராசிமணல், பிளிக்குண்டு, ஊட்டமலை எல்லாம் தமிழகப் பகுதியில் ஊர் உள்ள ஆற்றங்கரைப் பகுதியாகும். தொங்கு பாவி, ஆலம்பாடி அதைத் தாண்டி பால்மடுவு இத்தகைய இடங்களிலும் படகுப் போக்குவரத்தே கர்நாடகத் தரப்பில் இன்றுவரை இருந்ததில்லை. ஏனெனில், கர்நாடகப் பகுதியில் மக்கள் வாழும் பகுதி இல்லை. தமிழகப் பகுதிகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்ற ஊர்கள் இருக்கின்றன. தமிழகப் பகுதியில்தான் பரிசல் உபயோகத்தில் உள்ளன. ஆலம்பாடியில் மட்டுமே தமிழ்மக்கள் வாழும் இடமாகும்.

இந்தப் பகுதியை அடுத்து ஒகேனக்கல்லைத் தாண்டி ஜம்போடுபட்டிதான் கர்நாடக எல்லையில் உள்ளது. மாடுகள் தங்கி மேயும் மாட்டுப்பட்டி. இது நீண்டகாலமாக இருந்து வரும் பரிசல் போக்குவரத்துத் துறையாகும். மறுகரை தமிழகத்தில் உள்ள கருங்கல் துறை. கருங்கல்துறையிலிருந்து ஜம்போடு துறைக்கும், ஜம்போட்டிலிருந்து கருங்கல் துறைக்கும் பயணிகளைக் கொண்டு சென்று விடுவார்கள்.

நமது பகுதியிலிருந்து சென்றால் நமது பரிசல்காரர்கள் கட்டணத்தை வசூலிப்பார்கள். அக்கரையில் வசூலிக்க மாட்டார்கள். அக்கரையில் கட்டணத்தை வசூலித்துக் கொண்டு நமது கரைக்கு பயணிகளைக் கொண்டு வந்தால் நமது கரையில் கட்டணம் கேட்க மாட்டார்கள். ஆக, ஏதேனும் ஒரு பகுதியில்தான் கட்டணம் வசூலிக்கும் முறை இருக்கிறது. கருங்கல்துறைக்குத் தெற்கே கொங்கரப்பட்டி, சிங்காபுரம், ஆத்துமேடு, பரிசல்துறை ஆகியவை நமது பகுதியில் இருக்கின்றன.

இந்தத் துறையின் மூலம்தான் கர்நாடகாவில் உள்ள கோபி நத்தம், சங்கப்பாடி (சந்தன கடத்தல் வீரப்பன் ஊர்) ஆத்தூர் ஆகிய ஊர்மக்கள் சென்று வருவார்கள். கோபிநத்தம், சங்கபாடி, ஆத்தூர் ஆகிய ஊர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களே வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய வனப்பரப்புக்குள் இந்த ஊர்கள் மட்டுமே உள்ளது. தமிழகத்திலிருந்து இந்த ஊர்களுக்கு ஆட்கள் செல்வார்கள். மாதேஸ்வரன் மலைக்கு தமிழகத்திலிருந்து நடந்து செல்லும் பக்தர்கள் - பயணிகள் இந்த துறைவழியாகக் கடந்து செல்வார்கள். மற்ற பகுதிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்துதான் பரிசல்கள் மூலம் சென்று வருகிறார்கள். கர்நாடகப் பகுதியிலிருந்து வர வாய்ப்பில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com