Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

முள் கிரீடம் அகற்றப்படுமா?
ஆனாரூனா

இராஜஸ்தானில் குஜ்ஜர் இன மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. குஜ்ஜர்களின் போராட்டத்துக்கான காரணம் அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான். பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து விட்டால், குஜ்ஜர்களின் தாழ்வுற்ற நிலை மாறி, முன்னேற்றத்தின் ஒளிக்கதிர்கள் பரவும் என்று அம்மக்கள் கருதுகிறார்களா?

இட ஒதுக்கீடு என்பது ஒரு முற்போக்கான நடவடிக்கை தான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அதன் வலிவும் பொலிவும் தீர்மானிக்கப்படும். இடஒதுக்கீடு எனும் கொள்கை தமிழ்நாட்டில் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இங்கே நீதிக்கட்சி ஆட்சியில் இருந்ததால் அதன் அருமையும் அவசியமும் உணரப்பட்டது, உணர்த்தப்பட்டது.

இடஒதுக்கீட்டின் நுண்ணிய கல்பொருள் மனுவாதிகளின் செட்டைகளை முறிப்பது தான். ஆரிய மாயையிலிருந்து விடுபடாமல், ஒடுக்கப்பட்டோருக்கு உய்வில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அரசதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குப் பொருள் இருக்க முடியும்.

பெரியார், அண்ணா என்று பேசினாலும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அர்த்தமும் தெரிவதில்லை; அவசியமும் புரிவதில்லை. இராஜஸ்தானில் குஜ்ஜர்கள் நடத்தும் போராட்டத்தின் மையப்புள்ளி எது? அதன் இலக்கு எது?
போராடுகிறவர்களுக்கும் சரி; ஆட்சியாளர் களுக்கும் சரி, எங்கிருந்து இந்த உணர்வு எழுகிறது என்று புரிந்திருக்குமா? முதலில் அந்த மாநிலத்தின் பெயரைப் பார்ப்போம். இராஜஸ்தான் என்றால் இராஜாவின் நாடு. அந்த நாட்டின் மக்களெல்லாரும் இராஜபுத்திரர்களாம்.

ஒரு நாடு ஒரு இராஜாவுக்கும் அவருடைய அந்தப்புர நாயகியருக்கும், அந்த கேளிக்கை மாதர்கள் பெற்றுப் போட்ட பிள்ளைகளுக்கும் சொந்தமானது என்று அறிவிப்பதும் அறியப்படுவதும் சரிதானா? வரலாற்றின் அடிச்சுவட்டில் வெகுதூரம் வந்து, திரளான உழைக்கும் மக்களின் பாத்திரம் உணரப்பட்டு, ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்த்து, பல மன்னர் குழாமைக் கில்லெட்டினிலே போட்டு வெட்டி, பாஸ்டில்களை உடைத்து, மக்களாட்சித் தத்துவத்துக்கு மகுடம் சூட்டப்பட்ட பிறகும், இராஜஸ்தான் என்கிற சொல்லை அனுமதிப்பதே அந்தப் பகுதி மக்களை அவமதிப்பதாகாதா?

இராஜவம்சம் என்பது ஒன்றும் மரியாதைக்குரியது அல்ல. மக்களை அச்சுறுத்திக் கொள்ளையடிக்கும் கூட்டம் என்றே வரலாற்றுக் காட்சிகள் பறைசாற்றுகின்றன. தொழில் முறைக் கொலைகாரர்களான இவர்களும்கூட இந்தியச் சூழலில் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்களே.
மனுதர்ம விதிப்படி இராஜவம்சம் என்பது சத்தியவம்சம். சத்திரியனின் தர்மம் போர் செய்வது என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில், போர் என்று வந்தால், அந்தப் போரிலே வெல்கிறவன், வெல்லப்படுகிறவன், சொல்கிறவன், கொல்லப்படுகிறவன் ஆகிய எல்லோருமே சத்திரியர்கள் தானா? அதாவது இராஜவம்சத்தைச் சார்ந்தவர்கள்தாமா? ஒரு மன்னன் தனது சொத்தைப் பாதுகாப்பதற்காக தன் கொடிக்குக் கீழேயுள்ள எளிய மக்களையெல்லாம் போரிலே ஈடுபட வைத்து பல உயிர்களைக் காவு கொடுத்து வெல்கிறான் அல்லது தோற்கிறான். போரிலே ஈடுபட்ட திரளான மக்களுக்கும் அந்தப் போருக்கும் என்ன சம்பந்தம்?

சொத்துடையவர்களும், உல்லாசிகளும் தங்களுடைய சொத்தைப் பாதுகாப்பதற்கு சொத்தில்லாத மக்களின் ஆதரவும் ஆற்றலும் தேவைப்படுகிறது. சொத்தில்லாத மக்களை எளிதாக ஏமாற்றுவதற்குத் திறமையாக உருவாக்கப்பட்ட மந்திரம்தான் தேச பக்தி. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசபக்தியின் பெயரால்தான் பாமர மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள்; போர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவன் ஒரு நாட்டில் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அந்த நாடு உலகின் மற்ற எல்லா நாடுகளையும்விட உயர்ந்தது என்று நம்புகிற முட்டாள்தனத்துக்குப் பெயர்தான் தேசபக்தி என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா.

இராஜஸ்தானில் வாழும் மக்களெல்லோரும் தங்களை இராஜவம்சத்தார் - இராஜபுத்திரர்கள் என்று நம்பினால் அது கேள்விக்குரியது.
இராஜவம்சத்துக்குள் இனப்பாகுபாடு - குஜ்ஜர்கள், மார்வாரிகள், இராஜ்புத்தர் என்கிற வேறுபாடு எங்கிருந்து வந்தது? இராஜவம்சத்தைச் சாராத மக்கள் முதலில் தங்கள் நாடு இராஜஸ்தான் என்று அழைக்கப்படுவதையே அனுமதிக்கக் கூடாது. இராஜவம்சம் என்பது மரியாதைக்குரியதல்ல என்பதைத் தாங்களும் புரிந்துகொண்டு, தங்களை அடிமை கொண்ட அந்த எஜமானர்களுக்கும் புரியவைக்க வேண்டும். இராஜவம்சம் என்பது எவ்வளவு போலித்தனமானது, கோழைத்தனமானது என்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் சிரிக்கத்தகுந்த சான்றுகள் ஏராளம் உண்டு.

இராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூர் மலைத்தொடரில் பல அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு கோட்டைக்கு அருகில் - மலை மீது - மிகப் பெரிய பீரங்கி ஒன்று காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகில் ஒரு தகவல் பலகை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?

பிரிட்டிஷ்காரர்கள் இந்தப் பீரங்கியை சோதனையாகச் சுட்டுப் பார்த்தபோது ஜெய்ப்பூருக்கு வெளியே 20 மைல் தொலைவில்போய் வெடித்து அந்தப் பகுதி எரிகிறது. அதன் பிறகு இந்தப் பீரங்கியால் சுடுவதற்கு அவசியமே ஏற்படவில்லை. என்று அந்தத் தகவல் பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் என்ன சொல்கிறது? பிரிட்டிஷ்காரனின் பீரங்கி முழக்கம் கேட்டதுமே இராஜஸ்தானின் எல்லா இன ராஜாக்களும் பேச்சு மூச்சின்றி சரணடைந்து விட்டார்கள். அதன் பிறகு அந்தப் பீரங்கிக்கு வேலையே இல்லை என்பது இராஜவம்சத்தின் வீரத்துக்கு அடையாளமா? கோழைத்தனத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழா?

இன்றைக்கும் இராஜஸ்தானில் இராஜவம்சத்துப் பெண்மணி ஒருவர்தான் ஆட்சி நடத்துகிறார் - ஜனநாயகத்தின் பெயரால். இந்த இராஜவம்சமும் இந்தியாவின் எல்லா இராஜவம்சங்களையும் போலவே ஆரிய தர்மத்துக்குக் கட்டுப்பட்டதுதான். இராஜவிசுவாசமும், ஆரிய தர்மமும் குஜ்ஜார் இனமக்களுக்கு மாத்திரமல்ல இன்று இராஜஸ்தான் என்று அழைக்கப்படும் நாட்டின் எல்லா இன மக்களுக்கும் எதிரானதே என்பதை அந்த மக்கள் புரிந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம்.

இராஜஸ்தானில் எங்கு பார்த்தாலும் அரண்மனைகளும் கோட்டைகளும்தான். நாடெங்கும் அரண்மனைகள்; ஆனால் மக்களோ நாடோடிகளைப்போல் வாழ்கிறார்கள். மன்னர் ஆட்சிமுறை மறைந்தாலும் மன்னர் புகழ்பாடுவதற்கே இராஜஸ்தான் அரசு தன் கஜானாவைத் திறந்துவிட்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் அரண் மனைகள் புதுப்பிக்கப்படுகின்றன. தொன்மைக் கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டியதுதான். ஆனால் அந்தக் கட்டிடங்கள் மக்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். வெறும் சுற்றுலாத் தலமாக மாற்றப்படுவதைவிட பள்ளிகளாகவும் மருத்துவமனைகளாகவும் மாற்றப்பட வேண்டும்.

கட்டாயமாக, பழைய இராஜவம்சம் ஜனநாயகத்தின் பெயரால் அதிகாரத்துக்கு வருவது தடுக்கப்பட வேண்டும். நேப்பாளம் வழிகாட்டுகிறது.
இராஜஸ்தான் என்றழைக்கப்படும் முள் கிரீடத்தை அந்த நாட்டு மக்கள் கழற்றி எறிவார்களா?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com