Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

புறக்கணிப்பால் உண்மைகளைப் புதைத்துவிட முடியுமா?

தணிகைச்செல்வன்

`தமிழ்த் தேசியத்தின் பன்மையும் நேபாள மாவோவியக் கட்சியின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் மார்ச் 2006 தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் மணியரசன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் ஒரே நிலைப் பாட்டைக் கொண்டுள்ளன என்று அக்கட்டுரையில் அவர் இரு கட்சிகளையும் சமநிலையில் வைத்துக் கருத்து தெரிவித்திருந்தார். அது அபத்தமான ஒப்பீடு என்பதை ஆதாரங்களோடு விளக்கி, `பிரசந்தாவும் மணியரசனும்’ என்ற எதிர்வினைக் கட்டுரை எழுதி அதைத் தமிழர் கண்ணோட்டத்தில் வெளியிடுமாறு கோரித் தோழர் மணியரசனுக்கு அக்கட்டுரையை அனுப்பி வைத்தேன். தமிழர் கண்ணோட்டத்தில் அது வெளியிடப் படவில்லை.

அடுத்து, `கார்முகில் கற்பிக்கும் மார்க்சிய மந்திரவாதம்’ என்ற கட்டுரையை ஏப்ரல் 2006 தமிழர் கண்ணோட்டம் இதழில் மணியரசன் எழுதியிருந்தார்.

ஜனநாயகப் புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கத்தின் தனித்தலைமை கிடையாது. கூட்டுத் தலைமைதான். சோஷலிசப் புரட்சிக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் தனித் தலைமை தேவை. என்று லெனினும் மாவோவும் கருதினார்கள் என்பதாக அக்கட்டுரையில் மணியரசன் வாதித்திருந்தார்.

அது தவறான வாதம்; சோஷலிசப் புரட்சியைப் போன்றே ஜனநாயகப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையைத்தான் புரட்சியின் முன்தேவையாக லெனினும் மாவோவும் கருதினார்கள் என்பதை அவர்கள் எழுதிய நூல் களின் ஆதாரங்களோடு மணியரசன் கட்டுரைக்கு, மறுப்புரை எழுதித் தமிழர் கண்ணோட்டத்துக்கு அனுப்பி அதைப் பிரசுரிக்குமாறு கோரியிருந்தேன். என் மறுப்புரையின் தலைப்பு; `மாவோ, லெனின் மற்றும் மணியரசன்’ என்பதாகும். என் முதல் எதிர்வினைக்கு நேர்ந்த கதியே இதற்கும் நேர்ந்தது. தமிழர் கண்ணோட்டம் அதை வெளியிடவில்லை.

மணியரசனால் புறக்கணிக்கப்பட்ட என் கட்டுரைகளை அரசியல் தலை வர்களுக்கும், இதழாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் படியெடுத்து அனுப்பி வைத்தேன். அக்கட்டுரைகள் குறித்து அவர்கள் எழுதியவை, நேரிலும், பேசியிலும் கூறியவை ஆகியவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.

என் கட்டுரைகளை வெளியிடாமைக்கான எந்தக் காரணத்தையும் மணியரசனோ தமிழர் கண்ணோட்டமோ எனக்குத் தெரிவிக்கவில்லை. மாற்றுக் கருத்தை மறுக்கும் கருத்து தன்னிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதாகவே இந்த மவுனத்துக்குப் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. தனக்குப் பிடிக்காதிருப்பினும் எதிர்வினை எழுத்துகளுக்கு மரியாதை தந்து பிரசுரித்து விளக்கம் தரவேண்டுவது இதழியல் அறமும் அரசியல் பொறுப்பும் ஆகும்.

மாற்றுக் கருத்துக்களைப் புறக்கணிப்பில் புதைத்து விடுவது முதலாளிய உத்தி. அதையே மணியரசனும் தமிழர் கண்ணோட்டமும் கைக்கொள்வது முறைதானா?

ஜனநாயகப் புரட்சி முதல் பொதுவுடைமைப் புரட்சிவரை, புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்கும்; அரசும் பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமையும். கூட்டுத் தலைமை என்ற குழப்பத்துக்கே இடமில்லை என்பதை லெனின், மாவோ சிந்தனைகளிலிருந்து சான்றாதாரங்கள் காட்டி நிறுவிய என் கட்டுரை மீது மணியரசன் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது அவரது இயலாமையைக் காட்டுவதாகவே நாம் கருதினோம்.

சூன் 2006 தமிழர் கண்ணோட்டத்தில், மாவோவின் ஒரு மேற்கோளை (உபயம்: கார்முகில்) எடுத்துக் கொண்டு மாவோ கூட்டுத் தலைமையைத்தான் ஜனநாயக அரசின் கோட் பாடாக விதித்திருக்கிறார் - என்று எழுதியிருப்பதன் மூலம், மாவோயிசத்துக்கும், லெனினியத்துக்கும் முற்றிலும் முரண்பட்ட தனது பழைய நிலைப்பாட்டையே மீண்டும் புதுப்பித்திருக்கிறார். இது தன் திறனாய்வற்ற போக்கு.

மீண்டும் - அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மாவோ கூறியுள்ள கூட்டுச் சர்வாதிகாரம் (மணியரசன் மொழியாக்கத்தில் அது கூட்டுத் தலைமை) என்பது இடைக்கால அரசுக்குச் சொன்ன வழிமுறை. இடைக்கால அரசு என்பது ஜனநாயகப் புரட்சி முதிராத பருவத்தில் புரட்சிப் பயணத்தின் இடைக்கட்டத்தில் அமைக்கப்படுவதாகும்.

ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெறாத நிலையில் இடைக்கால அரசில் பங்கு பெறும் நடைமுறை உத்தியை 1905ல் லெனின் வகுத்தளித்தார். அதே உத்தியை சீனப் புரட்சியை முன்னெடுக்க 1927ல் ஸ்டாலின் கம்யூனிஸ்ட் அகிலத்தில் சீனாவுக்கு வழங்கினார். அதே நிலைப்பாட்டை மாவோவும் ஏற்று இடைக்கால அரசின் கூட்டுத் தலைமையில் பங்கேற்கு மாறு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டினார். ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தை முதன்மைத் திட்டம் (Main Programme) என்றும் இடைக்கால அரசுக்கான ஏற்பாட்டைக் குறிப்பான திட்டம் (specific programme) என்றும் மாவோ பிரித்துக் காட்டி விளக்கினார்
(பார்க்க: மாசேதுங் தேர்வுப் படைப்புகள் (ஆங்) பக் 267)

லெனின் இடைக்கால அரசை `குட்டித் திட்டம்’ (Minimum programme) என்றார். (பார்க்க: லெனின்: `இரு நடைமுறை உத்திகள்’ - (ஆங்) பக்.16)

இடைக்கால அரசுக்குக் கூட்டுத் தலைமை என்ற மாவோ கூற்றைக் குறிப்பிட்டு, அது மணியரசன் கூறும் கூட்டுத் தலைமை அன்று என்று எழுதியிருக்கிறேன். ஜன நாயகப் புரட்சிக்குக் கூட்டாளித் தலைமை கிடையாது. பாட்டாளி வர்க்கத் தலைமையே என்று மாவோவும் லெனினும் கல்லறையிலிருந்து எழுந்து வந்து முழங்கினாலும் மணியரசன் திருந்தப் போவதில்லை. எனவே திருந்த வேண்டியவர்கள் அவரைப் பின்பற்றும் தோழர்கள்தாம். நமது விளக்கமும் அவர்களுக்கே.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com