Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

சவத் தீயில் ஒரு சந்தன மரம்

கவிஞர் பல்லவன்

நீலவானத்தைத்
தொட
நெடுநெடுவென்று
வளர்ந்து நின்றது
அந்தச்
சந்தன மரம்!

சவுக்கு மரங்கள்
வளரும் மண்ணில்
சந்தன மரங்கள்
வளர்வதில்லைதான்!

மண்பார்த்து வளர்ந்து
விண்பார்த்து மகிழ்ந்து
மணத்தால்
விலை மதிப்பால்
உயர்ந்த மரம் அது!

தொட்டுப் பார்த்தாலும்
கட்டித் தழுவினாலும்
சற்றும்
மணம் தருவதில்லை
சந்தன மரம்!

வெட்டிச் சாய்த்த
பிறகே
வீசியடிக்கும்
வாசத்தைக்
காடு முழுவதும்!

மண்ணில் தன்னை
வீழ்த்திய
கோடரிக்கும்
அது
மரியாதை செய்யும்
சந்தனம் பூசி!

சுட்டுக் கொல்லப்பட்ட
சுயநலத் தலைவன்
ஒருவனின்
பிணநாற்றம் மறைக்கவும்
மணவாசம் சேர்க்கவும்

உடன்கட்டை
ஏற்றினர் இந்தச்
சந்தனக் கட்டைகளை!

சுடுகாட்டில்
அடுக்கப்பட்டிருந்த
சந்தனக் கட்டைகளில்
ஒன்று
கேள்வித் தீக்குச்சியைக்
கிழித்துப் போட்டது!

மண்ணில் நின்று
நான்
மாதவம் புரிந்தது
சவத்தை எரிக்கவா?
சவத்தீயில் வேகவா?

மாட மாளிகைகளை
அலங்கரிக்கும்
மணிக்கதவுகளாய்...
காமம் கழிக்கும்
கட்டில்களாய்...

மாளிகைவாசியின்
மார்பினில் பூசிடும்
வாசனைத் திரவியமாய்
வாழ்வதைக் காட்டிலும்

ஏழை வீட்டு
அடுப்பில் எரியவே
எனக்குச் சம்மதம்!

பனைமட்டையாக நான்
இருந்திருப்பின்
அது சாத்தியபட்டிருக்கும்.

இந்த
மரக்கடத்தல்காரர்களின்
விற்பனை வெறியோ
என்னைக்
கொண்டுவந்து
குவித்துவிட்டது
பிணமேடையில்!

ஊழலில் புழுத்த
இந்த
அரசியல்வாதியின்
உடலை எரிக்கையில்
வெந்து
சாம்பலாகப்
போகின்றன
எனது
எண்ணங்களும்
இலட்சியங்களும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.