Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

நாட்டியக் கலையின் தந்தை பரதரா; அவிநயரா?

பேராசிரியர் இரா.மதிவாணன்

பரத முனிவருக்குக் கோயில் கட்டுவது பொருந்துமா என்னும் வினா எழுந்துள்ளது. நாட்டியக் கலையரசி பதுமா சுப்பிரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு முன்னாள் தமிழக முதலமைச்சர் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பரத முனிவர் யார்?

நாட்டியக் கலையிலுள்ள 108 தாண்டவங்களையும் ஆடிக் காட்டியவர் சிவபெருமான்; பிரமனின் வேண்டுகோளின்படி அவர் தண்டு என்னும் முனிவருக்கு நாட்டியம் கற்பித்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்குக் கற்பித்ததால் பரத முனிவர் வடமொழியில் நாட்டிய சாத்திரம் எழுதினார் என்பது புராணத் தொடர்பான செய்தி. இதன்படிப் பார்த்தால் பரத முனிவர் பரதக் கலையைத் தானே உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பாளர் இல்லை. முறைப்படி பரதருக்கு நாட்டியக் கலை கற்பித்த தண்டு முனிவருக்கல்லவா கோயில் கட்ட வேண்டும் என்று எவரும் கேள்வி கேட்கக் கூடும். அதுவும் பொருத்தமில்லை. ஏனென்றால் தண்டு முனிவருக்கு நாட்டியம் கற்பித்த எண் தோள் வீசி நின்றாடும் தில்லைக் கூத்தனுக்குக் கோயில்கள் உள்ளன. இந்தியாவில் எண்ணிக்கையில் அதிகமான கோயில்கள் சிவன் கோயில்களே. வருமானத்தில் அதிகமான கோயில்கள் பெருமாள் கோயில்கள் என்று கூறுகின்றனர். எனவே, கோயில் கட்ட வேண்டும் என்னும் கோரிக்கை சரிதானா? என்பது எதிராடலுக்கு உரியதாகி விடுகிறது.

Classical Dance பரதக் கலையின் பிறப்பிடம் தமிழ்நாடு

வரலாற்றின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் தான் பரதக்கலை முதன் முதலில் தோன்றியது என் பதை முதலமைச்சரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத்தக்கது. ஆனால் பரத நாட்டியக் கலைக்குரிய முதல் தமிழ் நூல் அவிநயம் என்பதும் அதை இயற்றியவர் அவிநயர் என்பதும் முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. விறலியர், கோடியர், வயிரியர், பாணர் ஆகியோர் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டியக் கலையை வளர்த்தார்கள்.

நாட்டியக் கலையின் முதல் தமிழ் நூல் அவிநயம். பரத முனிவரின் நாட்டிய சாத்திரம். தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல், மூல நூல் அல்ல. தொல்காப்பியர் காலத்தில் அவிநயமே நாட்டிய நன்னூலாக இருந்தது. சங்க காலத்தில் சாத்தனார் இயற்றிய கூத்த நூல். அறிவானார் இயற்றிய பஞ்சமரபு. மதிவாணர் இயற்றிய நாடகத்தமிழ் போன்ற பல நாட்டியக் கலை நூல்கள் அவிநயத்தின் வழிநூல்களாகத் தோன்றின. சிற்றிசை, பேரிசை, பெருநாரை, பெருங்குருகு போன்ற ஏராளமான நூல்கள் முத்தமிழ் வளர்த்த நூல்களாக இருந்திருக்கின்றன.

கூத்த நூலும் பஞ்சமரபும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. பரதர் கூறும் 108 காரணம் எனும் தாண்டவ நிலைகள் தமிழுக்குப் புதியனவல்ல.

சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அவிநயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவிநயர் என்னும் சொல்லுக்குக் கூத்தர் எனப் பொருள் இருப்பதை சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களின் பெயர்களில் தொல்காப்பியர் பெயர் இடம் பெற்றிருப்பதுபோல அவிநயனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. எனவே, தொல்காப்பியக் காலத்திலேயே அவிநயரால் அவிநயம் என்னும் நாட்டிய நூல் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. பரத முனிவர் பல்லவர் காலத்தில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆனால் அவிநயர் பரதமுனிவருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். ஆதலால், அவிநயருக்குக் கோட்டம் எழுப்புவது முறையானது, பொருத்தமானது முற்றிலும் சரியானது.

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பரதக் கலையின் உயிரோட்டமான அவிநய இயல்புகளை மெய்ப்பாடு என்கிறார். நாட்டியக் கலையை நாட்டியமரபு என்கிறார். நாட்டியக் கலையை ``நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப’’ என்னும் வரியில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது பரதக் கலை. அவிநயம் என்னும் யாப்பிலக்கண நூல் காலத்தால் பிற்பட்ட வேறொரு அவிநயர் இயற்றியதாகும்.

பரதக் கலைக்கும் முனிவர்களுக்கும் எவ்வகையிலும் தொடர்பில்லை.

உலகத்தை வெறுத்துப் பிறவா நிலை பெறுவதற்காகத் தவம் செய்யும் முனிவர்கள் தவநிலையில் கண்ணை மூடிக் கொண்டு கிடப்ப வர்கள். முனிவருக்கும் இசை நாட்டியக் கலைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அகத்தியரை முத்தமிழ் முனிவர் என்பது புராணக் கதை. இது வரலாற்றுச் செய்தியல்ல. புராணக்கதை தழுவி பல்லவர், சோழர் காலங்களில் தாடி வைத்த முனிவர் நாட்டியம் ஆடுவதாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பக் காட்சிகள் வரலாறாக ஏற்கத் தக்கனவல்ல.

பரதம் என்பது கடல் சூழ்ந்த நிலப்பகுதி. இது தென்னிந்தியாவை மட்டும் குறித்த சொல் என்பது சமண சமயத்தாரின் பிராகிருத மொழி நூல்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்நூல்களில் இந்தியாவை சம்புதீவம் என்றும் சம்புதீபத்தில் பரத சேத்திரத்தில் என்று தென்னாட்டுக் கதைகளின் தொடக்கம் அமைகிறது. எனவே பரதக் கலையின் பிறந்த இடமும் சிறந்த இடமும் தமிழ்நாடே. சங்க இலக்கியங்களில் எந்த முனிவரும் நாட்டியம் கற்றதாகவோ கற்பித்ததாகவோ சான்று இல்லை.

காளிதாசனே நாட்டியம் காண தென்னாடு வந்தான்

வடமொழி இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்த புலவன் காளி தாசன் நாட்டியக்கலை தென்னாட்டில் சிறந்திருப்பதாகக் கேள்விப் பட்டு நேரில் காண விரும்பினான். குப்தர் காலத்திய உச்சயினியிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வட கருநாடகப் பகுதியாகிய இன்றைய கார்வார் மாவட்டத்தில் நடந்த விழாவில் நாட்டியம் காண்பதற்காக ஒருமுறை வந்திருந்தான். இச் செய்தி தென்னிந்திய கிராமிய நடனங்கள் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்திலும் இசை, இசைக் கருவிகள், நாட்டியம் ஆகிய அனைத்தும் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள தென்னாட்டில் மிகச் சிறப்புற்றுச் செழித்து வளர்ந்துள்ளன. எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. நாட்டியக் கலை வல்லுநர்களான கூத்தர், விறலியர் என்போர் இசைக் கருவி வல்லுநர்களோடு கூட்டம் கூட்ட மாகச் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

யாருக்குக் கோயில் கட்ட வேண்டும்?

மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஊன்றிக் கவனித்தால் அவிநய ருக்குத்தான் கோயில் அல்லது கோட்டம் கட்ட வேண்டும். சங்க காலத்தில் நாட்டியக் கலையில் பெரும் புகழ்பெற்று ஆட்டன் என்னும் விருது பெற்ற சேர இளவரசன் ஆட்டன் அத்தியின் பெயரில் நாட்டிய மண்டபமும் அவிநயரின் பெயரில் கோட்டமும் கட்டப்பட வேண்டும். தமிழைச் செம்மொழி ஆக்கியது மட்டும் தமிழுக்குப் பெருமையளிக்காது. தமிழரின் வரலாற்று உண்மைகள் கண்ணில் நிலைத்த காட்சியாக வேண்டும்.

1946 முதல் சமற்கிருதத்திற்குச் செம்மொழிக்கான வளர்ச்சி உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்தாயிரம் கோடிக்கு மேல் சமற்கிருதத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். தமிழ் சவலைக் குழந்தையாக இருக்கிறது. ஆதலால் அவிநயருக்குக் கோட்டம் கட்டுவது உலக அரங்கில் தமிழுக்கு உரிய உரிமையை நிலை நாட்ட உதவும். பசித்த குழந்தைக்குத்தான் பால் தரவேண்டும். சமற்கிருதம் இமயமலையை விட அதிக உயரமாக வளர்ந்து விட்டது.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு சமற்கிருதத்திற்குத் தருவதுபோல் இருமடங்கு உதவியளிக்க வேண்டும். சமற்கிருதத்தில் நாட்டிய நூல் எழுதிய பரதமுனிவருக்கு சமற்கிருத நிறுவனங்கள்தான் கோயில் கட்ட வேண்டும். அது தமிழக அரசின் வேலையாகாது. சமற்கிருத நிறுவனங்களில் திருவள்ளுவருக்குச் சிலை எழுப்பியது உண்டா என் பதையும் நடுநிலையோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

பதுமா சுப்பிரமணியத்தின் கோரிக்கை முறையற்றது

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், மருத்துவம், வானநூல், கணிதம், இசை, நாட்டியம், மெய்யில் தத்துவம் போன்ற எண்ணிறந்த துறைகளைச் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் சமற்கிருத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. மூல நூல்களான ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டன. இச்செயல் நீண்ட நெடுங் காலமாகவே நடைபெற்று வருவதை பரிதிமாற் கலைஞர் எனப் பெயர் மாற்றிக் கொண்ட வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் சென்ற நூற்றாண்டில் அவருடைய நூலில் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்த வரலாற்று உண்மைகளைச் சிறிதும் விளங்கிக் கொள்ளாத அல்லது தமிழர் வரலாறு பற்றிச் சிறிதும் கவலைப்படாத பதுமா சுப்பிரமணியம் பரத முனிவர்தான் நாட்டியக் கலையின் தந்தை என்று கூறுவது சிரிப்புக்கு இடமானது. தமிழ்த் தொடர்பாகத் தமிழறிஞர்களிடம் கேட்க வேண்டும் என்பதையும் இவர் உணரவில்லை. தமிழறிஞர்களை மதித்த காலத்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளும், தமிழ்க் கலைகளும் நன்கு வளர்ந்தன.

பதிற்றுப் பத்து என்னும் நூலில் சேர மன்னன் தன் அவையில் எந்தப் புலவராவது இல்லையெனத் தெரிந்தால் உடனே அவர் வீட்டுக்குத் தேர் அனுப்பி வரவழைத்துக் கொள்வான் எனக் கூறப்பட்டுள்ளது.

`இரவலர் வேண்டி வாரா ராயினும்
தேரில்தந்தவர்க்கு ஆர்பதம் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்....’
(பதிற். 55.10)

என அம் மன்னன் புகழப்பட்டிருக்கிறான். இத்தகைய மன்னர்களால்தான் முத்தமிழ் வளர்க்கப் பட்டது; நாட்டியக் கலையின் முதல் நூலான அவிநயம் தோன்றியது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். தமிழும் அப்படிப்பட்டதே. எனவே, தமிழையும் தமிழறிஞர்களையும் மதிக்கும் வகையில் நாட்டியக் கலையின் தந்தையான அவிநயருக்குக் கோட்டம் கட்டுவதே முற்றிலும் சரியானது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com