Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

தமிழரின் மானத்துடன் விளையாடதீர்!

கலைஞர் எச்சரிக்கை

2-1-1968 ஆம் ஆண்டை இப்போது எண்ணிப் பார்க்கின்றேன். அந்த ஆண்டில் இதே இடத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் சார்பில், அண்ணா அவர்களுடைய எண்ணப்படி நான் தலைமையேற்க, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் திறந்து வைக்க கண்ணகி திருவிழா இங்கே நடைபெற்றது. அந்தச் சிலை திறப்பு திருவிழாவில் அன்றைக்குப் பாடியவர் தம்பி சிவசிதம்பரத்தின் தந்தை சீர்காழி கோவிந்தராசன் அவர்கள். (கைதட்டல்) அவர் இன்றைக்கு இல்லை. சிவசிதம்பரம் வடிவத்திலே இருக்கிறார். (கைதட்டல்)

நான் எண்ணிப் பார்க்கின்றேன். அன்று இசை முழங்கிய சீர்காழியார் இல்லை. சிவசிதம்பரம் இருக்கிறார். வேதனையான வேடிக்கை, அன்றைக்கு நானும் இருந்தேன், இன்றைக்கும் நான் இருக்கிறேன். (கைதட்டல்) அப்படி இருக்கிற காரணத்தால்தானோ என்னவோ, நான் இருந்ததால் இன்றைக்கு கண்ணகி சிலை மீட்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது என்று நம்முடைய பேராசிரியர் அவர்களும், தவத்திரு அடிகளாரும், கவிப்பேரரசு அவர்களும், அவ்வையும் மற்றவர்களும் எடுத்துக் காட்டியதைப் போல, அது ஓரளவு உண்மையாக இருந்தாலுங்கூட, அன்றைக்கு 68 ஆம் ஆண்டு நான் தலைமையேற்று நடத்தப்பட்ட அந்த விழாவில், நாட்டப்பட்ட கண்ணகி சிலை அகற்றப்பட்ட அநீதியையும் காண வேண்டிய அவலம் எனக்கு கடந்த ஆட்சிக் காலத்திலே ஏற்பட்டதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.

அப்படி தொடர்ந்து இருந்ததால்தானே அந்தத் துன்பத்தை நாம் அனுபவிக்க நேரிட்டது, இன்றைய நிகழ்ச்சி இன்பத்தை எனக்கு அளித்தாலும்கூட, இடையிலே வந்த அந்தத் துன்பம் சாதாரணமானதா? என்னுடைய இனத்தின் பண்பாட்டுச் சின்னத்தையே அழித்து, ஒழித்து அதைக் கொண்டு போய் ஒரு இருட்டறையிலே தள்ளி, தள்ளியதையும் கூட ஒழுங்காகத் தள்ளாமல் குப்புறக் கவிழ்த்து, கொடுமைக்காரன் நீலன் சிலை இருந்த இடத்தில், அருங்காட்சியகத்தில், நீலன் சிலையின் காலடியில் கண்ணகி சிலை கிடந்த காட்சியை பதவிப் பொறுப்பை இப்போது ஏற்ற மறுநாள் நான் சென்று அருங்காட்சியகத்திலே பார்த்தபோது, எப்படி துடித்திருப்பேன், எப்படி பதைத்திருப்பேன் என்பது என்னோடு வந்த நண்பர்களுக்குத்தான் தெரியும். கடந்த ஐந்தாண்டு காலம் நாம் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் அல்லவே!

இது தேவையா? இந்த இனம், இந்தப் பண்பாட்டுக்குரிய நாம், இப்படி ஒரு வேதனையைச் சந்திக்கத் தான் வேண்டுமா? ஆனால் சந்தித்திருக்கிறோமே? இன்று அதற்குப் பரிகாரம் கண்டிருந்தாலும்கூட, அந்த ஐந்தாண்டு காலம் நாம் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் அல்லவே? ஒரு சிலை தானே என்று அலட்சியப்படுத்தக் கூடிய விஷயமா அது? இல்லையே? காவிய நாயகி என்றும், நம்முடைய கலாச்சார பொக்கிஷம் என்றும், கருவூலம் என்றும் போற்றப்பட்ட ஒரு பெண், வீரப்பெண்மணி, நீதிக் கேட்ட பெண்மணி, நீதி கேட்டு நெடுஞ்செழியப் பாண்டியனுடைய தலையையே கவிழ வைத்த பெண் மணி, தன் செங்கோல் வளைந்தது என்பதற்காக தன்னுடைய உயிரையே கொடுத்து அந்தச் செங்கோலை நிமிர்த்துவதற்காகப் பாடுபட்டானே, அந்தப் பாண்டிய மன்னனை கொலு மண்டபத்திலே, ``கொற்றவனே குற்றம் புரிந்தவன் நீ’’ என்று சுட்டிக் காட்டிய வீரம் செறிந்த தீரப் பெண்மணி.

அந்தப் பெண்மணி தமிழ்ச் சமுதாயத்திற்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து வீரம் ஊட்டுகின்ற பெண்மணியாகத் திகழ்ந்து, சிலப்பதிகாரத்திலே யாருடைய பெயர் நினைவுக்கு வந்தாலும் வராவிட்டாலும் எந்தப் பெயர் உடனடியாக நினைவுக்கு வருமோ, அந்தப் பெயருக்கு உரிய கதாநாயகியாக இருந்து நம்முடைய உள்ளமெல்லாம் கவர்ந்த உணர்ச்சிப் பிழம்பான அந்தக் கண்ணகியெனும் பெயருடையாளின் சிலை அகற்றப்பட்டது, உடைக்கப் பட்டது, நொறுக்கப்பட்டது.

2-1-1968 அன்று வைக்கப்பட்ட சிலை, எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு மீண்டும் திறக்கப்படுகின்ற ஒரு விழா நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், அந்தச் சிலையை அகற்றிய பிறகு தமிழ்நாட்டிலே நாம் யாரும் வாளாயிருந்திடவில்லை. வாளாக இல்லையே தவிர தமிழன் வாளாயிருந்துவிடவில்லை. வாளாக அவன் இருக்க விரும்பவும் மாட்டான். ஏனென்றால், அறவழியே போராட வேண்டும் என்று அண்ணாவின் கட்டளையை ஏற்றவன். வாளாக அவன் மாறாமல் இருப்பதற்குக் காரணமே கூட, அண்ணாவின் கட்டளை என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அவன் வாளாக மாறுவானே என்கிற அச்சம் தமிழகத்திலே வந்து புகுந்த வஞ்சகர்களுக்கு இல்லாத காரணத்தால் அவன் வாளாகத்தானே இருப்பான். இவன் வெறும் ஆளாகத்தானே இருப்பான் என்று தேளாக இருந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு கொட்டு, கொட்ட ஆரம்பித்தார்கள். அப்படி கொட்டிய கொட்டுத்தான் நம்முடைய கண்ணகி சிலை இங்கிருந்து அகற்றப்பட்ட நிகழ்ச்சி.

கண்ணகி சிலையை அகற்றிய மறு நாளிலிருந்து இந்த மாநிலம் 6-12-2001 அதிகாலை மூன்று மணிக்கு கவிஞர் வாலி ஒரு கவிதையில் குறிப்பிட்டதைப் போல லாரி மோதி கண்ணகி சிலையின் பீடம் சேதம் அடைந்ததாக கதை கட்டப்பட்டு, அந்த லாரியை மோதியவன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரியின் டிரைவர் ஆனந்தன் என்று கூறப்பட்டு, அந்த ஆனந்தன் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. 6-12-2001 இல். நாள் குறிப்புகளோடு இதைச் சொல்வதற்குக் காரணம் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு இன்றைக்கு திடீரென்று நாம் பதிலளித்து விடவில்லை.

இந்தச் சிலையை இங்கே நாட்டி என்று கூறுவதற்காக அல்ல. கண்ணகி சிலை அகற்றப்பட்டது தமிழர்களின் மானத்திற்கு விடப்பட்ட அறைகூவல்

தொடர் கிளர்ச்சிகள், தொடர் வேண்டுகோள்கள் பல்வேறு அமைப்புகளின் சார்பாக யார் உடலில் தமிழ் ரத்தம் ஓடியதோ அவர்கள் எல்லாம் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். இந்த ஐந்தாண்டு காலம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இவைகளைக் குறிப்பிடுகிறேன்.

14-12-2001 சேதம் அடைந்த பீடம் செப்பனிடப்படுவதாக சொல்லப்பட்டு பீடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. பீடம் சேதம் அடைந்தது. அதற்குப் பரிகாரம் பீடத்தையே இடிப்பதென்று பீடத்தை இடிக்கின்ற பணி நடைபெற்றது. அருகில் இருந்த போலீஸ் பூத் ஒன்றும் அகற்றப்பட்டது.

சிலை மறுபடியும் அமைத்தால்தானே அங்கே போலீஸ் காவல் தேவை. அதனால் போலீஸ் பூத் அகற்றப்பட்டது.(?) சிலை இருந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி ஒரே நாளில் முடிக்கப்பட்டு, தமிழ்நாட்டிலே உள்ள கிராமத்துப் பாமரன் நடக்கப் பாதை இல்லை. எங்களுக்கு பாதை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டால் அந்தப் பாதை அமைய பத்து மாதம் ஆனாலும் ஆகும். பத்து ஆண்டு ஆனாலும் ஆகும், பாதை அமையாமல் போனாலும் போகும்.

ஆனால் சிலை இருந்த பகுதியில் இங்கே சாலை அமைக்கும் பணி ஒரே நாளில் முடிக்கப்பட்டு சாலைப் போக்குவரத்தும் திறந்து விடப்பட்டது. சாலை அமைந்து விட்டால் பிறகு சிலை வர முடியாது அல்லவா அதனால்.

17-12-2001 இல் அகற்றப்பட்ட சிலை எங்கே என்ற கேள்வி எழுந்தது. பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெளிவாகப் பதில் சொன்னார், தெரியாது என்று!

ஆனால் அதற்கு முன் பாகவே கண்ணகி சிலையை பொதுப்பணித் துறையினர் லாரியில் ஏற்றிச் சென்றதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணகி சிலை எங்கே என்பது கேள்விக் குறியாக இருந்து கடைசியில்தான் அது அருங்காட்சியகத்தில் கிடத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது. 18-12-2001-இல் கண்ணகி சிலையை அகற்றி இருப்பது தமிழர்களின் மானத்திற்கும் மரியாதைக்கும் விடப்பட்ட அறைகூவல்; சிலையை உடனடியாக அதே இடத்தில் வைக்காவிட்டால் மானம் உள்ள தமிழர்களைத் திரட்டி (ஜாக்கிரதையாகத் தான் சொன்னேன் மானம் உள்ள தமிழர்களைத் திரட்டி என்று) மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிவித்தேன்.

உலகத் தமிழர்கள் பொங்கி எழுவதற்குள் காவியத் தலைவி கண்ணகியின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிட வேண்டுமென பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்கள் இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் 19-12-2001 இல்.

கண்ணகி சிலையை முன்பு இருந்த இடத்திலேயே வைத்திட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் ஒன்றுபட்டு அரசுக்கு எதிராகப் பொங்கி எழுவார்கள் என்று அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேகூட, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். இது 19-12-2001 இல்.

கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிட அரசுக்கு உத்தர விட வேண்டும் என மத்திய சென்னை தி.மு.கழக வழக் கறிஞர்களின் பிரிவு துணை அமைப்பாளர் ஹசன் முகமது ஜின்னா உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இது 20-12-2001 பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் திரு. ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் ஓர் அறிக்கை மூலம் அரசுக்கு வேண்டுகோள் விட்டார்.

கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தச் செய்தி 20-12-2001 தேதியிட்ட ஏடுகளில் வெளி வந்தது. அதே நேரத்தில் கோவை மாநகர கல்லூரி மாணவர்களும் கண்ணகி சிலையை மீண்டும் அமைக்க வேண்டுமென்று கோரி போராட்டம் நடத்தினர். இது 21-12-2001 நாளேடுகளில் வெளிவந்தது.

பின்னர் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

காரணம் ஆசிரியர்களும் மாணவர்களும் வசூலித்துக் கொடுத்து அந்த நிதியிலே நிறுவப்பட்டதுதான் இந்தக் கண்ணகி சிலை, உலகத் தமிழ் மாநாட்டின்போது. அதனால் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள்.

தெய்வப் பணி மகளிர் மன்றத் தலைவி பொன் தெய்வநாயகி என்பார், "கண்ணகி சிலை அகற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை வைக்க வேண்டும்" என்று அரசுக்கு எச்சரிக்கை செய்து ஒரு கோரிக்கை வைத்தார்.

அந்தச் சிலையை மீண்டும் நிறுவிட என்னுடைய தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில்; `பொருந்தா காரணத்தைக் கூறி கண்ணகியின் சிலையை அகற்றியதற்கு’ அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், புலவர்கள், மகளிர் அமைப்புகள், மாணவ அமைப்பினர் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். கண்ணகி சிலை நாட்டும் அறப் போராட்டக் குழு அமைத்துப் போராட முடிவு செய்யப்பட்டது.

அதனையொட்டி கடற்கரையிலே ஒரு கண்டனப் பொதுக் கூட்டமும் நடைபெற்று, அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிலே கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்களுடன், ஆசிரியர்களும் சேர்ந்து போராடுவர் என்று ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிக்கை விடுத்தார்.

கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க தூத்துக்குடி தமிழ் உறவு மன்றம் கோரிக்கை வைத்தது.

வரலாற்று அடையாளமாக விளங்கும் கண்ணகி சிலையை அகற்றுவதா என தமிழகப் புலவர் குழு கண்டனம் தெரிவித்து 20.12.2001-இல் அறிக்கை விடுத்தது.

இந்தச் செயல் தமிழகத்தையே அவமானப்படுத்திய செயல் என அன்றைய மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பொன் இராதாகிருஷ்ணன் அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். இது 24.12.2001 ஏடுகளிலோ வெளிவந்தது.

கண்ணகி சிலையை அகற்றிய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தமிழ்ச் சான்றோர் பேரவை அறிக்கை மூலம் 27.12.2001 அன்று ஏடுகளில் தெரிவித்தது.

டாக்டர் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், சிலம்பொலி செல்லப்பனார், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

டாக்டர் மா.நன்னன் அவர்கள் அதே இடத்தில் சிலை வைக்கக் கோரி நீதி மன்றத்திலே வழக்கு ஒன்றும் தொடுத்தார்.

மறைத்து வைத்திருக்கும் கண்ணகி சிலையை அதே இடத்தில் வைக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.என். சங்கரய்யா அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். 30.12.2001 அன்று.

இப்படி தமிழ்நாட்டிலே உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா தலைவர்களும், எல்லா தமிழறிஞர்களும் தமிழ்ப் பெருமக்களும் கோரிக்கை வைத்து, அதைக் காதிலே போட்டுக் கொள்ளாத அரசின் தலைவி, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அருங்காட்சியகம் சென்று அங்கே அனாதை போல கிடத்தப்பட்டிருந்த, நாதியற்ற ஒரு நங்கை போல கிடத்தப்பட்டிருந்த, ஒரு பிச்சைக்காரி போல கிடத்தப்பட்டிருந்த கண்ணகி சிலையைப் பார்த்து, அதைப் புகைப்படமெடுத்து பத்திரிகையிலே அந்தப் படங்கள் வெளிவந்தவுடன் திடுக்கிட்டு, கண்ணகி சிலையை எடுக்க நான் காரணமே அல்ல, எனக்கு தெரியவே தெரியாது என்று அறிக்கை வெளியிட்டதை - அந்த நேரத்தில் அவாளுக்காக ஆதரவோடு எழுதிக் கொண்டிருந்த பத்திரிகைகள் எல்லாம் எவ்வளவு பெரிய அளவிலே வெளியிட்டன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கண்ணகி சிலையைப் பற்றி ஆனந்தவிகடன் எழுதியது என்ன?

இவ்வளவிற்கும் பிறகு, தமிழன் தன்னுடைய மானத்தைத் தொலைத்துவிட்டு வாழ விரும்பவில்லை. அதை விட அவன் மரணத்தைத் தழுவத் தயாராக இருக்கிறான் என்று நான் விடுத்த அறைகூவலை ஏற்றுக் கொண்ட தமிழ்நாட்டு மக்கள் நமக்களித்த ஆதரவைக் கொண்டு இன்றைக்கு அரியாசனம் பெற்றிருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் அந்தச் சிலையை வைப்பதைக் கூட நையாண்டி செய்து, ஏதோவொரு நாலாந்தர ஏடு எழுதியிருந்தால் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன், வேதனைப்பட்டிருக்க மாட்டேன். உயர்ந்த ஏடுகளில் ஒன்று என்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற, உயர்ந்த மனிதர் ஒருவரால் ஒரு காலத்திலே நடத்தப்பட்ட, இன்றைக்கு அந்த உயர்ந்த மனிதருடைய பிள்ளையால் அண்மைக்காலம் வரை நடத்தப்பட்டுக் கொண்டிருந்த, இன்று வேறு சில பேர்வழிகளால் நடத்தப்படுகின்ற, அவர்கள் வழி வந்தவர்களால் நடத்தப்படுகின்ற `ஆனந்தவிகடன்’ பத்திரிகையிலே கண்ணகி சிலையைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால், நான் இதை யாரையும் தூண்டி விடுவதற்காகப் பேசவில்லை, தூங்கிக் கொண்டிருக்கின்ற உணர்ச்சிகளை லேசாகத் தட்டி எழுப்புவதற்காகத்தான் பேசுகிறேன். தட்டி எழுப்பினாலும் கூட விழிக்க முடியாமல் தமிழன் கிடக்கிறானே என்ற வேதனையில் தான் இதைக் கூறுகிறேன். என்ன கண்ணகி சிலை? என்று சிலையை கேலிக் குரியதாக ஆக்கி, அந்தக் கட்டுரையை முடிக்கும் போது ஆனந்தவிகடன் கட்டுரையில் தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையின் கையிலே இருக்கின்ற கரடி பொம்மைக்கும் இந்தக் கண்ணகி சிலைக்கும் என்ன வித்தியாசம் என்று ஆனந்த விகடன் தன் கட்டுரையை முடித்திருக்கிறது என்றால், தமிழா, நீ இன்னும் தமிழ் நாட்டில் உயிரோடுதான் இருக்கிறாயா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

இந்தக் கேள்வியை நான் கேட்கின்ற காரணத்தால் என்னுடைய ஆட்சி செங்கோல் பறிக்கப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை. தமிழன் மானத்தோடு வாழ்ந்தான், மானத்தோடே சாகட்டும், சாகவேண்டும். மானம் இல்லாமல், மானத்தை இழந்து விட்டு ஒரு தமிழன் செத்துவிட்டால், என்ன மிச்சமாகத் தங்கும்?

அவன் பிணம் சில நாள் தங்கும், அதற்குப்பிறகு அவனுடைய எலும்பு சில வாரங்கள் தங்கும், அதற்குப் பிறகு அவன் இருந்த இடம் கொளுத்தப்பட்டால் சாம்பல், புதைக்கப்பட்டால் மண், சில காலம் தங்கும். என்றைக்கும் தங்க வேண்டுமானால், அவனுடைய மானம்தான் தங்க முடியும்.

அந்த மானத்தைத் தமிழன் இழக்க வேண்டும். அதை இழப்பான் என்கிற தைரியம் ஆனந்த விகடன் போன்ற `அவாள்’ பத்திரிகைகளுக்கு இருக்கின்ற காரணத்தால் கண்ணகி சிலை கரடி பொம்மையாம் - எழுதுகிறது மனதைப் புண்படுத்தும் கேலியாக!

இளங்கோவடிகள் கண்ணகியை எவ்வாறு சிறப்பித்தார். சிலப்பதிகாரம், கண்ணகிக்கு எத்தகைய சிறப்பை நல்கியிருக்கிறது, "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே’’ என்று கோவலன் புகழ்ந்ததையெல்லாம் எப்படி சிலப்பதிகாரம் எழுதிக் காட்டியிருக்கிறது. அந்தக் கண்ணகியை கரடியோடு, கரடி பொம்மையோடு ஒப்பிட்டு ஒரு பத்திரிகை எழுதுகிறது. என்றால், நான், அந்தப் பத்திரிகையின் உரிமையாளர் மாறியிருக்கலாம்.

ஆனால் அது யாரால் நடத்தப்பட்டது, எப்படிப்பட்ட பெருந்தகையால் நடத்தப்பட்டது, எத்தகைய பெரியவர் வாசன் அவர்களால் நடத்தப்பட்டது. என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, அவர் தேசத்திற்காக செய்த தியாகம் என்ன, கலையின் மூலமாக அவர் ஆற்றிய தொண்டு என்ன, தந்தை பெரியாரிடத்திலே அவர் வைத்திருந்த மதிப்பு என்ன, அவர் வைத்திருந்த பாசம் என்ன, பற்று என்ன என்று அவைகளை எல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

ஆனால் இன்றைக்கு யாரோ சிலர் தேவையில்லாமல் இத்தகைய இன மோதல்களை விஷமத்தனமாகக் கிளப்பி விட எண்ணுகிறார்கள் என்றால் இது எங்கே போய் முடியும் என்பதை தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழனுடைய உணர்ச்சியை தட்டிவிடுகிற விளையாட்டுத்தனம் வேண்டாம்

சிலை என்று அலட்சியப்படுத்தி விடுவதா? அலட்சியப்படுத்த முடியுமா? சிலைதானே என்று கேவலப்படுத்தி விடுவதா? அதனுடைய பொருள் என்ன? அதிலே அடங்கியிருக்கின்ற அர்த்தம் என்ன? அதிலே அடங்கிக் கிடக்கின்ற பண்பாடு எது?

அதிலே பூத்துக் குலுங்கு கின்ற கலாச்சாரம், அதனுடைய பழைமை, அதனுடைய பெருமை இவைகள் எல்லாம் என்ன? இவைகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தேவையில்லாமல் தமிழனுடைய உணர்ச்சியை தட்டி விடுகின்ற இந்த விளையாட்டுத்தனம் விகடனுக்கு வேண்டாம், விகடனைப் போன்றவர்களுக்கும் வேண்டாம் என்பதை என்னுடைய வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்.

அதிகாரத்திலே ஏதோ அமர்ந்துவிட்ட காரணத்தால்; கடந்த ஆட்சிக் காலத்தைப் போல ஆணவக் குரல் அல்ல. அடக்கமான குரல் தான், வேண்டுகோள் குரல் தான், ஏற்கனவே தமிழன் சீரழிந்து கிடக்கின்றான்.

தமிழன் ஏற்கனவே அழிந்து கிடக்கிறான். அவனை எழுப்பி விடுவதற்காக, அவனை வாழ வைப்பதற்காக நாங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு நீங்களும் கை கொடுங்கள் என்று எல்லோரையும் கேட்கின்ற நேரத்தில், நாங்கள் கை கொடுக்க மாட்டோம், கழுத்தறுப்போம் என்று யாராவது முன்வருவார்களேயானால் நாங்கள் கழுமரம் ஏறவும் தயாராக இருக்கிறோம், அதைத் தடுப்பதற்கு என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. தூங்கியது போதும் விழித்துக் கொள்வோம்

ஏனென்றால் அவ்வளவு பதைப்பு எனக்கு, நான் அதைப் படித்துவிட்டு உடனடியாக தம்பி வைரமுத்துவை தொலைபேசியில் கூப்பிட்டேன். படித்தீர்களா, வயிறு பற்றி எரிகின்ற அந்தக் கட்டுரையை என்று சொன்னேன். அவரும் என்னோடு சேர்ந்து வருத்தத்தைத்தான் பட முடியும், வேறென்ன செய்ய முடியும்? இந்த நிலையிலே தான் நாம் இழந்த ஒரு சுதந்திரத்தை, இழந்த ஒரு பெருமையை இன்றைக்கு மீட்டுக் கொண்டு வந்து இந்தக் கடற்கரையிலே, காமராஜர் சாலையிலே நிலைநாட்டியிருக்கின்றோம்.

நான் காலையில் எழுதிய ஒரு இசைப்பாடலை தம்பி சிவ சிதம்பரம் இங்கே பாடினார்.

எவ்வளவு நேரத்தில், எந்தச் சூழ்நிலையிலே எழுதினேன் தெரியுமா. குளித்துக் கொண்டிருந்தேன், குளித்து முடித்து விட்டு வெளியே வருவதற்குள்ளாகப் பெருங்கூட்டம் வந்து விட்டது எனக்கு மாலையணிவிக்க, வாழ்த்துக் கூற, மரியாதை செலுத்த என்று செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அலை அடிப்பது போல வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த நேரத்தில் வந்து, ஆடை உடுத்துவதற்குள்ளாக அவசர அவசரமாக நின்று கொண்டே வந்த நினைவுகளை எழுத்துக்களாக ஆக்கி, பத்து வரிகள் எழுதி, இதை சிவசிதம்பரத்திடம் கொடுத்துப் பாடச் சொல்லுங்கள் என்று சொன்னேன் என்றால், அதை நானா எழுதினேன், இல்லை. என்னைத் தட்டி எழுப்பிய தமிழ் எழுதியது. (கைதட்டல்) எனக்கு உணர்ச்சி ஊட்டிய பெரியார் எழுதியது.

எனக்கு ஆர்வம் ஊட்டிய அண்ணா எழுதியது.

"கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை, வளம் பெரிய தமிழ்நாட்டில், தமிழரல்லார் இனி வால் நீட்டினால்...’’ என்று எச்சரித்தாரே புரட்சிக் கவி பாரதிதாசன், அவருடைய பேனாமுனை எழுதியது, நான் எழுதவில்லை.

அதனால்தான் அந்தப் பாட்டில் அவ்வளவு உணர்ச்சியும், வீரமும் ததும்பியிருப்பதை நீங்கள் கேட்டீர்கள், கண்டீர்கள்.

இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம், நாம் தூங்கியது போதும், விழித்துக் கொள்வோம். விழித்திருக்கிறோம்.

இந்த விழிப்பு பூரணமான விழிப்பாக ஆகட்டும். இந்த விழிப்பு நம்மை வீரநடை போடச் செய்யட்டும். இந்த விழிப்பு நமக்கு விவேகத்தை ஊட்டட்டும். அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

ஏற்கனவே; இப்போது நடக்கின்ற போர், இரு பரம்பரைக்கிடையே நடக்கின்ற போர் என்று! அந்தப் பரம்பரையை அடையாளம் காணுங்கள். எது அந்தப் பரம்பரை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இறுதிப் போர் என்று சொல்லியிருக்கிறார்கள், இறுதிப் போர்தான்.

ஆனால் நாம்தான் வெல்வோம் என்கின்ற உறுதிப்போர் என்பதை நிலை நாட்டுங்கள் என்று கேட்டு கலைச் செல்வி கண்ணகியின் புகழ் வாழ்க, காவிய நாயகி கண்ணகியின் கீர்த்தி வாழ்க, நீதி கேட்ட மங்கை, நெடுஞ்செழியனையே தலைகுனிய வைத்த மங்கை, பூம்புகார்ச் செல்வி கண்ணகியின் புகழ் வாழ்க, வாழ்க என்று சொல்லி விடை பெறுகிறேன்.

கண்ணகி சிலை திறப்பு விழாவில் (3-6-2006) கலைஞர் ஆற்றிய உரை.

நன்றி: முரசொலி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com