Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

இனியும் ஏகலைவன் ஏமாறமாட்டான்

டி.ராஜா

இடஒதுக்கீட்டுப் பிரச்சினை சம்பந்தமாகத் தற்போது நடைபெற்று வரும் விவாதம், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் விளைவாய் தேவைப்பட்ட அரசியல் சாசன 93வது திருத்தத்திலிருந்து (விதி 15(5) தோன்றியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் இந்தத் திருத்தம் அநேகமாக ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்றம் சட்டமியற்றி விட்டதென்றால், பதவியிலுள்ள அரசு, அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதைத் தவிர, அதற்கு வேறு வழியில்லை. இந்தக் குறிப்பிட்ட சட்டம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசிக்கள் போன்ற உரிமைப் பறிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சமூக நீதி வழங்கும் பிரச்சினை சம்பந்தப்பட்டதாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக, மாணவர்களின் ஒரு பகுதியினரது, குறிப்பாக, மருத்துவ மாணவர்களின் ஒரு பகுதியினரது இந்தக் கிளர்ச்சி நியாயமற்றதாகும். அவர்களது ஐயப்பாடுகள் தவறானதும் ஆதாரமற்றதுமாகும்.

T.Raja 1915ம் ஆண்டில் மாபெரும் தீண்டப்படாதார் தலைவர் அய்யங்காளி (1863 -1941) - கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தலித்துகளின் விடுதலைக்காக இயக்கம் நடத்தியவர், ஊருட்டம்பலம் என்ற ஊரில் தீண்டப்படாத ஒரு புலையர் சிறுமியை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு அழைத்துச் சென்றார். அந்தச் சிறுமியைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படவே, அடிதடி சண்டை ஏற்பட்டது. அந்தப் புலைய சாதிச் சிறுமி பள்ளிக் கூடத்தில் நுழைவதைத் தடுப்பதற்காக, மேல் சாதியினர் அந்தப் பள்ளியையே நெருப்பு வைத்து எரித்துச் சாம்பலாக்கினர். அதே கால கட்டத்தில் கல்வி கற்ற மேல்சாதியினர், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் பள்ளிகளுக்குத் தீவைத்து எரிக்கும் இது போன்ற காரியங்களிலேயே ஈடுபட்டனர். இன்றைய மேல் சாதியினரும் இவர்களைவிட எந்த வகையிலும் மேம்பட்டவர்களாக இல்லை.

வாய்ப்புக் கிடைத்தால், இடஒதுக்கீட்டின் வாயிலாகக் கல்வி பெறுவதற்காக அத்தகைய கல்வி நிலையங்களில் யாரும் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, ஐஐடிக்கள், ஐஐஎம்கள், மற்றும் பிற மத்தியப் பல்கலைக் கழகங்களையும் அவர்கள் தீ வைத்துக் கொளுத்தி விடுவார்கள். நாடு சுதந்திர மடைந்த பின் முதல் இருபது ஆண்டுகளில், சூத்திரர்கள், இன்றைய பிற பிற்படுத்தப் பட்ட சாதிகள் (ஓ.பி.சி.க்கள்), பஞ்சமர்கள், தலித்துகள் முதலியவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள அந்த அறிவைத் தாங்கள் பெறுகின்ற இழிவான நிலை வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியிருப்பதை மேல் சாதியினர் உணர்ந்த போது அவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினருக்கென்று, தனியாகப் பள்ளிகளைக் கட்டுவதற்குத் தொடங்கினர். அவற்றில் எத்தகைய இடஒதுக்கீடும் செல்லு படியாகாது.

எண்பதாம் ஆண்டுகளிலும், அதற்குப் பின்னரும் உலகமய ஆரம்ப காலத்திலும் உலக மயத்தின் பிந்திய காலத்திலும் உயர்சாதி பொதுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வேலை தேடி சந்தையில் பிரவேசித்தபோது, அவர்கள் அப்படியே கபளீகரம் செய்து கொள்வதற்கு வேலைகள் அவர்களுக்காகக் காத்திருந்தன. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அப்பொழுது தகுதிக் குறைவானவர்கள் என்று கருதப்பட்டனர். ஆனால் ஒரு போதும் இவ்வாறு நேரடியாகக் கூறாமல், போலிக் காரணங்களும், புனை சுருட்டுகளும் கூறப்பட்டன.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தாராளமயம், தனியார் மயம் மற்றும் உலக மயத்தின் இரண்டாவது கட்டத்தின் தற்போதைய சூழலில், மேலும் துரதிருஷ்டவசமாக, ஏஐஎம்எஸ் பள்ளிகளின் மேல்தட்டு மாணவர்கள், தாங்கள் பெறப் போகும் சம்பளங்கள் சம்பந்த மான காரணங்களுக்காகவே பேசப்படும் (பத்திரிகைகளில் செய்தி வரும்) நிலைமையில், இந்தக் கல்வி நிலையங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்குவதென்ற முடிவு ஒரு பேரதிர்ச்சியாக அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது வியப்புக்குரியதல்ல. எனவே அடுத்த சில வாரங்களில் நடை பெறும் வாதபிரதி வாதங்களில், மண்டல் திட்டம் அமலாக்கப்பட்ட காலங்களில் நிகழ்ந்த அனைத்து மோசமான நடவடிக்கைளையும் நாம் எதிர் கொள்ள நேரும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான இரண்டு ரத யாத்திரைகளும் நடைபெறலாம்.

அடுத்த சில பத்தாண்டுகளில் என்ன ஏற்படும் என்று ஆரூடம் கூறுவதற்கு இப்பொழுது நமக்கு ஜோதிடர்கள் தேவையில்லை. வசதி படைத்த மேல்சாதியினர் புதிய வழிகளையும், வழிமுறைகளையும் உருவாக்கிக் கொள்வார்கள். ஐஐடிக்கள், ஐஐஎம்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களை ஒருவேளை தகுதியற்றவை என்று பழித்துக் கூறி, நாட்டில் ‘சிறந்தக் கல்வி நிலையங்களை' (தங்களுடைய சொந்த தகுதிகளின் அடிப்படையில்) உருவாக்கக் கூடும். தற்போதுள்ள சிறந்த கல்வி நிலையங்களெல்லாம் அந்நியப்பட்டங்களை வழங்கும் நிலையங்களாகக் கூடும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் எண்ணிக்கை பலம் ஐஐஎம்களிலும், ஐஐடிக்களிலும் அதிகமாக இருக்கும் என்று நாம் ஊகிக்கலாம். அப்பொழுது அவற்றை எரித்துச் சாம்பலாக்குவதற்கு வசதி படைத்த மேல் சாதியினர் விரைவில் திறமையான வழிகளைக் காணக்கூடும். ஆனால் இப் பொழுது, உயர் கல்வியை மேல்சாதியினரும் வசதி படைத்தவர்களும் தங்களுடைய ஏக போகமாக்கிக் கொள்வதற்குப் பெரிய இடையூறாக இருக்கப்போவது அரசியல் சாசனத்தின் 15(5)வது விதியாகும். அது சிறுபான்மையோரின் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது.

கருமான்கள், குயவர்கள், இடையர்கள், வெள்ளாடு வளர்ப்போர், சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள், கள் இறக்குவோர், தோட்ட வேலை செய்வோர், நெசவாளர்கள், துணி வெளுப்போர், முடிதிருத்துவோர், முதலியவர்களின் புதல்வர்களும் புதல்வி களும் ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎம்களின் புல்வெளிகளில் தமது யாராலும் முறியடிக்க முடியாத பாரம்பரியமான அறிவு மற்றும் நுட்பத் திறன்களுடன் மோதுவது நாட்டின் நகர்ப்புற வசதி படைத்தவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாததாகும். இது நிச்சயமாக மேல்தட்டுப் பகுதிகளுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தி, நாடு சீரழிந்து போகிறது என்று எண்ணும்படி செய்யும். பேரழிவு ஏற்படப் போகிறது என்று ஆரூடம் கூறுபவர்களாக அவர்களை ஆக்கி விடும். ஒரு சராசரி நகர்ப்புற மேல்சாதி வசதி படைத்தவர் வழக்கமான மண்டல் எதிர்ப்புக் கூற்றுக்களைக் கூறுவாரேயானால், அது வியப்புக்குரிய தாயிருக்காது. நாட்டுக்குப் பெரிய ஆபத்து ஏற்படப் போவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் ஐஐஎம்களிலும் ஐஐடிக்களிலும் பிரவேசிப்பதனால் அல்ல, மாறாக, தேசிய அறிவுக் கமிஷனிலுள்ள ‘புத்தி சாலிகள்' இடஒதுக்கீட்டுக்கும், பங்கு வீதங்களுக்கும் எதிராகக் குறிப்புக்களைத் தயாரித்து அவற்றைப் பகிரங்கமாகச் சுற்றுக்கு விடுவதும், பகிரங்கமாகக் கட்டுரைகள் எழுதுவதினாலும் தான் அந்த ஆபத்து ஏற்படும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய அறிவுக் கமிஷனில் அதனுடைய உறுப்பினர்களில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, மற்றவர்கள் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் சமத்துவ வாய்ப்புக்களை உருவாக்கும் எந்த முயற்சிகளையும் தடுத்து நிறுத்துவதாகத் தோன்றுகிறது. அறிவுக் கமிஷனின் இந்த உறுப்பினர்கள் சில குறிப்புகளைத் தயாரித்து ரகசியமாகச் சுற்றுக்கு விட்டுள்ளனர். (அவற்றில் சில குறிப்புகள் என் கைக்கும் கிடைத்துள்ளது) அவை, இடஒதுக்கீடு எதிர்ப்புப் பிரசுரங்களைக் காட்டிலும் மிக மிகத் தீங்கான வஞ்சகத் தன்மை வாய்ந்ததாக உள்ளன. இந்த உறுப்பினர்கள் ஒரு வேளை பழைய அதே மனுஸ்மிருதிகளை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள் போலும். மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் கீழ்ச்சாதியினரும் அறிவு பெறுவதினின்றும் தடை செய்யப்பட்டுள்ளது. சில சமயங்களில் மண்டல் காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதப்பட்ட 15 ஆண்டு பழமையான பிரசுரத்தைப் படிப்பது போல் தோன்றுகிறது. இந்தத் தடவை தேசிய அறிவுக் கமிஷனின் பெருமதிப்பு வாய்ந்த உறுப்பினரால் (உறுப்பினர்களால்) அவை எழுதப்பட்டுள்ளன.

சட்டப்பூர்வமாகப் பேசுவதெனில், மேல்சாதி வசதிபடைத்தவர்கள், 1951ல் முதலாவது அரசியல் சாசனத் திருத்தத்தினால் 15(4) விதி உருவாக்கப்பட்டதிலிருந்து பொதுக் கோட்டாவில் 77.5 சதவீத ஒதுக்கீட்டை அனுபவிப்பதற்கு அனுமதித்ததற்காக மத்திய அரசுக்குத் தான் (அவர்கள்) நன்றி சொல்ல வேண்டும்.

இந்த விதியை, அரசியல் சாசனத்தின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் உருவாக்கினார், வேறு யாருமல்ல. இந்த விதி, சமூக ரீதியிலும் கல்வித் துறையிலும் பின்தங்கியுள்ள எந்த வகைப்பட்ட பிரஜைகளின் (பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர்) மற்றும் ஷெட்யூல்ட் சாதியினர், ஷெட்யூல்ட் பழங்குடியினருக்கும் கூடத் தான் முன்னேற்றத்திற்குச் சிறப்பு விதிகளை உருவாக்குவதற்கு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் அதிகாரமளிக்கிறது. இனாம்தார் தீர்ப்பைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 104வது அரசியல் சாசனத் திருத்தம் ஒரு படி முன்னே சென்று, இன்றைய உலக மயமாக்கப்பட்ட கம்பெனி நிர்வாகங்களுக்கு ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வசதி படைத்த ஊழியர்கள் அளித்துள்ள அந்த அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடுகளுக்கு ஐயத்திற்கிடமின்றி வெளிப்படையாக வகை செய்துள்ளது.

ஐஐடிக்களிலும், ஐஐஎம் களிலும் அறிவிக்கப்படாத 77.5 இடஒதுக்கீட்டை கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக மேல்சாதியினர் அனுபவித்து வந்ததை குறைப்பதானது உண்மையில் அவர்களிடையில் ஓரளவு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2006 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை நீண்ட காலத்திற்கு முன்பே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள், சமாதான காலத்தில், அனைத்து வகைப்பட்ட இட ஒதுக்கீடுகளும் அகற்றப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்பொழுது, பிற பிற் படுத்தப்பட்ட சாதியினருக்கு (ஓபிசிக்கள்) ஒதுக்கீடுகள் வழங்கும் பிரச்சினை பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில், எஸ்சி, மற்றும் எஸ்டிக்களுக்கு இடஒதுக்கீட்டின் தேவையை நியாயப்படுத்தும் அவர்கள் ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்கள் நாடு முழுமையின் எதிர் காலத்தை, சமுதாயத்தின் எதிர் காலத்தை, மற்றும் வருங்காலத்தின் எதிர் காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், இன்னும் நாம் கல்வி பெறுவதில் சமத்துவ வாய்ப்பு அளிக்கும் பிரச்சினையில் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளோம். ஐஐடிக்கள், ஐஐஎம்கள் மற்றும் மத்திய அரசின் கீழுள்ள சிறந்த கல்வி நிலையங்கள் ஆகியயாவும் தங்களுடைய பரம்பரைச் சொத்து என்ற வகையில் மேல்சாதி வசதி படைத்தவர்கள் நடந்து வருகின்றனர். நம்முடைய ஐஐஎம்கள் தமது கிளைகளைச் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் நிறுவுகின்றனவென்றால், அவை சிங்கப்பூரின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளையும் அமெரிக்காவின் அதுபோன்ற கொள்கைகளையும் நிச்சயம் அமலாக்கக் கடமைப்பட்டவை. பழைய இடஒதுக்கீட்டு எதிர்ப்பு மனோபாவத்தின் மிச்ச சொச்சங்கள் வெளிப்பட்டால், இந்தியாவைக் காட்டிலும் கூடுதலாக அங்கு அவர்களுக்குச் சிரமம் ஏற்படும்.

மேல்சாதியினர் பண்டைக் காலத்தில் மற்றவர்கள் அறிவு பெறுவதை மறுத்து வந்ததிலிருந்து, இன்றைய தேசிய அறிவுக் கமிஷன் உறுப்பினர்கள் வரையில், அதே வாதத்தையே கூறி வருகின்றனர். அதற்குப் பின்னர் நாட்டில் பெரிய மாற் றம் எதுவும் ஏற்படவில்லை. ஓபிசிக்களுக்கு இடஒதுக் கீட்டை எதிர்ப்பவர்கள், நாட் டின் ஒழுங்கமைந்த சமூக அரசு மட்டுமே கடந்த காலம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளது என்பதையும், சமூக ரீதியிலும் கல்வித் துறையிலும் பின்தங்கியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை, மற்றும் ஒதுக்கப்பட்டு வந்திருப்பவர்கள் உயர்கல்வி பெறுவதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

தீக்குளிப்பதோ, தற்கொலை புரிந்து கொள்வதோ, ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சார இயக்கங்கள் நடத்துவதோ, வழக்கமான தகுதி பற்றிய கோட்பாடுகளோ நாட்டின் சமுதாயம், நமது அரசியல் சாசனத்தின் முகவுரையில் பொறிக்கப்பட்டுள்ள அந்த லட்சியங்களை எய்துவதைத் தடுத்து நிறுத்தி விட முடியாது.

நியூஏஜ்
(தமிழில்: வி.ராதாகிருஷ்ணன்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com