Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2006

பகுத்தறிவாளர் வேடத்தில் பகைவர் கூட்டம்

ஆனாரூனா

தலைநகருக்குப் பெருமை சூட்டிய கண்ணகி சிலை அகற்றப்பட்டதில், பகைவர்க்கு மகிழ்ச்சி. தமிழினத்துக்கோ அதிர்ச்சி!

Duraimurugan, Karunanidhi and Anbazhagan இங்கே என்ன நடக்கிறது? கண்ணகியின் குரலே எதிரொலித்தது. “இங்கே சான்றோர்கள் இல்லையா? மாண்புசால் மாதரார் இல்லையா?’’ சான்றோர்கள் துடித்தார்கள். புலவோர் பதறினார்கள். கலைஞரின் நெஞ்சில் ஒரு முள் பாய்ந்தது. அன்றே தமிழகம் சூளுரைத்தது.

“ஆட்சி மாறும். கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் அதே நிலையில் நிறுவப்படும்!’’ தேர்தலுக்கு முன் கலைஞர் அதை அரசியல் பிரகடனமாகவே அறிவித்தார். அறிவித்தபடியே அவரது 83 ஆம் பிறந்த நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக, மறுபடியும் கண்ணகி எழுந்தாள்! மீண்டது தமிழர் மானம். ஆனால், வஞ்சகக் கூட்டம் கண்ணகி சிலை குறித்து மறுபடியும் வக்கணை செய்தது.

ஆனந்த விகடனில் சங்கரன் (ஞாநி) என்பவர் எழுதிய எழுத்துக்கள் தமிழரின் மானத்துக்கும், வீரத்துக்கும் அறைகூவலாகும். சிலையைத் திறந்து வைத்து கலைஞர் ஆற்றிய உரையில் அந்தக் கயமை குறித்து தமிழினத்தின் மனக் குமுறலை வெளியிட்டார். ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையிலே கண்ணகி சிலையைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால், நான் இதை யாரையும் தூண்டி விடுவதற்காகப் பேசவில்லை, தூங்கிக் கொண்டிருக்கின்ற உணர்ச்சிகளை லேசாகத் தட்டி எழுப்புவதற்காகத்தான் பேசுகிறேன். தட்டி எழுப்பினாலும் கூட விழிக்க முடியாமல் தமிழன் கிடக்கிறானே என்ற வேதனை யில் தான் இதைக் கூறுகிறேன். என்ன கண்ணகி சிலை? என்று சிலையை கேலிக்குரியதாக ஆக்கி, அந்தக் கட்டுரையை முடிக்கும்போது ஆனந்தவிகடன் கட்டுரையில் தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையின் கையிலே இருக்கின்ற கரடி பொம்மைக்கும் இந்தக் கண்ணகி சிலைக்கும் என்ன வித்தியாசம் என்று ஆனந்த விகடன் தன் கட்டுரையை முடித்திருக்கிறது என்றால், தமிழா, நீ இன்னும் தமிழ் நாட்டில் உயிரோடுதான் இருக்கிறாயா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

இந்தக் கேள்வியை நான் கேட்கின்ற காரணத்தால் என்னுடைய ஆட்சி செங்கோல் பறிக்கப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை. தமிழன் மானத்தோடு வாழ்ந்தான், மானத்தோடே சாகட்டும், சாகவேண்டும். மானம் இல்லாமல், மானத்தை இழந்து விட்டு ஒரு தமிழன் செத்துவிட்டால், என்ன மிச்சமாகத் தங்கும்? அந்த மானத்தைத் தமிழன் இழக்க வேண்டும். அதை இழப்பான் என்கிற தைரியம் ஆனந்த விகடன் போன்ற ‘அவாள்’ பத்திரிகைகளுக்கு இருக்கின்ற காரணத்தால் கண்ணகி சிலை கரடி பொம்மையாம் - எழுதுகிறது மனதைப் புண்படுத்தும் கேலியாக!’’

கலைஞர் இவ்வாறு உருக்கத்துடனும், தவிப்புடனும், தாங்க முடியாத அறச் சீற்றத்துடனும், பேசுமளவுக்கு அவருடைய இதயத்தைப் புண்படுத்தியிருக்கிறது, கண்ணகி பற்றி அக்கிரகாரத்து வக்கிரமொன்று எழுதிய விமர்சனம்.

விகடனில் கண்ணகி (சிலை) பற்றி சங்கரன் எழுதிய விமர்சனம் வருமாறு:

“உணர்ச்சி வசப்படாமல் பார்த்தால் கண்ணகியின் சிறப்புக்களாகக் கூறப்படும் இரண்டும் சிறப்புக்களே அல்ல என்பது என் உறுதியான கருத்து. கற்புக்கரசி நீதிகேட்டு அரசனோடு போராடியவள் - என்கிற இரண்டிலும் பசை இல்லை. வேறு பெண்களை நாடிப் போய்விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அது வரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்று கற்பிக்கப்படும் என்றால் அதை ஏற்பதற்கில்லை. அது, கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒரு தலைக் கற்பு...

அடுத்து அரசனுக்கெதிராகக் கண்ணகி போராடிய விஷயம். தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதிகேட்டுப் போராடிய பேதமைத் தனம் அது. கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயலும்கூட, எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமைதான்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இன்றைய கால கட்டத்தில் ஏராளமான சோதனைகளுடன் பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ள பெண்களுக்கு, கண்ணகியை முன்னுதாரணம் காட்டுவது எப்படிச் சரியாகும்? சில குழந்தைகள் பெரியவர்களான பிறகும்கூட, தூங்கும்போது ஒரு பழைய ‘டெடிபேர்’ கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்!’’

இந்த விமர்சனத்தைப் படிக்கும் ஒரு சராசரி வாசகர், “நிச்சயமாக இதை எழுதியவர் ஒரு புரட்சி எழுத்தாளரேதான். பகுத்தறிவுக் கருத்துக்களை எத்தனை எளிமையாகப் புரிய வைக்கிறார்” என்று வியப்புறவே செய்வார். உண்மையில் இந்தக் கருத்துக்களெல்லாம் இவருடைய சொந்த மண்டையில் சுயமாய் மலர்ந்தவையல்ல.

அறுபது ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாராலும், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களே இவை. திராவிட இயக்கமும், பகுத்தறிவாளர்களும் பார்ப்பனியப் புராண இதிகாசங்களை மாத்திரமல்ல, தமிழ் இலக்கியங்களில் பார்ப்பனர் புகுத்திய மூடநம்பிக்கைகளையும் அறிவுக்கொணாத கருத்துக்களையும் அம்பலப்படுத்தி, “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்!’’ என்று அறிவியக்கம் நடத்தியவர்கள்தான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் மற்றுமுள திராவிட இயக்க எழுத்தாளர்களும்.

அறிவியல் தளத்தில் திராவிட இயக்கம் ஏற்று வித்ததகத்தகாயமான சிந்தனைச் சுடரொளியைப் பார்க்கக் கூசி, இருட்டில் மறைந்தவர்களும், குருட்டு நம்பிக்கைகளில் பதுங்கிக் கொண்டவர்களும், புதிய சிந்தனைகளைப் புழுதி வாரித் தூற்றியவர்களும், அவர்தம் வாரிசாய் வந்தவர்களும்தான், இன்று பகுத்தறிவாளர் வேடத்தில் வந்து பழகிய வசனங்களை முடிந்த வரை உளறுகிறார்கள்.இது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமா? அனுபவங்கள் கற்பித்த பாடமா? இல்லை; இல்லவே இல்லை. கடைந்தெடுத்த பார்ப்பனியக் குசும்பு. “சிலப்பதிகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று தஞ்சையில் பத்திரிகையாளர்கள் பெரியாரிடம் கேட்டார்கள்.

தயக்கம் சிறிதுமின்றி, “ஒழுக்கக் கேட்டில் தொடங்கி, முட்டாள்த்தனத்தில் முடிவடைகிறது!’’ என்றார்
.
பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தை இவ்வளவு கடுமையாக இதுவரை எவரும் விமர்சித்ததில்லை. சிலப்பதிகாரத்தை மாத்திரமல்ல, திருக்குறளையும்கூட தந்தை பெரியார் விமர்சித்தார். பெரியாரின் விமர்சனத்துக்கும் விளக்கத்துக்கும் பின்னே இருந்தது, ‘மானமும் அறிவும் உள்ள இனமாய்த் தமிழர்கள் உயர்வு பெறவேண்டுமே!’ என்கிற தாய்மையின் தவிப்பு.

ஆனால், அக்கிரகாரத்து வக்கிரங்கள் இன்று பகுத்தறிவு பேசுவது, அறிவின் மீது கொண்ட அளப்பரிய ஆர்வக் கிளர்ச்சியால் அல்ல. தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்! தொடரும் ‘பரம்பரை யுத்தத்தின்’ வன்மத்தீயிது! “கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயலும்கூட எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமை தான்’’ என்று விமர்சிக்கும் எழுத்தாளர், பகுத்தறிவாளர்களின் மிக முக்கியமான கேள்வியை மட்டும் வசதியாக மறந்து விடுகிறார்.

மதுரையே தீப்பற்றி எரிந்து அப்பாவி மக்களெல்லாம் கதறிப் புலம்பி வெந்து கருகும் வேளையில் பூதங்கள் வந்து பார்ப்பனர்களைக் காத்தனவாமே அது எப்படி? கடவுள் இல்லை. ஆன்மா இல்லை, மறுஜென்மம் இல்லை என்று அறிவுச்சுடர் ஏற்றிய புத்தனைச் சார்ந்த இளங்கோவடிகள் இம்மாதிரியான பார்ப்பனியக் கருத்துக்களைத் தமது காவியத்தில் வடிப்பாரா? பகுத்தறிவாளர்கள் கேட்டார்களே!

புத்த நெறியில் நிற்கும் இளங்கோவடிகளின் காப்பியத்தில் பார்ப்பனியப் பண்பாடுகளும், வழிபாடுகளும், பூதக்கதைகளும், ஊழ்வினைக் கோட்பாடுகளும் புகுந்தது எப்படி? கேட்டார்களே பெரியார் பிள்ளைகள்!

சிந்திக்கப் பழகிய அறிஞர்களும் ஆய்வாளர்களும் தந்த பதில் இதுதான். சிலப்பதிகாரத்தில் சீர்மிகு எத்தனையோ கருத்துக்கள் எடுத்தெறியப்பட்டு விட்டன. பார்ப்பனியக் கழிசடைகள் எவ்வளவோ திணிக்கப் பட்டிருக்கின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் சிலப்பதிகாரம் முற்றிலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டதல்ல. ஆகவே சிலப்பதிகாரத்தின் மீதான விமர்சனத்துக்கும், குற்றச் சாற்றுக்கும் உள்ளான கருத்துகளுக்கு பார்ப்பனப் புரட்டர்களே பொறுப்பாவார்கள்.

இப்போதுள்ள சிலப்பதிகாரச் செய்திகளின் அடிப்படையில்கூட கண்ணகியைப் பாராட்டும் தமிழர்கள் யாரும் கோவலனைப் பாராட்டுவதில்லை.

“வேறு பெண்ணை நாடிப் போய்விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அது வரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்று கற்பிக்கப்படுமானால் அதை ஏற்பதற்கில்லை. அது கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒருதலைக் கற்பு என்று சாடுகிறார் சங்கரனார்.

அவர் பார்வையில் பெண் என்பவள் கண்டிப்பு மிகுந்த நீதி தேவதையாக இருக்க வேண்டும். அன்பு, கருணை, மன்னிப்பு என்கிற மாய விலங்குகளால் கட்டுண்டு பெண்ணினம் வெகு காலம் தேம்பி அழுதாகி விட்டது. தவறு செய்யும் எந்த ஆணும் தீர்த்துக் கட்டப்படவேண்டும். கண்ணகி மெச்சத் தகுந்த பெண் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? கோவலன் மாதவியிடம் செல்லப் புறப்பட்ட அந்த நிமிடமே கோடரி ஏந்தி அவன் தலையைத் துண்டாடியிருக்க வேண்டும். அல்லது உனக்கு ஒரு மாதவி என்றால் எனக்கு ஒரு மாதவன் என்று மற்றொரு ஆடவனை இழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால், கண்ணகி? பேதைமை நிறைந்தவள். பாமரத்தனமானவள். அசட்டுத் தனமும் அடிமைத்தனமும் கொண்ட ஒரு அற்பப் பெண்ணை எப்படிப் புகழ்வது? பெண்களிடம் அவருக்குப் பிடிக்காத குணம், மன்னித்து அருளல்! சங்கரனாரின் சங்கடம் புரிகிறது.

ஆனால் அன்பு, கருணை, மன்னித்து அருளல் என்கிற இந்தப் பண்புகளால்தான் உலகில் இன்னும் உயிரினங்கள் வாழ முடிகிறது. தனிச் சொத்துரிமையின் முதல் தாக்குதல் பெண்மீதே தொடங்கியது என்றபோதிலும் பெண்ணுள்ளம் இன்னும் கருணையுள்ளதாகவே இருக்கிறது. பெண்ணினத்துக்கு ஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட போதிலும் அன்னையரின் மடிதான் மனிதர்க்கு அமைதியும் பாதுகாப்பும் தரும் இடமாக இருக்கிறது. இது பெண்ணின் பலவீனமா? மகத்துவமா?

பெண் அடிமைத்தனத்திலிருந்து சகல அடிமைத் தனங்களுக்கும் எதிரானவர் கார்ல் மார்க்ஸ். அவரிடம் “பெண்களிடம் உங்களுக்குப் பிடித்தது?’’ என்று கேட்கப்பட்டபோது அவர் சட்டென்று பதில் சொன்னார்: “அவர்களுடைய பலவீனம்!’’ இது ஆணாதிக்க மனோ பாவமுள்ள ஒரு முரடனின் பதிலா? இல்லை. சிந்திக்கச் சிந்திக்க அந்தப் பதிலின் அருமையும் பெருமையும் விளங்கும்.

Kannagi வாழ்வின் எந்த நிலையிலும் பிரிய மனமில்லாத இரு தோழிகள் திருமணம்கூடத் தங்களைப் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரே ஆடவனைத் திருமணம் செய்து கொள்வது என்று உறுதியோடு இருந்தார்கள். அவர்கள் விரும்பியவாறே அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார் தந்தை பெரியார். இது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடா?

குடும்ப உறவு என்பதும், காதல் என்பதும், திருமணம் என்பதும் உடல் தழுவிப் புணரும் ஒற்றை அம்சத்தில் இல்லை. பகுத்தறிவாளர்கள்கூடக் கண்ணகியைத் தமிழரின் பண்பாட்டுச் சின்னமாகக் கருதுவதற்குக் காரணம் அவள் ‘கற்புக்கரசி’ என்பதற்காக அல்ல. ஆண்களாகிய நாங்கள் எத்தனை மாதருடன் கூடித் திரிந்தாலும் பெண்கள் ‘கற்பரசிகளாக’ விளங்க வேண்டும் என்கிற நிலப் பிரபுத்துவ அகம்பாவத்தை உறுதிப்படுத்துவதற்காக அல்ல.

கற்பு என்பது சிலை வைத்துப் போற்றும் அளவுக்கு இங்கே அரிதானதும் அல்ல! அப்படியானால், கண் ணகிக்குச் சிலை ஏன்?

மானுடம் இன்னும் அன்புக்காகவும், கருணைக்காகவும் ஏங்குகிறது. புகலற்ற இதயம் ஒரு பாதுகாப்பரண் தேடித் தவிக்கிறது என்பதே அதன் பொருள். சங்கரனாரின் மற்றொரு கோபம்: ‘மாதவியிடம் மயங்கிக் கிடந்த கோவலனை மறுபடியும் கண்ணகி எப்படி ஏற்கலாம்? ‘முதல் நோக்கில் இது சத்திய ஆவேசம் என்று தோன்றும். அப்படித்தானா?

கோவலன் ஒரு சபலம் கொண்ட சராசரி மனிதன். கோவலன் போல் வாழ வேண்டும் என்று யாரும் போதிப்பதும் இல்லை; ஆசைப்படுவதும் இல்லை. ஆனால், கோவலனுடைய சபலத்தையே தாங்கிக் கொள்ள முடியாத சங்கரன் மார்களில் - அக்கிரகாரத்து அறிவு ஜீவிகளில் எத்தனை பேர் கிருஷ்ணனை, சிவனை விமர்சித்திருக்கிறார்கள்?

கோபியர் பலரோடு கொஞ்சி, ‘ஒழுக்கக்கேடு’ என்பதற்கு உதாரண புருஷனாய்த் திரிந்த கண்ணனைக் கடவுளாய் வழிபடுவது எப்படி? பெண்களை மாத்திர மல்ல ஆண்களையும் மிருகங்களையும்கூடப் புணர்ந்து கிடந்த பலர் கடவுள்களாகவும் மாமுனிவர்களாகவும் போற்றப்படுவது எப்படி?

பார்ப்பனர் போற்றும் கடவுள்களில் ஒரே ஒரு யோக்கியனாவது உண்டா? இந்தக் கேடுகெட்ட பாத்திரங்களைக் கண்டிப்பு மிகுந்த எந்தத் தீர்ப்பாளரும் விமர்சித்ததில்லையே! காதலிலும் உண்மையற்றவனாய், போரிலும் உண்மையற்றவனாய், பிறப்பிலேகூட இயற்கைக்குப் புறம்பாய் விளங்கிய ராமனுக்குக் கோயில் கட்டியே தீருவோம் என்று ஒரு காவிக் கூட்டம் பயங்கரவாதத்தைத் தூண்டி இந்திய அமைதிக்கும், நல்லுறவுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்போது,

கோயில் கட்டிக் கும்பிடும் அளவுக்கு ராமன் என்ன புனிதனா? என்று எவரும் கேட்கவில்லை. ராமனுக்கு, கண்ணனுக்கு விஷ்ணு அவதாரங்களுக்குச் சம்மேளனம். கோவலனுக்கு மாத்திரம் ஏளனம்! ஏன் இந்த வேறுபாடு?

“சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய ‘டெடிபேர்’ கரடி பொம்மையை வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி சிலை அப்படித் தான்!’’ என்று சங்கரன்களால் கிண்டல் செய்ய முடிகிறது. இந்தப் பட்டியலில், ருக்மணி, பார்வதி, ஆண்டாள் என்று எத்தனையோ பொம்மைகள் உண்டு. அவை ஏன் முன்னிறுத்தப்படவில்லை? ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின், இனத்தின் முத்திரை குத்தப்பட்டே இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகவே இங்கே ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ‘பரம்பரை யுத்தம்’ என்று பார்ப்பனியப் பயங்கரவாதம் அதையே குறிப்பிட்டது. யுத்த காலத்தில் - போராட்டச் சூழலில் - ஒவ்வொரு எழுத்தாளனும் சார்புள்ளவனே. நீதிக்கும் அநீதிக்குமான போரில் நடுநிலை என்றால் உலகம் சிரிக்கும். கீதாசிரியன் கூட ‘படுகளத்தில் ஒப்பாரி ஏன்?’ என்றுதானே கேட்டான். ‘சங்கரா, நீ யார்? எந்தப் பக்கத்தில் நிற்கிறாய்?’ என்று பரந்தாமனே கேட்பான்.

நிச்சயமாய் விகடன் எழுத்தாளர் சங்கரன் பார்ப்பனியத்தின் பாதுகாவலரே! “போப்பாண்டவர் புரட்சிக்காரனாக முடியாது. புரட்சியாளன் போப்பாண்டவராக முடியாது’’ என்பார்கள் ஐரோப்பிய முற்போக்குச் சிந்தனையாளர்கள். இந்தியச் சூழலில், பார்ப்பனியன் பகுத்தறிவாளனாக முடியாது. பகுத்தறிவாளன் பார்ப்பனியனாக முடியாது என்று சொல்லலாம்.

எத்தனைதான் முயன்றாலும் பகுத்தறிவாளர் ஒப்பனை சங்கரனுக்கு ஒட்டவில்லை. இதை அவர் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் உண்மையே! “ஜெயலலிதா ஆட்சியின் போது கண்ணகி சிலை அங்கிருந்து காணாமல் போனது ஏன் என்பது, எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் கருணாநிதி ஏன் மஞ்சள் சால்வையை அகற்றுவதில்லை என்கிற மர்மத்துக்கு நிகரானது. இரண்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என் றெல்லாம் ஊகிக்கலாமே தவிர புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது’’ என்றும் அந்தக் கட்டுரையில் எழுதுகிறார் சங்கரன்.

இதன் மூலம் இருவரையுமே விமர்சித்து, தனது நடுநிலையாளர் பாத்திரத்தை உறுதி செய்கிறாராம். உண்மையில், கலைஞரும் ஒரு மூட நம்பிக்கையாளர் என்று சித்திரிப்பதுதான் அவர் நோக்கம்.

கலைஞருக்கு சால்வையிலே மஞ்சள் நிறம் பிடிக்கும். சட்டையிலே வெள்ளை நிறம் பிடிக்கும். கொடியிலே கறுப்பு சிவப்பு பிடிக்கும். கொள்கையிலே பெரியாரும் மார்க்சும் பிடிக்கும். இது தெரிந்ததுதான். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவர் அவராகத்தான் இருப்பார். இதைத்தான் இந்து முன்னணி இராமகோபாலன் ‘கருணாநிதியைத் திருத்தவே முடியாது’ என்றார். இதிலே மர்மமும் இல்லை; புதிர் முடிச்சும் இல்லை.

கலைஞரின் சொற்களிலேயே புரிந்து கொள்வதானால், அவர் அரசியலில் இலட்சியத்தில் ‘பெரியாரின் கரம் பற்றி நடந்தவர்.’ ‘பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பார்.’ அதனாலென்ன? “உண்மை யான கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று அறிஞர் அண்ணாவே சொல்லி விட்டதால், தி.மு.க. தலைவராக இருந்தாலும் கலைஞர் விரும்பியவாறு அவர் ஒரு கம்யூனி°ட்டே!

இதிலே கலைஞர் யார் என்று தெரியும். அது மாதிரியே, “நான் பாப்பாத்தி தான்... நடப்பது பரம்பரை யுத்தம். இந்தத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. இருக்காது’’ என்றும் எதிர்தரப்பில் சுய விமர்சனம் தரப்பட்டது. ஆகவே இருதரப்பிலும் மர்மமோ, புதிர் முடிச்சோ இல்லை.

கலைஞர் சார்ந்த திராவிட இயக்க எதிர்ப்பாளரான சங்கரன் தன்னைப் பார்ப்பனியச் சிந்தனையாளன் அல்ல; பகுத்தறிவாளன் தான் என்று காட்ட நினைத்தால், ‘பரம்பரை யுத்தம்’ என்று பிரகடனம் செய்யப்பட்டபோது அதைக் கண்டித்திருக்க வேண்டும்.

கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது அதைக் கண்டித்திருக்க வேண்டும். மறுபடியும் கண்ணகிக்குச் சிலை வைக்கும்போது பாராட்டியிருக்க வேண்டும். அவ்வாறு சங்கரன் செய்யவில்லை. காரணம் அவர் பகுத்தறிவுவாதி என்பதால் அல்ல. பார்ப்பனியத்தின் பிரதிநிதி என்பதால். உண்மையில் சங்கரன்மார்களுக்கு கண்ணகி சிலை மீது ஏன் இத்தனை வன்மம்?

கண்ணகி சிலை உருவான மூல வரலாற்றில் இதற்கு விடையுண்டு. தமிழினத்தை இகழ்ந்து பேசிய கனக-விசயர் எனும் பார்ப்பன அரசர்களின் ஆணவம் அடக்கி, அவர்கள் தலையிலே கல் ஏற்றிவந்து, அந்தக் கல்லாலேயே கண்ணகிக்குச் சிலை எடுத்தான் சேரமான் செங்குட்டுவன். சரியாகச் சொல்வதானால், தமிழினம் பார்ப்பன ஆணவத்தை அடக்கிய வரலாற்று - அரசியல் முத்திரைதான் கண்ணகி சிலை.

பார்ப்பனியப் பாலில் வளர்ந்த யாருக்கும் கண்ணகி சிலையைப் பார்க்கும் போதெல்லாம் தமது இனத்துக்கு ஏற்பட்ட அவமானமே உறுத்தும். பார்ப்பனர் கல் சுமந்து அவமானப்பட்ட வரலாறு இருக்கலாமா? அந்த வரலாற்று - அரசியல் முத்திரை, கண்ணகி சிலை. அதனால்தான் அகற்றப்பட்டது. கண்ணகி சிலை அகற்றப்பட்டது தமிழினத்துக்கு அவமானம் அல்லவா?

துடித்தார் கலைஞர். பார்ப்பனியக் கொடுக்கை முறித்தார். கண்ணகி சிலையை - பார்ப்பனிய ஆணவத்தின் மீது தமிழின வெற்றியின் சின்னமாம் - வரலாற்று அரசியல் முத்திரையை - மறுபடியும் வைத்தார்.

இதைத் தாங்குமா சங்கரன்மார் கூட்டம்? பகுத்தறிவு வேடத்தில் பார்ப்பனியம் விஷம் கக்கி விட்டது. கரடி பொம்மைக்கும் கண்ணகி சிலைக்கும் வித்தியாசம் கிடையாதென்று. இது தமிழர்களின் மான உணர்ச்சியுடன் மோதிப் பார்க்கும் விபரீத விளையாட்டு.

நாம் மறுபடியும் சொல்கிறோம்: கண்ணகி சிலை சிலருக்குக் கரடி பொம்மையாகத் தெரியலாம். சிலருக்கு கற்புக்கு அடையாளம் என்று தோன்றலாம். சிலருக்கு அறம் சார்ந்த அரசியலை உணர்த்தும் அடையாளமாகப் புரியலாம். இந்த விளக்கங்களுக்கும் புரிதல்களுக்கும் அப்பால் உள்ள அரசியல் பிரகடனமே முக்கியமானது. தமிழர்கள் பார்ப்பனியத்தை - பாசிசத்தை - அனுமதிக்க மாட்டார்கள் என்கிற சேரன் செங்குட்டுவனின் அறிவிப்பே அது!

பார்ப்பனியம் என்பது பாசிசத்தின் மூலவித்து. அது இரத்த வெறி கொண்டது. ஆனால், அது பார்ப்பனர்களைக் காப்பாற்றாது என்பதைப் பகுத்தறிவு வேடதாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com