Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

நாட்டுப்புறக் கலைகளுக்கு தஞ்சைப் பெரிய கோயிலில் தடை
செல்வத்தமிழன்

உலக மரபுச் சின்னமாக யுனெஸ்கோவால் ஏற்பளிக்கப்ட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெரிய கோயில், கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கோவிலின் அழகைக் கண்டுகளிக்கவும், அங்குள்ள அரிய சிற்பங்களைக் காணவும் நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் தென்னகப் பண்பாட்டு நடுவம் சார்பாக மாதம் இரு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளைக் காப்பாற்றவும், கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், தென்னகப் பண்பாட்டு நடுவம் தொடங்கப்பட்டது.

தஞ்சைப் பெரிய கோவில் நந்தி மண்டபம் முன்பு அமைந்துள்ள நாட்டிய மேடையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த, அரண்மனைக் கோயில் நிருவாகம் இசைவளிக்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மிருதங்கம் போன்ற கருநாடக இசை நிகழ்ச்சிகள் நடத்த மட்டுமே இசைவளிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நாட்டிய மேடையில் நடத்தினால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 15 ஆண்டுகளாக நாட்டிய மேடையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் நாட்டிய மேடையில் தென்னகப் பண்பாட்டு நடுவம் சார்பாக ஏன் இதுவரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை எனத் தென்னகப் பண்பாட்டு நடுவ இயக்குநர் கிரிதரனிடம் கேட்டபோது, பெரிய கோயிலில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அரண்மனைக் கோயில் நிருவாகம், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது, கருநாடக இசை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த முற்பட்டபோது, அரண்மனைக் கோவில் நிருவாகம் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கோயிலின் உள்ளே நிகழ்ச்சி நடத்த இசைவளித்தால், கோவிலைக் களங்கப்படுத்திவிடுவார்கள் எனக் கூறியதால் இன்று வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தாமல் இருக்கிறோம் என்றும் கிரிதரன் கூறினார்.

தென்னகப் பண்பாட்டு நடுவம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தயாராக இருக்கும்போது, நீங்கள் ஏன் தடை விதிக்கிறீர்கள் என இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கோவிந்தராமனிடம் கேட்டபோது, நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆடை குறைவாக அணிந்து அருவருப்பாக ஆடுவார்கள் என, நாட்டுப்புறக் கலைஞர்களை மட்டம்தட்டும் விதமாகப் பேசினார்.

தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் சங்கச் செயலாளர் இராசேந்திரன், தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஆனால், இதுவரை தஞ்சைப் பெரிய கோயில் நாட்டிய மேடையில் நிகழ்ச்சிகள் நடத்தியதில்லை. இது எங்கள் கலைஞர்களிடம் ஒரு மனக்குறையாகவே உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலாளர் காளியப்பனிடம் கருத்துக் கேட்டபோது, பெரிய கோயில் நிருவாகம் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது எனத் தடை விதிப்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரான தீண்டாமைக் குற்றமாகும். அரசின் நிருவாக அமைப்புகளே மக்களின் கலைகளை மதியாமலிருப்பது தமிழ் இனத்தையே மதியாத செயலாகும் என்று குற்றம் சாட்டினார்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மணியரசன் கூறுகையில், பெரியகோயிலில் ஒரு பகுதி தமிழர்கள் நுழையத் தடை விதிப்பது போன்ற ஒரு நிகழ்ச்சியாகத்தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இடமளிக்க மறுப்பது தோன்றுகிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள் கீழ்நிலை வகுப்பினர் என்ற கருத்து, ஒருவிதத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தமிழர்களின் கலைகளை அழிக்கும் செயல்மட்டுமன்று. இழிவுபடுத்தும் செயலுமாகும் என்றார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் நுழையக் கூடாது என்பது போல, தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழர்களின் கலைகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற வினா எழுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர்களாக ஆகியுள்ள நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் ஆரியக் கலைகளுக்கு இசைவளிக்கும் வகையில் கோவில் நிருவாகம் தமிழர் கலைகளுக்கு இசைவு மறுப்பது அந்தக் கலையையும், கலைஞனையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. தில்லை நடராசர் ஆலயம் திருச்சிற்றம்பல மேடையில் போராடி வெற்றி பெற்று தேவாரம் பாடப்பட்டு வருவது போலத் தஞ்சைப் பெரியகோயில் நாட்டிய மேடையில் தமிழர் கலைகளை அரங்கேற்றத் தமிழ் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com