Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

வெந்து விருந்தான பறவைகள்!
கவிஞர் பல்லவன்


மண்மகள் அறியாக்
கண்ணகியின்
பாதங்கள்
மதுரையை நோக்கி
நடந்தன!

சோழநாட்டைப்
பிரிந்ததற்கோ
சொந்த பந்தங்களிடம்
சொல்லாமல்
வந்ததற்கோ
சொத்து சுகங்களை
இழந்ததற்கோ
வருந்தவில்லை
மாநாய்க்கன் மகள்!

அவள் வருந்தியதெல்லாம்
இல்லத்தில்
கோவலன் இல்லாத
நாள்களில்
வந்த விருந்தை
எதிர்கொள்ள
முடியாமல் போனதற்கே!

தேனையும்
தினைமாவையும்
விருந்து வைக்குமே
குறிஞ்சி!

மீனையும் ஊனையும்
சுவைக்க வைக்குமே
நெய்தல்!

கறந்த பாலை
அருந்த வைக்குமே
முல்லை!

சோற்றமுதை
நெய்மணக்கப்
பரிமாறுமே
மருதம்!

நானிலமும்
விருந்து வைக்கும்
நாடல்லவா
நம் நாடு!

சாகாமருந்தாக
இருந்தாலும்
விருந்தோடு
உண்ணச் சொல்லும்
வள்ளுவம்!

ஐயமிட்டு உண்
என்பாள் ஒளவை!

விருந்தே புதுமை
என்னும் தொல்காப்பியம்!

வீட்டுத் திண்ணையில்
விருந்தினர்
எவரேனும்
இருக்கின்றனரா
என்பதைப்
பார்த்த பின்பே
புசிப்பது
தமிழர் வழக்கம்!

விருந்தோம்பலில்
தமிழ்மண்ணுக்கு
நிகர் தமிழ்மண்தான்!

முன்னிரவு நேரம்
அது.
வானத்தைத் தொடும்
அந்த
வாகை மரத்தடியில்
பசியோடு
வாடிக் கிடந்தான்
வேடன் ஒருவன்!

வாட்டும் பசியை
விரட்ட முடியாத
அவனோ
வருத்தும் குளிரைத்
தீ மூட்டி
விரட்டிக் கொண்டு
இருந்தான்
அவனை -
மரத்தின்மேல்
இருந்தபடியே
நோட்டமிட்டுக்
கொண்டிருந்தன
இரு பறவைகள்!

நமது
மரக்குடிலுக்கு
வந்திருக்கும்
இந்த விருந்தினனின்
பசிபோக்க முடியாத
பாவியாகிவிட்டோமே
நாம்!

ஆண் பறவை
வருந்தியது.
இருள் மூடிவிட்டது
இரவாகிவிட்டது
பறந்து சென்று
பழங்களைக் கூடப்
பறித்துவர முடியாதே!

பெருமூச்செறிந்தது
பெண் பறவை!

பறவைகள் இரண்டும்
ஒரு முடிவுக்கு
வந்தன.
வேடனுக்கு முன்பாக
எரியும்
தீயினில் விழுந்தன
பறவைகள்!

வெந்த பறவைகள்
விருந்தாயின
வேடன் பசிக்கு!

பறவைகள்
தம்மையே
உணவாகத் தந்து
விருந்தோம்பிய
காட்சி
உலகம் காணாத
உயிரோவியம்!

நம் உள்ளங்களை
உலுக்கியெடுக்கும்
சமயச்சித்திரம்!

விருந்தோம்
பண்பு என்றும்
வேரறுந்து போகாது
நம் மண்ணில்!

அதனால்தான்
பசித்தோர்
முகம்பார்க்கச்
சொல்லிக் கொண்டு
இருக்கிறது
அருட்பா!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com