Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

புகைக்கல்லில் ஓர் புகைச்சல்
ந. நஞ்சப்பன்


சென்ற இதழ் தொடர்ச்சி ...

காரணம், மக்கள் வசிக்காத பகுதியாகும். ஆத்தூருக்கு கீழே பீமன்திட்டு, (செம்மேடு), பரிசல்துறை, பாலாறு துறை தான் உள்ளன. தமிழகப் பகுதியில் பாலாறு நுழைந்து வரும்போது தெற்கே பாலாற்றுக் கரை, வடக்கே காவிரிக் கரை தமிழகத்திற்குள் இருகரைகளும் அமைந்து விடுகிறது. ஆனால், ஒகேனக்கல் பகுதி அப்படி அல்ல. நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பே மக்கள் வாழும் பகுதி. இந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புனித நீராடுவது தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்ச்சி.

அதைவிட மிக முக்கியமானதாக விளங்குவது சிறப்பு வாய்ந்த காவேரியம்மன் கோயில்! ஆம் காவிரித்தாய் சக்தியின் வடிவமாகி நிற்கும் திருக்கோயில் இங்குதான் உள்ளது. நீண்ட நெடுங்காலத்திலேயே காவிரித் தாய்க்குக் கோயில் அமைத்து தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் சிலர் தேசநாதிஸ்வரர் கோயில் என்று எழுதி வைத்திருக்கலாம். ஆனால், இப்பொழுதும் மக்கள் காவேரியம்மன் கோயில் என்றே அழைக்கின்றார்கள். காவிரி அம்மையும், காவிரியப்பனும் இணைந்து அமர்ந்துள்ள சிலையை மக்கள் போற்றி வழிபடுகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு காவிரியப்பன், காவிரியம்மாள் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரபலமான பெயராக மாதையனும், மாதம்மாளும் காணப்படுகிறது.

காவிரி தோன்றும் இடத்தி லிருந்து கடலில் கூடுமிடம் வரை காவிரி செல்லும் வழிநெடுக சிவாலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவேரமுனிவன் காவிரியைக் கொண்டுவரக் காரணமானவன் என்பது புராணச் செய்தி. அந்தக் காவேரமுனிவரே அகத்திய முனிவர். காவிரிக் கரையில் அகத்திய முனிவரால் வணங்கப் பெற்ற ஐந்து புண்ணிய சிவஸ்தலங்களுள் காவிரியம்மன் கோயிலும் ஒன்று. இந்தப் பூதலிங்கங்களையும் காவிரி அம்மனையும் இவர் வணங்கினார் என்பது மக்களிடத்தில் வழங்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று.

சக்தியின் வடிவமான காவிரி அன்னை இருக்கும் திருக்கோயிலில் சிவன் இல்லாமலா போய்விடுவார்? இங்கு அமைக்கப்பட்டுள்ள ஐந்து சிவலிங்கம் பிரசித்திபெற்ற லிங்கங்களின் வரிசையில் போற்றப்படுகிறது. பெரிய பெரிய அளவில் ஐந்து லிங்கங்கள் ஆலயத்திற்குள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கங்களை ஐந்து பூத லிங்கங்கள் என்று சிவனடியார்கள் போற்றி வணங்குகின்றனர். இங்கு நிறுவப்பட்டுள்ள நந்திச்சிலை சிறந்த கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள சிறந்த நந்திகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கோயிலில் தேர் ஓடிய காலமும் உண்டு. இதற்கென மானிய நிலங்கள் காவிரி ஆற்றங்கரையிலேயே இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு திப்பு சுல்தான் காலத்தில் வழங்கப்பட்ட தொகை (அளேபுரம் இலட்சுமி நரசிம்மன்சாமி ஆலயத்திற்கும், பென்னாகரம் ஈஸ்வரன் கோயிலுக்கும் வருகிறது) ஒவ்வொரு மாதமும் இன்றைக்கும் வந்து கொண்டிருக்கிறது. விழாக் கால வழிபாட்டின் போது எடுத்துச் செல்லப்படும் வாள் திப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. நாட்டுப் பற்றும், இறைப்பற்றும் கொண்ட திப்பு அனைத்து வடிவிலும் உள்ள இறைவனைப் போற்றினார். அதனாலேயே திப்பு இன்றுவரை பல கோயில்களுக்கும் தன் பங்கை செலுத்திக் கொண்டிருக்கின்றான். மதவெறி திப்புவைத் தீண்டியதில்லை.

இத்தகையச் சிறப்பு வாய்ந்த கோயிலைச் சுற்றிச் சென்ற தேர்வீதி எல்லாம் பட்டா போட்டு விற்கப்பட்டு விட்டது. காவிரியம்மன் கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் பண்டிகை காலத்தில் வரும் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்துபோக பயன்பட்ட மைதானம் பலருக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது. பழைமை வாய்ந்த இக்கோயிலைப் பாதுகாக்க யாரும் அக்கறை காட்டவில்லை. காவிரியம்மன் கோயிலை அடுத்து ஆற்றங்கரையில் நாகர்கோயில் உள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்குச் சீராக இருக்கும்போது இந்தச் சிலையைச் சுற்றி காவிரிநீர் செல்கிறது. ஒகேனக்கல்லில் காவிரிக்கரையில் அமைந்துள்ள பேவனூர் (பேகனூர்) மலையில் ஆகாயலிங்கம் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத மலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஆகாயலிங்கம் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. வனத்திற்குள் செல்ல சாலை வசதியும் இல்லை. ஆலம்பாடிக்கு வடபுறம் தமிழக எல்லையில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ரங்கசாமி கோயிலும் உள்ளது. காவிரிக் கரையில் மாரியம்மன் கோயில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் வனப்பகுதியில் சித்தரான காக புசண்டரின் வழியினரான சித்தர் பிறந்த மேனியாய் வலம் வந்ததாக செவிவழிச் செய்திகளும், கதைகளும் உண்டு. காக புசண்டர் வழியினர் திம்ம ராயசாமிகள் (சைவர்) மடமும் ஒகேனக்கல்லில் இருக்கிறது. அண்ணாமலையார் மடம், சாதுசாணி சாமியார் மடம் ஒகேனக்கல்லில் இருக்கிறது. காவிரி நீர்வழிச்சி அருகே கற்குகை அமைத்து வாழ்ந்த சாமியார் குகையும் இன்றும் இருக்கிறது.

நல்லவேளை போலிச் சாமியார்களின் படையெடுப்பு இன்னும் நடைபெறவில்லை. சித்துவேலை செய்பவர்களாக உயர்ந்த நெறிமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்களாகச் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவர்களாக விளங்கிய சித்தர் சாமிகளே இப்பகுதியில் இருந்திருக்கிறார்கள். தற்போது புதிய புதிய சாமிகள் (சிலைகள்) ஒகேனக்கல்லில் குடியேற்றப்பட்டும் வருகின்றன. ஊட்டமலை, ஒகேனக்கல், பிளிக்குண்டு, பண்ணைப்பட்டி, ஒட்டப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகிறார்கள். கூடுதுறையைத் தாண்டி சிறிது தூரத்தில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. ஒகேனக்கல்லிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்தான் காவிரியின் மறுகரையில் கர்னாடக எல்லைக்குள் ஆலம்பாடி இருக்கிறது.

ஒகேனக்கல் வனப்பகுதி பண்டைய வரலாற்றுப் பெருமை கொண்டது. குமண வள்ளலுக்குச் சொந்தமான மலை முதிரைமலை, அதியமானுக்குச் சொந்தமானது குதிரைமலை. முதிரை மலையே குதிரைமலை என்று மாறியதாகக் கூறுவோரும் உண்டு. அந்தக் குதிரை மலைதான் குத்திராயன்மலை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க மலையில் நெல்லிக்கனி இன்றைக்கும் நிறைந்து காணப்படுகிறது. குமணன் அதியன் குறித்து ஆய்வோர், மேலும் ஆய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய பல்வேறு சிறப்புகளை ஒகேனக்கல் வனப்பகுதி கொண்டுள்ளது.

மாருகொட்டாய் என்பது அண்மையில் உருவாக்கப்பட்டதாகும். மாரி என்பவர் தமிழக ஊரான ஊட்டலையிலிருந்து காவிரியில் கர்னாடகக் கரையில் ஒகேனக்கல் கூடுதுறையைத் தாண்டியுள்ள இடத்தில் மாடு மேய்க்கச் சென்றார். அங்கு குடிசைபோட்டுத் தங்கி மாடு மேய்த்தார். அது மாரி கொட்டாய் என்று அழைக்கப்பட்டது. பிறகு மாருகொட்டாய் என மருவிவிட்டது.

ஒகேனக்கல் தொங்கும் பாலம் அமைக்கப்பட்ட பிறகே மாருகொட்டாய் வழியாக குறுக்கு வழியில் வரத் தொடங்கினார்கள். தமிழகப் பகுதியான நீர்நாய் மூலையிலிருந்து பரிசல் மூலம் மாருகொட்டாயிலிருந்து மக்களைக் கொண்டுபோய் வருவதும் அங்கிருந்து ஆட்களைக் கொண்டு வருவதுமான நடவடிக்கை தொடங்கியது.

மாருகொட்டாயில் சாராயக் கடைகளை எடுத்து அதைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளச் சாராயத்தையும், கள்ளச் சாராயப் பாக்கெட்டுகளையும், பிராந்தி வகை மதுபாட்டில் களையும், கள்ளத்தனமாக பரிசல்கள் மூலம் ஒகேனக்கல் கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை அக்கரைக்கு அழைத்துப் போய் போதை ஏற்றி உற்சாகத்தில் மயங்கச் செய்து பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியது. ஆட்களே வாழாத வனப் பகுதியில் மதுக்கடைகளை எதற்காக கர்னாடக அரசு அனுமதித்தது? தமிழகப் பகுதிகளுக்கு கள்ளச் சாராயத்தைக் கடத்த கர்னாடக அரசு அதிகாரிகளே உறுதுணை புரிகிறார்களா என்ற அய்யம் மேலோங்குகிறது. அதுமட்டுமல்ல மாதேஸ்வரன் மலைக்கு அப்பால் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடக்கான் பள்ளத்தின் மதுக்கடை உரிமத்தைப் பயன்படுத்தி 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மாருக் கொட்டாயில் எப்படி கடை வைக்க அனுமதித்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

தமிழகத்திற்குச் சொந்தமான பகுதியில் பரிசல்துறை ஒவ்வோர் ஆண்டும் ஏலம் விடப்படுகிறது. மாமரத்துக் கடவு, கோத்திக்கல் பரிசல்துறை பெரியபாணி தொம்பச்சிக்கல் வழியாக சுற்றுலாப் பயணிகளை பரிசல் மூலம் கொண்டு சென்று நீர்வீழ்ச்சிப்பகுதிகளைப் பார்த்துவிட்டுக் களிப்புடன் திரும்புகிறார்கள். இந்தப் பகுதியில் புதியதாக உரிமைகோரி கர்னாடகப் பகுதியிலிருந்து பிரச்சனையைத் தொடங்கியுள்ளார்கள். தற்போது ஒகேனக்கல்லில் புதியதாக உரிமைக் கொண்டாடி கர்னாடகத் தரப்பில் எழுப்பப்படுகின்ற பிரச்சனையை மையமாக வைத்து, இரு மாநில எல்லைப் பிரச்சனையாக மாற்றி அதைத் தமிழர் கன்னடர் பிரச்சனையாக திசைதிருப்பி மோதலை உண்டாக்கலாம் என்பது சிலரின் குறுகிய நோக்கமாக இருக்கலாம். ஆனால், அத்தகைய குறுகிய நோக்கம் வெற்றி பெறாது.

ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை எதிர்த்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்களும் ஒன்று பட்டே நிற்கிறோம். தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லில் உரிமையைப் பாதுகாக்க இங்கு வாழும் அனைத்து மொழிபேசும் மக்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையை உருவாக்கியவர்கள் கன்னட மக்களும் அல்ல. கர்னாடக அரசும் அல்ல. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுயநலப் பேர்வழிகள் சிலர்தான் என்பதை இப்பகுதியில் வாழும் மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். கன்னட அரசு அலுவலர்கள்தான் உண்மையை அறியாமல் தமிழகத்தைச் சேர்ந்த சூதுமதி படைத்தோரின் சொல்கேட்டு விவேகமின்றி நடந்து கொண்டார்கள்.

இதன் பின்னணியில் பிரச்சனையைத் தொங்கியதே கர்னாடகத் தரப்பினர்தான். 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி கர்னாடகத்தைச் சேர்ந்த வனத்துறைக் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் தமிழக எல்லைப் பகுதிக்கு வருகிறார். அவரை அழைத்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரச்சனைக்கு மூலகாரணமாக இருந்தவரில் ஒருவரான முத்து.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com