Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

துப்பாக்கி முனையில் பறிக்கப்படும் உரிமைகள்
கோவி. லெனின்

ஒரு நாள் போவார். ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் - மீனவர் நிலை பற்றிய திரைப்படப் பாடல் வரிகள் இவை. ஆனால், அதுதான் தமிழக மீனவர்களின் நிலையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடலைத் தாய் வீடாகக் கொண்ட மீனவர்களின் வாழ்வுரிமை தொடர்ந்து பறிக்கப்படுவதும், இந்திய அரசு பாராமுகமாக இருப்பதும் கடந்த 25 ஆண்டுகாலமாகத் தொடரும் சோக வரலாறு.

அண்மையில் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்றபோது ஏறத்தாழ 200 படகுகளை மடக்கிப் பிடித்துச் சென்றது சிங்களக் கடற்படை. அந்தப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் (‘இறையாண்மையின்'படி இந்திய மீனவர்கள்) கடும் சித்ரவதைக்குள்ளாயினர். இதனை எதிர்த்து, தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் கரையிலுள்ள மீனவர்கள்.

இந்தியர்களான தமிழக மீனவர்களைக் காப்பாற்றும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவசரக் கடிதம் எழுதினார், இந்தியாவிற்குட்பட்ட தமிழகத்தின் முதல்வர் கலைஞர். அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேசுவதற்குக் காட்டும் அவசரத்தில் பத்தில் ஒரு பங்கு வேகத்தைக்கூட தமிழக மீனவர்கள் விவகாரத்தில் காட்டுவதற்குப் பிரதமர் தயாராக இல்லை. அதனால், மீனவர்களின் துயரம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தத் துயரத்தின் தொடக்கப் புள்ளியைத் தேடி காலச் சக்கரத்தைச் சுழற்றினால், 1974ஆம் ஆண்டில் போய் நிற்கிறது.

கச்சத் தீவு விட்டுக்கொடுக்கப்பட்ட 1974ஆம் ஆண்டில் தொடங்கிய இன்னல்கள், ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் வேகம் பெற்ற 1983ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமாகி, இதுவரை 360க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் உயிரை சிங்களக் கடற்படையின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கியிருக்கிறது. ஒரு கல் நீளமும், அரைக் கல் அகலமும் கொண்ட தீவுதான் கச்சத் தீவு. இராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமேசுவரம் கடல் பகுதியில் கச்சத் தீவு உள்ளிட்ட 8 தீவுகளை சேதுபதி மன்னரிடமிருந்து குத்தகைக்குப் பெற்றது பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி. இந்தியா, இலங்கை இரு நாடுகளையும் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளைக்காரன் வெளியேறிய பிறகு கச்சத் தீவு யாருக்குச் சொந்தம் என்பதில் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட இரு நாடுகளுக்கும் சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது.

“விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத் தீவு ராமநாதபுரத்திற்குத்தான் (இந்தியாவுக்கு) சொந்தம்'' என இலங்கையின் அமைச்சரவைச் செயலாளராக இருந்த பி.பி. பியரிஸ் தெரிவித்தபோதும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 1955-56இல் கச்சத் தீவை தனது கடற்படைப் பயிற்சிக்கு இலங்கை பயன்படுத்துவதை அறிந்த தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் குரல் கொடுத்தனர். இந்தியப் பிரதமராக இருந்த நேரு, இலங்கையுடனான ‘நல்லுறவை'த்தான் விரும்பினாரே தவிர, தமிழகத்தின் (இந்தியாவின்) ஒரு பகுதி பறிபோகிறதே என்று கவலைப்படவில்லை.

கச்சத் தீவு எனும் பகுதி இந்திய எல்லைக்குள் இருப்பது குறித்தே மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவோ, அது பற்றிய ஆவணங்களைத் தயாரிக்கவோ முயற்சிக்கவில்லை. “ஒரு சிறிய தீவை இந்தியாவின் தன்மானத்திற்குரிய சிக்கலாகக் கருத முடியாது'' என்றார் நேரு. தமிழக மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய தீவு, அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தன்மானத்திற்குரியதாகத் தெரியவில்லை. ஆனால், ஆளே இல்லாத இமயமலைப் பகுதியில் பனிபடர்ந்த லடாக் பகுதி மீது சீனா படையெடுப்பு நடத்தியபோது, அது தன்மானப் பிரச்சினையானது. சீனப் படைகளை எதிர்கொண்டு இந்தியப் படையினர் போரிட்டனர். உயிர் நீத்தனர்.

அந்நியர் ஆக்கிரமிப்பு எதுவாக இருந்தாலும் அது தன்மானத்துக்கு விடப்படும் சவால்தான். லடாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றதும், காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற முயன்றதும் தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக இந்தியா கருதியதால்தான் போர்கள் நிகழ்ந்தன. ஆனால், இலங்கையின் ஆக்கிரமிப்பு மட்டும் ‘நல்லுறவாகத்' தெரிந்தது. ஏனெனில், கச்சத் தீவு இந்தியாவின் வடக்குப் பகுதியில் இல்லை. தெற்கில் இருக்கிறது. அதுவும் தமிழகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அத்தனை எளிதாக அக்கறை செலுத்துமா மத்திய அரசு?

கச்சத் தீவில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளுக்கு மறைமுக அனுமதி அளித்து வந்த இந்திய அரசு, 1974இல் அந்தத் தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கவும் தயாரானது. இந்திராகாந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில் நடந்த அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, ஐ.நா. அவையில் இந்தியாவுக்கு எதிர்ப்பும் நெருக்கடிகளும் தோன்றின. இந்த நெருக்கடிகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்றால், பல நாடுகளைக் கொண்ட ஐ.நா.வின் தற்காலிக அவையில் இந்தியாவுக்கு ஆதரவு வேண்டும். அப்போது, தற்காலிக அவையின் தலைமைப் பொறுப்பில் இருந்தது இலங்கை. எனவே, இலங்கையைச் சரிக்கட்டியாக வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. அத்துடன், இலங்கையில் இடது சாரிப் போர்வையில் இனவாதக் குளிர் காயும் கட்சியான ஜே.வி.பி., இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நேரம் அது. எல்லாவற்றையும் கணக்குப் போட்ட இந்திய அரசு, கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முன்வந்தது.

1974ல் 8 நிபந்தனைகளுடன் கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியது இந்தியா. அதில் ஐந்தாவது நிபந்தனை, "இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத் தீவை பயன்படுத்த முழு உரிமை உண்டு. இதற்காகச் சிங்கள அரசிடம் ஆவணங்களைக் காட்ட வேண்டியதோ, பயண அனுமதி பெற வேண்டியதோ இல்லை' என்பதேயாகும். ஆனால், அங்குள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள் மீது கெடுபிடி காட்டுகிறது இலங்கை அரசு. கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களைக் கைது செய்வதும் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒப்பந்த மீறல், மனித உரிமை மீறல் எனச் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டிப்பதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத் தீவைப் போல, மேற்கு வங்க மாநிலத்திற்குச் சொந்தமான டின்பிகா தீவை வங்கதேசத்திடம் குத்தகைக்குக் கொடுத்துள்ளது இந்திய அரசு. ஆனால், அதன் ஆட்சியுரிமை இன்றும் இந்தியாவிடம்தான் இருக்கிறது. மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது, பத்மநாபபுரம் பகுதிக்கு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைந்தது. ஆனால், அங்குள்ள அரண்மனை கேரள பாணியில் கட்டப்பட்டதாகும். இன்றுவரை அந்த அரண்மனை, கேரள அரசின் பராமரிப்பில்தான் உள்ளது. பாதுகாப்பு, கட்டண வசூல், நிர்வாகம் என அனைத்தையும் கேரள அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முன்னுதாரணங்கள் பல இருந்தாலும், கச்சத்தீவை இந்தியா கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.

இறால் மீன்கள் அதிகளவில் உள்ள கச்சத்தீவுப் பகுதியில் கல்லுமலை என்ற இடம் உள்ளது. அதனருகேயுள்ள ஆழ்கிணற்றுக் குடிநீராதல் இராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும். உமிரி என்ற மூலிகையும், யுரேனியம் போன்ற தாதுப்பொருட்களும் கச்சத் தீவுப் பகுதியில் மிகுந்துள்ளன. இவற்றைப் பெறுவதற்கான உரிமைகளையும் இந்தியா இழந்து நிற்கிறது. ஈழத் தமிழர் சிக்கலைத் தீர்ப்பதற்காகப் போடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக நிராகரித்தது. ஆனால், 1974 ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரிப்பது குறித்து இந்திய அரசு யோசிக்கக்கூட இல்லை.

நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமான பால்மஸ், மியான்ஜஸ் தீவுகள் பல நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், நெதர்லாந்து அரசு உலக நீதிமன்றம் வரை சென்று அந்தத் தீவுகளை மீட்டது. இத்தனைக்கும் ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு உரிமையுள்ளதெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் அந்தத் தீவுகள் ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ளன. ஆனால், இராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் சர்வதேச நடைமுறைகளின்படி இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் உள்ள கச்சத்தீவு இலங்கையின் ஆளுகைக்குட்பட்டதாகி, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

கடலுக்குச் செல்லும் தந்தை சிங்கள கடற்படையின் குண்டடிபட்டு வீழும் நேரத்தில், கரையில் உள்ள பள்ளியில் மகன் படித்துக் கொண்டிருக்கிறான், ‘இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்'


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com