Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

இனச்சிக்கலில் இந்தியா தலையிட அனுமதிக்க மாட்டோம்!
இலங்கை அமைச்சர் எச்சரிக்கை!

வாழ்வுரிமை மற்றும் சமத்துவக் குடியுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைக் கோரிவரும் இலங்கைத் தமிழரை மிரட்டி அச்சுறுத்தி ஒடுக்கும் நோக்கத்துடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈழத்தில் மனம்போன போக்கில் குண்டுகளை வீசி, கொடூரமான போரை இராஜபக்சே அரசின் படைகள் நடத்தி வருகின்றன. ஏராளமான அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவதோடு, வீடு வாசல்களை இழந்து, சொந்த மண்ணில் அநாதைகள் போலத் தவித்து நிற்கிறார்கள்.

தாய்த் தமிழகத்துத் தமிழினம் தனது அங்கமான ஈழத் தமிழர்கள் நசுக்கப்படுவது கண்டு சொல்லொணாத வேதனையில் துடிப்பதையொட்டி, இப்பிரச்சனையில் திட்டவட்டமான தீர்மானம் ஒன்றைத் தமிழகச் சட்டப் பேரவை நிறைவேற்றித் தில்லிக்கு அனுப்பி வைத்தது. முதல்வரே முன்னின்று கொண்டுவந்த இத்தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவை அளித்து, தங்களுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்தின. “இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தவும், அடுத்து அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யவும் ஈழப் பிரச்சனையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்'' என்று இத்தீர்மானம் தில்லிக்கு முறையீடு செய்தது.

இதையடுத்து, அண்மையில் திருச்சிக்கு வந்திருந்த இலங்கைத் தமிழ் அமைச்சரும் மலையக முன்னணித் தலைவருமான சந்திரசேகரன், “ஈழப் பிரச்சனையை ஒரு பார்வையாளரைப் போல இந்தியா அணுகாமல், இதில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வகை செய்ய நேரடியாகத் தலையிட வேண்டிய தருணம் வந்து விட்டது. அதற்கான முழுத் தகுதியும் உரிமையும் இந்தியாவுக்கே உண்டு'' என்று கரிசனத்துடன் முறையீடு செய்திருக்கிறார். அதையடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலகுமாரனும் இதே பாணியில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். “இலங்கை இனச் சிக்கலைத் தீர்க்க இந்தியா தலையிடுவது அத்தியாவசியம். தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு எதிரானதாக இருக்காது'' என்றும் நயந்த பாணியில் கூறியிருந்தார்.

இவ்வளவுக்கும் பிறகு, அண்மையில் தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கையும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறத்துறை அமைச்சர் லோகித போகல்லகாமா இலங்கை இனப் பிரச்சினையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார். இப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இராஜதந்திர நெறிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமலும், மேட்டிமையான பாணியிலும் இப்பிரச்சனை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து எவரையும் துணுக்குறச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. “இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிடுவதை இலங்கை அரசு அனுமதிக்காது'' என்றும் கூறியிருக்கிறார்.

அந்த அளவில் நின்றுகொள்ளாமல், “இனச்சிக்கல் என்பது எங்களின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் இந்தியா தலையிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். எங்களுடைய இந்த நிலையை இந்தியாவும் உணர்ந்துள்ளது. அதனால்தான், இந்தியாவிடமிருந்து இப்பிரச்சனையில் இதுவரை எந்தவிதமான வற்புறுத்தலும் எங்களுக்கு வரவில்லை'' என்று இறுமாந்த நிலையில் கூறியிருக்கிறார்.

அரசியல் ரீதியாக ஈழத் தமிழர் இலங்கையின் குடிமக்களே. அது மட்டுமல்ல அவர்கள் அத்தீவின் ஆதிகுடி மக்களும்கூட. அதே சமயத்தில், தாய்த் தமிழினத்துடன் இரத்த சம்பந்தமுடையவர்கள். அவர்கள் நசுக்கப்படுவது கண்டு தாய்த்தமிழகம் கொதித்திருக்கிறது. தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இப்பிரச்சனையில் ஈழத் தமிழர்கள் சார்பாகத் தலையிடவேண்டிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தப்பிக்க முடியாது. உண்மை நிலை இப்படியிருக்க, “ஈழத் தமிழர் எங்கள் நாட்டுக் குடிமக்கள். அவர்களை எங்கள் அரசு எதுவும் செய்யும். அதைக் கேட்க இந்தியா யார்?'' என்பதே இலங்கை அமைச்சரின் தொனியாகத் தோற்றமளிக்கிறது! அப்படியென்றால், ஈழப் பிரச்சனையில் கடந்த ஒன்பது ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கடைப்பிடித்துவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியக் கொள்கை என்னவாயிற்று?

“சமத்துவக் குடியுரிமை, வாழ்வுரிமை, மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்புரிமை போன்றவற்றோடு சுயமரியாதையுடன் ஈழத் தமிழர் வாழ்வதற்கு வகைசெய்யும் விதத்தில், கூட்டாட்சி அடிப்படையில் ஈழத் தமிழர் பிரச்சனை அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்'' என்பதே அந்த தேசியக் கொள்கையாகும். இக் கொள்கையை இலங்கை அரசிடம் வற்புறுத்திக் கூறவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா எப்படித் தட்டிக் கழிக்க முடியும்? அதிலும் குறிப்பாக, பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு தில்லியிலேயே, “இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடக் கூடாது'' என்று உத்தரவிடும் பாணியில் பேசக்கூடிய தைரியம் இலங்கை அமைச்சருக்கு வந்திருப்பதைக் கண்டு தமிழகம் குமுறுகிறது. இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்குமாறு செய்வதில் இந்திய அரசுக்கு நிச்சயம் பங்குண்டு. ஏனெனில், இதில் தாய்த்தமிழகம் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறது. இந்தக் கவலையைத் தில்லி உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், தமிழகத்தையும் தமிழர்களையும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இந்திய அரசு கருதவில்லை போலும் என்ற விரக்தி தமிழ் மக்களிடையே எழுவது தவிர்க்க முடியாதது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com