Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

அயலக உடன்பிறப்புகள்: கேரளாவும் தமிழ்நாடும்
முனைவர் அருகோ

2008 சூலை முதல் வாரத்தில் அபுதாபி என்னும் அரபு நாட்டில், தங்களுக்குச் சரியான சம்பளம், நல்ல உணவு, தகுந்த தங்குமிடம் தரப்படவில்லை என்று, அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்தியதையொட்டி, அவர்கள் மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் சார்பில் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் முறையிடப்பட்டும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் செய்தி வெளியானது. அப்படித் தண்டிக்கப்பட்டவர்களில் கணிசமான தமிழர்கள் இருந்தார்கள் என்றும், ஆனால் இந்தியத் தரப்பில் மலையாளிகள், குஜராத்தியர்களுக்கு சட்டஉதவிகள் உட்பட தாராள உதவிகள் கிடைத்தன என்றும், தமிழர்களுக்கு மட்டும் எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அச்செய்தி மேலும் கூறியது.

கேரள சமாஜமும் கேரள அரசும்

மலையாளிகளைப் பொறுத்த அளவில் அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இசுலாமியர்களாக இருந்தாலும், கிறித்துவர்களாக இருந்தாலும், இந்துக்களில் எந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடையே அவர்கள் வாழுமிடங்களில் கேரள சமாஜம் தோற்றுவிக்கப்பட்டு, அது கேரள மாநில அரசாங்கத்தின் அரவணைப்புடன் செயல்பட்டு, மலையாளிகள் அனைவரும் அதன்கீழ் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்... பாதுகாக்கப்படுகிறார்கள். அதல்லாமல் நாயர் சங்கம், ஈழவர் சங்கம் போன்ற சாதிச் சங்கங்களும், இந்து முசுலிம் கிறித்துவர் என மத அமைப்புகளும் கடல் கடந்த மலையாளிகளிடையே செயல்பட்டாலும்கூட கேரள சமாஜமே அவர்களுடைய தலையாய அமைப்பாக இருந்து, கேரள அரசாங்கத்தின் உதவி ஒத்துழைப்புடன் கடல் கடந்த கேரளத்துக்கப்பால் இந்தியாவெங்கிலும் உள்ள மலையாள மக்களை வழிநடத்துகிறது.

குஜராத்தி மண்டலியும் குஜராத் அரசும்

அதுபோல குஜராத் மாநில அரசும் குஜராத் மண்டலி மூலம் குஜராத்திகள் இந்தியாவிலும் கடல் கடந்த நாடுகளிலும் எங்கு வாழ்ந்தபோதிலும் அவர்களுடைய ஒற்றுமைக்கும் உரிமைக்கும் ஓடோடிச் சென்று உதவுகிறது. இத்தனைக்கும் குஜராத் இந்துக்களில் பட்டேல்கள் உலகெங்கிலும், இந்தியாவிலும் தனி சாம்ராச்சியமே நடத்துகிறார்கள். பட்டேல்கள் சங்கத்தின் செல்வாக்கில் அமெரிக்காவே படாதபாடுபடுகிறது என்றால் மேலும் சொல்ல வேண்டியதில்லை. அதுபோல் குஜராத்தி முசுலிம்களைப் பொறுத்தும் போரா, மைமன் சங்கங்கள் பொருளியல் பலம் பொருந்தியவையாகும். இருந்தும் குஜராத்தி மண்டலி மூலம், குஜராத் அரசின் அரவணைப்பால் உலகத்தில் எந்தவொரு மூலையிலும் அவர்கள் பாதிக்கப்படாமல் வாழவழி செய்யப்படுகிறது.

மொரார்ஜி தேசாய் இந்தியத் தலைமையமைச்சராக இருந்த போது உகாண்டாவிலும், இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் குஜராத்திப் பட்டேல்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது, இங்கிலாந்தை நெருக்கியும், இந்திய விமானங்களை அனுப்பியும் 24 மணி நேரத்தில் அவர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஊறு நேராமல் பாதுகாத்தார் என்பது இங்கு நினைவு கூரத் தக்கதாகும். ஆம்; அந்த ஆப்பிரிக்க நாடுகள் பழைய ஆங்கிலப் பேரரசின் காலனிகளாக இருந்தவை என்பதால், இங்கிலாந்தின் மூலம் அந்த ஆப்பிரிக்க அரசுகள் இறுக்கிப் பிடிக்கப்பட்டன. அதற்கு அடிப்படையாக இருந்தது குஜராத்தி மண்டலமாகும்.

தமிழர் பரிதாபமும் பன்னாட்டுச் சட்டமும்

அத்தகையவொரு பொது அமைப்பும், அதற்குத் தமிழ்நாட்டு அரசின் ஆதரவும் அரவணைப்பும் இல்லாததாலேயே இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும், உலகெங்கிலும் தமிழ் மக்கள் ஆதரவற்ற அனாதைகளைப் போல அல்லல்பட நேர்கிறது. அபுதாபியிலும் அதுதான் நடந்துள்ளது. அந்த அரபுநாடுகளில் ஒன்றான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கால் நூற்றாண்டுக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தியபோது அந்நாட்டின் மக்களை விட அங்கிருந்த மலையாளிகள் எண்ணிக்கை மிகுந்திருந்ததால், அக்குடிமதிப்பு அறிக்கையை வெளியிடாமல் கேரள அமைச்சர்களை அழைத்துப் பேசி, அவர்கள் அந்நாட்டுக் குடியுரிமை கோர மாட்டோம் என்று உறுதிமொழியளித்த பிறகே வெளியிட்டது. காரணம், ஒருநாட்டில் ஒரு வெளிநாட்டுக்காரர் 5 ஆண்டுகள் வெளியேறவோ, வெளியேற்றப்படவோ செய்யாமல் தொடர்ந்து வசித்துவிட்டால், அவர் அந்நாட்டின் குடியுரிமை கோரினால் வழங்க வேண்டும் என்று பன்னாட்டுச் சட்டம் சொல்கிறது.

எனவேதான் ஐக்கிய அரபு எமிரேட் நாடு அப்படித் தயங்கியது. ஆனால் அதற்குப் பதில் மலையாளிகள் அந்நாட்டில் பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இப்படி எந்நாட்டிலாவது தமிழ்நாட்டு அமைச்சர்கள் அழைக்கப்பட்டுப் போயிருக்கிறார்களா? அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பற்றிப் பேசியிருக்கிறார்களா? என்றால் இல்லை.

இந்திய நடுவணரசும் இந்திக்காரர்கள், வங்காளிகள், குஜராத்திகள், மலையாளிகளுக்குப் போல வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகக் கரிசனையோடு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா? என்றால் இல்லை. இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டதைச் சொல்லக் கூடும். அவர்கள் சிங்களர்களின் இறையாண்மையைக் காக்கப் போனார்களேயொழிய, தமிழர்களின் இறையாண்மையை மீட்கப் போகவில்லை. அதேவேளை பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதியாக இருந்த வங்காளிகளின் இறையாண்மையை (வங்க தேசத்தை) மீட்டுக் கொடுத்துள்ளார்கள் என்பதை மறப்பதற்கில்லை.

ஏன்?

அயல் மாநிலங்களில் அயல் நாடுகளில் வாழும் வங்காளிகளுக்காக, குஜராத்திகளுக்காக, மலையாளிகளுக்காக அந்த அந்த மாநில அரசுகள் மத்திய அரசை நெருக்கி எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் போல தமிழக அரசு (இங்கே நாம் கட்சியைச் சொல்லவில்லை; அரசையே குறிப்பிடுகிறோம்) முயற்சி எடுக்காததும், முனைப்புக் காட்டாததும் ஒரு காரணமாகும். மேலும் இந்திய விடுதலைக்குப் பின் கடல் கடந்த நாடுகளில் வாழும் இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சுத் துறைகளெல்லாம் மலையாளிகள் கைக்குப் போய்விட்டன. குறிப்பாக அயலுறவுத் துறை நேரு காலத்திலிருந்து மலையாளிகளின் ஆதிக்கத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கே நாம் அயலுறவு அமைச்சராக யார் இருக்கிறார் என்பதைச் சொல்லவில்லை. இப்போது வங்காளியான பிரணாப் முகர்ஜி அத்துறை அமைச்சராக இருப்பதைப் போல பல மாநிலத்தவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை.

ஆனால், அத்துறையின் அதிகார ஆளுமை என்பது இன்றைய அயலுறவுச் செயலாளர் சிவசங்கரமேனனிடம் போல மலையாளிகளிடமே தொடர்ந்து இருந்து வருகிறது. உளவுத்துறையுட்பட பாதுகாப்புத் துறையிலும் இதுதான் நிலைமை. தங்களின் கேரளம் முன்பு தமிழ்ச் சேர நாடாக இருந்ததே என்பதால், மலையாளிகளுக்குத் தமிழர்கள் என்றாலே ஒரு பொறாமை. இனந்தெரியாத வெறுப்பு. அத்துடன் ‘சேரன் தீவு' என்ற மாற்றுப் பெயர் கொண்ட இலங்கையில் இன்றும் தமிழர்களே இருக்கிறார்கள்; அவர்கள் மலையாளிகளாக இல்லையே என்ற தாக்கம்.

அதனால்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தில், அது அமைந்திருக்கும் தேவிகுளம் பீர்மேடு இன்று கேரளத்தில் இருந்தாலும் தமிழ்ப் பகுதியாக இருக்கும் வெறுப்பினால், இன்றைய கேரள முதலமைச்சர் அச்சுதமேனன் தமிழர்களையே “போக்கிரித்தனமான வாடகைதாரர்கள்'' என்று வர்ணித்தார். பழைய அணை உறுதியாகவே இருந்தும், அதன் உறுதிப்பாட்டை நடுவணரசு நிபுணர்களும், உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டு, தாராளமாக அதில் 148 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று ஆணையும் தீர்ப்பும் அளித்த பிறகும் தன்னிச்சையாகப் புதிய அணை கட்டப் போகிறோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது கேரளா. இந்தப் பிடிவாதம் நடுவணரசிலுள்ள மலையாளிகளுக்கும் இருப்பதால்தான் தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்களையே இந்தியத் தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் மலையாளிகள் உட்பட வெளிநாடு வாழ் இந்தியர்களில் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மற்ற நாடுகளும் விடுதலை பெற்ற பிறகு இந்தியர்களாகவே அங்கு குடியேறி வாழ்பவர்களாவார்கள். தமிழர்களோ, இந்தியா விடுதலை பெறுவதற்கும், மற்ற நாடுகளும் விடுதலை பெறுவதற்கும் முன்பு இரு தரப்பையும் ஒரு சேர ஆண்டு ஆங்கில பிரெஞ்சு டச்சு ஏகாதிபத்தியங்களால் கூலிகளாகக் கூட்டிச் செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினரே பெரும்பான்மையோர் ஆவர்.

அப்படிப்பட்ட தமிழர்கள் இன்றைக்கு தென்னமெரிக்க நாடுகள் உட்பட 48 நாடுகளில் அந்நாடுகளின் தேசியச் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசாங்கம் அவர்கள் மீது அக்கறை கொண்டு, அவர்தம் மொழி இன பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்க முனைந்திருந்தால் அவர்கள் நிலை இன்று சிறப்படைந்திருக்கும். இந்தியா அவர்கள்பால் அக்கறை காட்டாததால், இலங்கை, பர்மா, பிஜி, மலேசியா என்று ஒவ்வொரு நாடாக தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

அதனால்தான் தமிழ் அறிஞர்கள் எல்லாம் வற்புறுத்தி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தை உலகளாவியதாகச் செய்து, தரணியெங்கும் தமிழ்ச் சங்கங்கள் மூலம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் இந்திய அரசாங்கத்தின் வாயிலாகத் தமிழக அரசாங்கம் அவர்களின் மொழி இன பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவவும், பிரச்சினைகளுக்குச் சுமூகத் தீர்வு காணும் வழியில் செயல்படவும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் அடிகோலவும்பட்டது. அதில் செயல்வேகம் காட்டப்பட்டு, பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், அந்தமான் தமிழ்ச் சங்கம் உட்பட அனைத்துலகத் தமிழ்ச் சங்கங்களும் அதன் குடைக்கீழ்க் கொண்டு வரப்பட்டிருக்குமானால், அயல்மாநிலத் தமிழர்களுக்கும், அயல்நாட்டுத் தமிழர்களுக்கும் பேருதவியாக இருந்திருக்கும்.

ஆனால், அந்த முயற்சி அடிக்கோல் போடப்பட்டதோடு நின்று விட்டது. அதேவேளை கேரளமும் குஜராத்தும் கேரள சமாஜம், குஜராத் மண்டலி மூலம் அதைச் செய்து வருகின்றன. இந்திய நடுவணரசைத் தங்கள் மக்களுக்காக இறங்கி ஓடிவரும்படியும் செய்கின்றன. சரி; கேரள சமாஜமும் குஜராத்தி மண்டலியும் எப்போது தோன்றின? இந்திய விடுதலையையொட்டி அதிலும் மொழிவழி மாநிலப் பிரிவினையின் எதிரொலியாகவே பேரெழுச்சி கண்டன.

தமிழ்ச் சங்கம்? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே முன்தோன்றி மூத்த வரலாறு கொண்டது. அந்த முன்வந்த காதை, பின்வந்த கொம்பு மறைக்கலாமா? வரலாற்றைத் தமிழர்கள் மறக்கலாமா? இந்திய அரசு நமக்கு உகப்பாக இல்லையென்று எத்தனை காலத்திற்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பது? அந்த இந்திய அரசின் கீழிருந்து கொண்டு, மலையாளிகளாலும், குஜராத்திகளாலும், வங்காளிகளாலும் மற்றவர்களாலும் தங்கள் அயல் மாநில, அயல் நாட்டு உடன்பிறப்புகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முடியும்போது, நம்மால் மட்டும் ஏன் முடியவில்லை?

தமிழர்கள், தமிழறிஞர்கள், தமிழ்த் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com