Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2008

கடவுளும் குற்றச் செயல்களும்
ஆனாரூனா

தேர்வு எழுதும் முன் கடவுளை வழிபடுவோர் பலர் உண்டு. ஆனால் கடவுளின் பெயரைத் தேர்வுத் தாளில் எழுதியதால், ரயில்வே ஊழியர்கள் இருவரின் பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.

மும்பையில் மத்திய ரயில்வேயில் பணிபுரிகிறவர்கள் சுவாதி சிட்னிஸ், சுஜாதா ஷிண்டே. இவர்கள் தங்களது பதவி உயர்வுக்காக 2007 டிசம்பரில் எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டனர். இத்தேர்வில் அவர்கள் தோல்வி அடைந்தனர். தாங்கள் சிறப்பாகவே தேர்வு எழுதினாலும் தோல்வி அடைந்தது ஏன் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டபோது... "சுவாதியும் சுஜாதாவும் தங்களது விடைத் தாளின் மேற்பகுதியில் ‘ஸ்ரீசுவாமி சாம்ரத்' என்றும், ‘ஓம்' என்றும் எழுதியிருந்தனர்.
விடைத்தாளில் மத சம்பந்தமான குறிப்புகளை எழுதியிருந்ததால், அது விடைத்தாளைத் திருத்துகிறவர்களின் பரிவைக் கவரும் முயற்சி. அதனால் அவ்விருவரின் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்குப் பதவி உயர்வுக்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவரும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்களின் வழக்குரைஞர் சந்திப்மார்னே கூறியதாவது:

“சுவாதியும், சுஜாதாவும் அப்பாவிகள். இதற்கு முன் நடைபெற்ற துறைரீதியான அனைத்துத் தேர்வுகளிலும் அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தங்களின் விடைத்தாளில் ‘ஓம்' என்ற சொல்லை எழுதியதன் மூலம், அவர்கள் தங்களுக்குச் சாதகமான சலுகைகளைப் பெற முற்படவில்லை. பழக்கம் காரணமாகவே அவ்வாறு எழுதியுள்ளனர். இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை.''

இவர்களின் மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மத்திய அரசுக்கும் மத்திய ரயில்வேக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது.

முதலில் விடைத்தாள்களில் மத அடையாளங்களைக் குறிப்பிடுவதும் ஒருவித ஊழலே என்று கருதி அவ்வாறு எழுதியவர்களின் தேர்வை ரத்து செய்து, பதவி உயர்வுக்குத் தகுதி இல்லை என்று அறிவித்த தேர்வுக் குழுவைத் தாராளமாகப் பாராட்டுவோம். பழக்கம் காரணமாக அல்லது பாமரத்தனம் காரணமாக ‘ஓம்' போட்ட பெண்மணிகளின் அறியாமைக்கு வருத்தம் தெரிவிப்போம். ‘ஓம்' என்றோ, ‘பிள்ளையார் சுழி'யோ போடுவதில் என்ன தவறு. எந்த ஓர் ஆவணத்தில் எழுதத் தொடங்கும்போதும் மதச் சின்னம் எழுதுவது அவர்களது பழக்கம். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று வாதாடும் வழக்குரைஞரின் வாதத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

தும்மல் வரும்போது ஒரு சத்தம் எழுகிறதே, அது மாதிரி, பள்ளம் ஒன்றைத் தாண்டும்போது ‘ஹை' என்றோ, ‘ஆங்' என்றோ ஓசை எழுவது மாதிரித்தான் ‘ஓம்' எழுதுவதும்? மதச் சின்னத்தை எழுதும் ஒருவர் கடவுள் துணையிருப்பார் என்கிற நம்பிக்கையுடன் அவ்வாறு எழுதுவாரானால், நிச்சயம் அது உள்நோக்கம் உடையதே! அவ்வாறு இல்லாமல், தேர்வுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? எழுதுவதற்குமுன் எழுதுகோல் (பேனா) சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க இவ்வாறு எழுதப்படுகிறதே தவிர கடவுள் நம்பிக்கையால் அல்ல என்று சொன்னால், எழுதிப் பார்ப்பதற்கு வேறு சொல்லே கிடைக்கவில்லையா?

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக ஊக்க மருந்து (அது போதைப் பொருளாகவும் இருக்கலாம்) சாப்பிட்டார் என்று பல விளையாட்டு வீரர்களின் வெற்றியும் விருதுகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன, கடவுள் நம்பிக்கையும் ஒருவிதத்தில் ஊக்க மாத்திரையே! போதைப் பொருளே! கடவுள் அருளால் தேர்வில் வெற்றி பெறும் ஒருவர் கடவுளை மயக்கித் தன் வெற்றிக்கு அவரைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே கருத வேண்டும். புகழ்ச்சிக்கு, அல்லது வாழ்த்ததிகாரத்துக்கு மயங்கி, தகுதியற்ற ஒருவரை வெற்றி பெறச் செய்தால், அதற்குக் காரணமான கடவுள் நேர்மையுணர்ச்சியற்ற ஒரு குற்றவாளியே!

வெகுகாலமாய் கடவுள் நம்பிக்கையுள்ள பலரும், கடவுள்களைத் தங்களுக்குச் சாதகமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தியே வருகிறார்கள். ஒரு புலவர் சங்கத் தமிழ் மூன்றையும் பெறுவதற்காக பாலும் பருப்பும் வேறு சில சமாச்சாரங்களையும் கலந்து வேழமுகத்துப் பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுப்பதாகப் பகிரங்கமாகப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை இளம் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் விதத்தில் பள்ளிகளிலும் கற்பிக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தால் எந்தக் காரியமும் நடக்கும் என்கிற கேவலமான நடத்தையைப் பக்தி என்கிற பெயரில், பாடம் என்கிற பெயரில் இளம் மாணவர்களுக்குப் போதனை செய்யப்படுகிற ஒரு நாட்டில், நேர்மையான குடிமக்கள் எப்படித் தோன்ற முடியும்? கடவுளே லஞ்சம் வாங்கும்போது, நான் ஏன் வாங்கக் கூடாது என்று ஒவ்வொரு அதிகாரியும் நினைத்தால் அது தவறா?

கடவுள் வாழ்த்துடன்தான் ஒரு பள்ளியில் பாடங்கள் நடத்தப்படுமானால் இவ்வாறு துதிபாடிப் பழகிவிட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் பொதுவாழ்வில், அரசியலில் துதிபாடிகளாக மாறுவார்களானால், நாட்டில் என்னென்ன சீர்கேடுகள், அவலங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் நடக்கும்? எந்த ஒரு காரியமும் பிரார்த்தனையால், கடவுள் அருளால்தான் நடந்தது என்றால், அவ்வாறு காரியம் சாதித்த ஒருவர் தகுதியற்றவராகவும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது குற்றச் செயல்களை அல்லது பாவ காரியங்களைப் பயமின்றிச் செய்வதற்கே பயிற்சியளிக்கிறது. மனிதன் தன்னம்பிக்கையுடையவனாய், தன்னலமற்றவனாய், சமூக மனிதனாய், தவறு செய்ய வெட்கிப் போகிறவனாய் உருவாக வேண்டுமானால், கடவுள் என்கிற மாயை அழிக்கப்பட வேண்டும்.

“புத்தி வந்தால் பக்தி போய்விடும்
பக்தி வந்தால் புத்தி போய்விடும்'' என்பது பெரியார் வாக்கு.

****

சுந்தரம் என்றொரு நண்பர் மாநகரப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றினார். அவர் ஒரு நாத்திகர். பணி முடிந்து பயணச் சீட்டு விற்பனை, விற்பனைத் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்கும்போது அதன் உச்சியில் ‘கடவுள் இல்லை' என்று எழுதுவது அவரது வழக்கம். மேலதிகாரி ஒரு நாள் சுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். ‘கடவுள் இல்லை' என்று பணிக்குச் சம்பந்தமில்லாத வாசகத்தை எழுதியதற்காக உங்களை ஏன் பணிநீக்கம் செய்யக் கூடாது? - என்று அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளக்கம் அளிக்கச் சென்ற சுந்தரம் அருகில் இருந்த இரு ஓட்டுநர்களின் விவரச் சீட்டுகளையும் வாங்கி அதிகாரியிடம் காட்டினார். அவர்கள் ‘ஓம்' என்றும், ‘கடவுள் துணை' என்றும் எழுதியிருந்தார்கள்.

சுந்தரம் கேட்டார்: ‘கடவுளைத் துணைக்கழைக்கும் உரிமை ஒருவருக்கு அனுமதிக்கப்படுமானால், கடவுளை மறுக்கும் உரிமை எனக்கும் உண்டு அல்லவா?''

அதிகாரியால் பேச முடியவில்லை. பிரச்னை முடிந்துவிட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com