Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2006

அய்.அய்.டி. என்றால் அய்யர் அய்யங்கார் டிரஸ்ட்டா?

ஆனாரூனா

அய் அய் டி - IIT - என்றால் இந்திய தொழில் நுட்ப அறிவியல் கழகம் என்று அந்த நிறுவனம் சொல்லிக் கொள்கிறது. ஆனால் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் சமூகவியலாளர்கள் `ஐஐடி’ என்றால் `அய்யர் அய்யங்கார் டிரஸ்ட்’ அதாவது `அய்யர் அய்யங்கார் சேம நல வாரியம்’ என்றே நிறுவுகிறார்கள்.

எப்படி?

`அய் அய்டி’ யின் இயக்குநராக இருப்பவர் எம்.எஸ். அனந்த் அய்யங்கார்.

இந்தியாவை வானத்தின் முகட்டுக்கே கொண்டு செல்லப்போகிற தொழில் நுட்ப மேதைகளை உருவாக்குவதாகச் சொல்லிக் கொள்கிற இந்த நிறுவனத்தின் இயக்குநராக ஒருவர் பதவி வகிக்கிறார் என்றால் அவர் எத்தனை சாதனைகளை நிகழ்த்தி, தலைமைக்குத் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும்?

`தகுதி’ ஒன்றே தரத்தை நிர்ணயிக்கும். தரம் தாழ்ந்த, தகுதிக்குறைவான `கழிசடைகள்’ யாரும் அந்த மேலோர்க்கான அரங்கினுள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நாடெங்கும் சங்கப்பரிவாரங்களின் பின்னணியில் போராட்டங்களே நடத்தினார்களே! சும்மாவா!

சென்னை அய் அய்டி நிறுவனத்தின் இயக்குநர் அனந்த் அய்யங்காரின் தகுதி, திறமை, சாதனை குறித்துத் தெரிந்து கொள்வோம்.

இதுவரை அய்யங்கார் எழுதிய தொழில்நுட்ப அறிவியல் நூல்கள் எத்தனை தெரியுமா?

`0’ - ஒன்றுகூட இல்லை.

அய்யங்காரின் மேற்பார்வையில் பி.எச்.டி. பெற்ற மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

`0’ - ஒருவர் கூட இல்லை.

1981 முதல் இன்று (2006) வரை 25 ஆண்டுகளில் அய்யங்கார் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எத்தனை தெரியுமா? `6’ வெறும் ஆறே ஆறு. (இவற்றை உண்மையில் எழுதியவர் யாரு?)

சரி; இதே நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராகவே இருக்கிறார் வசந்தா கந்தசாமி. இவர் அய்யரோ, அய்யங்காரோ அல்லர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைப் சேர்ந்த பெண்மணி. வசந்தா கந்தசாமி எழுதிய அறிவியல் ஆய்வு நூல்கள் எத்தனை?

``26’’

ஆராய்ச்சிக் கட்டுரைகள்?

``632’’

வசந்தா கந்தசாமியின் மேற்பார்வையில் பி.எச்.டி. பெற்ற மாணவர்கள்?

``15’’

இவர் சமர்ப்பித்த முதுகலை ஆய்வறிக்கை? -

``51’’

பிறநாட்டு அறிவியல் மேதைகளும், நிறுவனங்களும் வசந்தா கந்தசாமியின் தகுதி – திறமை குறித்துப் பாராட்டியிருக்கின்றன.

தகுதி, தகுதி என்று கூச்சலிடுகிறார்களே, விழுந்து விழுந்து எழுதுகிறார்களே, அவர்களைக் கேட்கிறோம். எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாத எம்.எஸ். அனந்த் அய்யங்கார் `அய் அய்டி’ யின் இயக்குநராக இருக்கிறாரே, அது எப்படி?

அனந்த் அய்யங்காரை விட பல தகுதிகள் தனக்கு உண்டென்று நிரூபித்துக் காட்டிய போதிலும் வசந்தா கந்தசாமி கீழ் மட்டத்திலேயே நிறுத்தப்பட்டு பல அவமானங்களைச் சுமந்து தீர்க்கிறாரே, அது ஏன்? இரண்டுக்கும் ஒரே காரணம்தான்.

`மனுதர்ம’விதிதான்!

அனந்த் ஓர் அய்யங்கார்.

வசந்தா கந்தசாமி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி.

இப்போது புரிகிறதா?

`அய் அய்டி’ என்றால் `அய்யர் அய்யங்கார் டிரஸ்ட்’!

இதனை விளக்க மற்றுமோர் சான்று:

1988ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கே. பத்ரிநாராயணன் என்னும் மாணவர் பி.எச்.டி. பட்டம் பெறுவதற்காக தனது ஆய்வு நூலைச் சமர்ப்பிக்கிறார்.

Agricultural Credit in the Madras Presidency During the Inter-War Period: A study of Tanjore and Ramnad Districts என்பது அவர் தலைப்பு.

பேராசிரியர் எஸ். அம்பி ராஜன் என்பவர் வழிகாட்டியாகவும் துறைத் தலைவராகவும் இருந்து `இந்த ஆய்வில் உள்ள உள்ளீடு வேறு எந்தப் பல்கலைக் கழகத்துக்கோ கல்வி நிறுவனத்துக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை என்று சான்றும் வழங்கியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு - 1989-ல் ஜி.ராஜேந்திரன் என்னும் மாணவர் பி.எச்.டி-க்காக ஒரு ஆய்வு நூலைச் சமர்ப்பிக்கிறார்.

Some Aspects of Agrarian Structure and Growth in the Madras Presidency During The Inter-war period:

A study of Tanjore and Ramnad Districts

என்பது ராஜேந்திரனின் தலைப்பு.

பத்ரி நாராயணன் ஆய்வு செய்த அதே தலைப்பு; அதே உள்ளீடு; அதே களம். ஆய்வாளரின் பெயர் மாத்திரமே வேறு. அது மாத்திரமல்ல பத்ரிநாத்தின் ஆய்வை அப்படியே நகல் செய்து பக்கங்களை மாத்திரம் மாற்றித் தைத்து நூலாக்கப் பட்டிருக்கிறது. முதல் நூலில் எது எப்படி இருந்ததோ அது அது அப்படி அப்படியே நகலெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ராஜேந்திரனின் ஆய்வுக்கும் பத்ரி நாராயணனுக்குப் பரிந்துரை செய்த அதே பேராசிரியர் எஸ்.அம்பி ராஜன் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே எழுதிக் கொடுத்திருக்கிறார். அல்லது நகலெடுத்துக் கொடுத்திருக்கிறார். அவர் ஏற்கனவே உறுதியளித்தது போல் இதே பொருளில் வேறு எந்த நிறுவனத்துக்கும் ஆய்வு நூல் தரவில்லை என்று இதிலும் - சத்தியம் செய்கிறார். மாணவர் பத்ரி நாராயணனின் ஆய்வு நூலைத் திருடி, புதிதாய் ஒரு அட்டை தயாரித்துத் தன் பெயரில் சமர்ப்பித்திருக்கிறான் ராஜேந்திரன் என்பதை குருடராயில்லாத எவரும் சட்டென்று கண்டுபிடித்து விடலாம்.

பேராசிரியர் அம்பிராஜனின் உறுதி மொழிக்குப் பொருள் - அய்.அய்.டிக்கு சமர்ப்பிக்கும் ஒருவர் அந்த ஆய்வு நூலை வேறு எந்தக் கல்வி நிறுவனத்துக்கும் தந்திருக்கக் கூடாது. ஆனால் அய்.அய்.டிக்கு ஒருவர் சமர்ப்பித்த ஆய்வை நகல் எடுத்து ஒவ்வோர் ஆண்டும் வேறு வேறு மாணவர்கள் தன்னிடம் சமர்ப்பித்தால், அனைவருக்குமே அதே ஆய்வுக்காக டாக்டர் (பி.எச்.டி) பட்டம் தரப்படும்.

உலகில் எந்தக் கல்வி நிறுவனத்திலும் இல்லாத புதிய விதி இது.

விதிகளின்படியும், `தர்மங்களின்’ படியும் மாணவர் ராஜேந்திரனின் ஆய்வுநூல் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். முந்திய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வைத் திருடி, தன்பெயரில் தந்ததற்காக ராஜேந்திரன் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் உண்மை வேறானது. திடுக்கிடச் செய்வது. அய்.அய்.டி நிறுவனம் தகுதி, திறமை என்று வாய்கிழியும் `மேலோர்’அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டியமானக் கேடான சம்பவம் அது.

நடந்தது என்னவென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாணவர் ராஜேந்திரன் சமர்ப்பித்த இந்த ஆய்வு நூல் பேராசிரியர் அம்பிராஜனால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் அதே ஆய்வு நூலின் நகல் மாணவர் பத்ரி நாராயணனால் நகல் செய்யப்பட்டு பேராசிரியர் அம்பி ராஜனால் ஏற்கப்பட்டு, அய்.அய்.டியால் பத்ரி நாராயணனுக்கு அறிஞர் மகுடம் சூட்டப்பட்டது.

இந்த மோசடியைத் தெரிந்து கொண்ட மாணவர் ராஜேந்திரன் பேராசிரியர் அம்பிராஜனிடம் கடுமையாக வாதாடியிருக்கிறார்.

எனது ஆய்வு திருடப் பட்டதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இதை நான் சும்மா விட மாட்டேன் என்று பின் விளைவுகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பயந்து போன அம்பி, அடுத்த ஆண்டு உனது ஆய்வுக்கு பி.எச்.டி. தர ஏற்பாடு செய்கிறேன் என்று ராஜேந்திரனைச் சமாதானப் படுத்திவிட்டு 1989-ம் ஆண்டு அதைச் செய்து முடிக்கிறார்.

இதுமாதிரி எத்தனையோ திருட்டுக்களும் ஊழல்களும் அய்.அய்.டியில் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அம்பிராஜன் போன்றவர்கள் அய்.அய்டி போன்ற உயர் தொழில் நுட்ப அறிவியல் மையங்களில் வழி காட்டியாகவோ துறைத் தலைவராகவோ இருப்பது சட்டப்படி குற்றம்.

ஆனால் அய்.அய்.டி இயக்குநர் எம்.எஸ். அனந்த் அய்யங்கார் `அம்பி’ போன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அந்தத் தகுதி அவருக்குக் கிடையாது.

ஏனென்றால் அவர் அய்.அய்.டி இயக்குநராக இருப்பதே அவருடைய அறிவுத் தகுதிக்காகவோ, நாணயத் தகுதிக்காகவோ அல்ல.

`தகுதி திறமை’ என்று தம்பட்டம் அடிக்கும் ஆதிக்க சக்திகள் `அய்.அய்டி’ என்றால் அய்யர் அய்யங்கார் டிரஸ்ட் - அதாவது அக் கிரகாரத்துப் பிள்ளைகளின் சேமநல வாரியம் என்கிற மதர்ப்பில் இருக்கிறவரை புதிய புதிய மோசடிகள் நடந்து கொண்டே இருக்கும்.

மோசடிகள் அய்.அய்.டிக்குப் பழகிப் போன கலைகளாக இருக்கலாம். ஆனால் இந்த மோசடிகளை இந்திய அரசு அனுமதிக்கலாமா?

அய்.அய்.டி இயக்குநர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com