Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2006

நெய்வேலி போராட்டமும் கலைஞரின் புரட்சித் திட்டமும்

இளவேனில்

கலைஞர் தலையிட்டதால், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் பத்து விழுக்காட்டைத் தனியாருக்கு விற்பது என்கிற மத்திய அரசின் முடிவு நிறுத்தப்பட்டது. அதனால் தொழிலாளர்களின் போராட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

கலைஞரின் மின்னல் வேக நடவடிக்கையினால் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றது. பொதுத்துறை நிறுவனம் காப்பாற்றப்பட்டது என்று என்.எல்.சி. தொழிலாளர்கள் எல்லோரும் கலைஞரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் ஆசைகள் நொறுங்கிப் போனவர்களும், சர்வாதிகாரத்தின் ஆதரவாளர்களும் மத்திய அரசைக் கவிழ்ப்பது எப்படி? மாநில அரசைக் கவிழ்ப்பது எப்படி? என்று தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

‘பங்கு விற்பனை நாட்டு நலனுக்கு உகந்ததுதான் என்பதில் முழு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்ட பிறகே மத்திய அரசின் முடிவுக்கு தி.மு.க. ஒப்புதல் அளித்தது என்றால் இப்போதும் அதில் உறுதியாக நின்று போராட்டக் குழுவினருக்கு அதை எடுத்துச் சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்திருக்கலாமே?

அல்லது, இப்போது தி.மு.க.வின் தொழிற்சங்கமும் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து எதிர்ப்புக் காட்டு வதுதான் தி.மு.க.வின் உண்மையான நிலைப்பாடு என்றால் மத்திய அரசு எடுத்த இம்முடிவை முதலில் ஆதரித்தது ஏன்?’

- என்று ஆனந்த விகடன் (16.7.06) தலையங்கம் கேள்வி எழுப்புகிறது.
-
விகடனின் கேள்வியில், ‘டெல்லியில் கூட்டாகப் பதவி தமிழகத்தில் தனியே ஆட்சி’ என்கிற ஆற்றாமைக் குரூரம்தான் வெளிப் படுகிறதே தவிர, உண்மை எதுவும் இல்லை. ஒரு கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதாலேயே மத்திய அரசின் எல்லா முடிவுகளையும் கூட்டணிக் கட்சிகள் அப்படியே ஏற்றுக் கொண்டதாகப் பொருளல்ல.

அதே சமயம் பதுங்கியிருக்கும் மதவாதிகளும் சர்வாதிகாரிகளும் எதிர் பார்ப்பதுபோல் மத்திய அரசைக் கவிழ்ப்பதும் அரசியல் விவேகமல்ல. கூட்டணியின் பொது செயல் திட்டத்துக்கு மாறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட் - இடதுசாரி - தி.மு.க. போன்ற கட்சிகளின் நிலைப்பாடு.

இதற்கு மாறாக, பங்கு விற்பனையில் மத்திய அர சின் முடிவை அங்கே ஆத ரித்துவிட்டு, இங்கே
தொழிலாளர்களையும் தி.மு.க. தூண்டிவிடுகிறது என்று ‘நரித்தனமான’ விரிவுரை செய்கிறது விகடன். ஒருபுறம் தி.மு.க. ஒரு நம் பகமான தோழமைக் கட்சி அல்ல என்று பிரதமரை உசுப்பி விடுவது. மறுபுறம் தொழிலாளர் மத்தியில் தி.மு.க.வின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவது. அவாள் ஏடுகளின் இந்த விரிவுரைகளின் நோக்கம் சிந்திக்கும் தமிழர்களுக்குப் புரியாததல்ல.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கலைஞருடன் முரண் பட்டதும் உண்டு; கைகுலுக்கியதும் உண்டு. இரு அனுபவங்களையும் பெற்ற அவர் கலைஞரைப் பற்றி ஒரு சித்திரம் தீட்டி னார். அதுதான் - ‘கலைஞர் நட்பிலே உண்மையானவர், எதிர்ப்பிலே உறுதியானவர்!’

ஆயிரம் பொருள் கூறும் மணிவாசகம் இது.

கலைஞர் தமது அரசியல் பிரவேசத்தின் அடிநாள் தொட்டு எப்போதுமே ஒரு பொதுவுடைமைவாதியாகவே
வெளிப்பட்டவர்; அவ்வாறே மக்களால் ஏற்கப்பட்டவர். தமிழ், பொது வுடைமை எனும் இரு வலிமையான கருப் பொருள்களால் வார்க்கப்பட்டவர்தான் கலைஞர். ‘குறளோவியமும்,சங்க இலக்கியமும்’ அவருடைய தமிழ்ப் பற்றின் வெளிப்பாடு என்றால் ‘விடுதலைக் கிளர்ச்சி’ அவருடைய சோஷலிச தாகத்தின் தாக்கம்.

தொல்காப்பியப் பூங்காவும் தருவார்; தாய் காவியமும் படைப்பார். அவருடைய தமிழ், சோஷலிசக் கருத்துக்களால் புகழ் பெற்றது. அவருடைய சோஷலிசக் கருத்துக்கள், தமிழால் வலிமை பெற்றன. கலைஞர்தான் இந்தியாவிலேயே முதன் முதலில் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து அந்தத் தொழிலாளர்களை மேம்படுத்தினார்.

கலைஞர்தான் முதன் முதலில் பேருந்துகளை அரசுடைமை ஆக்கினார். வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதிலும் கலைஞரின் பங்களிப்பு உண்டு. கலைஞரால்தான் நேப்பியர் பூங்கா மே தினப் பூங்காவானது. கலைஞரால்தான் மத்திய - மாநில அரசு ஊழியர்களின் ஊதிய வித்தியாசங்கள் சரி செய்யப்பட்டன. கலைஞரின் பிள்ளைகளில் முத்து, அழகிரி, தமிழரசு மாத்திரமல்ல, ஸ்டா லினும் உண்டு.

ஸ்டாலின் என்கிற பெயரை வித்தியாசம் கருதியோ, கவர்ச்சி கருதியோ அவர் சூட்டவில்லை. ஸ்டாலின் என்பது பாட்டாளி வர்க்கத்தின் ‘விஸ்வ ரூபம்’ என்று விரும்பி ஏற்ற பெயர். கலைஞர் ஏற்றுக் கொண்ட தலைவர்களான பெரியாரும் அண்ணாவும் பொதுவுடைமையின் பேராதரவாளர்களே!

திராவிட இயக்கம் என்பதன் சாரமே, இது ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், உழைத்துக் களைத்தோர்க்கான இயக்கம் என்பதுதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர் ‘விடுதலைக் கிளர்ச்சி’ எனும் தமது நூலில் வெளிப்படுத்திய அதே அரசியல் - பொருளாதாரக் கொள்கையை - ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ என்கிற பெயரில் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சர் மன்மோகன்சிங் அறிமுகப்படுத்திய மாற்றங்களால் நேரவிருக்கும் பாதிப்புகளை அன்றே சுட்டிக் காட்டியவர் கலைஞர்.

இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தால் இன்று 10 காசுக்கு விற்கும் ‘ஜெலுசில் மாத்திரை’ ஒரு ரூபாய்க்கும் அதற்கு மேலும் விற்கப்படும். அடித்தட்டு மக்களால் இந்த அடிகளைத் தாங்க முடி யாது என்று கலைஞர் சுட் டிக் காட்டியது நடந்திருக்கிறதா இல்லையா?

இன்று மன்மோகன் சிங்கை எதிர்ப்பவர்கள் - குறிப்பாக பா.ஜ.க.வினர் - புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தார்களா? ஆட்சிக்கு வந்ததும் தூக்கி எறிந்தார்களா? கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரிகளும் இன்றைய கூட்டணி அரசை வெளியே நின்று எதற்காக ஆதரிக்கிறார்களோ, அதே நோக்கத்திற்காகத்தான் கலைஞர் உள்ளே இருந்து ஆதரிக்கிறார். இந்த அரசு கவிழ்க்கப்படுமானால், மதவெறியர்களும், சர்வாதிகாரப்பிரியர்களும் எழுந்து ஆர்ப்பரிப்பார்கள் என்பது கலைஞருக்குத் தெரியும்.

இன்றைய மத்திய அரசைக் காப்பாற்றும் பொறுப்பும் கலைஞருக்கு உண்டு; தொழிலாளர் நலன்களைக் காக்கும் திறமையும் அவருக்கு உண்டு. சூழ்ச்சியாளர்களின் தந்திரங்களை எளிதில் முறித்தெறிவார் கலைஞர்.

என்.எல்.சி. பங்கு விற்பனைப் பிரச்னையின்போது கலைஞர் ஓர் அற்புதமான திட்டத்தை முன் வைத்தார். ‘பங்குகளை விற்றுத்தான் தீரவேண்டும் என்றால், அவற்றைத் தொழிலாளர் களுக்கே வழங்கலாம்’ என் பது கலைஞரின் ஆலோசனை.

கலைஞரின் அறிவிப்பு சரியான பொருளிலும் திசையிலும் புரிந்து கொள்ளப்படவில்லை. ‘மூலதனத்தில் பங்கு’ என்பது முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் பங்கு என்கிற இலக்கை அடையும் முயற்சி. ‘போனஸ்’ கேட்டுப் போராடும் பாட்டாளி வர்க்கத்தை, லாபத்தில் பங்கு என்கிற உயர்நிலைக்கு உயர்த்தும் முயற்சி. விற்கப்படும் பங்குகளை தொழிலாளர்களுக்குத் தரலாமே என்று கலைஞர் சொன்னது தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு என்ற பொருளில் அல்ல. ‘தொழிற்சங்கத்துக்கு’ என்பதே அதன் பொருள்.

ஒரு தொழில் நிறுவனத்தில் பல சங்கங்கள் கூறு கூறாகப் பிரிந்து கிடப்பதால், நிலைமை கருதி கலைஞரும் அதை வலியுறுத்தவில்லை. ஆனால், தொழிலாளர்கள் ஒரே அணியில் நிற்கும் காலம் வரும். அப்போது கலைஞரின் திட்டம் எவ்வளவு ஆக்கப்பூர்வமான சோஷலிசப் பொருளாதாரத் திட்டம் என்பது உணரப்படும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com