Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2006

சபரிமலையிலும் ஆரிய-திராவிடப் போராட்டம்

ஆனாரூனா

சென்னை தண்டையார் பேட்டை மருத்துவ மனைக்கு எதிரே மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம். சிறப்புப் பேச்சாளரான தோழர் ஏ.கே. கோபாலன் பேச எழுந்ததும் கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.

Jayamala “தோழர் ஏ.கே.ஜி...’’

“வாழ்க!’’

“தோழர் ஏ.கே.ஜி...’’

“ஜிந்தாபாத்!’’

ஜிந்தாபாத் முழக்கம் வந்த திசையில் பார்த்தார் ஏ.கே.ஜி. முன் வரிசையில் இருந்த சிலர் கறுப்புவேட்டி அணிந்திருந்தார்கள். ஐயப்ப பக்தர்கள்; மலையாளிகள். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. கம்யூனிஸ்ட் அல்லாத மலையாளிகளுக்கும் கூட ஏ.கே.ஜி. என்றால் உணர்ச்சி மிகுந்த அன்பைப் பொழிவார்கள். அவர் ஒரு மக்கள் தலைவர்.

மக்களை உயிரினும் மேலாக நேசித்த ஏ.கே. கோபாலன் அவர்களுடைய மயக்கங்களைச் சுட்டிக் காட்டவும் தயங்கமாட்டார். தமிழும் மலையாளமும் கலந்த மழலைத் தமிழில் பேசத் தொடங்கினார்:

“இப்போ, `ஏ.கே.ஜி ஜிந்தாபாத்!’ பின்னே, ஐயப்பா ஜிந்தாபாத்! என்னடா ஆச்சு உங்களுக்கு?’’கேரள மக்கள் வித்தி யாசமானவர்கள் தாம், அவர்களுக்கு கம்யூனிஸமும் பிடிக்கும்; ஐயப்பனும் பிடிக்கும்.

ஐயப்பன், குருவாயூரப்பன், பகவதி என்று இறை நம்பிக்கை பரவியிருந்தாலும், இந்தியாவில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாதவாறு இறைமறுப்பு நாளைத் தேசிய விழாவாகக் கொண்டாடுவதும் கேரள மக்கள் தான்.

ஒரு நாத்திகனாலேயே நல்லரசைத் தரமுடியும். வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டாலும் எம் நெஞ்சிலிருந்து எங்கள் தலைவன் மாவலியை யாராலும் அகற்ற முடியாது. ஆரிய சங்கரா வருக; மாவலி மாமன்னரே வருக! என்று பகுத்தறிவுக்கு வரவேற்புக் கூறும் விழா தான் கேரளமக்களின் ஓணம் பண்டிகை!

இன்று ஓணம் பண்டிகை மதமயமாக்கப் பட்டாலும் அதன் சாரம் பகுத்தறிவும் பார்ப்பன எதிர்ப்பும்தான்.
இவ்வாறு கலவையான சிந்தனைப் போக்கு கொண்ட, கேரளத்தில் இன்று ஐயப்பனின் சிலையை இளம் பெண் தொட்ட விவகாரத்திலும் மறைமுகமான ஆரிய திராவிடர் போராட்டம் நடக்கிறது.

தன்மீதும், தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் போது மனிதனுக்குக் கடவுள் மீது நம்பிக்கை வந்து விடுகிறது.

உண்மையை அறிவதை விடவும், கற்பனைகளில் மயங்குவது அவனுக்குச் சுகமாக இருக்கிறது.

இம்மாதிரியான மனிதர்களுக்கு மத குருமார்களும், சோதிடர்களும் தான் நம்பிக்கைக் குரியவர்களாக இருக்கிறார்கள்.

Unnikrishna panicker இதில் கடவுளுக்கு அருகில் செல்லவும் `கடவுளின் மொழி’யில் பேசவும் பார்ப்பனர்களுக்கே உரிமையுண்டு என்பதால் பார்ப்பனரல்லாதோர் சோதிடத்துக்குள் நுழைந்து விட்டார்கள். பார்ப்பனர்களும் சோதிடம் பார்க்கிறார்கள் என்றாலும் அவர்கள் பிற சாதியாரைத் தாழ்வாக எண்ணுவதால் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனரல்லாத சோதிடர்களையே நாடுகிறார்கள்.

புரோகிதமும் சோதிடமும் கடவுள் - மதம் சார்ந்த தொழில்களே என்றாலும், பார்ப்பனர்க்கும் பார்ப்பனரல்லாதாருக்குமான போராட்டம் அங்கேயும் உண்டு.

கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு சோதிடர் என்று நம்பும் அளவுக்கு அன்றைய முதல்வரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார் கேரளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ண பணிக்கர்.

முதல்வரிடம் பணிக்கரின் செல்வாக்கும் நெருக்கமும் வளர்வதைக் காஞ்சி சங்கரமடாதிபதியான இருள் நீக்கி சுப்பிரமணியத்தால் சகிக்க முடியவில்லை. ஏனென்றால் முதல்வர் தனது நிழலில் இருக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார் காஞ்சி மடாதிபதி.

பணிக்கருக்கும் சங்கர மடாதிபதிக்கும் இடையே ஒரு மௌன யுத்தம் நடந்தது. இதைப் பணிக்கரின் ஆனந்த விகடன் (16.7.06) பேட்டி தெளிவாகவே விளக்குகிறது:

விகடன்: பழனி மலையில் இருக்கிற முருகனின் நவ பாஷாணச் சிலையை மறைத்து விட்டு அதற்குப் பதிலாகத் தங்கச் சிலையை வைக்கச் சொன்னதும் உங்கள் ஆலோசனைதான் என்று ஒரு பேச்சு உண்டு. அது உண்மையா?

பணிக்கர்: நான் சொன்னதை அப்படியே மாற்றிச் சொல்கிறார்கள். அப்படிக் கிளப்பி விட்டவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். நவபாஷாணச் சிலையின் முன் வேறு சிலை வைக்கக் கூடாது என்று பலமுறை வற்புறுத்திச் சொன்னவன் நான்.

ஆனால் பிடிவாதமாக ஒருவர் எண்பது லட்சம் ரூபாய் செலவில் தங்கச் சிலை வைத்தார். அதன் பலனாக அவர் சிறை சென்றார்... பழனி முருகன் விவகாரத்தில் யாரோ சொல்லி யாரோ சம்பாதித்ததற்கு நான்தான் பலிகடாவா?’’

-இவ்வாறு காஞ்சி சங்கரனை அம்பலப்படுத்துகிறார் பணிக்கர். (பணிக்கரின் பேட்டியிலிருந்து `சிலை விவகாரங்களுக்குப் பின்னே பணவிவகாரமும் உண்டு என்றும் தெரிகிறது?)

பணிக்கருக்கும் பார்ப்பனர்களுக்கு மிடையேயான தொழில் போட்டி ஐயப்பன் விவகாரத்திலும் தொடர்கிறது என்பது இன்னும் சில நாட்களுக்குப் பின் அம்பலமாகும்.

சோதிடர்கள் இறைவனின் அருளாசி பெற்றவர்கள் என்று கருதப்பட்டாலும், யோசித்துப் பார்க்கையில் அவர்கள் இறைவனுக்கு எதிரான கலகக் காரர்களே!

“இறைவனின் சித்தம் இதுதான் என்று யாருக்கும் தெரியாது. இன்னார்க்கு இன்னதுதான் நடக்கும் என்று படைக்கும் போதே இறைவன் எழுதி விட்டான். அதை யாராலும் அறிந்து கொள்ளவோ தவிர்க்கவோ முடியாது’’ என்று நம்புவது தான் இறை நம்பிக்கையின் அடிப்படை.

“இல்லை; மனிதனால் அறியக் கூடாத ரகசியம் எதுவும் இல்லை’’ - என்று இறை நம்பிக்கைக்கு எதிராகக் `கடவுளின் டைரி’ யைப் புரட்டிப் பார்க்கும் போக்கிரித் தனம்தான் சோதிடம்.

ஆனால் கடவுளின் அருளாலேயே தான் சோதிடம் சொல்வதாகவும், தனது சோதிடம் விஞ்ஞானப் பூர்வமானது என்றும் இரு துருவங்களுக்கும் தாவுகிறான் சோதிடன்.

போலித்தனமான பக்தி; போலித்தனமான விஞ்ஞானம் இரண்டின் கலவையான சோதிடன் பிரமிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறான். அதன் மூலம் தன் பிழைப்பையும் கவனித்துக் கொள்கிறான்.

சோதிடனைப் போல் கடவுளையும் விஞ்ஞானத்தையும் போட்டுக் குழப்பாமல், விஞ்ஞானம் எல்லாம் அஞ்ஞானம்; இறை நம்பிக்கையே மெய்ஞ் ஞானம் என்று கடவுளை வைத்துப் பிழைக்கும் மற்றொரு கூட்டம் மதகுரு, அர்ச்சகன், பூசாரி என்று அறியப்படுகிறது.

இவர்களுக்குக் கடவுளும் வேண்டும்; மதமும் வேண்டும். எந்தக் கடவுளும் தான் இன்ன மதத்தைச் சார்ந்தவன் என்று சொன்னதாக எந்த மத நூலும் சொன்னதில்லை. ஆனால் மதவாதி கடவுளைத் தன் கட்டுப் பாட்டிலேயே வைத்திருக்க விரும்புகிறான். மதத்தில் கடவுளின் சுதந்திரமே மறுக்கப்படுகிறது.

மற்ற மதங்களை விட ஆரிய மதம் (இந்துமதம்) கடவுளை ஒரு கைதியாகவே நடத்துகிறது. இந்துக்களைத் தவிர வேறுயாரும்.

இந்தக் கடவுள்களைப் பார்க்க அனுமதியில்லை. இந்துக்களிலும் பார்ப்பனர்கள் மாத்திரமே கடவுளை நெருங்கவும் தொடவும் உரிமை உண்டு. `பொடா’ கைதிகளை இரத்த உறவுள்ள - அத்தாட்சி பெற்றவர்களே பார்க்க முடியும் என்பது போல,

விதிமுறைகளையும், சனாதனக் கோட்பாடுகளையும், கடுமையான கட்டுப் பாடுகளையும் மீறிக் கன்னட நடிகை ஜெயமாலா பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் தனது இளம் வயதில் ஐயப்பனைத் தொட்டுவிட்டார் என்பது இப்போது எரியும் பிரச்னையாகியிருக்கிறது.

தாவூத் இப்ராகிம், அல்லது வேறொரு தேடப்படும் பயங்கரவாதியை ரகசியமாய்ச் சந்தித்துவிட்டு வந்ததைப் போல், நடிகை ஜெய மாலாவுக்கு எதிராக மதவாதிகள் எல்லோருமே கூச்சலிடுகிறார்கள்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தப் பெண் தீண்டல் ஐயப்பனைத் தீட்டுப்படுத்தி விட்டதாம்.

அவதார புருஷனை, முனி வரை, மகானைத் தரிசித்தால், அவர்தம் பாதங்களைத் தொட்டு வணங்கினால் `பாவிகள்’ விமோசனம் பெறுவார்கள் என்பது மத வகைப்பட்ட ஐதீகம். ராமனின் பாதம் பட்டதால் கல்லாய்க் கிடந்த அகல்யா உயிர்பெற்றாள் என்றெல்லாம் கதைகள் உண்டே!

ஆனால் ஒரு பெண் பக்தைத் தொட்டதால் ஐயப்பன் தீட்டுப் பட்டுவிட்டான் என்றால் அவனுடைய ஆண்டவன் பாத்திரமே சந்தேகத்துக்குரியதாகாதா?

சந்தைக்கு வந்து விட்டால் எந்தப் பொருளையும் எவரும் அள்ளித்தான் பார்ப்பார்கள்.

கடவுள் என்று வந்து விட்டால் எந்தப் பக்தனும் கும்பிடத்தான் செய்வான்.

முடிந்தால் கடவுளைத் தொடுவதாக எண்ணி ஒரு சிலையைத் தொட்டு வணங்கி மெய் சிலிர்த்துக் கண்ணீர் மல்கவும் செய்வான். இதிலே பெண்கள் தொடக் கூடாது என்பது வர்த்தகத்துக்கும் பொருந்தாது; பக்திக்கும் பொருந்தாது.

நோய் உள்ளவன் டாக்டரிடம் போகிறான். பாவம் செய்தவன் கடவுளிடம் போகிறான்.

ஆரோக்கியமானவர்கள் டாக்டரிடம் போவதில்லை.

யோக்கியர்கள் கடவுளிடம் போவதில்லை.

தர்க்க ரீதியிலான உண்மை இது.

இதிலே ஆண்டவன், ஆண் பாவிகளுக்கு அருளுவான்; பெண் பாவிகளைக் கண்டால் மருளுவான் என்பது என்ன நீதி?

வெகுகாலமாகவே பெண் இனத்தைத் தரக்குறைவானதாகவும், பாவங்களின் ஊற்றுக் கண்களாகவுமே கருதும் சிந்தனைப் போக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.

ஆணாதிக்க சமூகத்தின் மதங்கள் அனைத்துமே பெண்ணை இழிவு படுத்துகின்றன.

இந்தத் `தீண்டாமைக் கொள்கை’யின் ஆணவப் போக்கால்தான் ஜெயமாலா ஐயப்பன் சிலையைத் தொட்டதால் சாத்திரம் சம்பிரதாயம்; ஐயப்பனின் புனிதம் எல்லாமே கெட்டுவிட்டதாக மார்பில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள்.

ஐயப்பனுக்கு மாத்திரம் பெண்கள் ஆகாமல் போனது ஏன்?

பெண்களுக்கு `மாத விலக்கு’ உண்டு என்பதால் அவர்கள் அசுத்தமானவர்களாம். ஆனால், இந்த `அசுத்தத்தில் – பிறந்தது தான் மனித இனம் என்பதை மறுப்பார் யார்?

சித்தர் பாடலொன்று சொல்வதுபோல்

“ஐயிரண்டு திங்களாய்
அடங்கி நின்றதூமைதான்
கையிரண்டு காலிரண்டு
காதிரண்டு மானதே!’’

ஐயப்ப பக்தன் எண்ணுவது போல் பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு `மாத விலக்கு’ உண்டு என்பதால் அவர்கள் தூய்மையற்றவர்கள் என்றால், ஒரு தூய்மையற்ற தாய்க்குப் பிறந்தவன், தனது மகளாவது பருவம் எய்தாமல் பார்த்துக் கொள்வானா?

ஜெயமாலா கருவறைக்குள் நுழைந்து ஐயப்பன் சிலையைத் தொட்டது தொடர்பாகத் தீவிர விசாரணையும், பரிகார பூஜைகளும் வேண்டும் என்பவர்கள், ஐயப்பன் பிறப்பே புனிதமற்றது, மானக் கேடானது என்பதை மறப்பது ஏன்?

ஐயப்பன் சன்னதியில் பெண்கள் நுழைவதால் புனிதம் கெடுகிறது என்று வாதாடுகிறவர்கள், `ஓரினச் சேர்க்கை’ யாளர்கள் மாத்திரமே இங்கு அனுமதிக்கப் படுவார்கள்’ என்று அறிவிப்புச் செய்வார்களா?

உன்னிகிருஷ்ண பணிக்கர், பெண்கள் ஐயப்பனைத் தொட்ட விவகாரத்தை மாத்திரமே வெளிப்படுத்த வில்லை.
“இதைத் தவிர நிறையச் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக ஐயப்பனைச் சுற்றி சபரிமலை மட்டுமல்ல. பதினெட்டு மலைகள் உள்ளன.

மொத்தம் 740 ஏக்கர் இடம் தேவசம் போர்டுக்குச் சொந்தமானது. இதை ஐயப்பன் பூங்கா என்பார்கள். இந்தப் பரந்த இடம் இப்போது காட்டு இலாகா கைவசம் உள்ளது.

இந்த இடத்தில் சமீபகாலமாகப் பல விபரீத காரியங்கள் நடக்கின்றன.

“மரங்களை வெட்டுவது, அங்கே சர்வ சாதாரணமாக நடக்கிறது. மதுவைக் காய்ச்சுகிறார்கள். ஒரு கூட்டம் கஞ்சாச் செடி வளர்த்து அமோக பிஸினஸ் செய்கிறது.

இதெல்லாம் வந்துவிட்டாலே பெண்கள் சமாசாரமும் ஆரம்பித்து விடுமே... அதுவும் தாராளமாக நடக்கிறது.
இப்படிப் பல விஷயங்களை விஸ்தாரமாகச் சொன்னேன். சட்டென்று சுதாரித்துக் கொண்ட ஒரு கூட்டம் ஜெயமாலா விஷயத்தை ஊதிவிட்டு மற்ற விஷயங்களை அமுக்கப் பார்க்கிறார்கள் என்கிறார் பணிக்கர்.
கடவுள் மற்றும் மதம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இரு கூட்டத் தாருக்கிடையே வெடித்திருக்கும் மோதலில் மேலும் பல மோசடிகளும் ஆபாசங்களும் வெளி வரலாம்.

பணிக்கருக்கும் சங்கர மடத்துக்குமான போட்டி, பக்தர்களைச் சிந்திக்க வைக்குமா?




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com