Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

சமச்சீர்க் கல்வி முறை:
ம.மு.தமிழ்ச்செல்வன்

Studentsசமச்சீர் கல்விக் குழுவின் அறிக்கை சட்ட மன்றத்தின் முன் வைக்கப்பட அது ஒரு பொது ஆவணமாகிறது. அதன் மீதான கருத்துக்களை மக்கள் எடுத்துக் கூற உரிமை உண்டு. சமச்சீர்க் கல்வி உடனடித் தேவை என உணரப்பட்டாலும், அதனைச் செயல் படுத்த மிகுந்த அரசியலுறுதியும், மக்கள் எழுச்சியும் தேவைப்படும். கல்வி மட்டுமே ஒரு சமூக மாற்றத்தினை உருவாக்கிடாது. ஆனால், ஒரு சமநீதிச் சமூகம் அமைய கல்வி ஒரு முக்கிய கூறாகும்.

கல்வி முறையில் இன்று இருக்கும் வேறுபாடுகள், பாகுபாடுகள் களையப்படுவதே சமச்சீர்க் கல்வி செயல்படத் தேவைப்படும் முதல் படி சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்தப் பல்வேறு அதிகார நடுவங்களின் பொறுப்புகளைத் தெரிவிக்காததும், ஒரு காலவரைக்குட்பட்ட திட்டத்தை வெளியிடாததும் சமச்சீர்க் கல்விக் குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகள். அரசும், கல்வித் துறையும் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியப் பணிகளைக் காண்போம்.

அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

1. சமச்சீர்க் கல்வி பற்றிய சில அறிவிப்புகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்த அரசு தாம் எடுக்க இருக்கும் நடைமுறைகளை விவரித்து ஒரு வெள்ளை அறிக்கையினை உடனே வெளியிட வேண்டும். அவ்வறிக்கையில் குழுவின் பரிந்துரைகளில் எவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எவை ஏற்கப்படவில்லை, ஏற்கப்படாததற்கான காரணங்கள், பரிந்துரைகளைச் செயல்படுத்த உள்ள காலத்திட்டம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தேசியக் கல்விக் கொள்கை பற்றிய அரசின் நிலைப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

2. இப்போது உள்ள ஐந்து கல்வி வாரிய உறுப்பினர்களது பதவிக்காலம் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் வாரியங்கள் புதுப்பிக்கப்படாதது ஒரு நன்மையே. சமச்சீர்க் கல்விக் குழுவின் பரிந்துரைப்படி, இவ்வாரியங்களைக் கலைத்துவிட்டு, அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒரே வாரியத்தை அமைக்க அரசு முற்பட வேண்டும்.

அவ்வாரியத்திற்கான அமைப்பு விதிகளை உருவாக்கி மக்களாட்சி நெறிமுறைகள்படி அதனை உருவாக்க வேண்டும். கல்வித் துறையில் மக்களாட்சி நெறிகள் பெயரளவில்கூட இல்லாதது ஒரு பெருங் குறை. பல்லாயிரம் மாணவரது கல்வி பற்றிய முடிவுகளை அலுவலர்களே எடுத்துச் செயல்படுத்தப்பட்டுப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவை வாரியங்களின் ஏற்பிற்கு வைப்பதே இன்றைய நடைமுறை.

3. இப்போதுள்ள பல்வேறு சட்டங்கள், விதிகள், ஆணைகள் முதலியவற்றை முறைப்படுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு கல்விச் சட்டத்தை இயற்ற வேண்டும். அதற்கு முதல்படியாக இப்போதுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலக்குகளை நீக்கி, எல்லாப் பள்ளிகட்கும் அதனை விரிவுபடுத்த வேண்டும். பிற மாநிலங்கள் பலவற்றில் நடுவண் கல்வி வாரியப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் மாநிலச் சட்டத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளதை நினைவு கொள்ள வேண்டும்.

4. கல்வித்துறையில் பெருமளவில் நிருவாகச் சீர் திருத்தம் செய்யப்படுவது காலத்தின் கட்டாயம். காலனி ஆட்சி நடைமுறைகளைக் கொண்டே விடுதலை பெற்று அறுபதாண்டுகட்குப் பின்னரும் கல்வித் துறை செயல்படுவது முற்றிலும் மாற்றப்பட்டு, மக்கள் நேய அணுகுமுறைகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இன்றைய அதிகார மையக் குவியல் முறைக்கு விடை கொடுத்து, அதிகாரப் பரவல் முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

முதற்படியாக, மாநிலத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரங்களோடு ஒரு இணை இயக்குநரைப் பொறுப்பாக்க வேண்டும். பள்ளிகள் தொடங்குவது, ஆசிரியர் அமர்த்தம் மற்றும் மாறுதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குதல், ஒவ்வொரு பள்ளியும் தரமான கல்வி அளிப்பதை உறுதி செய்தல் போன்றவை அவ்வதிகாரியின் தலையாய கடமைகளாக இருத்தல் வேண்டும். மக்கள் தொடர்பு அலுவலர்களே இல்லாத ஒரு துறையாகக் கல்வித் துறை இயங்கி வருவது மக்களாட்சி நெறிகட்கு முரண்பட்டதாகும்.

5. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆண்டுதோறும் ஆய்விற்கும், கணக்குத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுகின்றது. ஆனால், பிற பள்ளிகளுக்குக் கணக்குத் தணிக்கையே கிடையாது. ஆய்வும் பல ஆண்டுகட்கொருமுறை ஏனோதானோவென்று நடைபெறும். ஒரே வாரியம் ஏற்பட்ட பின்னர், பல்வேறு கல்வி அலுவலர் பணியிடங்களை ஒருங்கிணைத்து, 40 பள்ளிகட்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்று தேவைப்படும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு கல்வி மாவட்டமும், தரமான கல்வியினைச் சீரிய முறையில் அளித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்பட்ட மாவட்டங்களுக்கென்று தனித்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

6. அடுத்து வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற வேண்டிய சில முக்கியத் திட்டங்களாவன:

அ) அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆய்வுக் கூடங்கள் அமைத் திடவும், விரிவுபடுத்தவும் ரூ.150 கோடியும், நூலக விரிவாக்கம், கற்பித்தல் கருவிகள், பிற தர மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பள்ளிக்கு ரூ.25,000 வீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆ) இன்று இலவசக் கல்வி என்பதே ஒரு முரண்பாடு. அதனை மெய்ப்பிக்கத் தனிக் கட்டணம், வசதிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள், சந்தாக்களை நீக்கி, மாணவர் ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கான ஒதுக்கீடு ரூ.100 கோடிக்குக் குறைவே.

இ) தமிழ்வழிக் கல்வி மட்டுமே வழங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளி களனைத்தையும் மானியப் பள்ளிகளாக மாற்றிட வேண்டும். இதற்குத் தேவைப்படும் ஒதுக்கீடு ரூ.39 முதல் ரூ.50 கோடியே.

ஈ) 11 ஆம் திட்டக் காலத்தில் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் வகுப்பிற்கொரு ஆசிரியரோடு அமைய முதற்படியாக, வருகின்ற ஆண்டில் எல்லா அரசு தொடக்கப் பள்ளிகட்கும் குறைந்தது மூன்று ஆசிரியர்கள் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

உ) கட்டணப் பள்ளிகளை மானியப் பள்ளிகளாக மாற்றி முற்றிலும் தமிழகத்தில் இலவசக் கல்வி என்ற குறிக்கோளோடு ஒரு ஐந்தாண்டுத் திட்டம் வகுத்திட வேண்டும்.

கல்வித் துறை செய்ய வேண்டியவை:

1. நீதியரசர் மோகன் தமிழ்வழிக் கல்விக் குழு, முனைவர் சிட்டிபாபு தலைமையிலமைந்த மழலையர் தொடக்கப் பள்ளிக்குழு மற்றும் பதின்நிலைப் பள்ளி ஆய்வுக் குழு, சிவஞானம் பாடச் சுமைக் குறைப்புக் குழு, நீதியரசர் சம்பத் குழு, முனைவர் முத்துக்குமரன் சமச்சீர்க் கல்விக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முழுமையான கருத்துருக்களை அரசிற்கு அளிக்க உடனடியாகச் செயல்பட வேண்டும்.
குழு அறிக்கைகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்காதிருப்பது குழுக்கள் அமைக்கப் பெற்றதன் நோக்கங்களையே முறியடிப்பதாகும்.

2. சமச்சீர்க் கல்வி பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டவுடன், அதன் மீதான பொது விவாதங்கள் வெளிப்படையாகவும், மக்கள் பங்கேற்புடன் நடைபெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

3. கல்வித் துறையின் முழுப் பொறுப்பிலுள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைக் கற்பித்தல், கல்வித்தர மேம்பாடு ஆகியவற்றில் பெருமளவில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும். எளிய மக்களின் குழந்தைகளின் புகலிடமாக உள்ள இப் பள்ளிகளை உயர்த்துவது கல்வித் துறையின் பொறுப்பும், கடமையும் ஆகும்.

4. சமச்சீர்க் கல்வி முறையைச் செயல்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்குமான பாடத் திட்டம் வகுத்தல், பாடநூல்கள் உருவாக்கல் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

பேரா. யசுபால் மற்றும் சிவஞானம் குழுக்கள் பரிந்துரைத்த வண்ணம் இப் பணிகளில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களையே பயன்படுத்த வேண்டும். சென்ற இரு பாடத் திட்டங்கள் உருவாக்கலிலும், பாடநூல்கள் உருவாக்கத்திலும் மிக அதிக அளவில் பல்கலைக் கழக, கல்லூரி ஆசிரியர்களைப் பொறுப்பேற்க முற்பட்டதால், மாணவரின் புரிதலுக்கும் ஏற்பிற்கும் அப்பாற்பட்டுச் சுமை மிக்கவையாக அவை அமைந்ததன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் சில பகுதிகளை நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடுவண் கல்வி வாரியத்தின் புதிய பாடத் திட்டமும், என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள புதிய பாடநூல்களும் மாணவரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றை முன் மாதிரிகளாகக் கொண்டு தமிழகச் சூழலிற்கேற்ற வண்ணம் பாடத் திட்டங்கள், பாட நூல்கள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.

5. நிருவாகப் பணிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு மேலாண்மையியல், கல்வியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மனிதநேயத்தோடு செயல்படுதல் போன்றவற்றில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பாடத் திட்டங்களைச் செயல்படுத்தல், வகுப்பறைக் கற்பித்தலை ஆய்வு செய்து மேம்படச் செய்தல், பள்ளி நிருவாக முறைகளில் மாற்றங்களைக் கொணர்தல், கணக்குகளைப் பேணுதல் போன்றவற்றில் நுட்பமான பயிற்சி அளிக்கப்பட வகை செய்ய வேண்டும். திறம்பட இவர்கள் இயக்குவதே சமச்சீர்க் கல்விக்கு வெற்றி தரும்.

6. ஆண்டாண்டுக் காலமாக அளிக்கப்பட்டு வரும் புத்தறிவுப் பயிற்சிகள் பெருமளவில் பயனைத் தர வில்லை. ஆசிரியர்களது தேவைகளை அறியாது இப்பயிற்சிகள் அமைவதே இதற்குக் காரணம். ஆசிரியர்களைக் கலந்து அவர்கள் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்யும் வகையில் பயிற்சிகள் தக்கவர்களைக் கொண்டு அளிக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டங்கள் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்படுவதோடு, பாடநூல்களின் முதற்படிகள் ஆங்கிலத்தில் எழுதப் பெற்று பின்னர்த் தமிழில் மொழி பெயர்க்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தமிழிலேயே முதலாவதாக உருவாக்க வேண்டும். இதனால் தரமான நூல்களைத் தமிழில் கொணர முடியும். இதுபோலவே, பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர்த் தமிழில் மொழிபெயர்க்கப்படும் முறையும் கைவிடப்பட வேண்டும்.

இப்போதுள்ள தவறான நடைமுறைகளுக்குக் காரணம் தமிழ்வழியில் கற்பிப்போர் பாடநூல் உருவாக்கத்திலும், வினாத்தாள் உருவாக்கத்திலும் பங்கேற்காததே. சமச்சீர்க் கல்வி கானல் நீரல்ல, செயல்படுத்தக் கூடிய, செயல்படுத்த வேண்டிய ஒரு திட்டம். அத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரிய இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை ஒன்று திரண்டு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த ஒழுங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.

படிப்படியாக சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவர படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கேள்வி-பதில் வடிவில் வெளி யிட்ட அறிக்கை:

சமச்சீர் கல்வி முறை தொடர்பாக, டாக்டர் முத்துக்குமரன் தலைமையில் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மூத்த அதிகாரியான எம்.பி. விஜயகுமாரைக் கொண்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உதவ மாநிலத் திட்டக்குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது
.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வைப் பொருத்த வரை மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட அனைத்து பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
.
இது மாணவர்களின் உயிர்ப் பிரச்சினை என்பதால் இதிலே அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு அஞ்சி அவசர முடிவு எடுக்கக் கூடாது. எனவே நிதானம், உறுதி, நிச்சயம் என்ற மூன்று நிலைகளையும் எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிதி நிலை திட்டத்தில் அளிக்க வேண்டும்

சமச்சீர் கல்வி திட்டத்தை அமலாக்குவது குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் அரசு அறிவிக்க வேண் டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது
.
இம் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் மே.பெ. நடராசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களை வலியுறுத்தினார்.

தீர்மானங்களின் விவரம்:

சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்குவது குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் அரசு அறிவிக்க வேண்டும். இதே போல தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம், 40 சதவீத கம்ப்யூட்டேசன் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை யும் வரும் நிதி நிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரின் கையொப்பம் பெற்று பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 17 முதல் 31 வரை கோரிக்கை விளக்கச் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படும்.


தொகுப்பு: ம.மு.தமிழ்ச்செல்வன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com