Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

வைகுண்டரும் வள்ளலாரும்:

ப. சரவணன்

Vallalar நலி தரு சிறிய தெய்வமென் றையோ
நாட்டிலே பலபெயர் நாட்டி
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிகடா முதலிய உயிரை''...

பார்க்க நேர்ந்த போதெல்லாம் தாம் பயந்ததாகவும் வள்ளலார் குறிப்பிடுவதிலிருந்து அவரது மென்மையான உள்ளம் தெரிகிறது.

இறைவழிபாடு:

வருணாசிரம தர்மத்தைக் கொண்ட வைதீக மதத்தில் அன்று பொது வழிபாடு இருந்ததில்லை. உயர்சாதி இந்துக்களின் கோவிலுள் நுழைவதற்கு அன்று உரிமை யில்லை. (இன்றும் சில இடங்களில் அப்படித்தான்!) எனவே, சாஸ்தான் கோயில் விளையில் எல்லோரும் கூடி வழிபடுவதற்காக `நாராயணர் கோயில்' என்பதை அவர் தோற்றுவித்தார். தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட அனைத்து மக்களையும் இக்கோயிலுக்குள் அவர் அனுமதித்தார். அவர் அமைத்த பதியினுள்ளே கருவறையில் கண்ணாடி வைக்கப்பட்டதே யொழிய சிலை எதுவும் வைக்கப்படவில்லை. மாறாக, கண்ணாடியின் முன்னே ஒரு விளக்குச் சுடர் அமைக்கப்பட்டது. உருவ வழிபாட்டிற்கு மாறான ஒளி வழிபாட்டை அன்றைய அடித்தள மக்களிடம் அறிமுகப்படுத்திய பெருமை வைகுண்டரையே சாரும்.

வழிபாட்டிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார் வைகுண்டர். ஆடம்பரமான சடங்காசாரங்களைக் கண்டித்தார் அவர்.

``காணிக்கை போடாதுங்கோ காவடிகள் தூக்காதுங்கோ''

``பூசைபுனக்காரம் பெலி தூபம் ஏறாதுங்கோ''

``பொய்கொண்ட தேரோட்டம் பொங்கமுடன் ஏராதுங்கோ''

தாதிகைக் காட்டல் சப்பரங்கள் பாராதுங்கோ.''

``கொழுந்து மஞ்சனை மாலை குப்பையுடன் சந்தனமும்

விழுந்து நமஸ்காரமுடன் வேண்டாமென்று சொல்லிடுங்கோ''

முதலியன சடங்குகளுக்கு எதிராக வைகுண்டர் முன் வைத்த வரிகள்.

வள்ளலாரும் மரபான வைதீக வழிபாட்டிலிருந்து வேறான ஒரு வழிபாட்டு முறையைக் கையாண்டார். அவர் தமது ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிகையில், “ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம்.

தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங்காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தியுடையவர் களாய்த் திருவாயிற்படிப் புறத்திலிருந்து கொண்டு விளக்கேற்றிப், பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது எழு பத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியவர் கையிற் கொடுத்தாவது உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்துவரச் செய்விக்க வேண்டும்.'' (ஞான சபை விளக்க விபவ பத்திரிகை 18-7-1872) என்று எழுதியுள்ளார்)

பித்தளைக் குத்து விளக்கு கொண்டு வழிபாட்டு முறையை நிகழ்த்தினால் அது இந்து சமய வழி பாடாகப் போய்விடும் என்பதனாலேயே வள்ளலார் இதனைத் தவிர்த்திருக்கக் கூடும். சோதியை ஏற்றுபவர்கள் 12 வயதுக்குள்ளும் 72 வயதுக்கு மேலும் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கூறியதற்குக் காரணம் நிரந்தர பூசாரியைத் தவிர்ப் பதற்கே என்பர். அதாவது பிராமணிய எதிர்ப்பே எனலாம்.
எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான ஒரு வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதற் காகத்தான் வள்ளலார் ஜோதி வழிபாட்டைத் தோற்றுவித்து'' அருட்பெருஞ்சோதி' அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி'' என்னும் மந்திரத் தைப் படைத்தார்.

இந்தத் தாக்கத்தை வைகுண்டர் வாயிலாகவே வள்ளலார் பெற்றிருக்கக் கூடும். ஜோதி வழிபாடு, கண்ணாடி வைத்து வழிபடல் என்பதோடு வைகுண்டர் அருளிய.

“சிவசிவா அரிகுரு
சிவசிவா, சிவசிவா
ஆதிகுரு சிவசிவா''

என்னும் மந்திரத்தையும் வள்ளலாரோடு இணைத்துப் பார்க்கும் போதுதான் இதன் உண்மை புரியும்.

1872இல் எண் கோண வடிவில் அமைந்த ஞான சபை தத்துவத்திற்கு முன்பாகவே தாமரைப் பதியில் 96 வளைவுகளைக் கொண்ட தத்துவக் கொட்டகையை அமைத்தவர் வைகுண்டர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சாதி சமத்துவம்

“சமூகத்தில் சாதிப் பிரி வினைகள் மலிந்த பைத்தியக் காரர்களின் கூடாரம்'' என்று சுவாமி விவேகானந்தரால் வருணிக்கப்படும் அளவிற் குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளம் இருந்தது.

அந்தக் கூடாரத்தின் கீழிருந்துதான் சாதிக் கொடுமைகள் பலவற்றை அனுபவித்தார் வைகுண்டர். எனவே தான் சாதி சமத்துவத்தை அவர் தமது உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார்.

ஏற்றத் தாழ்வான சாதி அமைப்பைக் கலியின் செயல் என்கிறார் அவர். (அகிலத்திரட்டு - 163) கலி அழிப்பு என்பது ஏற்றத் தாழ்வான சாதிமுறையைச் சமப்படுத்துவதே என்பது அவர் கொள்கை. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட அடித்தளச் சாதியர்களை ஒன்றுபடுத்த முயன்றார் வைகுண்டர்.

“சாணார் முதலாய்ச் சக்கிலி புலைச்சிவரை
நாணாமல் வாருமென நல்ல வைகுண்டர் நினைத்தார்'
(அகிலத் திரட்டு - 297)

என்பது அவரின் வார்த்தை தன்னைப் பார்க்க வரும் அனைவரும் முந்திரிக் கிணற்றில் குளித்து, தாம் கொண்டுவரும் உணவுப் பொருட்களை ஒன்றாகச் சேர்ந்து சமைத்து, சாதி - வேறுபாடு பாராமல் ஒரே வரிசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை வைகுண்டர் நடைமுறைப் படுத்தினார். (இன்றைய “அர்த்தமற்ற'' சமபந்தி போஜனம் நம் கண்முன் வருகிறது)

இவற்றோடு `துவையல் பந்தி' எனப்படும் தவப் பயிற்சியையும் அளித்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லாத ‘தவ' உரிமையைப் பெற்றுத் தந்ததிலும் வைகுண்டரே முன்னோடியாக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

வைகுண்டரைப் போல வள்ளலார் சாதிக் கொடுமையை அனுபவித்தவர் அல்லர், என்றாலும் மனிதனிடம் ‘தயவை விருத்தி செய்வதற்குத் தடையாய் இருப்பன சமய ஏற்பாடு, சாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு, ஆசாரங்கள் (உபதேசக் குறிப்புகள்) என்றார்.

எனவேதான், வருணத் தையும், சாதியையும் ஒரு சேரக் கண்டித்தார் வள்ளலார்.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந்துவந்து வீணேநீர் அழிதல் அழகலவே''
(திருவருட்பா 5566)

என்னும் வரிகளில் சாதி சமய மாச்சர்யங்களை எதிர்ப்பதைக் காணலாம்.

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்''
திருவருட்பா (4075)

“சாதிசமயச் சழக்கை விட்டேன் - அருட்
சோதியைக் கண்டேனடி''
(திருவருட்பா 4949)

எனவரும் பாடல்கள் எல் லாம் வள்ளலாரின் சாதிமத சமத்துவத்தைப் பறைசாற்று வன. எல்லாவற்றிற்கும் மேலாக “நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற/கலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டு...'' என்று போகிற போக்கில் வள்ளலார் சுட்டி யிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்' எனும் கோட் பாட்டை நாராயணகுரு முழங்கியதை, “மனிதன் மீது மூடியிருந்த எண்ணிடங்காச் சாதி சமய சாத்திரக் குப்பை கள் மீது இருபதாம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட முதல் டைம்பாம்'' எனப் பேராசிரியர் முண்ட சேரி குறிப்பிடுவார்.

ஆனால் அதற்கு முன்பாகவே “பிள்ளை விளையாட்டு'' என்ற ஒற்றை வரியில் இந்த உலகையே ஆடச் செய்யும் டைம்பாமை வைத்தவர் வள்ளலார்.

பெண் சமத்துவம்:-


இந்த நாட்டின் எந்த ஒரு பிராந்தியத்திலும் தோன்றிய சமூகசீர்திருத்த இயக்கமும் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரானதாக இருந்தது அல்லது சாதியத்திற்கு எதிரானதாகவே இருந்தது என்பார் திரு அருணன். சீர்திருத்த இயக்கத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பெண் சமத்துவத்தைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

எனவேதான் வைகுண்டரும், வள்ளலாரும் இதைப் பேசியே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.

வைகுண்டர் தன்னிடம் வரும் ஆணையும் பெண்ணையும் சமமாகவே பாவித்தார். பெண்ணை இழிவுப் படுத்தும் துறவறத்தைக் கண்டித்தார்.

ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த கர்மம் என்பது அவர் கொள்கை.

``இல்லறத்தைவிட்டு தவம் இல்லைகாண வேறொன்றும் ஆணுக்கு ஒரு பெண் அன்னூழி காலம் வரை
ஒண்ணுக்கு ஒண்ணு ஊழி காலம் வரையும்
வாழ்ந்து இருப்பீர்கள்...''
(அகிலத்திரட்டு - 120)

என்று வைகுண்டர் கூறியதை அகிலத்திரட்டு பதிவு செய்திருக்கிறது.

வள்ளலாரும் பெண் சமத்துவத்தை வற்புறுத்துகிறார்.

``பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேத மாய் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது''

என்று பெண்கல்வியை வற்புறுத்திய அதே நேரத்தில் ‘புருஷன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா' என்று வள்ளலார் கூறியிருப் பதும் கவனிக்கத் தக்கது.
வைகுண்டர் மேலோட்டமாகச் சுட்டிக் காட்டிய பெண் சமத்துவத்தை ஆழமாகப் பரப்பியவர் வள்ளலார். பெண்ணுக்கு எதிராக மநுதர்மம் கட்டிக்காத் ததைத் தென்னாட்டில் உடைத்தெறிந்தவரும் அவரே.

கல்விப் பணி

எந்த ஒரு சீர்திருத் தத்திற்கும் அடிப்படையாக இருப்பது கல்வியே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஐரோப்பியர் வருகையினூடாக வந்த கல்வியே இங்கு சீர்திருத்தத்திற்கு வித்திட்டது என்பதும் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவேதான் வைகுண்டரும் வள்ளலாரும் தமது காலத்தில் பாடசாலைகளை நிறுவி மக்களை விழிப்படையச் செய்துள்ளனர்.

தாமரைக் குளம் பகுதி யில் 1810-இல் புராட்ட ஸ்டண்ட் கிறித்துவர்கள் ஏற்படுத்திய பள்ளியில் பயின்றதாகக் கருதப்படும் வைகுண்டர் பின்னாளில் ‘நிழல் தாங்கல்கள்' எனும் அமைப்பை ஏற்படுத்தி எண், எழுத்து ஆகியவற்றைக் கற்பிக்கச் செய்தார்.
இவற்றோடு வைகுண்டராலும் அவரது சீடர்களாலும் எழுதப்பட்ட நூல்களும் இங்கு கற்பிக்கப்பட்டன. பகல் நேரத்தில் பள்ளிக்கூடங்களாகச் செயல்பட்ட இந் நிழல் தாங்கல்களே இரவு நேரத்தில் வழிபாட்டு மன்றங்களாகச் செயல்பட்டன.

வள்ளலார் பள்ளி சென்று படிக்காது, தாமே ஓதி உணர்தவர் என்றாலும் பின்னாளில் அவர் ‘சன் மார்க்க போதினி', ‘சமரச வேத பாடசாலை' என்னும் இரு கல்வி நிலையங்களை நிறுவத் திட்டமிட்டிருந்தார் என்பதை அவரது அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

சன்மார்க்க போதினி குறித்து 1867-இல் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர் முதல் பெரியவர்வரை பயிலலாம் என்றும், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் மும்மொழிகள் பயிற்று மொழியாக இருந்ததும் தெரிகிறது.

சமரச வேத பாடசாலையின் மாணவர் தகுதியை வள்ளலார் வரையறுத்ததைக் கண்டு ஊரனடிகள் சன்மார்க்க போதினி பொதுக்கல்வியை அளிப்பது என்றும், சமரச வேத பாடசாலை சிறப்புக் கல்வியை அளிப்பது என்றும் வரையறுக்கிறார். இச் சமரச வேத பாடசாலையில் பயின்று தேறியவர்களுக்கே யல்லாது அவரது குடும்பத்தாருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது நினைத்துப் பார்க்கத்தக்கது.

வள்ளலார் உபயகலாநிதி பெரும் புலவர் தொழுவூர். வேலாயுத முதலியாரைக் கொண்டு திருக்குறள் வகுப்பும் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பற்று

``ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்'' என்று பாடிய திருமூலர் கூடத் தமிழ் மீது கொண்ட பற்றை விட்டதாகத் தெரியவில்லை. எனவேதான் அவரது வழித்தோன்றல்களாகிய வைகுண்டரும் வள்ளலாரும் தமிழ்மொழியைத் தாங்கிப் பிடித்தனர்.

ஆட்சியாளரின் மலையாளத்தாலும் பிராமணரின் வடமொழியாலும் ஒடுக்கப்பட்ட தமிழும் அறிவும் விடுதலைப் பெற்று உலகெங்கும் பரவ வேண்டும் என்பது வைகுண்டரின் விருப்பமாக உள்ளது.

``சேத்திரம் ஒன்று திருவிளக்கு ஒன்றாகும்
சாத்திர வேதச் சமயம் ஒன்றாய் நின்றிலங்கும்
ஆயும் கலைத் தமிழும் அறிவும் ஒன்று போலப் பரவும்''

என்று அகிலத் திரட்டு (213) வரிகள் இதனைச் சுட்டுகிறது.

தமிழ் உணர்வு நேரடியாகவே தூண்டப் படுவதையும் அகிலத் திரட்டில் (83) காணலாம். ``கல்வித் தமிழயாய்க் கனகப் பொருளாகி/ செல்வத் திருவாய்ச் செவ்வாகி நின்றோன்'' என்று நாராயணர் சித்திரிக்கப்படுவது காண்க.

எனவேதான், பண்பாட்டுத் துறையில் அன்று தென் திருவிதாங்கூர் தமிழர்களை மேலாதிக்கம் செய்து கொண்டிருந்த மலையாளத்தை எதிர்ப்பதில், தமிழையும் தமிழ் உணர்வையும் தொடர்ந்து நுட்பமான ஆயுதங்களாகப் பயன் படுத்துகிறார் வைகுண்டர் என்பார் திரு.பொன்னீலன்.

வள்ளலாரும் தமிழ்மீது கொண்டிருந்த பற்றுக்கு, ``தமிழ் என்னும் சொல்லுக் கிட்ட உரை'' என்ற சிறு பகுதியைப் போதிய சான்று. வள்ளலார் சென்னையில் வாழ்ந்திருந்த போது சங்கராச் சாரியருடன் அளவளாவ நேர்ந்தது.

அதுபோது சங்காரச்சாரி யார் சமஸ்கிருதமே தாய் மொழி (மாத்ரு பாஷா) என்று கூற அது கேட்ட வள்ளலார் அப்படியானால் தமிழ் தந்தைமொழி (பித்துரு பாஷா) என்று கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கினாராம்.

அவ்வுரையே 21-08-1897-இல் சித்தாந்த தீபிகை எனும் மாத இதழில் வெளியானது. பின்னாளில் தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரையாக வந்தது.

வள்ளலாரின் காலத்துக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் உருவாயிற்று; பாணினியத்திலிருந்துதான் தமிழ் இலக் கணம் உருவாயிற்று என்றெல்லாம் கதை அளந்து வந்த காலத்தில் “தமிழ் மொழி மிகப் பழமையான மொழி; ஆண்மையுள்ள மொழி; உறுதியான மொழி; பேசவும், எழுதவும் இலேசு உடையதாகவும், சிறப்பு டைய சிவானுபூதியை வழங்கத் தக்கதும் ஆகும். ஆரவாரத்தையும், பிரயாசையையும், டம்பத்தையும் கொடுக்கிற வடமொழிமீது எனக்குப் பற்றில்லை என்று வள்ளலார் தெளிவாகவே கூறியிருக்கிறார்.

ஆங்கில அரசுக்கு எதிராக...

கி.பி. 1789-இல் திப்பு சுல்தான் திருவிதாங்கூர் மீது படையெடுத்தார். அப் போது கிழக்கிந்திய கம் பெனி திருவிதாங்கூர் மன்னனுக்கு உதவியது; திப்பு சுல்தான் தோற்கடிக்கப் பட்டார். இதற்காக ஒரு பெருந்தொகையைத் திருவிதாங்கூர் அரசு கம்பெனிக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.

உள்நாட்டு பாதுகாப்பு, தளவாய் வேலுத் தம்பியின் எழுச்சி ஒடுக்கம் எனப் படிப்படியாக தமது பங்கைச் செலுத்திய கம்பெனியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ்த் திருவிதாங்கூர் வந்தது.

ஆங்கில அரசு - திருவிதாங்கூர்மன்னன் - ஆதிக்க சாதியினர் என்ற படிநிலை அடுக்கின் கீழ் இருந்த அதிகார பலத்தைத் தனியொருவராகவே நின்று வைகுண்டர் எதிர்த்தார். அவரது நோக்கின்படி கலி நீசன், வெண்ணீசன் இரு வரும் அழிக்கப்பட வேண்டியவர்கள்.

``அல்லாமல் சாணாரை அந்நீதமாய் அடித்தால்
பொல்லாத நீசா புழுக் குழிக்கே நீ போவாய்'' (183)
என்று நீசர்களை எச்சரிக்கிறார் வைகுண்டர்.

வள்ளலார் காலத் தமிழகம் எந்த ஒரு மன்னரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவரது எதிர்ப்பு நேரிடையாகவே ஆங்கில அரசைச் சாடுகிறது. ``கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக/ அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க,'' என்று மிகத் தெளிவாகவே தமது நிலையை முன்வைக்கிறார்.

வைகுண்டரைப் போலவே வள்ளலார் நேரிடையாக அரசியல் புரட்சியில் இறங்கவில்லை. தம்மள வில் ஓர் அருளாளராக மட் டுமே அவர் வாழ விரும்பினார்.

``இவ்வுலத் கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வளவெனினும் இச்சை ஒன்றறியேன்...''

என்று வேறு எந்தப் புகழையும் அவர் விரும் பாமையைப் புலப்படுத்து கிறார்.
மேலும், இவ்விருவரும் அந்நிய ஆட்சியில் மதமாற்றத்தைத் தடுத்தனர். கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களையும், இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களையும் வைகுண்டர் நேரிடையாகவே கண்டிக்கிறார்.

வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம் வாயிலாகத் தடுக்கிறார். எனவே, இந்த இருவரும் அன்றைய கிருத் துவ மிஷனரிகளால் தூற்றப்பட்டனர் - என்பது குறிப் பிடத்தக்கது.
சமயம் கடந்த ஞானிகள் சமய மாற்றத்தை எதிர்ப்பது முறையா? என்று இயல்பாகவே ஒரு கேள்வி எழும். மக்களை, அவர்களின் நீண்ட பண்பாட்டுப் பாரம் பரியங்களிலிருந்து அறுத்துப் பிரித்துச் செயற்கையான மேற்கத்தியப் பண்பாட்டுப் பாரம்பரியங்களோடு ஓட்டவைக்க கிறித்தவம் முயன்றது.

`பூர்வீகப் பண்பாட்டு வேர்களிலிருந்து மக்களை அறுத்தெடுப்பது என்பது, சமய வேர்களிலிருந்து அறுத்தெடுப்பது மட்டு மல்ல, சமுதாயத்தில் மரபு வழியாக வரும் எல்லா வேர்களிலிருந்தும் அறுத் தெடுப்பதாகும் என்று திரு பொன்னீலன் கூறுவதை அறிந்தால் இவ்விரு ஞானிகளின் மதமாற்றத் தடுப்பின் தாத்பரியம் விளங்கும்.
இறுதியாக...

தமிழகத்தில் இன்றும் கூடப் பல சீர்திருத்தங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவற்றிற்கெல்லாம் பலமுன்னோடிகள் நம்மிடையே இருந்தார்கள் என்பதைக் காட்ட வரலாறு மறுக்கிறது.

வள்ளலாரின் சீர்திருத்தங்கள் பல சுயமரியாதை இயக்கத்தோடும் நெருங்கிய தொடர்புடையன. (இது தனி ஆய்விற்கு உரியது) ஆயினும் அதற்கு முன்பாகவே வைகுண்டர் அதைக் கையிலெடுத்திருக் கிறார் என்பதுதான் முக்கியம்.

நெடிதான ஒரு சீர்திருத்தச் சங்கிலித் தொடரில் ஓர் இணைப்பை மட்டுமே இக்கட்டுரைத் தொட்டுக் காட்டியுள்ளது. இடையி டையே விட்டு விடாது தொடர்ச்சியை ஆராயும் போதுதான் நமது நிலை தெரியும். இக்கட்டுரை அதை முன்னெடுத்திருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com