Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

இந்தியாவிலிருக்கும் சிலரே மலேசியத் தமிழர்களைத் தூண்டி விடுகிறார்கள்

டத்தோ சாமிவேலு

மலேசியாவில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரைத் தடியடி நடத்திக் கலைத்ததுடன், இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவினர் ஐந்து பேரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைத்தது மலேசிய அரசு.

இதைக் கண்டித்து நடந்து வரும் பிரசாரத்தில், மலேசிய அரசுக்கு இணையாகத் தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறார் என்று மலேசிய இந்தியன் காங்கிரஸின் தலைவரும், மலேசிய அரசியல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோ சாமிவேலுவுக்கு எதிராகவும் கடும் பிரசாரம் நடந்து வருகிறது.

இந்த நேரத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த அமைச்சர் டத்தோ சாமிவேலுவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

மலேசியாவில் இந்திய வம்சாவழியினரை, குறிப்பாக தமிழ் மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மலேசிய அரசு நடத்துவதைக் கண்டித்து இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு நடத்திய போராட்டத்தை மலேசிய அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது நியாயம்தானா?

``மலேசிய நாட்டில் எல்லாத் தமிழர்களையும் கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களைச் சித்திரவதை செய்து தெருத்தெருவாக மலேசிய அரசு இழுத்துச் செல்வதைப் போலவும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நம்பும் அளவிற்கு ஒரு பையன் (வேதமூர்த்தி) பிரசாரம் செய்தால் அதைத் தமிழகம் நம்பலாமா? `பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடி ரூபாயை நாங்கள் பெற்றுத் தருகிறோம். அதற்கு வழக்குத் தொடர வேண்டுமானால், ஒரு லட்சம் இந்தியர்கள் திரண்டால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்' என்று சொல்லி எல்லோருக்கும் எ°.எம்.எ°. அனுப்பினார்கள். இவர்களின் பிரசாரத்தை - சதி நாடகத்தை நம்பி ஏமாந்த மக்களைப் பார்த்து நாங்கள் வருத்தமடைந்தோம்.

எங்கள் நாட்டில் கூட்டத்தைக் கலைப்பதற்குத் தடியடி செய்வது கிடையாது. தண்ணீரால் அடிப்போம்.

கண்ணீர்ப் புகை குண்டு போடுவோம். அது போடவில்லை என்றால், கூட்டம் கலையாது. தண்ணீர் அடித்து, கண்ணீர்க் குண்டு போட்டு கலைத்தது மாபெரும் குற்றம் என்றால், தமிழ்நாட்டில்... ஏன்? இந்தியா முழுவதிலும் போராடும் மக்களை மாட்டையடிப்பதைப் போல அடிக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நடக்கிறதே இதையெல்லாம் யார் கேட்பது?'' மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவமிழியினருக்கு அரசின் எல்லாச் சலுகைகளும் கிடைக்கிறதா என்ன? ``எங்கள் நாட்டைப் பொறுத்தவரை மூன்று இனங்கள். இதில், அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள்.

7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். இப்படிப் பலவகையான மக்கள் உள்ள சமுதாயத்தில் எது செய்தாலும் பார்த்துத்தான் செய்ய வேண்டும்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்தியர்கள் எல்லாம் பட்டதாரிகளாக இருந்தார்கள். டாக்டர்கள், வக்கீல்கள் என எங்கே பார்த்தாலும் இந்தியர்கள்தான் இருந்தனர்.

அந்த நேரத்தில் மலாய் இனம் வீழ்ந்து கிடந்த இனம். அவர்களை முன்னேற்ற வேண்டுமென ஒரு அரசாங்கம் நினைக்குமா, நினைக்காதா? அந்த நேரத்தில் தமிழர்கள் பல நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

அதுபோல எங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஒரு சமூக ஒப்பந்தம் செய்து கொண்டோம். மலாய், சீனர்கள், இந்தியர்கள் என மூன்று இனங்களுக்குள்ளே செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தில், இந்தியர்களுக்கு முழு பிரஜா உரிமை வழங்க வேண்டும் என முடிவானது.
அப்போது இருபத்திரண்டு லட்சம் இந்தியர்கள் இருந்தனர். ஆனால், சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் தகராறு வரப் போகிறது என்று பலர் பயந்து கொண்டு இந்தியாவிற்கு ஓடி வந்து விட்டனர். அங்கிருந்த தொழிலாளர்கள் மட்டுமே அந்த நாட்டை நம்பி இருந்தனர்.
அப்போதுதான் நாட்டை சமநிலைக்குக் கொண்டுவர சமூக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் சமரீதியில் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி இந்தியர்களுக்குச் சமநிலை கிடைக்கவில்லை என்பது அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியும். அதற்காக நான் எப்படியெல்லாம் போராடினேன் என்பதை அமைச்சரவைக் கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட ரகசிய அறிக்கையை நான் வெளியே கொண்டு வந்து காட்ட முடியாது.

கல்வித் துறைையில் அரசு உதவி கொஞ்சம் குறைந்ததால், நாங்களே தனியாகக் கல்வி வளர்ச்சிக் கழகம் ஒன்றை ஆரம்பித்து இதுவரை பதினான்காயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம்.

இப்படி நாங்கள் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு வழிகளில் பாடுபட்டிருக்கிறோம்.''அப்படியானால் போராட்டம் நடத்தியவர்களின் நோக்கம்தான் என்ன? ``ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேர்தலில், முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியம் தோல்வியடைந்து விட்டார். அவர் எனக்கு முன்பே பதவிக்கு வந்தவர். அவர் பதவிக் காலத்தில் அவர் செய்த ஒரே சாதனை, ராமலிங்க ஈஸ்வர் என்ற கோயிலுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது மட்டும்தான் என்று அவரே சொல்வார். அவர் தோற்றுப்போன பிறகு, அவர் செய்கிற ஒரே வேலை எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதுதான். அதற்காக, அவர்கள் ஆரம்பித்ததுதான் `இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு' என்ற அமைப்பு. அது என்ன இந்து என்ற வார்த்தை, அப்படியென்றால், அங்குள்ள இந்திய கிறிஸ்துவ, மு°லிம், சீக்கிய மக்களுக்கு எல்லாம் அவர்கள் முக்கியமாகப் படவில்லையா?

அவர்களின் நோக்கம் எல்லாம்... அரசியலில் எதையோ சாதிக்க வேண்டும் என்று நினைத்தனர். அது நடக்கவில்லை. மலேசிய அரசு ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்களே? எங்கள் நாட்டிற்கு வந்து பாருங்கள். ஒரு பிச்சைக்காரனைக்கூடப் பார்க்க முடியாது. சாதாரண நபருக்குக்கூட ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது.

எங்களுக்குள்ள ஒரே பிரச்சினை உரிய பங்கீடு கிடைக்கவில்லை என்பதுதான். அதற்காகப் படிப்படியாகப் போராடி உரிய இடத்தைப் பெற்று வருகிறோம். கல்வியில் உரிய பங்கீடு கிடைக்கவில்லை என்பதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்களே ஆசிய மருத்துவ தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதில், எல்லாவிதமான படிப்புகளும் படிக்கலாம்.

இந்தியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு எந்தவிதமான போராட்டம் நடத்த வேண்டுமோ, அத்தனை போராட்டத்தையும் நாங்கள் நடத்தியிருக்கிறோம்.''

இந்துக் கோயில்களை எல்லாம் மலேசிய அரசு இடிப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறதே? ``சமீபத்தில் ஒரு கோயிலை இடித்த மலேசிய அரசு, முழுமையாக நீங்களே இடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. அந்தக் கோயில் நிலம் தனியாருக்குச் சொந்தமானது
.
அவர் வேறு ஒருவருக்கு அந்த நிலத்தை விற்று விட்டார். இது தொடர்பான வழக்கு மூன்று வருடம் நடந்து கோயிலுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால், அந்தக் கோயிலை வேறு இடத்தில் கட்ட மலேசிய அரசு நிலம் ஒதுக்கியது. ஆனால், அங்கே போக மாட்டோம் என்கின்றனர்.

அங்குள்ள மக்களின் எண்ணிக்கையே பதினெட்டு லட்சம். ஆனால், இருக்கும் கோயில்களோ இருபத்து நான்கு லட்சம். இதில், பதிவு செய்யப்பட்ட கோயில் மூன்றாயிரம் கோயில்கள்தான். தினமும் ஒரு கோயிலைக் கட்டுவது, ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?''
இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது, அதைக் கண்டித்துத் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டபோது, உங்களது அமைச்சரவையில் உள்ள ஓர் அமைச்சர் எச்சரிக்கும் விதமாக அறிக்கை வெளியிடுவது நியாயமானதா? ``அமைச்சரின் அறிக்கையில் என்ன சொன்னார்: `இது எங்கள் நாட்டுப் பிரச்னை. நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.

நீங்கள் தலையிடாதீர்கள்' என்றுதான் சொன்னார். இந்தப் பிரச்னையில் மேலும் மேலும் இங்கிருந்து அறிக்கை கொடுத்தால், அங்கே என்ன நடக்கும்? ஐந்நூறு பேர் சாவார்கள்.

அங்கிருக்கும் இந்தக் குழுவினர் மலாய்க்காரர்களைத் தாக்கிப் பேசி வருகின்றனர். 1969-இல், 1989-இல் நடந்த வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் நாங்கள் மறந்துவிடவில்லை. இந்த நேரத்தில் நமக்குச் சமாதானம்தானே தேவை.இவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் இருந்து ஒரு சில குழுக்கள் மலேசியாவுக்கு வந்து, இந்துக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தூண்டி விடுகின்றனர்.

அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும், பாதிக்கப்படுவது மலேசியாவில் உள்ள நாங்கள்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.''


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com