Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

தமிழர் திருநாள்
க.தி. பூங்கோதை

பொங்கல் திருநாள், தமிழகம் போற்றும் பொன்விழா! உலகம் முழுவதும் வாழும் ஒன்பது கோடித் தமிழ் மக்கள் அனைவரும் சாதி, சமயம், கட்சி, நாடு முதலிய வேறுபாடுகளை மறந்து கொண்டாடும் தமிழ் இனத் திருவிழா! உள்ளத்தில் உவகையும், எண்ணத்தில் எழுச்சியும், இதயத்தில் மலர்ச்சியும் ஊட்டும் இன்பத் திருவிழா! இதனால்தான், இவ்விழா தமிழரின் திருநாளாகப் போற்றப்படுகிறது; தமிழருடைய தேசியத் திருவிழாவாகப் பெருஞ்சிறப்புடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது!

festval பொங்கல் விழாவை ஏன் கொண்டாடுகிறோம்?

“மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த
மழைகுளிர் வாடையை வீழ்த்தி
விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம்!
வெளியெலாம் விளைவினைக் கண்டோம்!
பண்ணிடைக் கலந்த தமிழ்ச்சுவை போல
மனத்திடைப் பரந்ததே இன்பம்!
கண்ணிடை மகிழ்ச்சி; கருத்திடைத்
தெளிவு கண்டனம்! வாழ்த்துவோம் பொங்கல்!''

எனக் கவிஞர் வாணிதாசன் பொங்கல் விழா வினைக் கொண்டாடுவதற்குரிய காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அறுவடைத் திருநாள்

மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது தேவைப்படுவது உணவு. நம் நாட்டின் முதன்மையான உணவுப் பொருள் அரிசி. “வயிற்றுக்குச் சோறிட வேண்டும்! இங்கு வாழும் உயிர்களுக்கு எல்லாம்! என்று இக்காலக் கவிஞர் இதையே எடுத்துரைக்கின்றார். இதையே, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!'' என்று சங்க காலச் சான்றோர்கள் அறிவித்துள்ளனர்.

உணவுப் பொருள்களைப் பயிரிடும் தொழில் உழவுத் தொழில். உழவுத் தொழிலில் ஈடுபட்ட மக்கள் அயராது உழைத்த உழைப்பின் பயனைக் காணும் நாள் அறுவடைத் திருநாள்! அந்நாள் மக்களினத்தின் மகிழ்ச்சித் திருநாள்!

காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து, மனிதனின் உணவுப் பொருள்களைத் தேடி அல்லற்பட்ட காலம் ஒன்று உண்டு! மனிதன், அக்காலத்தில் காட்டுவாழ் நாகரிகமற்ற மனிதனாக இருந்தான்.

அக்காலத்தில் தன்னைத்தான் காத்துக் கொள்ள முயலுவதே முதன்மையான நோக்கமாக இருந்தது.

ஆனால், அவன் ஆற்றங்கரை ஓரங்களில் வாழக் கற்றபொழுது, நிலத்தை உழுது, பயிரிடும் கலையினைத் தெரிந்து கொண்டான். உணவுப் பொருள்களைத் தேடி அலைவதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களைத் தாமே உற்பத்தி செய்ய அவன் முனைந்தான்! அதனால், தேவைக்கு மிகுதியான உணவுப் பொருளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறையையும் அவன் அறிந்தான். இதன் பயனாக ஓரளவிற்கு ஓய்வு பெறவும் முடிந்தது. ஓய்வு நேரத்தைப் பிறவற்றைப் பற்றிய சிந்தனையிலும், செயலிலும் பயன்படுத்த அவன் முயன்றான். அதன் விளைவாக எண்ணத் தெரிந்து, கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் முன்னேற்றம் கண்டான்! தன்னைப் பேணிக் காப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த மனிதன், தன்னுடைய உள்ள உணர்ச்சிகளை ஆளுமையைத் திருவிழாக் கொண்டாட்டங்களாகவும், ஆடல், பாடல் போன்ற கலைகளாகவும் வெளிப்படுத்த தொடங்கினான். இக்கால கட்டத்தில் தோன்றியதே உழவர் பலரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் உழவர்த் திருநாளாகிய அறுவடைத் திருநாள்!
உழவுத் தொழிலிற்குப் பேருதவி புரியும் இயற்கைச் சந்திரன், சூரியன், அச்சூரியனைத் தெய்வமாக மதித்துப் போற்றி, நன்றிக்கடனைத் தெரிவிக்கும் வழிபாட்டை இயற்கைத் தெய்வ வழிபாட்டை அவன் அறுவடைத் திருநாளில் சிறப்பு மிக்க செயலாக மேற்கொண்டான். `சூரிய வழிபாடு' உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முறையிலேயே தோன்றி வளர்ந்து உள்ளதைக் காணுகின்றோம். உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக ஆதியாக இருக்கின்ற கண்கண்ட தெய்வமான சூரியனையே, திருவள்ளுவர் `ஆதிபகவான்' என்று போற்றியுள்ளார்.

மருதநிலை நாகரிகத்தின் தனிப்பெரும் விழா!

உலகம் முழுவதிலும் நாகரிகம் மலர்ச்சி அடைந்தது ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்த நகரங்களிலேயாகும். இந்த நிலப்பகுதியை நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் `மருதநிலம்' என்று போற்றியுள்ளனர். மருத நிலத்திலேயே தமிழருடைய நாகரிகம் உச்ச கட்டத்தை அடைந்தது. வேளாண்மைப் பொருளாதார அடிப்படையில் சங்க காலத் தமிழருடைய நாகரிகம் பெருவாழ்வு பெற்றது. அக்காலத் தமிழகத்தில் கலைமகளும் திருமகளும் கலை நடம் புரிந்தனர்.

சமுதாயத்தின் அடிப்படையாக முதுகு எலும்பாக உழவர் பெருங்குடி மக்களே விளங்கினர். அரசர்களுடைய வெற்றிக்கு மூலகாரணமாக விளங்குவது உழவுத் தொழிலினால் விளையும் பயனே என்பது நம் முன்னோரின் நம்பிக்கையாகும்.

“வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப்
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!''
என்பது வெள்ளைக்குடி நாகனாரின் கருத்தாகும்.

இதையே திருவள்ளுவர். `உழவு' எனும் தலைப் பில் பலவாறாக விரிந்துரைத்துள்ளார். இதனை,

“கழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'' (குறள் 1031)

“உழுவார் உலத்தார்க்கு ஆணி'' (குறள் 1032)

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'' (குறள் 1033)

எனும் குறட்பாக்களைப் போன்று உழவுத் தொழில் சிறப்பையும், உழவர் தம் மாட்சியையும் உலகில் வேறெந்தப் புலவரும் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கவில்லை.

“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172)

எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' இலட்சியத் தினை வெளிப்படுத்தும் திருவிழாவாகச் சங்க காலத்தில் பொங்கல் விழா சிறப்புற்று விளங்கியது. தங்கள் உழைப்பின் பயனை, அறுவடை செய்து உழவர்கள் வீட்டில் கொண்டு வந்து குவித்தனர்.

புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக அக்காலத்தில் `பொங்கல் திருநாள்' பொலிவுற்றது. இதனை முந்துவிளையனார் “நாள் புதிது உண்ணும்'' திருநாளாகவே அக்கால அறிஞர்கள் போற்றி உள்ளனர்.

கூடல் மாநகரில், புலவர் பெருமக்கள் பலர் கூடிப் புதிய இலக்கியப் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்ததைப் புலவர் ஒருவர், உழவர் பெருமக்கள் கொண்டாடும் “புதிதுண்ணும் திருவிழாவாக'' உருவகப்படுத்தியுள்ளமை இக்கருத்தைத் தெளிவுறுத்துகிறது
.
“செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப் புலனாவுழவா
புதுமொழி கூட்டுண்ணும் புரசைசூழ் நல்லுர்''
(கலித். 68)

இவ்வாறு சங்க காலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,

“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''
(சிலப். 5:68-69)


எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.

உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத தேவை மழை! இதன் சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவர், கடவுளைப் போற்றும் அதிகாரத்திற்கு அடுத்து, மழையின் சிறப்பைக் கூறும் பகுதியை அமைத்துள்ளார். “வான்மழையால் தான் வையகத்தில் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. மழை பெய்யாமல் போகுமானால், உலகைப் பசி துன்புறுத்தும்; மழை வளம் குன்றுமானால், உழவர்கள் உழவுத் தொழிலைச் செய்ய மாட்டார்கள்'' என்று பலவாறாக மழையின் சிறப்பினைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். இதனை நன்குணர்ந்த முத்தமிழ் வித்தகரான இளங் கோவடிகள்,

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்''

என்பதனோடு அமையாது.

“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''


jallikattu என்று மழையையும் வாழ்த்திப் போற்றியுள்ளார்.

பொங்கலிடும் முறை

“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!'' என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும். ஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை இரண்டே அடிகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

“மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''
(சீவக. சிந். 1821)

இதனால், செந்தீ மூட்டிப் புதப்பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்க லாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்.

சமயங்கள் போற்றும் `சங்கராந்தி'

சங்க காலத்தில் சமயச் சார்பற்ற நிலையில் “பொங்கல் விழா'' வினைக் கொண்டாடும் பழக்கம் தொடங்கியது. பல்லவர் ஆட்சிக் காலத்தையொட்டி, அது இந்திய சமயங்கள் பலவற்றாலும் போற்றப்படும் திருவிழாவாக மாற்றம் அடைந்தது.

சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியினால், பக்தி இயக்கம் தமிழகத்தின் பல புதிய சாதனைகளைச் செய்யலாயிற்று. சூரியனை `உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு' என்று சைவர்கள் போற்றினர். வைணவர்கள் திருமாலிடம் கதிரவனைக் கண்டனர்.

“கடி மலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனே?
(நாலா. பிரப. 926)

இரு சமயத்தினரும் போற்றிய சூரியனை மையமாகக் கொண்டு, இரு சமயவாதியரையும் இணைக்கும் பாலமாக `சங்கர நாராயண' வழிபாடு ஒன்று தோன்றியது. அவ்வழிபாட்டிற்குரிய திருநாளாகத்தை மாதத்தின் முதல் நாளைத் தேர்ந்து எடுத்தனர். வராகமிகிரர் போன்ற இந்திய வானூல் அறிஞர்களின் காலத்தில், சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வடபகுதி, சூரியனுக்கு நேராகவும் நெருக்கமாகவும் இயங்கும் நிலை, தை மாதத்திலேயே தொடங்கியது. இதனைச் சூரியனு டைய `வடதிசைப் பயணம்' (உத்தராயணம்) எனப் புராணங்கள் கூறும் இந்நாளைப் புனிதமான திருநாளாகச் `சங்கராந்தி' எனும் பெயரால் வைதீக சமயத்தினர் கொண்டாடத் தொடங்கி இளந் தமிழகத்தின் சைவ, வைணவ சமயங்களும் `சங்க ராந்தித் திருநாளைப்' பெருவிழாவாகப் போற்றின.

கல்காட்டும் சங்கராந்தி

சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.

பேரரசன் இராச ராச சோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அவள் வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராசராசன் தந்தையான சுந்தர சோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளாள். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டு வதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டுவந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை மாநிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அவள் அளித்துள்ளாள்.

இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது. கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.

உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். `உரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான்.

சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், `பொங்கல் சோறு' எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் `பொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

`உத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் `சங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல் வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங் கல் விழா, `உத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரை யில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்.

வெளிநாட்டவர் கருத்தைக் கவர்ந்த பொங்கல்விழா

(கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போர்ச்சுக் கீசியர் இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்'' (Manners and Customs of the Hindoor) எனும் நூலினை எழுதியுள்ளார்.

அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழாவினை' நன்கு சித்திரித்துள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும், சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் விழாவை, நான்கு நாள்கள் கோலாகல மாக நம் மக்கள் கொண்டாடினர். இன்று பெரிதும் `இருநாள் விழா'வாக மாறிவிட்டது. ஆனால், அப்பே டூபாய் வந்த காலத்தில், நான்கு நாள்கள் பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாள்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் செய்யப்பட்ட தாம். வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுப்ட்டனராம்.
தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் பொங்கல் விழாவின் தொடக்க நாள் அன்று, விடியற்காலையில் வீட்டு முற்றத்தில் தீயிலிட்டுக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை, “சொக்கப்பனை'' கொளுத்தி விழா வினைத் தொடங்கினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியால், தமிழருடைய `துப்புரவு மனப்பான்மை' வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் சுட்டத் தவறவில்லை. மறுநாள், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் `மஞ்சு விரட்டு' போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அவர் கண்ணோட்டப்படி ஏழை எளிய மக்களின் பெருந்திருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்கியமை இனிது புலனாகின்றது
.
தேசியத் திருவிழா

இந்நூற்றாண்டின் முற்பகுதியில், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கா.நமசிவாய முதலியாய் விளங்கினார். தமிழ் மக்கள் இடையே `பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்' தோன்றி, அவர்களை ஒற்றுமை அற்றவர்களாகவும், பண்பாட்டு பாரம்பரியத்தைப் புறக்கணிப்பவர்களாகவும் செய்து வருவதைக் கண்டு உள்ளம் புழுங்கினார்.

சாதியாலும், சமயத்தாலும், மூட நம்பிக்கைகளாலும் பிளவு பட்டு விளங்கும் தமிழ்ச் சமுதாயத்தை ஒன்று படுத்துவதற்கு வழிவகை ஒன்றை அவர் கண்டார். அதுதான் “பொங்கல் திருவிழா'' சமயச் சார்பற்ற முறையில் தமிழரின் தேசியத் திருவிழாவாக அதை மாற்றி அமைக்க அவர் முயன்றார்.

மாமழை போற்றும் திருநாளான பொங்கல் நன்னாளை, ஞாயிறு போற்றும் பொங்கல் திருநாளை சமயவாதிகளால் `சங்கராந்தியாக'க் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை நாகரிகக் கோரிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக நகரத்து மக்களால் கருதப்பட்ட பொங்கல் விழாவை, உழவர் திருநாளாக, பாட்டாளி மக்கள் பழங்கணக்கைப் பார்க்கும் பொங்கல் திருநாளாக, அறிஞர்கள் போற்றும் அறிவுத் திருநாளாக, கலைஞர் போற்றும் கலைவிழாவாக, தமிழரிடையே மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் தமிழர் திருநாளாக, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக மாற்றியமைத்த பெருமை பேராசிரியர் நமசிவாயரையே சாரும்.

ஐரோப்பிய நாகரிக மோகத்தில் மூழ்கிக் கிடந்த மேட்டுக்குடி மக்களுடைய கருத்தைக் கவரும் வகையில், பொங்கல் திருவிழாவிற்கு வலிவையும் வனப்பையும், பொலிவையும் பொன்றாப் புகழையும் தேடித் தந்தவர் நமசிவாயர் என்பதை நம் நாட்டு வரலாறு பறைசாற்றும்.

சென்னை நகரில் 1934, 1935-ஆம் ஆண்டுகளில் தமிழரின் தேசியத் திருநாளைச் சீரோடும், சிறப்போடும் பேராசிரியர் `முப்பெருநாள் விழாவாகக்' கொண்டாடினார். முதல் நாள் உழவர் திருநாளாகவும். இரண்டாவது நாள் புலவர் திருநாளாகவும். மூன்றாம் நாள் கலைஞர் திருநாளாகவும். அவர் 1936 இல் எதிர்பாரா வகையில் திடுமென இயற்கை எய்தினார். ஆயினும், அதற்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் புலவர் பெருமக்களால், `தமிழ்த் தேசியத் திருநாளாக' கொண்டாடும் வழக்கம் பரவி விட்டது.

மறுமலர்ச்சி இயக்கமும் தமிழர் திருநாளும்

தமிழகத்தின் தன்மான இயக்கமும், அதில் இருந்து கிளைத்த திராவிட இயக்கமும் தமிழரின் தேசியத் திருநாளை, இந்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் புதியதோர் ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடப்படும். தேசியத் திருவிழாவாகப் பெருவாழ்வு பெறுமாறு செய்தன. 1945 அளவில், ஒருவர் மற்றொருவருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் `பொங்கல் வாழ்த்து' முறையை இம்மறுமலர்ச்சி இயக்கமே வழக்கத்திற்குக் கொண்டு வந்தது.

பேரறிஞர் அண்ணா 1946-இல் “தமிழகத்தின் மே தின விழாவே பொங்கல் விழா'' என்பதை அறிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கலைஞர்களும் ஒன்றுகூடித் தமிழ்த் தாய்க்கு எடுக்கும் `தமிழ்த் திருவிழாவாக' `தமிழ்க் கலை விழா'வாகப் பொங்கல் விழாவை மாற்றிய சிறப்பும் பெருமையும் காஞ்சித் தலைவருக்கே உரியதாகும். பாவேந்தர் பொங்கல் திருநாளை,

“உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப் பொங்கல் விழாவாகும்''
எனவும்
“பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வின்
புத்தாண்டு தைம்முதல் நாள் பொங்கல் நன்னாள்!''

எனவும் பொங்கல் நன்னாளிற்குப் பொலி வூட்டினார்.

திருவள்ளுவர் திருநாள்

தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப் பெருந்தலைவரான அறிஞர் அண்ணாவின் தம்பியர், தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலுக்குரிய விழா நாளினைத் “திருவள்ளுவர் திருநாளாக'' கொண்டாட முன்வந்தனர். இது பொங்கல் திருநாளின் வரலாற்றிலே உண்டான மாபெரும் திருப்பு மையமாகும்.

நம் நாட்டில் அறிவியல் வளர்ச்சியுற்று வருகிறது. தொழில் புரட்சி தோன்றியுள்ளது. பலதுறை அறிவு பெருகிக் கொண்டே போகிறது. இந்நிலையில், உழவுத் தொழிலுக்கு மாட்டைப் பயன்படுத்துவதும் குறைந்து கொண்டே வருகிறது. வருங்காலத்தில் மாடுகளின் உதவி இல்லாமல் உழவுத் தொழில் செய்யப்படும் ஒருநாள், நம் நாட்டிலும் தோன்றக்கூடும். இக் காலத்திலேயே நகரங்களில் வாழ்வோர் பெரும்பாலும் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவதே இல்லை!

கிராமங்களில் வாழ்பவரே, உழவுத் தொழில் செய்பவரே, அன்று பொங்கல் இட்டு மாடுகளுக்குப் படைத்து விழா எடுக்கின்றனர். காலப் போக்கில் இவ்விழா மருவிப் போவதற்குரிய அறிகுறிகள் தோன்றியுள்ளன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்ட தமிழக அரசு, தொலை நோக்குடன், மாட்டுப் பொங்கலைத் திருவள்ளுவர் திருநாள் என்று அறிவித்து, பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்று, தமிழக அரசு குறள் நெறியை நாட்டில் பரப்பும் நற்பணியை நல்ல முறையில் செய்து வருகிறது

. அறிஞர்களுக்கும், முத்தமிழை வளர்த்து வரும் சான்றோர்களுக்கும் பட்டங்களுக்கும், பரிசுகளையும் அளித்துப் பாராட்டு செய்து வருகிறது. இந்தப் பணி போற்றி ஆதரிக்கத் தக்க அரும்பணியாகும்
.
இவ்வாறு, பொங்கல் திருவிழாவிற்கு அடுத்த நாளை, திருவள்ளுவர் திருநாளாக அமைந்தமை பலவகையில் பொருத்தமான செயலாகும். பொங்கலுக்கு மறுநாள் வருவதால், இந்நாளை எளிதில் மக்கள் நினைவில் கொண்டு போற்றிக் கொண்டாடுவதற்குப் பெருவாய்ப்பு அளிக்கப் பட்டு வருகிறது.

மனித குலத்தின் துன்பத்தைத் துடைக்க தோன்றியவர் திருவள்ளுவர். அவர் தமிழகத்தில் தோன்றியது உண்மை! ஆனால், அவர் அனைத்துலக மனிதனைப் பாடும் பாவலராகப் போற்றப் படும் உயர்நிலையை எய்தியுள்ளார். உலக சிந்தனையாளரின் முன்னணியில் அவர் அமர்ந்துள்ளார்.

எனவே, அவர் உலகின் சொத்து; செல்வம் குறுகிய பற்றுகளையும், வீணான வெறுப்புகளையும் கடந்த உலகச் சான்றோரான திருவள்ளுவரை நினைவுகூர்வதற்கும், அவருடைய `பொதுமறையை' உணர்ந்து போற்று வதற்கும் ஆண்டில் ஒரு நாளைத் திருநாளாகப் போற்றுவது சாலவும் பொருத்தமாகும்
..
தமிழுக்கும், தமிழர்களுக்கும் புகழைத் தேடித் தந்துள்ள திருவள்ளுவருக்கு விழா எடுக்கத் தயங்கும் தமிழன் யாராகிலும் இருக்க இயலுமா? இயேசு பெருமான் பிறந்து 335 ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்மஸ் பண்டிகை, கொண்டாடும் வழக்கம் தொடங்கியது. இப்பண்டிகையை எந்த நாளில் கொண்டாடுவது என்பதில் தொடக்கத் தில் சிக்கல் இருந்தது. இறுதியில் திசம்பர் 25 ஆம் நாளைத் திருநாளாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தனர். இத்திட்டத்தின்படியே கிறிஸ்து பெருமானின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டி வருகின்றனர்.

இதைப் போன்று, திருவள்ளுவர் திருநாளினை மாட்டுப் பொங்கல் அன்று யாவரும் கொண்டாடுவதன் மூலம், வருங்காலத் தமிழருக்கு ஒரு புது வழியைக் காட்டுபவராக அமைகிறோம். தமிழர் களுடைய ஆண்டின் தொடக்கத்iத் தை முதல் நாளாகக் கொள்ளுவதால் எத்தகைய சிக்கலும் உண்டாகாது.

கி.பி.1752க்கு முன்பு ஐரோப்பியர், மார்ச்சு மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டிருந்தனர். போப்பு கிரிகோரின் அரசு முயற்சியாலேயே, கி.பி. 1752 ஆம் ஆண்டு முதல், சனவரியைக் கிறித்துவ ஆண்டின் முதல் மாத மாகக் கொண்டு, ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.
நம் தமிழ் நாட்டில், சங்க காலத்தில் ஆவணியே ஆண்டின் முதல் மாதமாகப் போற்றப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே, சித் திரையை முதல் மாதமாகக் கொள்ளும் முறை தோன்றியது.

சமய சார்பற்ற முறையில் நாம் ஈராயிரம் ஆண்டுகள் கழித்து, திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம்.

1978 முதல் திருவள்ளுவர் திருநாளுக்கு அடுத்த நாளை உழவர் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு `பொங்கல் விழா முப்பெரும் திருநாள் விழாக்களாக இன்றைய தமிழருடைய வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற் றுள்ளது. தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் கலை விழாவாகப் போற்றப்படும் சிறப்பை அடைந்துள்ளது.

(இக்கட்டுரை ஆசிரியர்
தமிழறிஞர் க.திருநாவுக்கரசர் மகளாவார்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com