Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

இராமர் பாலம் உள்ள இடம் எது?
இரா. மதிவாணன்

இராமன் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் எனக் கூறுகிறார்கள். இராமன் பாலத்தின் நீள அகலம் என்ன? அது உள்ள சரியான இடம் எது என அவர்களால் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. அது தொன்மைச் சின்னமாகவோ வழிபாட்டு இடமாகவோ எக்காலத்திலும் இருந்ததில்லை.

அனுமனும் குரங்குப் படைகளும் பெரிய பாறாங் கற்களை வீசியெறிந்து பாலம் அமைத்ததாக இராமாயணக் கதையில் கூறப் பட்டுள்ளது. இது மோனியர் வில்லியம்சு தொகுத்த சமற்கிருத அகராதியிலும் உள்ளது.

ஆகவே, இராமன் பாலம் மணற்பாலம் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட கற்பாறை நெடுங்குவியல்கள் தலைமன்னாரிலிருந்து இராமேசுவரம் மண்டபம் வரையுள்ள 30 கல் தொலை வில் எவராலும் கண்டறியப் படவில்லை. அப்படியானால், இராமர் பாலம் இருந்த இடம் எது?

mathivanan வால்மீகி இராமாயணத்தில் மகேந்திர மலையிலிருந்து கடலைத் தாவி வான்வழியாக அனுமன் தென்னிலங்கை சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதி லிருந்தே இப்பொழுதுள்ள இலங்கைக்கும் இராமாயணக் கதைக்கும் தொடர்பில்லை என்பதும் நிலநடுக் கோட்டுப் பகுதியில் இன்றைய (சாகோ) யாகோ கார்சிகா தீவுகள் உள்ள இடத்திலிருந்த தென்னிலங் கையே இராவணன் இருந்த பகுதி என்பதும் நன்கு அறியப்படுகிறது.

கடல்கொண்ட தென்னாட்டில் மாவிந்த மலையில் சிவபெருமான் நால்வர்க்கு நான்மறைகள் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாவிந்த மலையே இராமாயணத்தில் அனுமன் போய் நின்ற மகேந்திர மலையாகத் தெரிகிறது.

இராமர் பாலத்தின் நீளம்

சேது என்னும் இராமன் பாலம் 100 யோசனை நீளமும் 10 யோசனை அகலமும் கொண்டது என அகராதிகளில் கூறப்பட்டுள்ளது. சமற்கிருதத்தில் வானநூல் உயர்நிலைக் கணிதம் ஆகிய அனைத்துக் கலைகளும் உள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கு ஒரு யோசனைத் தொலைவு எத்தனை மைல்களைக் குறிக்கும் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு அகராதி 5 மைல் என்கிறது. மோனியர் வில்லியம்சின் சமஸ்கிருத அகராதி 8 மைல் முதல் 10 மைல் ஆகலாம் என்கிறது.

யாழ்ப்பாணத்து கதிரை வேற்பிள்ளை அகராதி ஒரு யோசனை என்பது 20 மைல் என்கிறது. சமற்கிருதச் சொற்களுக்குச் சரியாகப் பொருள் சொல்லத் தெரியாத நிலையில் சமற்கிருதத்தின் பெருமையை உலகம் முழுவதும் பேசிக் கொண்டு திரிகிறார்கள்.


மேற்கண்ட அகராதிகளின்படி யோசனை 5 மைலைக் குறிப்பதாகக் கொண்டால் இராவணன் ஆண்ட தென்னிலங்கை நில நடுக்கோட்டிலுள்ள தியாகோகார்சிகா - (சாகோ) தீவுப்பகுதிகளில் அதாவது 500 மைலுக்கு அப்பால் இருந்திருக்க வேண்டும்.

சுமத்திரா கடலில்

இராமர் பாலம்

ஒரு யோசனை 20 மைல் என்னும் கணக்கை ஏற்றுக் கொண்டால் இராமர் பாலம் 2000 மைல்களுக்கு அப்பால் சுமத்திரா தீவுப் பகுதிக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும்.

2000 மைல் தொலைவுக்குக் கல்லும் மணலும் நிரப்பி அணை கட்டுவதாக இருந்தால் உலகத்திலுள்ள அனைத்து மலைகளையும் அடியோடு பெயர்த்துப் போட்டாலும் போதுமா என்று சொல்ல முடியாது.

அதற்கு எத்தனை நூற்றாண்டுகளாகியிருக்கும் என்றும் சொல்ல முடியாது. இராமாயணத்தில் 5 நாள்களில் பாலம் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்து மாக்கடலில் பெரிய பாறாங் கற்களை வீசியெறிந்து உண்டாக்கிய இராமர் பாலம் எங்கிருக்கிறது எனக் கண்டறியும் முயற்சியில் வட நாட்டு இராமர் கோயில் குழுப் பெருமக்கள் ஈடுபட்டால் இதுவரை புலப்படாத உண்மைகள் வெளிவரும் என நம்பலாம்.

இம சேது பரியந்தம் என்னும் சொல்லாட்சியும் 1767 ஆம் ஆண்டு நிலப் படத்திலும் செப்புப் பட்டயத்திலும் சேது குறிக்கப் பட்டிருக்கிறது என்னும் செய்தியும் அகழ்வாராய்ச்சியால் புலப்பட வேண்டும். சேது என்னும் சொல்கரை அல்லது எல்லை என்றே பொருள்படும்; பாலத்தைக் குறிக்காது.

இமயம் முதல் சேது வரை இந்திய எல்லை என்றால் அதற்குத் தெற்கேயுள்ள குமரிமுனை எங்கே போய் விட்டது. வேற்று நாட்டார் ஆட்சியில் அடங்கிவிட்டதா? என்பதும் தெரிவிக்க வேண்டும். இமசேது பரியந்தம் என்னும் சொல்லாட்சி தோன்றியதன் பின்னணியை விளங்கிக் கொள்வது நல்லது.

இமயம் முதல் குமரி வரை என்பதுதான் வழக்கம். இமயம் முதல் இராமேசுவரம் என்பது வழக்கமில்லை.

ஆனால், சமயம் தொடர்பாகப் பேசும்போது 108 திருத்தலங்கள் 1008 திருத்தலங்கள் என வரிசைப் படுத்திக் கூறுவது உண்டு. திருமாலின் திருத்தலங்களைக் கூறுவோர் கன்னியா குறிப்பிடுவதில்லை.

இராமாயணக் கதைக்கு ஆழ்வார்களின் காலத்துக்குப் பிறகு முதலிடம் தரப்பட்டது. பெருமாள் திருத்தலங்களை வரிசைப்படுத்திக் கூறியவர்கள் இமசேது பரியந்தம் என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். வைணவம் தனி மதமாக வளர்வதற்கு முன்பு இச்சொல்லாட்சி எங்கும் வழங்கப்படவில்லை.

சேது மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பெருமாள் திருத்தலங்களையே இச்சொல்லாட்சி சிறப்பாகக் குறித்தது. சேது பாலத்தருகில் கோதண்ட ராமர் பெருமாள் திருத்தலம் அதற்கு முன்பு தோன்றவில்லை. சேதுப்பாலம் எனப்படும் பகுதியும் எக்காலத்திலும் வழிபாட்டுக்குரிய இடமாகவும் இருந்ததில்லை.

கூட்டாக வணிகம் செய்தவர்கள் சாத்து வணிகர் எனப்பட்டனர். இவர்கள் சாத (சாத்து) வாகன என்னும் பெயரில் அரசராயினர். இவர்களுடைய கிளை மரபினர் சாத்து மன்னர் - சேதி மன்னர் எனப் பெயர் மாற்றம் பெற்றனர். சேதியர் எனவும் கல்வெட்டுகள் இவர்களைக் குறிப்பிடுகின்றன. 16 ஆம் நூற்றாண்டு முதல் இராமநாதபுரம் பகுதியில் சேதியர் என்னும் சேது மன்னர் ஆட்சி புரியத் தொடங்கினர். இவர்கள் பெயரைத் தாங்கிய பகுதி சேது நாடு, சேது பாலம் என்னும் பெயர்கள் பெறலாயிற்று. எனவே, சேது என்னும் சொல் இராமாயணக் காலத்தில் இருந்ததில்லை என்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com