Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2008

சாக விரும்பாதோர்க்கு

ஆனாரூனா

கொடுங்கோலர்களின் அக்கிரம ஆட்சிக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து, மணி முடியைத் தகர்த்து, புதியதொரு வாழ்க்கையை நிர்மாணம் செய்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட மறுசீரமைப்புத்தான், குடியரசு, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தேர்தல் என்கிற இனிய கனவுகளின் தொகுப்பு.

மன்னராட்சிக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட குடியரசு முறை, மனிதர் என்பதற்கு மேலாக வேறெந்த அலங்காரத்தையோ அசிங்கத்தையோ பூசிக் கொள்ளாத எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ததா?

காலங்கள் மாறினாலும், ஆட்சி முறை மாறினாலும், வாழ்க்கை நிலை மாறவில்லை. அதே சமயம் புதிய அரசியல் முறை பல புதிய மன்னர்களை உருவாக்கி விட்டது. மன்னராட்சிக் காலத்தில் ஒருவனுக்குப் பயந்த மக்கள் ஜனநாயகத்தின் கீழ்ப் பலருக்குப் பணிந்து நடக்கும் நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.

அரசதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் நடைமுறையிலுள்ள சமூக ஏற்பாட்டினால் நன்மையடைந்தவர்கள் மாத்திரமல்ல, ஏமாற்றப்பட்டவர்களும், எரிச்சலுற்றவர்களும், வாய்ப்பற்றவர்களும், வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் கூட களமிறங்கி விடுகிறார்கள்.

ஒருபுறம் ஜனநாயகவாதிகள், இன்னொருபுறம் பயங்கரவாதிகள்.ஆனால், இந்த ஜனநாயகத்துக்கும், பயங்கரத்துக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. வரலாற்றில் இதுவரை கண்ட காட்சிகளின்படி, ஜனநாயகமே பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கிறது. பயங்கரவாதமே ஜனநாயகத்தைக் காதலிக்கிறது.

உண்மையில் இன்று அறிமுகமாகியிருக்கும் ஜனநாயகம் என்பது சொத்துரிமை ஜனநாயகமே! அதாவது முதலாளித்துவ ஜனநாயகமே! முதலாளித்துவ ஜனநாயகம் என்னதான் `பேரழகி'யாகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டாலும், அதன் உள்ளடக்கம் பயங்கரமானதே! இது 'அரசு பயங்கரவாதமாக' வெளிப்படும் போது, `தனியார் பயங்கரவாதம்' தலைதூக்கி விடுகிறது.

இந்த முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் அடிப்படையான காரணம்தான் என்ன? தனிச் சொத்துரிமை தான்!

உண்மையில் சொத்து என்பதே நேர்மையற்ற கொள்ளையே! பிறக்கும்போது எந்த மனிதன் சொத்துடன் வந்தான்? பிறகு அவனுக்குச் சொத்து சேர்கிறது என்றால், எங்கோ சிலர் ஏமாற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனம். இந்தப் பகிரங்கக் கொள்ளையை அனுமதித்து விட்டு, ஆட்சிமுறை மாற்றங்களால் வாழ்க்கை முறையை மாற்ற முடியும் என்று பேசுவது ஊரை ஏமாற்றுகிற காரியம் மாத்திரமல்ல, தன்னையே ஏமாற்றிக் கொள்கிற அறியாமையும் ஆகும்.

சமுதாயப் பிரச்னைகளுக்கு மத அடிப்படையில் தீர்வுகாண விழைவது தற்கொலைக்குப் பந்தயம் கட்டுகிற காரியமாகவே முடியும். காந்தியடிகளின் `ராம ராஜ்யமும்', சங்கப் பரிவாரங்களின் `இந்துத்துவமும்', `விடுதலைப் போரின்' போக்கையே மாற்றிவிட்டது. இந்துக்கனவு இஸ்லாமியக் கனவையும் வளர்த்தெடுத்தது. இந்தியா தன்னை மதவாதியாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் இந்திய மதவாதிகளின் ஆர்ப்பாட்டம் இஸ்லாமியர்'களை ஒன்று திரட்டி விட்டது. பாகிஸ்தான் உதயமாகி விட்டது.

இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் மத உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறவர்களே! ஒருவர் மதவாதியாக இருப்பதும், அவர் கடவுளைக் கும்பிட்டுக் கொள்வதும் அவரது சொந்த விவகாரமாக இருக்கலாம். ஆனால், அது ஒருவிதமான மனநோயே என்பதை அவர் உணர்வதில்லை. ஒருவர் நோயாளியாக இருப்பது அவரை மாத்திரம் பாதிப்பதில்லை. ஆரோக்கியக் கேடு என்பது பொது நலக்கேடே!

தனிச் சொத்துரிமையின் கவர்ச்சிமிகு வெறியும், மதவாதத்தின் மூர்க்கமிகு ஆன்மீகமும் சேர்ந்துதான் பாகிஸ்தானை (இந்தியாவையும்தான்) அலைக்கழிக்கின்றன. பாகிஸ்தானின் தந்தை என்று கருதப்படும் ஜின்னாவிலிருந்து, தற்போது ஆட்சி யதிகாரத்திலிருக்கும் முஷாரப்பும், படுகொலை செய்யப்பட்ட பெனாசீரும் தனிச் சொத்துரிமைக்கும் மத உணர்வுக்கும் ஆதரவாளர்களே! பெனாசீரின் படுகொலையை நிகழ்த்தியவர்களும், அதனை ஆதரிக்கிறவர்களும்கூட சொத்துப் பிரியர்களே; `கடவுளின் பிள்ளைகளே!'

கடவுள் நம்பிக்கை பதவி ஆசையை விட மறுக்கிறது. பதவி ஆசை கடவுளைக் கடக்க மறுக்கிறது. பெனாசீரின் படு கொலைக்குப் பின்னே மதப் பயங்கரவாதமும் உண்டு, பதவிப் பயங்கரவாதமும் உண்டு. பெனாசீர் பதவிக்கு வரக் கூடாது என்பது முஷாரபின் திட்டம்.

முஷாரப்புடன் மோதியும், பேரம் பேசியும், எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்பது பெனாசீரின் நடவடிக்கை. இருவருமே அமெரிக்கக் கைப்பாவைகளே; இஸ்லாமிய எதிரிகளே என்பது மதவாதிகளின் நம்பிக்கை. இந்த மதவாத நம்பிக்கை பெனாசீரை வீழ்த்தியது போலவே, நாளை முஷாரப்பையும் தீர்த்துக் கட்டவே செய்யும்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது இந்துக்களுக்கோ, யூதர்களுக்கோ எதிரானது என்றுதான் இதுவரை நம்பப்பட்டது. ஆனால், அது இஸ்லாமியர்களையும் தீர்த்துக் கட்டும் என்று நிரூபணமாகியிருக்கிறது.

எதிரி'களைவிடவும் துரோகி'களே ஆபத்தானவர்கள் முதலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள் என்கிறது அரசியல் மூதுரை. இது இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு மாத்திரமல்ல; இந்துத் தீவிரவாதத்துக்கும், எந்தத் தீவிரவாதத்துக்கும் இயல்பானதே!

இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளைக் கொன்றது இஸ்லாமியத் தீவிரவாதம் அல்ல; இந்துத் தீவிரவாதம்தான். கோட்சே ஆதரவாளர்களின் பார்வையில், இந்துத்துவ நோக்கில், காந்தியடிகள் எவ்வளவு உருக்கமாக `ரம் தூன்' பாடினாலும் அவர் இந்துக்களுக்குத் துரோகியே!

காமராஜர் நாத்திகரல்ல, இந்துமத நம்பிக்கையுடையவர்தான். ஆனால், அவரைக் கொலை செய்யத் திரண்டவர்கள்தான் இந்துத் தீவிரவாதிகள். பெரியார், அண்ணா, கலைஞர், `காம்ரேடுகள்' அனைவருமே இந்துத்துவ நோக்கில் துரோகிகளே!

கடைசிக்கும் கடைசிப் பரிசீலனையில் `இந்து' என்று தீர்மானிக்கப்படுபவர் யார்? `இந்து' என்பது அடைமொழி பார்ப்பனர்களையே சேரும். பார்ப்பனியம் என்பதும், பாரம்பரியம் என்பதும், பாசிசம் என்பதும் வேறுவேறானவை அல்ல!

பாசிசம் ஆபத்தானது என்றால், இந்து மதமும் ஆபத்தானதுதான். வேறு எந்த மதமும் பிறவிக்குத் தகுதி கற்பித்து, பார்ப்பனரே மாந்தரில் உயர்ந்தோர் என்று அகம்பாவம் கொண்டதில்லை. பாகிஸ்தானில் நிகழும் அரசியல் படுகொலைகள் இந்திய மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்.

இந்துத்துவத் தீவிரவாதம் இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் எதிரானதல்ல, இந்துக்களையும் தீர்த்துக் கட்டும் உயிர்க்கொல்லி நோய்தான்! அத்வானி கும்பலும் அக்கிரகாரத்து அறிவு ஜீவிகளும் இந்திய அமை திக்கு எதிரானவர்களே! படுகொலைகளுக்கு ஆளாக விரும்பாதவர்களாவது ஆழமாகச் சிந்திக் கட்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com