Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

நெஞ்சில் ஒரு கனல்
உதயை மு. வீரையன்

காந்தியார் சிலைகளைத் தொடர்ந்து, இப்போது அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளைத் சிதைக்கத் தொடங்கியிருக்கின்றனர். சிலைகளை உடைப்பது என்பது வெறும் விளையாட்டுச் செயலல்ல. அந்தத் தலைவரின் கொள்கைகள் மீது தொடுக்கப்படும் போர். ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஆண்டாண்டு காலமாகக் காட்டப்பட்டு வரும் அதிகாரத்தின் தொடர்ச்சி. தங்கள் ஆதிக்கம் கைதவறிப் போய்விடுமோ என்ற ஆத்திரம்.

Train உத்திரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதாகச் செய்தி வந்ததும், மகாராஷ்டிர மாநிலமே பற்றி எரிந்தது. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும், தமிழ் நாடெங்கும் கடவுளர் சிலைகளும், அவர்களின் வீடான கோயில்களும் தாக்கப்பட்டன.

இதற்கான நெருப்பு எங்கிருந்து வந்தது? பல காலமாக ஆதிக்கச் சாதியினரின் அவமதிப்புக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்திலிருந்துதான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, பொறுக்கவே முடியாத நிலையில் பொங்கி எழுந்த மக்களின் வயிறு எரிந்த நெருப்பின் மிச்சங்கள்.

உத்திரப்பிரதேசத்தில் நவம்பர் 29 அன்று அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டமும், முழு அடைப்பும் நடத்தின.

இது வன்முறையாக மாறியது. கல்வீச்சு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

புனேயிலிருந்து மும்பை வந்த ‘டெக்கான் குயின்’ என்ற விரைவுத் தொடர்வண்டி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதன் ஏழு பெட்டிகள் தீக்கிரையாயின. உள்ளூர் வண்டியின் பல பெட்டிகளும் எரிந்து எலும்புக் கூடாயின.

மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமாயின. பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்குப் பலர் பலியாகி உள்ளனர். காவலர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே இந்தக் கலவரம் மேற்கு வங்காள மாநிலத்திற்கும் பரவியுள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் லாஸ்ராவ் தேஷ்முக் அரசுமுறைச் சுற்றுப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தார். இங்கே மாநிலம் முழுவதும் நிகழும் வன்முறையை அறிந்து, தன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பினார்.

கடந்த செப்டம்பர் 29, 2006 அன்று மகாராஷ்டிர மாநிலம் கைர்லாஞ்சியில் என்ன நடந்தது என்பதை அந்த மநில அரசும், மத்திய அரசும் கண்டு கொள்ளவேயில்லை. மக்களின் கட்டுக்கடங்காத வன்முறை இரண்டு ரயில்களைக் கொளுத்திய பிறகுதான் தலித்துகள் மீது நடந்த கொடுமைகள் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளன; அரசாங்கத்தின் கவனத்துக்கும் வந்தது.

அப்படி என்ன நடந்தது? ஆண்டாண்டு காலமாக அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றுதானே! ஆளும் வர்க்கம் அப்படித்தான் நினைக்கிறது. ஆயிரம் சட்டங்கள் இருந்தும், அவை செயலற்றுக் கிடப்பது ஏன்? சமூகக் கட்டுக்கோப்பு சீர்குலைந்து விடக்கூடாது என்ற எண்ணம்தான். அது சீர்குலைந்தால் அவர்களது சாதி ஆதிக்கத்துக்கு முடிவு வந்துவிடுமே! மனிதகுல வரலாற்றில் தலித்களின் கண்ணீரும், செந்நீரும் பாயாத பக்கங்கள் ஏது?

1968 டிசம்பர் 25. அந்த மாபெரும் சோகம் கீழ்வெண்மணியில் நடந்தது. நன்செய் செழிக்கும் தஞ்சை மண்ணில்தான் நிகழ்ந்தது. கூலி உயர்வு கேட்ட குற்றத்திற்காக, இரிஞ்சியூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் தலைமையில் ‘மிராசுதாரர் சங்க’ அடியாட்கள் தலித்துகள் மேல் தாக்குதல் நடத்தினர். உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்த ஓலைக் குடிசைகளை எண்ணெய் ஊற்றிக் கொளுத்தினர்.

உயிரோடு கொளுத்தப்பட்ட அவர்களின் ஓலங்கள் இன்னும் கேட்கின்றன. அந்த இரவில் 44 உயிர்கள் எரிந்து கரிக்கட்டைகள் ஆயின. அவர்களில் 20 பேர் பெண்கள், 19 பேர் குழந்தைகள், 5 பேர் மட்டுமே ஆண்கள். கடந்த நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனம். தலித் மக்களின் வரலாற்றில் அக்கினியால் எழுதப்பட்ட அத்தியாயம்.

கீழ் வெண்மணி படுகொலையைப் போலவே உஞ்சனை, விழுப்புரம், மேலவளவு படுகொலைகளும் மக்களின் நினைவுகளிலிருந்து மறையத் தொடங்கி விட்டன. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, சாதி வெறியர்களின் கொடூரத் தாக்குதலுக்கு பலியான மேலவளவு தலித்துகள் சிந்திய இரத்தம் இன்னும் காய்ந்துவிட வில்லை.

கொலை நடந்த விதம், வழக்கு நடந்த விதம் திகிலூட்டக் கூடியதாக இருந்தது. வழக்கறிஞர்களுக்குக் கொலை மிரட்டல்கள்; சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்கள்; ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொலையாளுக்கு அனுசரணை; இவ்வளவும் கடந்து 19-4-2006 அன்று சென்னை உயர்நீதி மன்றம் கொலையாளிகள் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியது.

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் தனிப்பட்ட பகைமை ஏதும் இல்லை. எனவே பாதிப்புக்கு உள்ளானவர்கள் தாக்கப்பட்டதற்கான ஒரே காரணம், அவர்கள் பட்டியல் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே தெரிய வருகிறது...” என்று நீதிமன்றமே கூறியது.

பொதுத் தொகுதியாயிருந்த மேலவளவு தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால் ஆதிக்கச் சாதியினருக்கு ஆத்திரம், தலித்துகள் யாரும் ஊராட்சித் தலைவர் ஆவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவரான முருகேசன் மற்றும் ஐவர் படுகொலை செய்யப்பட்டனர். அதுவும் பேருந்து மேலவளவு அக்கிரகாரம் கள்ளுக்கடை வந்தவுடன் நிறுத்தச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

1978 பீகார் மாநிலத்தில் பெல்ச்சி. இங்கும் நடந்ததை யாராலும் மறக்க முடியுமா? ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருந்த இந்திரா காந்தியை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தியது இந்த பெல்ச்சிதான். அன்று நடந்த அந்தக் கொடுமையை இந்திரா காந்தி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அப்போது பெல்ச்சி கிராமத்துக்குச் சாலை வசதிகளே கிடையாது. கிடைத்த வாகனங்களை யெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அங்கு விரைந்த இந்திரா, கடைசியாக யானைமீது ஏறி அங்கு போய்ச் சேர்ந்தார்.

தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவே அமைந்தது பெல்ச்சி. இதனால் 1980 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜனதா அரசு ஆட்சியை இழந்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். இதன் தொடர்ச்சிதான் 2006 செப்டம்பர் 29. மகாராஷ்டிரா மாநிலம் கைர்லாஞ்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் பையாலால் போட்மாங்கேயும், அவரைச் சேர்ந்தவர்களும் தில்லி வந்து பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நடந்ததை விவரித்தனர். அதன் பிறகே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தலித் சமூகத்தில் மகர் பிரிவைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினர் கொஞ்சம் வசதியும், படிப்பும் பெற்றவர்கள். அந்தக் கிராமத்தில் குன்பி-மராத்தா என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேயின் மனைவி சுரேகா அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தார். அதனால் அவர் மீது அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோபம்.

கடந்த செப்டம்பர் 29 அன்று, இரவு போட் மாங்கே ஊரில் இல்லாதபோது, குடிபோதையில் சிலர் அவர் வீட்டுக்கு வந்தனர். சுரேகாவையும், அவரது மகள் பிரியங்கா (வயது 17), மகன்கள் ரோஷன் (வயது 23), சுதிர் (வயது 21) ஆகியோரையும் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.

இரும்புக் கம்பிகளாலும், சைக்கிள் செயின்களாலும் அவர்களைத் தாக்கினர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்திக் தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்று விட்டு, கிராமத்துக்கு வெளியே உடல்களைப் போட்டுவிட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய போட்மாங்கே, அச்சத்தோடு அங்கிருந்த புதரின்பின் ஒளிந்திருந்து, இவ்வளவையும் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார். கிராம நிர்வாகியும், காவல்துறையும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘போட்மாங்கேவுக்கு பணம் கொடுத்துச் சமாதானம் செய்தாகிவிட்டது; இனி பிரச்சினை இல்லை’ என்று மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது. மாநிலக் காவல்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இன்னும் ஒருபடி மேலே போய், “நடந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம்” எனப் பழியை நக்சல்கள் மீது போட்டு விட்டார்.

இந்த நிலையில்தான் உ.பி. மாநிலம் கான்பூரில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. மகாராஷ்டிரம் பற்றி எரிந்தது. உ.பி.இல் நடந்த செயலுக்கு மகாராஷ்டிரத்தில் ஏன் இவ்வளவு பெரிய எதிரொலி என்பது இப்போது புரிகிறதா?

தலித்துகளின் கோபம் தங்கள்மேல் பாயும் என்ற கவலை காங்கிரசுக்கு வந்திருக்கிறது. தேசிய வாத காங்கிரசுக்கும் இதே கவலைதான். குன்பி-மராத்தா பிரிவினர் தலித்துகளின் கோபத்தைக் கண்டு எதிர்த் தாக்குதலாக பா.ஜ.க. தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

தலைநகருக்கு வந்து பிரதமரையும், சோனியாவையும் சந்தித்த கைர்லாஞ்சிக் குழுவில் படித்த விவரம் தெரிந்த இளைஞர்கள் இருப்பதால் இந்த வழக்கு முறையாக நடக்கிறதா என்று கவனிக்கத் தொடங்கி விட்டனர். இந்தக் கொடுமை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ‘சட்டப்படியான ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடு’ என்று பீற்றிக் கொள்ள முடியாது.

தலித்துகள் இந்நாட்டில் உரிய மரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யாவிட்டால் சமூக நீதியைப் பற்றிப் பேசுவதில் பயன் என்ன? குற்றம் புரிந்தவர்கள் மட்டுமல்ல, அதன் மீது நடவடிக்கை எடுக்காதவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போது எழுந்துள்ளது.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பி அம்பேத்கர் பிறந்த மண்ணில்தான் இந்த அநீதி இன்னும் நிகழ்கிறது. ‘மகர்’ இனத்தில் பிறந்ததினால் அவர் அடைந்த அவமானங்கள் இப்போதும் - எப்போதுமா இது?

அவர் பிறந்த நாட்டில் ஒதுக்கப்பட்டார். அவர் பிறந்த இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டார். இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு இந்த மதத்தில் இருக்க வேண்டுமா? ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், இந்துவாக இறக்க மாட்டேன்’ என்று அவர் உறுதி கொண்டார். புத்த மதத்தில் இணைந்தார். அந்தப் பொன்விழா இப்போதுதான் கொண்டாடப்பட்டது. இன்னும் இப்படியா?

அம்பேத்கரும், பெரியாரும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள். அதனால்தான் ஆதிக்கவாதிகளுக்கு அவர்கள் மீது ஆத்திரம் வருகிறது. அதனை அவர்களது சிலைகள் மேல் காட்டுகிறார்கள். எப்போதும் காற்று ஒரே திசையில் வீசிக் கொண்டிருக்காது. இந்தக் காற்று தென்றலாகவும் இருக்காது. புயலாகவும் மாறும். அப்போது அதனை எதிர்கொள்வது எளிதான செயலாகவும் இருக்காது.

இந்திய காங்கிரஸ் இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு அம்பேத்கரும் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது தேசியத் தலைவர்கள் அவரது ஆதரவு தேசிய விடுதலைக்குத் தேவை என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அம்பேத்கர் கேட்டது இதுதான்:

“நாட்டிற்கு இன்றோ நாளையோ சுதந்திரம் வந்துவிடும். இதில் கொஞ்சமும் ஐயம் இல்லை. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்போது சுதந்திரம் வரும்?...”

இந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

“தலித் மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தே வருகின்றன. 2004 ஆம் ஆண்டில் மட்டும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 38 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற வழக்குகளில் தண்டனை பெறுகின்றவர்கள் வெறும் மூன்று சதவிகிதம் பேர்தான்...” என்று தேசிய தலித் - பழங்குடியினர் ஆணையத் தலைவர் சூரஜ்பான் கூறியுள்ளார். இதற்கு முடிவு எப்போது?

இவற்றின் தொடர்ச்சியாகவே இப்போது சிலைகள் மீது தங்கள் சினத்தைக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். உயிரோடு இருப்பவரைப் பழி தீர்த்துக் கொள்ள முடிகிறது. இறந்து போனவரை என்ன செய்வது? சிலைகளைச் சீண்டிப் பார்க்கின்றனர்.

இங்கே சிதைக்கப்பட்டவை சிலைகள் மாத்திரமா? அன்பும், இரக்கமும்; நீதியும், நேர்மையும்; மானமும், மனித நேயமும். கடவுளருக்கு வீடுகட்டத் துடிப்பவர்கள் இங்கே மனிதர்களுக்கு முடிவுகட்டத் துடிக்கின்றனர். இது இவர்கள் உறங்கிக் கிடக்கும்வரைதான். விழித்துக் கொண்டு விட்டால் விடிந்துவிடும்; எல்லாம் முடிந்து விடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com