Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

விளம்பர வலைவீச்சு

வல்லிக்கண்ணன்

சமயத்துக்குத் தகுந்தபடி, இது கம்ப்யூட்டர் யுகம், இது எலெக்ட்ரானிக் யுகம், இது மின்சார யுகம் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. ஆயினும் இது விளம்பர யுகம் என்று சொல்வது எல்லா சமயங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Vallikannan சகல வழிகளிலும் பணம் பண்ண ஆசைப்படுகிற முதலாளிகள் - வாழ்க்கையின் சகல துறைகளையும் வியாபாரமாக்கி விட்ட பணாதிபதிகள் - தங்கள் வணிகப் பொருள்களை எங்கும் எப்போதும் எல்லோரிடமும் பரப்புவதிலேயே கருத்தாக இருக்கிறார்கள்.

அவர்களுடைய வியாபாரப் பொருள்களை நுகர்வோர் பெருகப் பெருகத்தானே அவர்களுக்கு லாபம் அதிகம் கிட்டும்! அதற்காக கூடியவரையில் மிகப் பலரை தங்களது சரக்குகளையே வாங்கி நுகர்வோர் ஆக மாற்றுவதற்காக பண அதிபர்கள் கவர்ச்சிகரமான விதங்களில் விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

நவீன சாதனங்களான பத்திரிகைகள், சினிமா, டி.வி. அனைத்தும் விளம்பரங்களுக்காகத் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அம்சமும் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு யோசனை கூறுவதாக, வழி காட்டுவதாக, கட்டுப்படுத்துவதாக, பயிற்றுவிப்பதாகவே பெரும்பாலான விளம்பரங்கள் இருக்கின்றன.

பலவிதமான பொருள்களையும் உற்பத்தி செய்து, சந்தையில் திணித்து, மக்களை வாங்கும்படி தூண்டுகிற தொழில் அதிபர்கள், வசதியான பெருமை மிகுந்த சுக வாழ்வுக்கு தங்கள் பொருள்கள் அவசியம் தேவையாகும் என்று மக்களை நம்பும்படி தூண்டுவதற்காகவே பத்திரிகைகளையும் ரேடியோவையும் சினிமாவையும் டெலிவிஷனையும் பயன்படுத்துகிறார்கள். கவர்ச்சிகரமாகவும், நுகர்வோருக்குப் புலப்படாத விதத்திலும், விளம்பரங்கள் மூலம் ‘மூளைச் சலவை’ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

-அதிகாலையில் எழுந்தவுடன் இன்ன பல்பொடி அல்லது பல்பசையை, இந்த பிரஷ் கொண்டு உபயோகித்தால் இன்னின்ன நன்மைகள் ஏற்படும்.

-ஷேவ் செய்து கொள்வதற்கு இந்த பிளேடுகளே மிகச் சிறந்தது. இன்ன பிரஷ் அல்லது இந்த க்ரீம் உபயோகித்து வசீகரமாக விளங்குக.

-குளிப்பதற்கு இந்த ‘பிராண்ட்’ சோப்தான் உயர்வானது... இதுவே அழகை அதிகப்படுத்தும் சோப்... சினிமா நட்சத்திரங்கள் உபயோகிப்பது இந்த சோப்பையே...

-எந்த ஷாம்பு, எந்த எண்ணெய், எந்தக் கூந்தல் தைலம் சுகமானது, சொகுசானது, உயர்ந்தது, உடம்புக்கு நல்லது...

இப்படி, உடுத்த வேண்டிய உடைகள், நவீன ஆடை தினுசுகள், அணியத் தகுந்த நகைகள், படுத்து உறங்குவதற்கு வசதியான மெத்தை ரகம், தலையணை ஈறாக சகல பொருள்கள் பற்றியும்-

கக்கூஸில் பயன்படுத்தப்பட வேண்டிய சௌகர்ய சாதன அமைப்புகள், வர்ணங்கள் மற்றும் படுக்கை அறையில் தாம்பத்திய உறவின் போது உபயோகிக்க வேண்டிய ரப்பர் உறை முதலிய அந்தரங்க விஷயங்கள் உட்பட அனைத்து விவரங்கள் குறித்தும்-

விளம்பரங்கள் மக்களிடையே தனி ருசியை உண்டாக்குவதற்கு முயல்கின்றன.

Advertisement அத்தியாவசியத் தேவைகள் போக, இதர பொருள்களை உபயோகிக்கத் தூண்டுகிற விளம்பரங்களும் கவர்ச்சிகரமாக அமைக்கப்படுகின்றன. சிகரெட் வகைகள், டீ, காப்பி மற்றும் பல்வேறு பானவகைகள், மது தினுசுகள், சாக்லெட் - பிஸ்கட் - ரகங்கள்-

தலைவலி மாத்திரைகள், ஜலதோஷ நிவாரணிகள், சோர்வை அகற்றக் கூடிய சத்துப் பொருள்கள்-
இவ்வாறு மக்களின் வாழ்க்கையை முற்று முழுதாக மாற்றி அமைக்க ஆசை காட்டுகிற விளம்பரங்கள் எப்போதும் பார்வை வழியாகவும், செவிப்புலன்கள் வழியாகவும் சகல தரத்தினரையும் சகல வயதினரையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அவற்றால் வசீகரிக்கப்படுகிற சிறு பிள்ளைகள் வாய்ப்பாடு போலவும், இன்னிசை மாதிரியும் விளம்பர வாசகங்களை நீட்டி முழக்குவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். அவை உபதேசிக்கிறபடி பிஸ்கட், சாக்லெட், பான வகைகளை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று பெற்றோரை நச்சரிக்கிறார்கள்.

பேட்டன்ட் மாத்திரைகள், மருந்து வகைகள், மற்றும் நிவாரணிகள் வலி பற்றிய கவர்ச்சிகர விளம்பரங்கள் - அம் மருந்துகள் தரக்கூடிய நன்மைகள் பற்றி புகழ்ந்து பேசுகிற விளம்பரங்கள் - மக்களை வெகு எளிதில் மயக்கி விடுகின்றன. அவர்கள் அவற்றை நம்பி, டாக்டர் எவரையும் நாடாமலே, எந்தவிதமான மருத்துவ ஆலோசனைகளும் இன்றி அம்மருந்துகளை வாங்கி இஷ்டம் போல் உபயோகிக்கிறார்கள். அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் உபயோகிக்கிறார்கள். இதனால் பாதகமான விளைவுகளும், எதிர்பாராத வேதனைகளும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

இளைஞர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் வசீகரிப்பதற்காக வணிக முத லாளிகள் விளம்பரங்களில் கவர்ச்சித் தூண்டில்களாகப் பெண்களைப் பயன்படுத்தத் தயங்குவதேயில்லை. பெண்களுக்கு உபயோக மில்லாத பொருள்களைப் பற்றிய விளம்பரங்களில்கூட, அரை குறை ஆடையுடன் கவர்ச்சிகரமாக போஸ் கொடுக்கும் பெண்கள் காட்சி தருவது இன்றியமையாத அம்சம் ஆகி விட்டது.

உடை மற்றும் அலங்காரப் பொருள்களுக்கு ஸெக்ஸ் உணர்வைத் தூண்டும் கவர்ச்சி சுலோகங்களும், கிளு கிளுப்பு ஊட்டும் பெண் உடல் தோற்றங்களும், கொஞ்சிக் குலாவும் ஜோடிகளின் உருவங்களும் காட்சிப் படுத்தப்படுகின்றன.

இந்த ரீதியில் வாழ்க்கை முறைகள், பொழுது போக்கு, கேளிக்கைகள் முதலியவற்றோடு வியாபாரமும் பின்னிப் பிணைந்து, மக்கள்மீது பெரும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மக்களை அவரவர் தேசிய கலாசாரங்களையும் சுய விருப்பு வெறுப்புகளையும் வளர்க்க விடாது, முதலாளித்துவ கலாசாரம் அவர்களது அறிவையும் சிந்தனைத் திறனையும் மழுங்கடிப்பதிலேயே கருத்தாக இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார, கலாசார வாழ்வில் விளம்பர நிறுவனங்கள் வலிய சக்தியாக இயங்குகின்றன.
அவை பணநாயகர்களுக்கு மேலும் பணம் சேர்த்துக் கொடுக்கும் நோக்கத்தோடும், தொழிலதிபர்களின் தயாரிப்புகளை அதிகம் அதிகமாக உபயோகிக்கத் தூண்டும் விதத்தில் விளம்பரங்களைப் பரப்புகின்றன.

அவ்விளம்பரங்களில் கையாளப்படுகிற உத்திகள், வாசகங்களில் மேலைநாட்டுக் கலாசாரங்களின் - முக்கியமாக அமெரிக்காவின் - தாக்கங்கள் எடுப்பாகவே தெரியக்கிடக்கின்றன.

மக்கள் உள்ளத்தில் பேராசைகளையும், வீணான எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் விதைக்கின்றன அவை. சாதாரண நடுத்தர வர்க்க மக்களையும் மேற்குடி மக்கள் போல் வாழ வேண்டும் என்று எண்ண வைத்து, ஆடம்பரமான, போலித்தன வாழ்க்கைப் போக்குகளை ‘காப்பி அடிக்கும்படி’ வழி நடத்துகின்றன.

பணத்தின் ஆற்றலையும், சொகுசு வாழ்க்கையின் இனிமைகளையும், செக்ஸ் தொடர்புகளையும் பற்றி இளைஞர்களை ஏங்கச் செய்து, அவர்களைத் தறிகெட்டுப் போகும்படி உந்துகின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com