Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

முரசும் அரசும்

முனைவர் மு. வளர்மதி

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாசறைக் கருவியாகத் திகழ்ந்தது முரசு. வீரத்தின் அடையாளமாக, வெற்றியின் சின்னமாக, எதிர்ப்பின் குரலாக, எச்சரிக்கை உணர்வாக, மகிழ்ச்சியின் ஒலியாக முழங்கி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய தோற்கருவி முரசு. இசைக்கருவி அல்லது தோற்கருவி வரிசையில் இது வீரமுழவு. ஒரு தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்று குறிக்கப்படும் மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தில் ஒன்றாகச் சிறப்பிடம் பெற்றது முரசு.

Murasu போரிட்டு வென்ற அழகிய காளையின் தோலை மயிர் சீவாமல் போர்த்தப்பட்ட செய்தியைச் சிலப்பதிகாரமும், புறநானூற்றுப் பாடலும் எடுத்துக் காட்டுகின்றன. தோற்கருவிகளில் மிகப் பெரிய கண்ணையுடையது முரசு. ஒலிக்கும் இடம் அகன்ற பரப்புடையது. உரல் போன்ற வட்டமான வாயையுடையது. தோலால் போர்த்தப்பட்ட கண்ணின் மீது குறுந்தடியால் ஓங்கி அடிக்கும் பொழுது எழுப்பும் பேரொலியே முரசொலியாக ஒலித்தது. இடிஓசை எழுப்பும் முரசாகவும், இன்னிசை எழுப்பும் முரசாகவும் பிற தாளக் கருவிகளுடன் இணைந்து இசைக்கும் கருவியாகவும், தனித்து இயங்கும் கொட்டு முரசாகவும் முழங்கியது.

வாத்தியமரபு என்ற இசைநூலின் 87, 88, 89 ஆவது பாடல்கள் முரசின் இலட்சணம் பற்றிக் குறிப்பிடுகின்றன. அதில்,

கொட்டவென் றெடுத்தொரு மேளமது
குலாவியதைச் சுத்தினிறைக் கச்சமது
வட்டமாய் அதிலிருக்கும் வளையமது
வாகுபெற யிருவாய்த் தட்டுமது
இட்டமாய் அதிலிருக்குங் கண்களது
இயல்வாகக் கோக்கின்ற கயிறது
தட்டுதனை இறுக்குகின்ற திரிகளது
தாக்குகின்ற கம்பது சொல்லுவீரே

(வாத்தியமரபு, அ.நா.பெருமாள், ப.115)

என்ற பாடல் வரிகள் முரசுக்குரிய அமைப்பை எடுத்துக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட முரசைச் செய்வதற்கென்று தமிழர் சில மரபுகளையும் பின்பற்றி வந்துள்ளனர். முரசு செய்வதற்குக் கடம்ப மரத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். அரசனின் கருவியாகவும் அரண்மனைக்கு உரியதாகவும் திகழ்ந்ததால், வீரத்தால், வெற்றியால் கிடைத்ததைக் கொண்டு முரசு செய்யும் மரபை வைத்திருந்ததை இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.

“பகைவர் பலர்கூடி நின்று காத்த மலர்ந்த பூக்களையுடைய கடம்ப மரத்தினை, காவலமைந்த அடியோடு தடிந்து ஒழிக்குமாறு வீரரை ஏவி, போரை வென்று முழங்கும் முரசு. பகைவரது காவல்மரத்தை வெட்டி அதைக் கொண்டு முரசு செய்தல் மன்னர் இயல்பு” என்று எடுத்துக் காட்டுகிறது பதிற்றுப்பத்து (இரண்டாம் பத்து - பதிகம்)

‘கடலைக் கடந்து சென்று காவல்மரமாகிய கடம்பினை வெட்டி வீழ்த்தி, அதனால் செய்யப்பட்ட வெற்றி தரும் பெரிய முரசு’ என்றும் (பதிற். 17)

மோகூர் மன்னனுடைய காவல் முரசைப்பற்றி, அவன் உரைத்த வஞ்சினத்தைச் சிதைத்துத் தன்னையும் பணிவித்து, அவனுடைய காவல் மரமாகிய வேம்பினையும் அடியோடு வெட்டி வீழ்த்தி, முரசு செய்வதற்கேற்பச் சிறு துண்டங்களாகத் தறித்து, வண்டியிலேற்றி யானைகளை அதனையீர்க்கும் பகடுகளாகப் பூட்டிச் செலுத்தினான்” (பதிற். ஐந்தாம் பத்து 44) என்றும் இலக்கியம் காட்டும் சான்றுகள் யாவும் முரசு என்பது எத்துணை வீரம் செறிந்தது என்பதை அறிவிக்கின்றன.

மாக்கண் முரசு, வெங்கண் முரசு, மயிர்க்கண் முரசு, கடிப் பிகு முரசு, குணில்வாய் முரசு, படுகண் முரசு, வலம்படு முரசு, வென்றெறி முரசு, புள்வாய் முரசு, கடிமுரசு, வெண்முரசு, மணிமுரசு, வண்முரசு, கோல மார் முரசு, பிளிறுவார் முரசு, துணைக்குரல் முரசு, இடியுறழ் முரசு, வார்பிணி முரசு, கணைக் குரல் முரசு, ஏமமுரசு, கொற்ற முரசு, மாமுரசு, வெற்றிமுரசு, மங்கல முரசு, மண்ணுறு முரசு என்று முரசின் வகைகளையும், முரசின் அமைப்புகளையும் அறியும்பொழுது பண்டைத் தமிழர் தம் வீரத்தைக் கருவிகள் மூலம் காட்டிய நுண்ணறிவை வியக்காமல் இருக்க முடியுமா?

முரசின் இயல்பு பேரொலி எழுப்புவதுதான். முரசுகள் பல வகை; பல்வேறு பொழுதுகளில், பல்வேறு வேறுபட்ட ஒலிகளை எழுப்பி அதனதன் தன்மைகளை உணர்த்தக் கூடியதாக, அந்த ஒலிப்புகள் அதற்குரிய செய்திகளை அறிவிப்பதாக அமைந்துள்ளன.

பாசறைகளில் பகையரசர் நடுங்குமாறு முரசு முழங்குகிறது. முழங்குவது முரசு. ஆனாலும், ‘பொங்கு போர் முரசம் ஆர்ப்ப’ ‘கரம்பயில் முரசினம் கறங்க’ ‘முரசதிர்ந்தது’ என்று அதன் பேரொலித் தன்மையைக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, இடியோசை போல முரசு பேரொலி எழுப்புகிறது என்பது இலக்கியத்தில் எப்படியெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதற்கு ஒரு சில சான்றுகள் மட்டும் இங்கு காட்டலாம்.

வார் முரசம் ஆர்க்கும் (பு.வெ.மா. உழிஞை, 9.2:37), முழங்கு மதிரு முரசம் (பு.வெ.மா. வாகை 4.2.4), உரந்தலைக் கொண்ட உரும் இடிமுரசம் (பத்து, திருமுருகா. 121), பேய்க்கண் அன்ன பிளிறு கடிமுரசும் (பத்து. பட்டின.236), இடியுமிழ் முரசம் (அக.நா.354:2), இடியிசை முரசம் (பதி. 66.4), இடியென முழங்கு முரசு (புற.நா. 17.39), உரும் இசைமுழக்கு என முரசம் இசைப்ப (புற.நா.373), அதிர்குரல் முரசம் நாண (சீவக. 543.2), அதிர்குரல் முரசு (பெருங். 1.49.86), இடிக்கண் முரசு (பெருங்.2.2.166), இடிக்குரலின முரசு (கம்ப.பால. 710.2), இடிக்குரல் முரசதிர் (கம்.பால.808.2) என்று அதன் பேரொலித் தன்மை சுட்டிக் காட்டப்படுகிறது.

இடியென ஒலிக்கும் இந்த வீர முரசை முழக்கும் பொழுது செந்தினையைக் குருதியோடு கலந்து தூவிப் பலியிட்டு, நீராடி வார்க்கட்டமைந்த முரசத்தின் கண்ணில் குருதி பூசி, வலக்கையில் கடிப்பினையேந்தி, வீரர் தொடி அணிந்த தம் தோளோச்சி, புடைத்து முரசினை முழக்கியதாகக் கூறுகிறது பதிற்றுப்பத்து (இரண்டாம் பத்து.19).

காவல் செய்யவும், ஏவல் செய்யவும், வெற்றியையும், விழாவைக் கொண்டாடவும், பலவேறு பொழுதுகளில் முரசுகள் ஒலித்தன.

போர்ச் செய்தியை அறிவிக்கும் முரசொலி முழங்கியது. அத்துடன் “ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் நாட்காலத்தே ஒலிக்கும். கட லொலிபோல முழங்கும் ஓசையையுடைய நன்றாகிய முரசைச் சாற்றினராய் விழாவினை நாட்டிலுள்ளார்க்குச் சொல்லுவர். பேயின் கண்ணையொத்தது முழங்குகின்ற காவலையுடைய முரசம். பகைவரது முரசைக் கைக் கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரசினையும் கைப்பற்றுவர். கடிப்பினை யோச்சி அறைதலால் முரசு, போர் வீரரை முன்னேறிச் செல்லுமாறு ஏவுதலைச் செய்கின்றது. வேந்தன் பணிக்கும் ஏவலைத் தன் முழக்கத்தால் உணர்த்தும் பெருமையுடைமை தோன்றப் போர் முரசை ‘ஏவல்வியன் பணை’ எனச் சிறப்பித்தனர்.

போரெனப் புகலும் மறவரின் வேட்கைக் கொப்பப் போர்மேற் செலவினை ஏவும் குறிப் பிற்றாதலின் முரசின் முழக்கம் ‘இன்னிசை யிமிழ் முரசு’ எனப்படுகிறது. போர்ப்பறையும் முரசும் பிற இசைக் கருவிகளும் கூடி இசைக்கப்படும். அது ‘விரவுப் பணை முழங்கொலி’ எனப்பட்டது. முரசு வெற்றியை உண்டாக்கும். வெற்றியும் விழாவும், கொடையும் குறித்து முழங்கும் மூவகை முரசுகளுள் வெற்றி முரசே வேந்தர்க்குச் சிறந்தது. வலம்படு முரசு என்றதும் அதனால்தான். மன்னனின் எறிகின்ற முரசம் இவ் உலகத்திற்குக் காவலென்று கூறும்படியாக ஒலியா நிற்கும். ஆகவே அது ஏமமுரசு. தோற்று ஓடும் மன்னர்கள் தம் முரசங்களைக் கைவிட்டு ஓடுவர். அரண்மனைக் காவலர் மாலையில் முரசம் முழங்குகின்றனர். அது மாலை முரசம் ஆகும். குருதிப்பலி கொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப் பொருந்தியது வீரமுரசம். முரசம் மூன்று, வீரமுரசு, நியாய முரசு, தியாக முரசு என்பன. மணமுரசுடனே ஏனைய இரண்டையும் கூட்டி மூன்றென்றும் கூறுவர்” (தமிழர் தோற்கருவிகள், ஆர், ஆளவந்தார், ப.99).

முரசு எனப் பெயர் ஒன்று எனினும், பல்வேறு சூழல்களில் பல்வேறு ஒலிகளை எழுப்பவல்ல முரசுகளைப் பயன்படுத்தி வந்தனர் தமிழர்கள். முரசு அரசனுக்கு உரியது எனினும், முரசை அறைந்து ஒலிக்கச் செய்தவர்கள் தோள்வலிமிக்க படைவீரர்களும், காவலர்களும்தான்.

முரசவாகை, முரசஉழிஞை ஆகிய சொற்கள் வீரம் மிகுந்த முரசின் தன்மையை, அதன் நிலைமையைச் சொல்லும் (பு.வெ.) துறையாகத் தமிழிலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

‘முரசு கட்டில் என்பதைக் காட்டும் வகையில் (புறநானூற்றுப்பாடல்) அதன் சிறப்பைப் புலவர் மோசிகீரனார் எடுத்துரைத்துள்ளார். முரசு கட்டிலில் அறியாது உறங்கிய தனக்குக் கவரி வீசிய சேரமானின் அரிய பண்பைப் போற்றி பாடிய பாடலில்,

‘மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம்’ (புறநா.50)

வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என்னை’ என்று குறிப்பிடும்பொழுது முரசை அழகுபடுத்தி அதற்கென்று தனியான கட்டில் அமைந்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார் புலவர் மோசி கீரனார்.

பழங்காலத்தில் கொடி என்பது ஆட்சி, அரசு, மன்னர் சார்புடையதாக அமைவது பொதுப் பண்பாகும். கொடியுரிமை அரசனுடையது என்பதால் முரசு முழங்க அதை நாட்டுமாறு அவனே கூறுகிறான்.

“முரசொடு நெடுங்கொடி முழங்க நாட்டுக
விரைவொடு படுவென வேந்த னேயினான்”
(நீல. 226)

என்று முரசுக்கு அரசன் முதலிடம் வழங்குவதைக் காணலாம். முரசமெல்லாம் பரிப்பார் (காப்பவர்) படுதலான் இருந்து கெடும். பராமரிப்பு இன்றேல் முரசம் கெடும். முரசும் அரசும் இயைந்தே கூறப்படும். அரசன் பெருமை இழந்தால் முரசின் பெருமையும் போகும் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது. தமிழரின் சிறப்பைச் சொல்ல இன்னும் எத்தனையோ உண்டு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com