Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

புதுமைக் கவிஞர் விக்டர் ஹ்யூகோ

ஷான் கோதான்

Victor Hugo திறனாய்வுச் சாதனம் என்ற முறையில் “புதுமைப்பாணி” என்னும் கோட்பாடு தனது பயனுடைமையைப் பெருமளவில் இழந்துவிட்டது. தவறாக வழிச் செலுத்தப்படும் ஒருதலையான இலக்கியக் கோட்பாட்டிற்கு முட்டுக் கொடுக்கும் ஆதாரமாக அல்லது பகுத்தறிவின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத முட்டுப்பாடுகளை மூடிமறைக்கும் சாதனமாக மட்டுமே இன்று அது பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தின் பேரில், அது களைந்தெறியப்பட வேண்டியதாகும். புதுமைப் பாணியின் தீவிர ஆதரவாளர் எனத் தம்மைக் கூறிக்கொண்ட பாடிலேர் என்பார், ஒரு முரண்பாட்டின் அடிப்படையில் தமது நோக்கினை அமைத்துக் கொண்டார். “உருவமற்ற அருவ அழகின் வெறுமையில்” வீழ்ந்துவிடாமல் தவிர்க்கும் பொருட்டு, “நிலையுறுதியற்ற கண நேர அம்சம்” ஒன்றை உருவாக்குவதே புதுமைப் பாணி என்று அவர் கருதினார். நிலையுறுதியற்ற நாகரிகப் பொருள்களை ஓவியமாகத் தீட்டிய கான்ஸ் டாண்டின் கேய்ஸ் என்ற நீர்வண்ண ஓவியர் பற்றிய கட்டுரையில் “புதுமைப் பாணி”யை வரையறுக்க முனைந்த பாடிலேர். ஓர் ஆதாரப்பொருள் அணுகு முறையை அல்லது நுதல் பொருள் அணுகுமுறையைக் கையாண்டார்.

விக்டர் ஹியூகோவைத் திறனாய்வு செய்வதற்கு இந்த அணுகு முறை போதுமென எனக்குத் தோன்றவில்லை. தொடக்க நிலையிலேயே ஹியூகோ தமது கோட்பாட்டியலான எழுத்துக்களில், ஆதாரப்பொருள் ஆய்வுகளிலிருந்து விலகிச் சென்றுவிட்டார் எனலாம். “பழைய நடையில் கவிதை எழுதுவோம். ஆனால், சிந்தனைகள் புதியனவாக இருக்கட்டும்” என்பது ஆண்ட்ரே சேனியர் கூறிய பொன்மொழி. கவிதை எனது ஒரு அலங்காரம் என்பதை இது உணர்த்துகிறது. இதனை ஹியூகோ சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். அவரைப் பொறுத்தவரையில், இந்த வேறுபாடு பொருளற்றது. “ஐரோப்பிய இலக்கியம்” என்ற இதழில் 1833இல் எழுதிய ஒரு கட்டுரையில், “ஒரு கருத்து, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவத்தைக் கொண்டிருப்பதில்லை” எனக் கூறிய ஹியூகோ “கலை எதுவும் எந்தச் சூழ்நிலையிலும், உயிர்வாழ விரும்பினால், வடிவம் பற்றிய வினாக்களைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

1830ஆம் ஆண்டிலேயே இலக்கியப் புரட்சிக்கும், அரசியல் புரட்சிக்குமிடையே ஒரு பிணைப்பினை ஹியூகோ ஏற்படுத்தினார். அரசியல் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அவர் இதனைச் செய்தார். என்று யாரும் கூறமுடியாது. “சிந்தனைகள்” என்ற இவரது கவிதைத் தொகுப்பிலுள்ள “கண்டனத்திற்கு மறுமொழி” என்னும் கவிதையை இவரது உள்மனத்தின் வெளிப்பாடாகக் கருதலாம். “எல்லாச் சொற்களும் சரிநிகரானவை; சுதந்திரமானவை; முதிர்வடைந்தவை என நானொரு விதி செய்தேன்” என்று இவர் எழுதியபோது, “கவிதைமொழி என்பது வேறுபல நுட்ப மொழிகளிலேயே ஒரு தனிவகை வடிவம்” என்ற மரபுக் கொள்கையை உடைத் தெறிந்தார். “மக்களைப் போலவே கவிதையும் சுதந்திரமும் இறையாண்மையும் உடையது” என்பது இவரது கருத்து.

“கவிதையானது, பண்டைய விதிமுறைக்கோ வழக்காற்று விதிகளுக்கோ இனியும் உட்பட்டிருக்காது. பண்பாட்டுப் பாரம்பரியத்தில் தனக்குரிய பங்கினைக் கோரவும், அதே சமயம் தற்செயலாக உருவாக்கப்பெற்ற நல் வாய்ப்புகளைப் பற்றிக் கொள்வதற்கும் கவிதைக்கு உரிமையுண்டு. இவ்வாறு கவிஞன் மீண்டும் உணர்ச்சியைப் புண்படுத்தும் மனிதனாகின்றான்” என்கிறார். இது, ஓர் ஆத்திரமூட்டும் கூற்று, என்ற போதிலும், ‘கவிஞனே மெய்ஞ் ஞானி’ என்பது ஹியூகோ கோட்பாட்டின் நடுவாண்மையாக இருக்கிறது என்ற உலகக் கண்ணோட்டத்தில் நோக்குங்கால், கவிதை தனது புனிதச் சுரப்புத் திறனை இழந்து விட்டதாகத் தோன்றுகிறது.

கவிதையை உலகியல் சார்புடையதாக்குவது ஹியூகோவின் அரசியல் கொள்கையின் இணை பிரியா அம்சம். இதனை, பழிப்புத் தன்மைக்காகவே அவர் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதிலிருந்து அறியலாம். இது நற்சுவையைத் திட்டமிட்டு அவமதிப்பதாகும். சூதாட்ட விடுதிகளிலும், விலைமாதர் இல்லங்களிலும், சேரிகளிலும் வழங்கும் இழி சொற்களை உருவகச் சொற்களாக்கி, மூன்றாம் நெப்போலியனையும், அடிருடிகளையும் இழிவுப்படுத்துவதன் மூலம், அவர் தமது சமகாலத்து நிலைக்களன் முழுவதையுமே கண்முன் கொண்டு வருகிறார்; மெய்யியல்பின் கூறுகள் அனைத்தையும் உருவாக்கிக் காட்டுகிறார். ஒரே குலையில் செயல்களையும் கனவுகளையும் ஒருங்கிணைத்து விடுகிறார்.

நயம் மிகுந்த நடையில் வேண்டுமென்றே முரண்பாடுகளைச் சித்தரிக்கும் திறன், பழிப்புக்குரியவை எனத் தாம் கருதியவற்றை அதே பழிச் சொல்களாலேயே வருணிப்பதற்கு அவருக்குக் கைக்கொடுக்கிறது. “உணர்ச்சிக்கனிவு” என்ற கவிதை, முற்றிலும் புதுமையானதும், சற்றும் எதிர்பாராததுமான பொருள் பற்றிப் பேசும் ஒரு புரட்சிக் கவிதையாகத் திகழ்கிறது.

சமகாலத்துச் சச்சரவுகளில் துணிந்து இறங்கு வதை ஒரு கவிதைச் செயலாகவே ஹியூகோ கருதினார். மனித குலத்தின் கடந்த காலத்தையும், பஞ்ச பூதங்களுடன் மனிதகுலத்தின் உறவு நிலையினையும், அதன் எதிர்காலக் கனவுகளையும் ஒரு காவியமாகப் படைப்பதற்கு இது வாய்ப்பளிக்கும் என அவர் நினைத்தார். காப்பியம் என்பது, உண்மைப் பொருளையும், உருவகப் பொருளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மரபிலக்கிய வடிவம். அதில் வரலாறு புராணமாகும்; புராணம் வரலாறாகும். இந்த இலக்கிய வடிவம் தமது குறிக்கோளை அடைய உறுதுணை புரியும் என்பது அவரது அசையா நம்பிக்கை. ஹியூகோ தமது இறுதிக்காலத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற “வரலாற்றுப் புராணங்கள்” “ஒருநாள்”, “சாத்தானின் இறகு”, என்ற மூன்று கவிதைகளிலும், மரபுக் கவிதை நடையினை, அவர் கவிதையில் கையாள முயன்ற பாமர மொழிநடை வெற்றிகொள்ள முயன்றிருப்பதைக் காணலாம் இவ்விரு நடைகளுக்குமிடையிலான போட்டியினாலேயே, இக் கவிதைகளை இவரால் முடிக்க இயலாமற்போயிற்று என்று சிலர் கூறுவது பொருந்தாது; மாறாக, இந்தப் போட்டிக்கு அடையாளமாக அவர் வேண்டுமென்றே இக்கவிதைகளை முடிக்காமல் விட்டுச் சென்றார் என்பதே பொருந்தும்.

“குற்றச்சாட்டுக்கு மறுமொழி” என்னும் கவிதையில், ஒரு புரட்சிக் கவிஞன், கூட்டத்தினர்க்கு எழுச்சியூட்டுவதற்காக வீரா வேசமாக உரையாற்றுகிறான். 1789 ஜூலை 12 அன்று ஒரு பாறையில் ஏறி நின்று மக்களிடையே வீரவுரையாற்றிய காமில் டெஸ்மோலின் என்ற புரட்சிக் கவிஞரை இதில் ஹியூகோ சாடையாகக் குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டிலின் “சொல்லணிக்கலை” என்ற நூலை ஹியூகோ படித்தாரா என்பது தெரியவில்லை. அதில், யாப்பியல் ஒலி மாத்திரை முறையின் அடிப்படையிலேயே அரிஸ்டாட்டில் தமது கொள்கையினை வகுத்திருக்கிறார். ஒரு நாவலரின் சொல்வன்மையும், ஒரு பாவலரின் பாவன்மையும் இயல்பான சொல்லாற்றலிருந்து வேறுபட்டவை அசை அளவினைக் கணிக்கக்கூடிய, “எச்சரிக்கையான இலக்கண மீறுகை’ அதில் அடங்கியுள்ளது. விக்டர் ஹியூகோவைப் பொறுத்த வரையில் ‘எதையும் சொல்லாமல் விட்டுவிடலாகாது’ என்ற கடமையுணர்ச்சியுடன் அவர் செயற்பட்டமையால், இத்தகைய கட்டுப்பாடுகளும், வரம்புகளும் அவரை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘உருக்காட்சிகள்’ என்னும் சொல்லாட்சி மிக முக்கியமானது. கவிதைப் புரட்சிக்கான ஆதாரக் காரணங்களுள் ஒன்றாக அது அமைந்துள்ளது. தனது படைப்பாற்றலை விளக்கும் ஓர் உரைநடை நூலிலேயே இச்சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது இன்னும் சிறப்பானதாகும். உருக்காட்சியினை நிதானமாகக் கையாள வேண்டுமென அரிஸ்டாட்டில் கோட்பாட்டாளர்கள் கூறுவர். இத்தகைய உருக்காட்சியை கருதலாகாது. “ஏழைபடும்பாடு” என்னும் உரைநடை நூலிலாயினும் சரி, “சிந்தனைகள்” என்னும் கவிதைத் தொகுப்பிலாயினும் சரி, இந்த உருக்காட்சி ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட “கவிதைச் சாதனமாகக்” கையாளப்பட்டுள்ளது. எனினும், ஹியூ கோவின் செயலாற்றுத்திறனை வெறும் உருவகங்களாக மட்டும் வரையறுத்துக் கூறி விட முடியாது.

ஒப்புமை உருவதும், குழு உக்குறி முதலியன அடங்கிய உவமையணிகள், அண்டம் பற்றிய ஒருங்கிணைந்த மனக்காட்சியை உருவாக்கிக் காட்டும் நோக்குடையன. இந்த மனச் சாட்சியைத் திட்டவட்டமான வடிவங்களில் இவர் தோற்றுவித்திருக்கிறார்.

கிடைத்தற்கரிய மெய்யறிவை நாடும் முடிவிலா இயக்கத்தின் கண்ணோட்டத்தில் நோக்குங்கால், செய்யுளுக்கும் உரை நடைக்குமிடையே வேறுபாடு உண்டு என்பதில் சிறிதும் பொருளில்லை. ஏனெனில், உரைநடை கூட கவிதையாக அமையலாம்; மேலும், கவிதையின் தரமானது. ஒரு குறிப்பிட்ட வகைச் சொல்லாட்சியைப் பொறுத்ததன்று. ஹியூகோவின் கவிதை நூல்களில். “அழகிய” வரிகளுக்குக் குறைவில்லை. மனதைச் சுண்டியிழுக்கும் ஆற்றலுடன் கவிதையைத் தொடங்குவதில் அவர் வல்லவர். அதேபோல், மறக்க முடியாத முடிவும் அவர் கவிதையில் அமைந்திருக்கும். அத்துடன், எதுகை மோனை நிறைந்த அடுக்குச் சொல்லமைப்பும், சந்த நயமும் அவரது கவிதைகளில் நிறைந்திருக்கும். எனினும், உச்ச நிலைக் கவித்துவத்தை எட்ட அவர் முனைந்த தில்லை. அவருடைய முழுநிறைவான கவிதை எனக் கருதப்படும் “உறக்க போதை” என்ற கவிதையில் கூட அவருடைய இந்தப் பண்பினைக் காணலாம்.

ஹியூகோ பெருமுயற்சியுடைய ஓர் எழுத்தாளர். அவர் ஒரு முன்மாதிரி மாணவராகத் திகழ்ந்து, கலை நுணுக்க அறிஞராக மாறியவர். அவர், பல்திறன் வாய்ந்த, பரபரப்பூட்டும் கவிஞர், மரபான மேனாட்டுச் சிந்தனைப் பழக்கங்களிலிருந்து அவர் அடிக்கடி விலகிச் செல்கிறார். அவருடைய நூல்களில் காணப்படும் சில சிறப்பியல்புகள் ஃபிரெஞ்சுப் பண்பாட்டு மரபின் பண்புகளுக்கு ஒத்ததாக இருந்த போதிலும், அவருடைய அணுகுமுறையை புரட்சிகரமானது என்றே சொல்லவேண்டும். ஏனெனில் அது அவருக்கே உரித்தான கொள்கைப்பற்றுடன் முற்றிலும் ஒத்திசைவாக விளங்குகிறது.

ஹியூகோ தமது “சிந்தனைகள்” என்ற கவிதைத்தொகுப்பிலுள்ள “ஃபிரான்சில் ஓர் ஓய்வு அறை” என்னும் கவிதையில், “அந்த மாபெரும் முழுமுதற் பொருளின் மீது கண்கள் இமைக்காமல் நிலைக்குத்தி நின்றன?” என்று குறிப்பிடுகின்றார்.

இதில் புதியதொரு சொல்லணிக்கலைக்கு அவர் அறை கூவல் விடுப்பதைக் காண்கிறோம். “முழு முதற்பொருள்” என்ற சொல்லாட்சி, வரலாற்றுக் காலத்தைத் தொட்டு, அதற்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கிறது.

இது, புறப்பொருள் பாவியலைவிட எழுச்சியூட்டும் பாவியலையே வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ‘புறவுலகை’ நோக்கி உந்திச் செல்வதை விவரிக்கும் ஒரு சாதனமாக படைப்புச் செயல் மாறுகின்ற போது, அது ஆக்கயான உண்மைப்பொருள் எதுவும் இல்லாததாகி விடுகிறது. இதனை “புதுமைப்பாணி” என்று அழைப்பதை நான் எதிர்க்கவில்லை.

தாந்தேயும், சேக்ஸ்பியருங்கூட புதுமைப் பாணியினர்தாம். எல்லா அம்சங்களையும் கவனிக்கும்போது, “புதுமைப்பாணி”யை இவ்வாறு வரையறுத்துக் கூறுவது, கான்ஸ்டாண்டின் கேய்சின் ஆரவாரப் பகட்டுரைகளைவிட, பயனுள்ள முறையில் இலக்கியச் செய்திகளை விரித்துரைப்பதற்கு உதவியாக இருக்கும். அத்துடன், விக்டர் ஹியூகோவை நாம் கண்டுணர்ந்து கொள்ளவும்.

“வில்லியம் சேக்ஸ்பியர்” என்ற அவரது புகழ் பெற்ற நூலில் அவரே விவரித்துள்ளார். “சம நிலையாளர்களின் உலகில்” அவருக்குரிய இடத்தைக் குறித்தமைக்கவும் இது துணை புரிகிறது.


சீனாவின் கோடைக்கால மாளிகை அழிவு

சீனப்படையெழுச்சி பற்றி என்னைக் கேட்டிருக்கிறீர்கள். இப் படையெழுச்சி மதிப்புக்கும் புகழுக்குமுரியதென நினைக்கிறீர்கள். என் உணர்ச்சிகளையும் மதிக்கும் அன்பு உங்களிடமிருக்கின்றது. உங்கள் கருத்தின்படி, விக்டோரியா அரசி, பேரரசன் நெப்போலியன் ஆகியோரின் கொடிகளின் கீழ் கூட்டாக நடைபெற்ற சீனப்படையெழுச்சி ஃபிரான்சும் இங்கிலாந்தும் பகிர்ந்து கொள்ளவேண்டிய புகழாகும். இந்த ஆங்கிலேய, ஃபிரெஞ்சு வெற்றியை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறேன் என்று அறிய விரும்புகிறீர்கள்.

எனது கருத்தை அறிய நீங்கள் விரும்புவதால், அதை இங்கு கூறுகிறேன்.

உலகின் ஒரு மூலையில் ஓர் உலக அதிசயம் இருந்தது. அதற்குக் கோடைக் கால மாளிகை என்பது பெயர். கலைக்கு இரு அடிப்படைகள் உண்டு. அவை ஐரோப்பியக் கலையை உண்டு பண்ணும் கருத்தும், கீழ் நாட்டுக் கலையை உண்டுபண்ணும் விசித்திரக் கற்பனையுமாகும். கருத்துக் கலைக்கு கிரேக்க பார்த்தினன் இருப்பது போல், கோடைக்கால மாளிகை விசித்திர கற்பனைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. மனிதத்தன்மை மிக்க மக்களின் கற்பனையில் பிறக்கக் கூடிய அத்தனையும் அங்கிருந்து அது பார்த்தினனைப் போல் ஒரு தனிப்படைப்பன்று. அது விசித்திரக் கற்பனைக்கு ஒரு மாபெரும் மாதிரியாக இருந்தது. விவரிக்க முடியாத ஒரு கட்டிடத்தை, ஒரு நிலாக் கட்டிடத்தை எண்ணிப்பாருங்கள்.

அதுதான் கோடைக்கால மாளிகை. பளிங்கு பச்சைக்கல், வெண்கலம், பீங்கான் ஆகியவற்றினால் ஒரு கலவை உருவாக்குங்கள். அதைச்சுற்றி அகில் மரச்சட்டம் அமையுங்கள். அதில் மணிக்கற்களைப் பதியுங்கள், அதில் பட்டுத் துணி தொங்கவிடுங்கள். இங்கு ஓர் ஆலயம், அங்கு ஓர் அந்தப்புரம் மற்றோர் இடத்தில் கோட்டை கட்டி அங்கெல்லாம் தெய்வங்களையும் பூதங்களையும் வைத்து பொன்னும், வண்ணமும், இனாமலும் பூசுங்கள். ஆயிரத்தொரு இரவுகளின் ஆயிரத்தொரு கனவுகளைக் கலைஞர்கள் கட்டட்டும். அங்கு தோட்டங்களும். நீர்நிலைகளும் நீரூற்றுகளும் அமையட்டும். அன்னங்களும் நாரைகளும் மயில்களும் கூடட்டும். சுருங்கச் சொல்லின், ஆலய அரண்மனை முகப்புள்ள ஒளிமிகு விசித்திரக் குகையைக் கற்பனை பண்ணுங்கள்.

அதுதான் இம்மாளிகை, அதைப் படைக்க பல தலைமுறையாயின. நகர் போன்ற இப்பெரிய கட்டிடம் பல நூற்றாண்டுகளாக யாருக்காக கட்டப்பெற்றது! மக்களுக்காக, ஏனெனில் காலத்தின் பணி மனிதனுக்குச் சொந்தம். கலைஞர், கவிஞர், தத்துவஞானிகள் கோடைக்கால மாளிகையை அறிந்திருந்தனர். வால்ட்டேர் அதைப்பற்றிக் கூறுகிறார். கிரேக்க பார்த்தினன், எகிப்திய பிரமிடுகள், ரோமானியக் கொலீசியம், பாரிஸ் நோத்தர்தாம் ஆலயம், கீழ்நாட்டு கோடைக்கால மாளிகை ஆகியவை பற்றி மக்கள் பேசி வந்தனர். அவர்கள் அதைப் பார்க்காவிட்டாலும் அதைக் கற்பனை செய்தனர். அது தெரியாத ஒருவகை மாபெரும் கலைப் படைப்பாக இருந்தது. ஐரோப்பிய நாகரிகத்தின் நிழலுருவம்போல் மங்கிய ஒளியில் தொலைவில் அது தெரிந்தது.

இந்த அதிசயம் மறைந்துவிட்டது!

ஒரு நாள் இரு கொள்ளையர் கோடைக்கால மாளிகையிலும் நுழைந்தனர். ஒருவன் கொள்ளையடித்தான்; மற்றவன் கொளுத்தினான். வெற்றி என்பது திருட்டாக இருக்கலாம். இரு வெற்றியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோடைக்கால மாளிகையை அழித்தனர். நம் பேராலயங்கள் எல்லாவற்றின் கருவூலங்கள் எல்லாம் இவ்வரிய கீழ் நாட்டு அருங்காட்சியகத்திற்கு ஈடாக அங்கு கலைப் படைப்புகள் மட்டுமின்றி அணிகலன்களும் அபரிமிதமாக இருந்தன. எவ்வளவு பெரிய கொள்ளை, எவ்வளவு எதிர்பாரா இலாபம்! ஒரு கொள்ளையன் தன் பைகளை நிரப்பினான். இதைப் பார்த்த மற்றவன் தன் பணப் பேழையை நிரப்பினான். இருவரும் சிரித்துக்கொண்டு கைகோத்து ஐரோப்பா திரும்பினர். இதுதான் இரு கொள்ளையரின் கதை.

வரலாற்றின் முன் ஒரு கொள்ளையனுக்குப் ஃபிரான்ஸ் என்பதும், மற்றவனுக்கு இங்கிலாந்து என்பதும்பெயர். நான் இதை எதிர்க்கின்றேன். எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. ஆள்வோரின் குற்றங்கள் ஆளப்படுவோரின் தவறாகா. சிலவேளை அரசாங்கங்கள் கொள்ளையர் ஆகலாம்; ஆனால் மக்கள் ஒருபோதும் ஆவதில்லை. இவ்வெற்றியில் பாதி ஃபிரெஞ்சுப் பேரரசைச் சாரும். அது ஒன்றுமறியாத உரிமையாளன் போல் கோடைக்கால மாளிகையின் அரும்பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. விடுதலை பெற்று தூய்மையடைந்த ஃபிரான்ஸ் சீனாவிடமிருந்து பறித்த இக்கொள்ளைப் பொருள்களைத் திருப்பிக் கொடுக்கும் நாள் வருமென நம்புகிறேன். அது வளர, ஒரு கொள்ளை இரு கொள்ளையர். இது நான் சீனப் படையெழுச்சியை எவ்வாறு ஏற்கிறேன் என்பதைக் காட்டுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com