Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

ஊரும் பேரும்
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

1. தமிழகமும் நிலமும்

பழம் பெருமை வாய்ந்த இந்திய நாட்டின் தென்பால் விளங்குவது தமிழ் நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தமிழகம் தொன்றுதொட்டு ஆளப்பட்டதென்பர். பொதுவுற நோக்கும்பொழுது பழந்தமிழகத்தில் மேல் நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியனவாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத் தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது.

நால்வகைப்பட்ட நிலங்கள் தமிழகத்தில் அமைந்திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர். மலையும், மலைசார்ந்த இடமும் ஒரு வகை. காடும், காடு சார்ந்த இடமும் மற்றொரு வகை. வயலும், வயல் சார்ந்த இடமும் பிறிதொரு வகை. கடலும், கடல் சார்ந்த இடமும் இன்னொரு வகை. இந் நான்கும் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பெயர்களாற் குறிக்கப்பட்டன. நால்வகை நிலங்களையுடைய காரணத்தால், நானிலம் என்ற பெயர் பூமிக்கு அமைவதாயிற்று. ஆயினும் பிற்காலத்தில் பாலையும் ஒரு தனி நிலமாகக் கொள்ளப்பட்டது.

குறிஞ்சி நிலம்

தமிழ் நாட்டில் வளமார்ந்த மலைகள் பலவுண்டு. அவற்றைச் சார்ந்து எழுந்த ஊர்களிற் சிலவற்றை ஆராய்வோம். தமிழகத்தின் வடக் கெல்லையாக விளங்குவது திருவேங்கடமலை. தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஒருவர்,

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து”

என்று தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்துள்ளார். இவ்வாறு வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாக நின்றமையால், தமிழ் நாட்டார், அம்மலையை வடமலை என்று வழங்கலாயினர். தொன்று தொட்டுத் தெய்வமணம் கமழ்தலால், அது திருமலை என்றும், திருப்பதி என்றும் பெயர் பெற்றது.

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையின் அருகே ஆனைமலையும் சிறு மலையும் பசுமலையும் அமைந்திருக்கின்றன. ஆனை மலையில் முற்காலத்தில் சமண முனிவர்கள் பெருந்தொகையினராய் வாழ்ந்தார்கள். இக் காலத்தில் இனிய வாழைக் கனி தரும் சிறுமலையும் பழம் பெருமை வாய்ந்ததாகும். அம் மலையின் செழுமையைச் சிலப்பதிகாரம் அழகுற எழுதிக் காட்டுகின்றது.

சென்னைக்கு அருகேயுள்ள மலையொன்று பரங்கிமலை என்று பெயர் பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே, பரங்கியர் என்னும் போர்ச்சுகீசியர் அங்கே குடியிருப்புக் கொண்டமையால் அப்பெயர் அதற்கு அமைந்த தென்பர். திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் புதியதொரு நகரம் இக் காலத்தில் எழுந்துள்ளது. அதற்குப் பொன்மலை என்பது பெயர்.

தமிழகத்தில் முருகவேள், குறிஞ்சி நிலத் தெய்வமாக விளங்குகிறார். எந்த மலையும் அவர்தம் சொந்த மலையென்பது தமிழ் நாட்டார் கொள்கை. ஆயினும் சில மலைகளில் முருகனருள் சிறந்து தோன்றுவதாகும். பாண்டி நாட்டுப் பழனி மலையும், சோழ நாட்டுச் சுவாமி மலையும், தொண்டை நாட்டுத் தணிகை மலையும், இவை போன்ற பிற மலைகளும் தமிழ் நாட்டில் முருகப் பதிகளாக விளங்குகின்றன.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்.

தமிழ் இலக்கிய மரபில், மலை என்னும் சொல், ஓங்கி உயர்ந்த பருவதத்தைக் குறிக்கும். மலையிற் குறைந்தது குன்று என்றும், குன்றிலும் குறைந்தது பாறை என்றும், அறை என்றும், கல் என்றும் பெயர் பெறும்.

குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங் குணம், பூங்குணம் என மருவி உள்ளன.

குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக் குடி என்றும் பெயர் பெறும். அப் பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம் என மருவி வழங்கும். நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும். இன்னும், தொண்டை நாட்டுக் குன்றத்தூரும், பாண்டி நாட்டுக் குன்றக்குடியும் இப்போது முறையே குன்னத்தூர் என்றும், குன்னக்குடி என்றும் குறிக்கப்படுகின்றன.

பாறை என்னும் பதம் பல ஊர்ப் பெயர்களிலே காணப்படும். பூம்பாறை, சிப்பிப்பாறை, தட்டைப்பாறை, குட்டைப்பாறை முதலிய பெயருடைய ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

வைணவ உலகம் போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று திருவெள்ளறை என்பது. பெரியாழ்வாரும், திரு மங்கையாழ்வாரும் பாடிப் போற்றிய அப்பழம்பதி ஒரு வெண்மையான பாறையின்மீது அமர்ந்திருக்கின்றது. அது சுவேதகிரி என்று வட மொழியில் வழங்கும். எனவே, வெண் பாறையின் பெயரே அப்பதியின் பெயராயிற்று என்பது தெளிவாகும்.இனி, கல் என்னும் சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. பாண்டி நாட்டில் திண்டுக்கல் என்பது ஓர் ஊரின் பெயர். அவ்வூரின் மேல் பக்கத்திலுள்ள பாறையின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தெரிகின்றது. அது முன்னாளில் சிறந்ததோர் அரணாக விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையேயுள்ள கணவாய்களைப் பாதுகாப்பதற்குத் திண்டுக்கல் கோட்டை பெரிதும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் நாமக்கல் என்ற ஊர் உள்ளது. ஆரைக்கல் என்பது அதன் பழம் பெயராகும். ஆரை என்ற சொல் கோட்டையின் மதிலைக் குறிக்கும். ஆதலால், அவ்வூரிலுள்ள பாறையின்மீது முற்காலத்தில் ஒரு கோட்டை இருந்தது எனக் கொள்ளலாம்.

மலையைக் குறிக்கும் வட சொற்களும் சிறுபான்மையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படும். கிரி என்னும் சொல் சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப் பெயர்களிலே அமைந்துள்ளது. அசலம் என்ற வடசொல் விருத்தாசலம், வேதாசலம், வேங்கடாசலம், தணிகாசலம் முதலிய பெயர்களில் வழங்கும். இன்னும் சைலம், அத்திரி என்னும் வடசொற்களையும் இரண்டோர் ஊர்ப் பெயர்களிலே காணலாம்.

நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது. வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

முன்னாளில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர் என்று பெயர் பெற்றனர். அன்னார் குடியிருந்த இடம் குறிச்சி என்று குறிக்கப்பட்டது. ‘குறிச்சி எங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே’ என்று ஒரு குறவஞ்சி கூறுமாற்றால் இவ்வுண்மை இனிது விளங்கும். பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் குறிச்சி என்ற பெயருடைய ஊர்கள் பல உண்டு. ஆழ்வார் குறிச்சி முதலாகப் பல குறிச்சிப் பெயர்களைத் தொகுத்து வழங்கும் முறையும் நெல்லை நாட்டில் உள்ளது. ஆதியில் குறிச்சி என்பது குறவர் குடியிருப்பைக் குறித்த தாயினும், பிற்காலத்தில் மற்றைய குலத்தார் வாழும் சிற்றூர்களும் அப்பெயர் பெற்றன. ஆர்க்காட்டு வட்டத்தில் கள்ளக்குறிச்சி என்பது ஓர் ஊரின் பெயர். இராமநாதபுரத்தில் பிராமணக் குறிச்சி என்னும் ஊர் உள்ளது.

முல்லை நிலம்

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் மரஞ் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது. ஆயினும், அந்நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்; மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம். இவ்வாறே இன்னும் பல வனங்கள் புராணங்களிற் கூறப்படும்.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. இக் காலத்தில் ஆர்க்காடு என்பது ஒரு நாட்டுக்கும் நகருக்கும் பெயராக வழங்குகின்றது. ஆர்க்காட்டு அணித்தாக ஆர்ப்பாக்கம் என்ற ஊர் உள்ளது. அன்றியும் சோழ நாட்டின் பழைய தலை நகரம் ஆரூர் ஆகும். அது பாடல் பெற்ற பின்பு திருவாரூர் ஆயிற்று.

காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும்போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது. நெல்லை நாட்டில் பச்சையாற்றுப் போக்கிலுள்ள களங்காடு என்ற ஊர் மிகப் பழமை வாய்ந்தது. களாச் செடி நிறைந்திருந்த இடம் களக்காடு என்று பெயர் பெற்றது. தென் பாண்டி நாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையேயுள்ள நெடுஞ்சாலையில் பச்சையாற்றின் கரையில் பாங்குற அமைந்துள்ள களக்காடு என்னும் ஊர், மலை வளமும், நதி வளமும் உடையதாக விளங்குகின்றது.

கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆயிரங் காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங் காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச் சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோவில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.

தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக் காவில் நின்றருளும் பெருமானை,

“விளக்கொளியை மரகதத்தைத்
திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலை”

என்று திருமங்கை ஆழ்வார் போற்றினார். அவர் திருவாக்கின் பெருமையால் “விளக்கொளி கோயில்” என்பது திருத்தண்காவின் பெயராக இக் காலத்தில் வழங்குகின்றது. இன்னும், காவளம் பாடி என்பது சோழ நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்று. சோலை வளம் பொருந்திய இடத்தில் அமைந்த அப்பாடியைக் ‘காவளம் பாடி மேய கண்ணனே’ என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள். அவ்வழகிய பெயர் இக் காலத்தில் பம்புளி என மருவி வழங்குகின்றது.

சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச் சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும். திருச்சிராப் பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித் தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.

சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது. பழமுதிர்ச் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும். சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது.

மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மத்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான் தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித்தோப்பு தஞ்சை நாட்டிலும், வெளவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன.

சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம்பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்து விட்டது. காட்டைக் குறிக்கும் வடசொற்களில் வனம், ஆரண்யம் ஆகிய இரண்டும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. புன்னைவனம், கடம்ப வனம், திண்டிவனம் முதலிய ஊர்ப்பெயர்களில் வனம் அமைந்திருக்கக் காணலாம். வேதாரண்யம் என்ற பெயரில் ஆரண்யம் விளங்குகின்றது.

இன்னும், தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின் பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது. தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.

இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும் கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆனும் அரசும், அத்தியும், ஆத்தியும், புளியும் புன்னையும், பனையும் தென்னையும், மாவும் வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம்.

(தொடரும்)