Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

மதங்களும் திருமண உறவுகளும்

ரஸ்ஸல்

‘குடும்பம் திருமணத்திற்கு அடிப்படையே அன்றி, திருமணம் குடும்பத்திற்கு அடிப்படையென்று அவ்வளவாகக் கூறமுடியாது” என்று வெஸ்டர் மார்க் கூறுகின்றார். கிறிஸ்தவ மதம் தோன்றியதற்கு முற்பட்ட காலத்தில் இக்கருத்து பொதுவான உண்மையென்று சொல்லும் வண்ணம் இருந்தது. ஆனால், கிறிஸ்தவ மதம் தோன்றியதிலிருந்தும் இக்கருத்தை மேலும் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. சந்ததி விருத்திக்கேயன்றி, முறையற்ற இன்ப நுகர்ச்சியைத் தடுப்பதற்கும் திருமணம் ஏற்பட்டதென்று கிறிஸ்தவர்களும், சிறப்பாக அபோஸ்தலர் அர்ச். பவுல் அவர்களும் ஒரு புதுக்கருத்தை வெளியிட்டனர்.

Rassal கொரிந்ந் நாட்டில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களிடையே மாற்றாந்தாயுடன் ஒழுங்கற்ற சிற்றின்ப உறவு கொள்வது பெருவழக்காயிருந்தது. (1. கொரிந். VII) அவ் ஒழுங்கீனத்தைக் கண்ணுற்ற பவுல் அவர்களுக்கு அதை வன்மையாக ஒடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத் (First Epistle to the Corinthains) தில் திருமணம் குறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் வெகு தெளிவாயிருக்கின்றன. அக் கருத்துகளாவன:

(1) நீவிர் எனக்கு எழுதிய விஷயங்கள் குறித்து இப்போது சொல்கிறேன். ஓர் ஆண் மகன் ஒரு பெண்ணைத் தொடாதிருப்பதே நல்லது.

(2) எனினும், முறையற்ற புணர்ச்சியைத் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு மனைவியை வைத்துக் கொள்ளட்டும்; ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய கணவனோடு வாழட்டும்.

(3) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்மை பயக்கும் செயல்கள் ஆற்றுவார்களாக.

(4) மனைவிக்கு அவளுடைய உடலின்மீது அதிகாரமில்லை. அவளுடைய கணவனுக்கே அவ்வதிகாரம் உரித்தாம். அதுபோலவே, கணவனுக்கும் அவனுடைய உடம்பின்மீது அதிகாரமில்லை. அவனுடைய மனைவிக்கே அஃது உரித்தாம்.

(5) கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வஞ்சித்துக்கொள்ள வேண்டா. இருவரும் மனமொத்து வழிபாட்டிலும் உண்ணாநோன்பிலும் ஈடுபடச் சிறிதுகாலம் பிரிந்திருக்க வேண்டுமானால் இருக்கவும். ஆனால் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழவும். ஏனெனில் கட்டுப்பாடு தளர்ந்து பைசாசத்துக்குப் (Satan) பலி ஆகிவிடக் கூடாது.

(6) ஆனால் நான் இவைகளை ஆணை பிறப்பிக்கும் முறையில் சொல்லவில்லை.

(7) ஏனெனில் எல்லோரும் என்னைப்போல இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் ஒவ் வொருவனுக்கும் அவனவனுக்குத் தகுந்தபடி ஆண்டவன் வெவ்வேறு ஆற்றல்களைக் கொடுத்திருக்கிறான்.

(8) ஆகவே, மண மாகாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்வது என்னவெனில் அவர்கள் என்னைப் போலக் கட்டுப்பாட்டுடன் வாழ்தலே நலமாம்.

(9) ஆனால், அவ்வாறு அவர்கள் வாழ இயலாவிடில் அவர்கள் மணம் புரியட்டும். ஏனென்றால் எரிச்சல் பட்டுக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும், மணம் புரிந்து கொள்வது மேல்.

மேற்குறிப்பிட்ட பகுதியில் குழந்தை நலம் குறித்து அர்ச். பவுல் அவர்கள் சொல்லாமல் விட்டதை நாம் கவனிக்க வேண்டும். திருமணத்தில் இன வளர்ச்சியின் நோக்கம் அவருக்கு முற்றிலும் முக்கியமில்லாததாகத் தோன்றிற்று. கிறிஸ்துநாதர் இரண்டாவது முறையாக வருவார் என்றும், உலகம் விரைவில் அழியுமென்றும் அவர் நம்பியதால், குழந்தைகளைப் பற்றியே அவர் பேசவில்லை. கிறிஸ்து இரண்டாம் முறையாக வருகையில் உலகத்திலுள்ள மக்கள் வெள்ளாடு, செம்மறியாடு என்று இருவகைகளாகப் பிரிக்கப்படுவர்.

அவ்வேளையில் செம்மறியாடுகளினிடையே இடம் பிடித்துக் கொள்வதுதான் முக்கியமான வேலையாயிருக்கும். மணஉறவு கொண்டுள்ளவர்களிடையேயும் சிற்றின்ப உறவு இருப்பின் அது வீடு பேற்றுக்குத் தடங்கலாயிருக்குமென்று பவுல் கருதுகின்றார். எனினும், மணமாகிச் சிற்றின்ப உறவு கொண்டவர்களைக் காக்க முடியும். ஆனால் முறையற்ற சிற்றின்ப உறவில் ஈடுபடுவது கொடிய பாவமாகும். அவ்வாறு பாவம் செய்தவர்கள் தம்முடைய குற்றத்தையுணர்ந்து வருந்தாவிடின், வெள்ளாடுகளிடையே வாழவேண்டி நேரிடும். புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு டாக்டரொருவர் ஓர் உபாயம் சொன்னார். ‘புகை பிடிக்க வேண்டுமென்ற ஆசையேற்படும்போது கிச்சிலி மிட்டாயை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்’ என்பதுதான் அந்த உபாயம். அந்த டாக்டருடைய மனப்போக்கில் தான், திருமணம் புரியுமாறு பவுல் கூறுகின்றார்.

முறையற்ற சிற்றின்பத் தொடர்பு போன்று மணஉறவுக் குட்பட்ட சிற்றின்ப உறவு இன்பமாயிருக்குமென்று அவர் சொல்லவில்லை. ஆசைத் தூண்டுதலில் மன வலிமையில்லாதவர்கள் தவறுகள் செய்யாமலிருக்கவே மணவினை வகை செய்யுமென்று அவர் கருதுகிறார். மணம்புரிவதால் உறுதியான, நிச்சயமான நன்மை ஏற்படுவதாகவோ, கணவன் மனைவியிடையே மணவாழ்க்கையில் காணும் அன்பு விரும்பத்தக்க தென்றோ அவர் சொல்லவில்லை. குடும்பத்தின் தோற்றம் குறித்தும் அவர் சிறிதும் அக்கறை காட்டவில்லை. முறைகெட்ட சிற்றின்ப உறவு தான் அவருடைய சிந்தனையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. அதைத் தடுப்பதற்கேற்ற நெறி முறைகளையே அவர் வகுத்திருக்கின்றார்.

ரொட்டி சுடுவது மக்கள் ‘கேக்’ கைத் திருடாம லிருக்கவென்று ஒருவர் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது பவுல் அவர்களின் அறிவுரை, முறைதவறிய சிற்றின்ப உறவு ஏன் தீமையானதென்று அவர் அருள் கூர்ந்து தெரிவிக்கவில்லை. ஒருகால், மோசஸின் அறிவுரைகளை ஒதுக்கித் தள்ளிய பின்னர், பன்றி இறைச்சியைச் சாப்பிட்டாலும், யூதர்கள் கடுமையான கட்டுப்பாடுடையவரே யென்று கருதப்படுவது போல, அவரும் காட்டிக் கொள்ள விரும்பினாரோ? என்னவோ? அல்லது, பன்றி இறைச்சியை உண்பது தடுக்கப்பட்ட காலத்தில், யூதர்களிடையே ஒழுக்கம் கெட்டதைக் கண்ணுற்ற பவுல் அவர்களுக்குத் துறவற அம்சங்களை வலியுறுத்திக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது போலும்!

முறையற்ற சிற்றின்ப உறவுகள் எல்லாவற்றையும் கண்டிப்பது, கிறிஸ்தவ சமயத்தில் காணும் புதுமையேயாம். பெரும்பாலான ஆரம்பக்கால நாகரிகச் சட்ட விதிகளைப் போலவே, பழைய ஏற்பாடும் (Old Testament) விபசாரம் கூடாதென்று தடைவிதித்துள்ளது. ஆனால், விபசாரம் என்பது மணமான வேற்றுப் பெண்களுடன் கலவி செய்த லாகவே அது கருதுகிறது. பழைய ஏற்பாட்டை உன்னிப் படிப்பவர்களுக்கு இவ்வுண்மை புலனாகும். ஆபிரகாம் அவனுடைய மனைவியுடன் எகிப்துக்குச் சென்றிருந்தபோது, அரசனிடம் தன் மனைவி சாராவைத் தன் தங்கையென்று ஒப்படைத்தான். அரசனும் அவனுடைய பேச்சை நம்பி, சாராவைத் தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொண்டான். ஆனால் உண்மை தெரிந்தவுடன், தான் செய்த பாவத்திற்கு வருந்தியவனாய், உண்மையைக் கூறாத ஆபிரகாமைக் கடிந்துகொண்டான்.

அதுதான் பண்டைக் காலத்தில் சாதாரணமாக நிலவி வந்த விதிமுறையாகும். மணமான பெண்ணொருத்தி, மணத்துக்குப் புறம்பாகத் தன் கணவன் அல்லாத வேறொரு ஆடவனுடன் சிற்றின்ப உறவு கொண்டால், அவளைக் கேவலமாகச் சமூகம் கருதியது. ஆனால், வேறொரு மணமான பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலன்றி ஆண்மகன் கண்டிக்கப்படமாட்டான். அவ்வாறு அவன் செய்த குற்றம் (பிறனுடைய) உடைமை பற்றிய குற்றமாகக் கருதப்பட்டது. திருமணத்திற்குப் புறம்பான எல்லாச் சிற்றின்ப உறவுகளும் நெறிகெட்ட நடத்தையாகுமென்று கிறிஸ்தவம் கருதியதை முன்னர் குறிப்பிட்ட பவுல் அவர்களின் கூற்றுக்களால் அறிகிறோம். திருமணத்துக்குட்பட்ட சிற்றின்ப உறவும் வருந்தத்தக்கதே யென்ற கருத்தின் அடிப்படை மீது கிறிஸ்தவக் கருத்து எழுந்துள்ளது. உயிர்நூல் ரீதியான உண்மைகளுக்கு மாறுபட்ட அக்கருத்தைத் தெளிந்த அறிவு படைத்தவரெவரும் இயற்கைக்கு முரண்பட்ட போக்கு என்றே கூறுவர். கிறிஸ்தவ நெறியில் இப்பொருந்தாக் கருத்து பொதிந்துள்ளதன் காரணமாக, மனக் கோளாறுகளை விளைவிப்பதும், வாழ்க்கை குறித்து நற்பயன் விளைவிக்காத கருத்துக்களை உருவாக்கக் கூடியதுமான ஒரு சக்தியாகவே அச் சமயம் அதனுடைய வரலாற்றுக் காலம் முழுவதிலும் இருந்திருப்பதைக் காண்கின்றோம்.

ஆரம்பக்காலத்தில் கிறிஸ்தவத் திருச்சபை அர்ச் பவுல் அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தியும் மிகைப்படுத்தியும் வந்தது. சிற்றின்பத்தை விலக்குதல் தூய்மையானது என்று கருதப்பட்டது. மனத்திலே மாசுபடுமாறு காம இச்சையைத் தூண்டும் பைசாசத்தை வெல்ல விழையும் மனிதர் பாலைவனத்துக்குச் செல்லலாயினர். மற்றும் உடல் தோற்றத்தைக் கவர்ச்சிகர மாக்கக்கூடிய ஒவ்வொரு செயலும் பாவமென்ற கருத்தில் குளிக்கும் பழக்கத்தையும் திருச்சபை எதிர்த்து வந்தது. அழுக்கு புகழப்பட்டது, உடலின் நாற்றம் புனிதத்தன்மையின் நறுமணமாகக் கருதப்பட்டது. ‘உடலின் தூய்மையும், அதனுடைய ஆடைகளின் தூய்மையும் ஆன்மாவின் தூய்மையின்மையாகும்’ என்று திரு.பவுல் கூறியிருக்கிறார். பேன்கள் ஆண்டவனுடைய முத்துக் களென்றும், அவைகள் நிறைந்திருப்பது புனிதமான மனிதனுக்கு அடையாள மென்றும் கருதப்படலாயின.

அர்ச். ஆபிரகாம் என்னும் துறவி, கிறிஸ்தவ சமயம் தழுவிய பின்னர் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அந்த நெடிய காலத்தில் அவர் தம்முடைய முகத்தையோ பாதங்களையோ கழுவ மறுத்தார். அவர் தனி அழகு வாய்ந்தவரென்று அறிகிறோம். ‘அன்னாருடைய முகம் அவருடைய ஆன்ம அழகைப் பிரதிபலித்தது என்று அவருடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஒரு புதுப்பாணியில் கூறுகின்றார். தூய அம்மோன் என்பார் தம் உடலை ஆடையில்லாத நிலையில் ஒருபோதும் பார்த்துக் கொண்டதில்லை. அறுபது வயதான புகழ்பெற்ற கன்னி ஸில்வியா, உடல் நோய்வாய்ப்பட நேரிட்டும், மதக்கோட்பாடுகள் காரணமாகத் தம்முடைய விரல்களைத் தவிர, உடலின் வேறு எந்தப் பகுதியையும் கழுவ மறுத்து வந்தார்.

பாதங்களைக் கூடக் கழுவாத வரும், குளித்தல் என்பதைக் கேட்ட அளவில் உடல் நடுக்க முற்றவருமான 130-கன்னியர் வாழ்ந்துவந்த மடத்தில் தூய யூப்ரேக்ஸிஸ் (St. Euphrazis) சேர்ந்தார் என்று அறிகிறோம். ஒருநாள் பாலைவனமொன்றில் ஒரு துறவி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் கண்ட காட்சி அவருக்குப் பேயைக் காண்பது போலப்பட்டது.

அழுக்குப் படிந்த கறுத்த உருவமொன்று, தலையிலுள்ள வெண்மயிர் காற்றில் பறந்தவண்ணம், உடை ஏதுமின்றி நடந்து சென்றுகொண்டிருந்ததே அக்காட்சியாகும். அவ்வாறு சென்றது ஒரு காலத்தில் அழகியாயிருந்து, பிறகு எகிப்தின் தூய மேரியான பெண்ணாவாள். நாற்பத்தேழு ஆண்டுகளாகத் தான் செய்த பாவங்களுக்கு அவள் அவ்வாறு கழுவாய் தேடிக்கொண்டிருந்தாள். எப்போதாவது துறவிகள் நிலை தாழ்ந்து நாகரிக நிலையில் காணப்பட்டபோது, அவர்களுடைய போக்கு மிகவும் கண்டிக்கப்பட்டது. ‘நம் தந்தையர் தங்களுடைய முகங்களைக் கூடக் கழுவியவரல்லர்; ஆனால், நாமோ பொதுமக்களுக்கான குளிக்குமிடங்களுக்குச் செல்கிறோம். என்று அலெக்சாந்தர் என்னும் மடத்தலைவர் ஒரு சமயம் கூறியிருக்கின்றார்.

பாலைவனத்திலிருந்த துறவிகளின் மடம் ஒன்றில் நடந்த சில நிகழ்ச்சிகளை ஈண்டுக் கூறலாம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் துறவிகள் வருந்தினராம். மடத்துத்தலைவரான தியோடோ சியஸ் என்பாரின் பிரார்த்தனையின் பேரில் புனலோடும் ஓடையொன்று ஏற்பட்டதாம். தண்ணீர் தங்குதடையின்றி வருவதைக் கண்ட துறவிகள், சிறிது காலத்தில் தம்முடைய பண்டைய கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டு, தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்திப் பொது குளிப்பறையொன்று கட்டுமாறு மடத்துத் தலைவரிடம் அவர்கள் சொன்னதற்கேற்ப, அவ்வறையும் கட்டப்பட்டது.

ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே துறவிகள் நீராட முடிந்தது. ஓடை வற்றிவிட்டது. அவர்களின் இறை வணக்கமும், கண்ணீரும், உண்ணா நோன்பும் பலனளிக்கக் காணோம். அவ்வாறு ஒரு முழு ஆண்டு கழிந்தது. இறுதியில் தெய்வத்தின் அதிருப்திக்குக் காரணமாயிருந்த குளிப்பறை இடிக்கப்படவே, தண்ணீர் மீண்டும் ஓடையில் பாயத் தொடங்கியது.

ஆகவே, ஆண்பெண் உறவுபற்றிய மேற்கூறிய கருத்துகள் நிலவுமிடத்தில் சிற்றின்ப உறவுகள் ஏற்படுமாயின் - மதுவிலக்கு அமலில் உள்ள இடத்தில் குடிப்பது போல - அவ்வுறவுகள் முரட்டுத்தனமாகவும் கடுமையாகவுமேயிருந்தன. காதற்கலை மறைந்து திருமணம் வன்முறைக்கு இருப்பிடமாகியது.

Saibaba கற்பு அவசியம் வேண்டற்பாலது என்பதை மக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து நிலைபெற்று விளங்கும் வண்ணம் பதியச்செய்தது துறவிகளின் பெருந்தொண்டேயாகும். ஆனால் அதற்குச் சமமான அளவில் அவர்களுடைய போதனைகள் திருமணத்திற்குக் கேடும் பயந்திருக்கின்றன. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எழுதிய பல நூல்களிலிருந்து திருமணம் என்னும் வழக்கு அல்லது ஏற்பாடு குறித்து மூன்று அழகிய விளக்க உரைகளே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

ஆனால் பொதுவாக, அவர்கள் (பாதிரிகள் திருமணம்) குறித்துக் கொண்டிருந்த கருத்துகளைக் காட்டிலும் அதிகமான அளவில், அருவருப்பும் முரட்டுத்தனமும் கலந்த எதையும் நாம் எண்ணிப் பார்க்க இயலாது. இறப்பின் பாழிலிருந்து மீட்சி பெற இயற்கையே நிர்ணயித் துள்ள சீரிய முறையாக உள்ளதும், லினேயுஸ் (Linnaeus) கூறியுள்ளது போல, பூக்களிடையேயும் காணப்படுவதுமான சிற்றின்ப உறவானது, ஆதாம் வீழ்ச்சியுற்றதால் ஏற்பட்டுவிட்டதாக ஒரு நிலையான கொள்கை வகுக்கப்பட்டு விட்டது. திருமணம் அதன் இழிவான அம்சத்திலேயே கருதப்படலாயிற்று.

திருமணத்தால் விளையும் காதல், மணமான பிறகு இல்லறவாழ்வில் காணப்படும் பல அழகு வாய்ந்த பண்புகள் அவர்களுடைய சிந்தனையிலிருந்து அறவே ஒதுக்கப்பட்டன. மாந்தரை மாசுபடாத தூய்மை நெறிக்குக் கவர்வதே துறவிகளின் கடமையாயிருந்தது. அதன் காரணமாகத் திருமணம் புரிவது ஒரு கீழ் நிலையாகவே கருதப்பட்டது. இன விருத்திக்காகவும், பெருந்தீங்குகளிலிருந்து மனிதரைக் காக்கவும் திருமணம் அவசியமாகையால், உண்மையில் அது நியாயமானதேயென்றும் கருதப்பட்டது. ஆயினும் உண்மையான புனித நிலையை வேண்டி நின்றார் யாவரும் மணவாழ்க்கை ஓர் இழி நிலை என்றெண்ணி, அதிலிருந்து பறந்தோடுவரென்றும் கருதப்பட்டது.

‘பிரம்மசரியம் என்னும் கோடரி கொண்டு மணமென்னும் மரத்தை வெட்டுவதே துறவியின் குறிக்கோள்’ என்று தூய ஜெரோம் கூறியுள்ளார். ஒருவேளை துறவியொருவர் திருமணம் பற்றிப் புகழ்ந்து பேசினால், அதற்குக் காரணம் மணம் புரிவதால் பல கன்னியர்களைத் தோற்றுவிக்கலாம் என்பதேயாம். திருமண உறவு ஏற்பட்ட பின்னரும், துறவு மனப்பான்மையின் ‘கொடுக்கு’ இருக்கவே செய்தது. இல்லற வாழ்வில் மற்ற உறவு முறைகளில் எவ்வாறு அம்மனப்பான்மை கசப்புணர்ச்சியை யூட்டியது என்று முன்னரே கண்டோம். எல்லாவற்றிலும் மேலான புனிதத்துவம் வாய்ந்த மண உறவில் அவர்கள் பதின் மடங்கு வெறுப்பை விரவி விட்டனர். மனைவியிடத்தோ, அல்லது கணவனிடத்தோ தீவிரமான மத உணர்ச்சி யேற்படும்போது, அதன் முதல்விளைவாக மணவாழ்க்கையில் ஒற்றுமை நிலவுவது அரிதாகி விட்டது.

தம்பதிகளில் அதிக மதப்பற்றுடையவர் உடனே தனிமை நாடித் துறவு வாழ்க்கையில் ஈடுபட விழைவர். வெளிப்படையாக அவ்வாறு தனித்து வாழ இயலாவிடின், மணவாழ்விலேயே இயற்கை நியதிக்கு முரணாகத் தனித்து வாழத் தலைப்படுவர், இந்த முறையான கருத்துகள் நிறைந்த பாதிரிமார்களின் போதனை நூல்களும், துறவிகளைப் பற்றிய கதைகளும் இத்துறை பற்றிய அறிவு படைத்த யாவரும் அறிந்ததேயாகும்.

இனி, சில எடுத்துக்காட்டுகளைக் கவனிப்போம். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாயிருந்த தூய நீலஸ் (St. Hilus) அவர் காலத்தில் பரவிவந்த துறவு வாழ்க்கையில் ஈடுபடப் பேரார்வம் கொண்டு, அவருடைய மனைவியின் இணக்கம் பெற முயற்சித்தார். அவள், துயர் தாங்கமாட்டாது கண்ணீர் விட்டுக் கொண்டே, அவருடைய விருப்பத்திற்கு இணங்கினாள். தூய அம்மோன் (St. Ammon) தாம் மணம் புரிந்த இரவே தம்முடைய மனைவியைக் கண்டு மணவாழ்க்கை நிலையிலுள்ள பல தீமைகள் குறித்து அவளிடம் ஒரு பேருரையே நிகழ்த்த, அதன் பயனாக உடனே மண மக்கள் பிரிந்தனர்.

தூய மிலேனியா (St. Melania) தம்முடைய கணவரிடம் நீண்ட நாட்களாகக் கேட்டுக்கொண்டு, அவரிடமிருந்து தாம் பிரிவதற்குச் சம்மதம் பெற்றார். தூய ஆபிரகாம் தமக்குத் திருமணம் நடந்த இரவே தம்முடைய மனைவியிடமிருந்து பிரிந்து ஓடிவிட்டார். பிற்காலக் கதைகளின்படி, தூய அலெக்சிஸ் (St. Alexis) ஆபிரகாம் போன்றே ஓடி விட்டவராவார். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் எருசலேத்தில் உள்ள தம் தந்தையின் இல்லம் திரும்பினார். அங்கே அவர் மனைவி பிரிவினைத்துயர் ஆற்றாதவளாக இருந்தாள். தங்குவதற்கு இடமளித்தல் அறச் செயல் என்பதற்காகத் தமக்கு இடம் வேண்டுமென்று அவர் அவ்வீட்டில் யாசித்ததால், அவ்வாறே இடமளிக்கப் பெற்றது. அங்கே அவர் மதிப்பிழந்து, உரிமையற்றவராகவும், வெறுப்புக்கு ஆளானவராகவும், இறக்கும் வரையில் காலந் தள்ளினாரென்று அறிகிறோம்.

அர்ச். பவுலைப் போலவும், தீபெய்ட் (Thebaid) துறவிகளைப் போலவும் உயிர் நூல் முறைக்கு முரணாகக் கத்தோலிக்க மதக் கொள்கைகள் அமையவில்லை. காம இச்சையை நிறைவேற்றிக் கொள்ள ஏறக்குறைய நியாயமான வழியாகத் திருமணம் இருக்கிறதென்று தூய பவுல் கருதியதாகத் தெரிகிறது. அவர் கூற்றுக்களை நோக்கின், பிறப்புக் கட்டுப்பாட்டை அவர் ஆட்சேபிப்பவராகத் தோன்றவில்லை. மாறாக, குழந்தையுண்டாகியிருக்கும் போதும், குழந்தை பிறந்த புதிதிலும் சிறிது காலம் வரையில் கடைப்பிடிக்க வேண்டிய தன்னடக்கம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று அவர் கருதியதாக எண்ண வேண்டியிருக்கிறது. கிறிஸ்தவத் திருச்சபையோ வேறு கருத்தைக் கொண்டுள்ளது வைதிகக் கிறிஸ்தவ நெறியின்படி, திருமணத்திற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று தூய பவுல் கண்டிருந்த காரணம். மற்றொன்று, குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டுமென்பது. இவ்விரண்டு நோக்கங்கள் காரணமாக ஆண் பெண் உறவுபற்றிய ஒழுக்கம் குறித்த விதிகள் தூய பவுல் விதித்தவற்றைவிடக் கடுமையாக்கப்பட்டன.

மண உறவில் மட்டுமே கலவி நியாயமானது என்பதன்றி, குழந்தையுண்டாகும் என்ற நம்பிக்கையில்லாத விடத்துக் கணவன் மனைவியின் கலவியும் பாவச் செயலேயென்று கொள்ளப்பட்டது. முறைப்படி சந்ததிவிருத்தி காண வேண்டுமென்ற விருப்பம்தான் உண்மையில் கலவிக்கு நியாயமான நோக்க மென்பது கத்தோலிக்கச் சமயக் கொள்கையாகும். ஆனால் இதன் மூலம் என்ன கொடுமை நேர்ந்தாலும் இந்த நோக்கமே நியாயமென்று கொள்ளப்படுகின்றது. மனைவி கலவியை வெறுத்தாலும் பிறக்கும் குழந்தை பிணியுற்றிருக்கு மென்றோ, பயித்தியம் கொள்ளுமென்றோ கருத இடமிருந்தாலும், கொடிய வறுமையைத் தவிர்க்கப் போதிய பணவசதியில்லாமலிருந்தாலும் குழந்தை வேண்டுமென்ற ஆசையுடன் தனக்குள்ள தாம்பத்ய உறவு உரிமையை ஒருவன் வற்புறுத்தினால் அவனைத் தடுப்பதற்கில்லை.

இந்த விஷயத்தில் கத்தோலிக்கக் கோட்பாடு இரண்டு அடிப்படைகளின் மீது உருவாகியுள்ளது. நாம் முன்னரே குறிப்பிட்ட தூய பவுல் அவர்களின் துறவறம் ஒன்று. இவ்வுலகில் முடிந்த அளவு அதிகமான உயிர்களைத் தோற்றுவிப்பது நலமேயாகும்; ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வீடுபேறு உண்டு என்பது இரண்டாவது அடிப்படையாம். வீடு பேறு பெற ஆற்றல் உள்ள அளவுக்கு நரகக்கேட்டினை அடையவும் உயிர்களால் இயலுமென்பதைக் கத்தோலிக்கக் கோட்பாடு புறக்கணித்துள்ளது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

எனினும், அதுவும் கவனிக்க வேண்டிய விஷயமேயாகும். பிராடெஸ்டண்டு பிரிவினர் கருத்தடை செய்து கொள்வதில் ஈடுபடாமலிருக்கக் கத்தோலிக்கர் தம்முடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். எனினும், அவர்களுடைய அரசியல் ரீதியான செயலால் தோன்றும் மிகப் பெரும்பான்மையான பிராடெஸ்டண்டுக் குழந்தைகள் மறுஉலகில் என்றுமே அல்லலுற நேரிடுகின்றது என்பதைக் கத்தோலிக்கர்கள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இப்போக்கு அவர்களுடைய செயலில் ஓரளவு அன்பில்லாமையையே காட்டுகின்றது. ஆனாலும் இந்தப் புரியாத விஷயங்களைத் தூய்மையற்றவர்கள் அறிந்துகொள்ள இயலாது போலும்!

திருமணத்தால் விளையக்கூடிய பயன்களில் மக்கட் பேறு ஒன்று என்பதைக் கத்தோலிக்கச் சித்தாந்தம் வெகு அரைகுறையாகவே ஏற்றுக் கொண்டுள்ளது. மக்கட் பேறு கருதாமல் ஈடுபடும் கலவிகள் யாவுமே பாவச் செயல்களாகுமென்று உய்த்துணர்வதில் அச் சித்தாந்தம் தன்னுடைய சக்தியைச் செலவழித்து விடுகிறது. மலட்டுத்தனம் காரணமாக திருமண விலக்குக்கு அது முன்னேறவில்லை.

மலடியான மனைவியைக் கொண்டவன் குழந்தைகள் வேண்டுமென்று எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும், கிறிஸ்தவ நெறி ரீதியில் அவனுக்குக் கதிமோட்சமேயில்லை. திருமணத்தின் முக்கியமான குறிக்கோளான இனவிருத்திக்குத் தாழ்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டது. தூய பவுல் கூறியதைப் போல், சிற்றின்பம் துய்த்தலில் பாவம் தவிர்ப்பதுதான் முக்கிய நோக்கமாயிருந்தது. முறையற்ற கலவியைக் கண்டிப்பதும் தவிர்ப்பதுமே மெய்ப்பொருளாக அமைந்துள்ளது. திருமணம் புரிவது குறைவான அளவில் வருத்தம் பயக்கக்கூடிய ஒரு மாற்று வழியேயென்று இன்றும் கருதப்பட்டு வருகிறது.

திருமணம் பற்றிய இக்குறை நிறைந்த கருத்தைக் கத்தோலிக்கத் திருச்சபை, திருமணம் ஒரு சமயச் சடங்கு (Sacrament) என்று கூறி மறைக்க முயற்சித்துள்ளது. திருமணம் ஒரு சமயச் சடங்கு என்ற சித்தாந்தத்தினால் நடைமுறையில் முன்கூறிய பயனே விளைகிறது. திருமணம் விலக்க முடியாத பிணைப்பு ஆகி விடுகிறதென்று நாம் ஊகிக்கலாம். கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் என்ன தவறு செய்தாலும், ஒருவர் பித்துப் பிடித்தவராகி விட்டாலும், அல்லது கிரந்திப் புண் போன்ற கொடிய நோய்க்கு ஆளாகி விட்டாலும், பெருங் குடிகாரராகி விட்டாலும், வேறு யாருடனாவது சிற்றின்பத் தொடர்பு கொண்டிருந்தாலும், அக்கணவன் - மனைவி இடையே நிலவும் உறவு புனிதமாகக் கருதப்படுகிறது.

சில குறிப்பிட்ட தறுவாய்களில் தனித்து வாழ அனுமதி தரப்படினும் மறுமணம் புரிய உரிமை தரப்படுவதில்லை, இதனால் பலருக்குக் கடுந் துயரமே ஏற்படுகின்றது. ஆனால், அத்துயரம் கடவுள் விதித்தது என்பதற்காக அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

கத்தோலிக்கச் சமயத்தில் இவ்வாறான கடுமையான தத்துவம் ஒருபுறமிருக்க, அச்சமயம் பாவமென்று கருதியவற்றின்பால் அது ஓரளவு பொறுமை காட்டியே வந்துள்ளது. உயர்ந்த கோட்பாடுகளுக்கிணங்கச் சாமானிய மனித இயல்பு ஒழுக இயலும் என்பதை எதிர்பார்க்க முடியாதென்று கிறிஸ்தவத் திருச்சபை உணர்ந்துள்ளது. முறை கெட்ட சிற்றின்பத்தில் ஈடுபட்டவர்கள் தம் தவற்றை யுணர்ந்து, தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கழுவாய் செய்தால், அவர்களுடைய பாவத்துக்கு மன்னிப்பு அளிக்க அது ஆயத்தமாயிருந்து வந்துள்ளது. இத்தகைய செயல்ரீதியான பொறுமை சமயக் குழுவினரின் அதிகாரத்தை அதிகப்படுத்த உபயோகமாயிருந்த ஒரு வழியாகும். ஏனெனில், சமய குரு மார்கள்தாம் மன்னிப்பு அளிக்கப்பட்டதாகப் பிரகடனம் செய்யலாம். அவ்வாறு மன்னிப்புப் பெறாத குற்றத்திற்கு என்றென்றும் மீளாத் தண்டனைதான் கதியாகும்.

பிராடெஸ்டெண்டு பிரிவின் போக்கு வேறு விதமாகத் தோன்றியது. அதனுடைய கோட்பாடுகள் அவ்வளவு கடுமையாயிருக்கவில்லை. ஆனால், நடைமுறையில் கத்தோலிக்க மதத்தைக் காட்டிலும், சில அம்சங்களில் கடுமையாகவேயிருந்தது. ‘எரிச்சல்பட்டுக் கொண்டு காலந்தள்ளுவதைவிட மணம் புரிவது மேல்’ என்ற வாசகம் லூதருக்குப் பிடித்திருந்தது. அவர் ஒரு கன்னித் துறவியை நேசித்து வந்தார். மணம் மறுத்துப் புலனடக்க நோன்பைக் கைக்கொண்டிருந்தாலும், தாமும் அக்கன்னித் துறவியும் மணம் புரிய உரிமை உண்டென்று லூதர் ஊகித்தார்.

அவ்வாறு இல்லையேல், உணர்ச்சி வசப்பட்டுப் பெருந்தவறு அல்லது பாவச் செயல் செய்ய நேரிடுமென்று அவர் கருதினார். அங்ஙனமே கத்தோலிக்கப் பிரிவின் முக்கிய அம்சமான பிரமசரிய வாழ்க்கையைப் புகழ்வதைப் பிராடெஸ்டெண்டு பிரிவு நிறுத்திக் கொண்டது. அது எங்கெங்கு வலுப்பெற்றிருந்ததோ அங்கெல்லாம், திருமணம் ஒரு மதச்சடங்கு என்ற சித்தாந்தத்தையும் கைவிட்டு, சில சந்தர்ப்பங்களில் மண விலக்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் முறை கெட்ட சிற்றின்ப நுகர்ச்சி குறித்து கத்தோலிக் கரைக்காட்டிலும் பிராடெஸ்டெண்டு பிரிவினர் அருவருப்புக் காட்டினர்.

அவர்கள் அதை இன்னும் உறுதியாகத் தாக்கினர். கத்தோலிக்கத் திருச்சபை ஓரளவு பாவச் செயல்கள் இருக்குமென்ற போக்கில் அவற்றைச் சமாளிக்க வழிதுறைகளை வகுத்திருந்தது. ஆனால் உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருதல், மன்னிப்பு அளிக்கப்படுதல் ஆகிய கத்தோலிக்கப் பழக்கங்களை பிராடெஸ்டெண்டு பிரிவு கைவிட்டு, பாவம் செய்பவனுக்குக் கத்தோலிக்க மதப்பிரிவில் உள்ள நிலைமையை விட மோசமான நிலைமையில் அவனை இருத்தி விட்டது. நவீன அமெரிக்காவில் இவ்விரண்டு அம்சங்களும் நிறைந்த மனப்போக்கைக் காணலாம். அங்கு மணவிலக்குப் பெறுவது எளிது. ஆனால், பல கத்தோலிக்க நாடுகளைவிட அங்கே ஒழுக்கக் கேடு வெகு கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றது.

Jeyandran கிறிஸ்தவச் சமயக் கல்வி நம்மில் பலரைக் குறிப்பிட்ட விதங்களில் கருத்துகள் கொள்ளும்படி செய்கின்றது. இயன்றவரை இத்தகைய கருத்துகள் இல்லாமல், கத்தோலிக்க, பிராடெஸ்டெண்டுக் கிறிஸ்தவப் பிரிவுகளின் ஒழுக்க முறைகளை மறுபடியும் நாம் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிற தென்பது தெளிவு. சிறுபிராயத்தில் அழுத்தந்திருத்தமாகவும், திரும்பத் திரும்பவும் கூறப்பட்டவை பலருக்கு உள்ளூர அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றன. நாம் வைதிகத்திலிருந்து விடுபட்ட மனப்போக்கு உடையவர்களென்று நம்மில் பலர் எண்ணுகின்றோம். ஆனால், உண்மையில் உள்ளூர நம்முடைய மனத்தின் அடித்தளத்தில் வைதிகப் போதனைகளே ஆட்சி செய்கின்றன.

முறையற்ற புணர்ச்சியைக் கிறிஸ்தவத் திருச்சபை எதனால் கண்டித்தது என்று நம்மை நாமே கள்ளமற்ற தன்மையில் கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அது கண்டிக்கத் தகுந்த காரணங்கள் இருந்தனவென்று நாம் நினைக்கின்றோமா? அவ்வாறு காரணங்கள் இல்லையெனில் முறையற்ற புணர்ச்சியைக் கண்டிக்க வேறு காரணங்கள் ஏதாவது நமக்குப் புலப்படுகின்றனவா? சிற்றின்பம் துய்ப்பதில் ஏதோ தூய்மையின்மையிருப்பதாகவும், ஆயினும் சில நிபந்தனைகளுக்குட்பட்டுச் சிற்றின்பம் நுகர்வது மன்னிக்கப்பட வேண்டு மென்றும் தொடக்கக்காலக் கிறிஸ்தவத் திருச்சபை கருதி வந்தது. இத்தகைய கருத்தையே முழு மூடநம்பிக்கையென்று தான் நாம் சொல்ல வேண்டும்.

முந்திய அத்தியாயத்தில் சிற்றின்ப நுகர்ச்சியை எதிர்க்கும் மனப்பான்மை ஏற்படுவதற்கான காரணங்களை நாம் கூறியிருக்கின்றோம். துவக்கக்காலக் கிறிஸ்தவத் திருச்சபையின் சிற்றின்ப எதிர்ப்பும் அதே காரணங்களால்தான் தோன்றியிருக்கும். அதாவது, முதலில் அத்தகைய கருத்தைப் பரப்பியவர்கள் மனம் - உடல் சார்ந்த நோய்களால் அவதியுற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு கருத்து பரவலாகச் செல் வாக்குடன் விளங்கியது, அக்கருத்து முழுமையும் பொருளற்றது என்று சொல்வதை மறுப்பதற்கான அத்தாட்சி ஆகாது. உண்மையில் மனிதர்களில் பெரும்பாலோரின் மடமையைக் கவனிக்கும் போது பரவலாக நிலவிவந்துள்ள நம்பிக்கை அறிவு செறிந்ததாக இருப்பதைவிட மடமையாகவேயிருக்கும்.

நிலையான பேரின்ப நிலை எய்த மூக்கைத் துளையிடுவது அவசியமென்று பெலியூ என்னும் தீவில் வாழும் மக்கள் நம்புகின்றன ரென்று வெஸ்டர்மார்க் கூறியுள்ளார். பேரின்பம் கிட்டுவதற்கு, சில சொற்களைக் கூறிக் கொண்டே, தலையைத் தண்ணீரில் நனைத்துக் கொள்ளல் அதனினும் சிறந்த வழியாகுமென்று ஐரோப்பியர்கள் கருதுகின்றனர். பெலியூ தீவு மக்களின் நம்பிக்கை மூட நம்பிக்கையாம்; ஐரோப்பியர்களின் நம்பிக்கையோ நம்முடைய தூய்மையான மத நம்பிக்கைகளில் ஒன்றாம்.

செயல்கள் குறித்துப் போற்றவோ, தூற்றவோ அல்லது போற்றுதலும் தூற்றுதலும் இல்லாது, எச்சார்புமற்ற கருத்துடன் ஒழுகவோ, மக்கள் விரும்புவதன் அடிப்படையில் மூன்று பத்திகளில் பாகுபடுத்திச் செயல்களின் ஊற்றுகள் பற்றிய அட்டவணை யொன்றை ஜெரிமி பெந்தாம் தயாரித்தார். ஒரு பத்தியில் பெருந்தீனி ஆசை இடம் பெற்றுள்ளது. அதற்கெதிராக இரண்டாவது பத்தியில் மக்கள் கூட்டமாகக் கூடி அனுபவிக்கும் இன்பங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அதே பத்தியில் பொதுத்தொண்டு புரிய வேண்டுமென்னும் மன எழுச்சியும், அதற்கு ஈடாக அடுத்த பத்தியில் பகையுணர்ச்சியும் ஆகிய உள்ளுணர்வுகள் (Impulsers) புகழ்ச்சிச் சொற்களால் குறிக்கப்பட்டுள்ளன. அறநெறி சார்ந்த எந்த விஷயம் குறித்தும் தெளிவாக ஆராய விழையும் எவரையும் பெந்தாமைப் போன்று செயற்படுமாறு கூறுவேன்.

தூற்றப் பயன்பெறும் ஒவ்வொரு சொல்லுக்கும் போற்றுதல் குறிக்கும் தொடர்புச் சொல் இருப்பதையுணர்ந்து, போற்றுதலும் தூற்றுதலுமில்லாதவாறு சொற்களைப் பயன்படுத்த அவர்கள் பழகிக் கொள்ளவேண்டும். ஒழுக்கக்கேடு (Adultery), முறையற்ற புணர்ச்சி (Fornication) ஆகிய இரண்டு சொற்களும் நெறி கெட்ட தன்மையை வன்மையாகக் குறிப்பதால், அவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்தி வரும் நிலையில் சிந்தனைத் தெளிவு இருக்க முடியாது. மிகுந்த சிற்றின்பப் பற்றுள்ள எழுத்தாளர்கள் நம்முடைய ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய வேறு சொற்களையும் கையாள்கின்றனர். காதல் புரியும் வீரம் என்றும், சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கும் பிணைப்புகளுக்கும் உட்படாத காதல் என்றும் அவர்கள் கூறுவார்கள். இரண்டு விதச் சொற்றொடர்களும் தப்பெண்ணங்களை உருவாக்க எழுந்தனவாகும்.

நாம் நடுநிலையுடன் அணுகவேண்டுமாயின், இரண்டுவிதச் சொல்லமைப்புகளையும் ஒருசேர எண்ணி ஒழித்திடல் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு செய்வதால் நம் இலக்கிய நடை கெடுவது தவிர்க்கப்படாததே. புகழ்ச்சிக்கான சொற்களும், குற்றம் சாட்டும் சொற்களும் ஆடம்பரமாகவும் கவர்ச்சியாகவும் உள்ளன. பழிச் சொற்களாலும் புகழ்ச்சிச் சொற்களாலும் படிப்பவன் மனத்தைக் கொள்ளை கொள்ளலாம். ஓர் ஆசிரியன் ஓரளவு திறமையுடன் சொற்களை அமைத்து வாசகனின் உணர்ச்சிகளைத்தான் விரும்பும் வழியில் திருப்பக்கூடும். ஆனால், நாம் பகுத்தறிவு வாயிலாக உண்மை காண விரும்புபவர்களாவோம். ஆகவே, நாம் கவர்ச்சியற்ற நடுநிலையைக் குறிக்கும் சொற்றொடர்களையே பயன்படுத்த வேண்டும். ‘மணத்துக்குப் புறம்பான சிற்றின்பத் தொடர்புகள்’ போன்ற சொற்களைக் கூறலாம்.

ஆயினும் இவ்வாறு கூறுவது துறவு மனப்பான்மையால் எழும் கருத்து எனலாம். நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் மனித உணர்ச்சிகள் வெகுவாக அடங்கியவையாதலால், உணர்ச்சிகளை அறவே நாம் ஒதுக்கிவிட்டோமானால், அவ்விஷயத்தின் தன்மையை நாம் எடுத்துக்காட்ட இயலாமற்போகும். சிற்றின்ப விஷயங்களைச் சொல்வதில், அச் சிற்றின்ப ஈடுபாட்டில் பங்கு கொண்டவர்கள் கூறுவதிலும், அது குறித்துப் பொறாமையுடன் வெளியார் கூறுவதிலும் ஒரே மாதிரியான வேறுபட்ட குறிக்கோள்கள் இருக்கும். நாமே செய்தால் ‘காதல்புரியும் வீரம்’ ஆகும். பிறர் அதையே செய்ய நேரிட்டால் ‘முறையற்ற புணர்ச்சி’ ஆகும். ஆதலால், உணர்ச்சி கலந்த சொற்றொடர்களை நாம் மனத்திலிருத்த வேண்டும். என்றாவது அவசியமேற்படின், அவைகளை நாம் பயன்படுத்தலாம். ஆனால், வெகு குறைவாகவே அவைகளைக் கையாள வேண்டும். பொதுவாக, நடுநிலைச் சொற்களையும் விஞ் ஞான ரீதியாகச் சரியான சொற்றொடர் களையுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

சிற்றின்பத் துறையில் தூய்மை வேண்டும் என்று வலியுறுத்தியதன் வாயிலாகக் கிறிஸ்தவ நெறி பெண்களின் நிலைமையை மிகவும் மோசமாக்கியது. ஒழுக்க நூலாசிரியர் ஆண்கள் ஆதலால், பெண்கள் ஆசை காட்டுபவர்கள் ஆயினர். பெண்களே ஒழுக்க நூல் ஆசிரியர்களாயிருந்திருந்தால், ஆண்கள் ஆசை காட்டுபவர்களாகியிருப்பர். பெண், ஆசையைத் தூண்டுபவளாகி விட்டதால், அவளுக்கு மனிதர்களை மருட்டும் வாய்ப்புகள் இல்லாமற் செய்வது உசிதமாயிற்று. ஆகவே, பெரிய குடும்பத்துப் பெண்கள் பலவிதக் கட்டுப்பாடுகளுக்குட்பட வேண்டி வந்தது. கௌரவமில்லாத பெண்கள் பாவப் பிண்டங்கள் என்று கருதப்பட்டு மதிப்பிழந்து வாழ்ந்தனர். நவீன காலத்தில்தான் ரோம் சாம்ராச்சிய காலத்தில், பெற்றிருந்த சுதந்தரத்தைப் பெண்கள் பெறலாயினர். தந்தை வழிச் சமூக அமைப்பு பெண்களை வெகுவாக அடிமைப்படுத்தியது.

ஆனால், கிறிஸ்தவம் வளர்வதற்கு முன்னால் நிலைமை பெரிதும் திருந்திவிட்டது. கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் பாவங்களிலிருந்து பெண்கள் காக்கப்படுவதாகக் கூறப்பட்டு, மீண்டும் அவர்களுடைய சுதந்தரம் பறிக்கப்பட்டது. பாவம் பற்றிய தவறான கருத்து நீக்கப்பட்ட பின்னரே பெண்கள் சுதந்தரராயினர். பாதிரிமார்களின் எழுத்துக்கள் எல்லாம் பெண் இனத்தைப் பழிப்பதாகவே உள்ளன. நரகத்தின் வாயில் பெண் என்றும், மனித குலத்தின் எல்லாக் கேடுகளுக்கும், பெண்ணே காரணமாகவும் சொல்லப்பட்டது. அவள் (பெண்) தான் பெண் என்பதற்காகவே வெட்கப்பட வேண்டும், உலகுக்கு அவள் கொண்டுவந்துவிட்ட சாபத்தீடுகளுக்காக அவள் வருந்தித் தவமியற்ற வேண்டும். ஆடை அணிவது குறித்து அவள் வெட்கப்படவேண்டும், ஏனெனில் ஆடை அவளுடைய வீழ்ச்சியின் நினைவுச் சின்னமாகும். முக்கியமாக அவளுடைய மேனி அழகைக் குறித்து அவள் வெட்கமடைந்து தலை குனிய வேண்டும். ஏனெனில், அதுவே வலிமைவாய்ந்த ஒரு கருவியாகும்.

உடல் அழகு கிறிஸ்தவத் திருச்சபை நூல்களால் என்றுமே கண்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு விதிவிலக்கே கொடுக்கப்பட்டது. இடைக்காலத்தில் (Middle Ages) சமயத் தலைவர்களின் அழகுபற்றி அவர்களுடைய சமாதியின் மீது எழுதப்பெற்று வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆறாவது நூற்றாண்டில், கிறிஸ்து நாதரின் இறுதி போஜன விழாவில், தூய்மையின்மை காரணமாகப் பெண்கள் கையுறை அணியாத தங்கள் கைகளால் பூசை உணவை வாங்க அனுமதிக்கப்படவில்லை. பெண்களுடைய இழி நிலை தொடர்ந்து நீடிக்குமாறு செய்யப்பட்டது. (W.E.H. Leckey, History of European Morals).

சொத்து, வாரிசு பற்றிய சட்டங்களும் பெண்களுக்குப் பாதகமாகவே அமைக்கப்பட்டன. பிரெஞ்சு புரட்சியைச் சார்ந்த கட்டுப்பாடற்ற சிந்தனையாளர் தோன்றிய பின்னரே பெண் குழந்தைகள் வாரிசு உரிமை பெற்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com