வழி
கவிஞர் நிரந்தரன்
பூட்டியே இருக்கக்கூடாது
கதவுகள்.
இமைகள் மட்டும்தான்
திறக்கின்றன -
பல நேரங்களில்
பார்வைக் கதவை
அடைத்துவிடுகிறோம்
எவைஎவைகளுக்காகவோ.
எத்தனையோ
கதவுகளைப்
புரட்சிகள்
திறந்துவிட்டுள்ளன
அதிகாரங்கள்
நம்மை அடக்கும்போதெல்லாம்.
அறிவின் கை தட்டும்போதும்
புதுக் கருத்தின்
கைகள் தட்டும்போதும்
பூட்டியே வைத்துவிடுகிறோம்
நம் கதவுகளை.
கடவுளரின்
கரங்கள்தான்
பூமியின் கதவுகளைத்
திறந்தன என்ற
செல்லரித்த சொல்
இன்னுமிங்கே இருப்பது
ஏன் சொல்?
கதவுகளற்று இருப்பதால்
உலகையே
உள்வாங்கிக் கொள்கிறது
வானம்.
கதவுகள் இல்லாததால்
எல்லா உயிர்களுக்கும்
சுவாசம் தருகிறது
காற்று.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்பதுபோல் -
திறவுங்கள்
மனப் பழைமைகள்
துரத்தப்படும்.
எப்போதும் வழி பிறக்கும் -
ஆறாம் அறிவுக் கதவை
அடைக்காமல்
திறந்துவைத்தால்!
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|