Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

தத்துவத்தின் வாள்
மார்க்ஸ்

டெமாக்ரட்டசின் இயற்கைத் தத்துவத்துக்கும் எபிகூரசின் இயற்கைத் தத்துவத்துக்கும் உள்ள வேற்றுமை

Marx இந்தத் தலைப்பில்தான் கார்ல் மார்க்ஸ் தமது டாக்டர் பட்டத்துக்கான ஆய்வைச் சமர்ப்பித்தார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றபோது மார்க்ஸ் எழுதிய முன்னுரை இது:

இந்த நூலை டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி நூலாக எழுதும் உத்தேசம் முன்னமேயே இல்லாது போயிருக்குமானால், இந்த நூலின் வடிவம் ஒரு விதத்தில் சில அம்சங்களில் பண்டிதத் தன்மை குறைந்ததாகவும், மற்றொரு விதத்தில் கண்டிப்பான விஞ்ஞானத் தன்மை கூடியதாகவும் அமைந்திருக்கும். இருந்தபோதிலும், புறக்காரணங்களின் விளைவாக நான் இந்த நூலை இதே உருவத்தில்தான் வெளியிடலானேன். மேலும் கிரேக்க தத்துவத்தின் சரித்திரத்தில் இதுவரையில் தீர்க்கப்படாதிருந்த ஒரு பிரச்னையையும் இந்த நூலில் தீர்த்துவிட்டதாகவே நான் நம்புகிறேன்.

இந்த ஆராய்ச்சிக்கு எந்தவொரு வகையிலும் உதவக்கூடிய முறையில் எந்தவொரு பூர்வாங்கமான நூலும் இல்லை என்பதை நிபுணர்கள் அறிவார்கள்.

இதுநாள் வரையிலும் சிசரோ, புளூடார்க் ஆகியோரின் பிதற்றல்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர வேறொன்றையும் காணோம்.

மதியீனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய சகாப்தமான மத்திய காலம் பூராவும் திருச்சபையின் பிதாமகர்களால் எபிகூரசின் மீது இடப்பட்டிருந்த தடைகளிலிருந்து எபிகூரசை விடுவித்த காஸெண்டி தமது கணிப்புகளில் ஒரு சுவையான அம்சத்தை வழங்குகிறார்.

அவர் தமது அஞ்ஞானி அறிவுடன் தமது கத்தோலிக்க உணர்வையும், திருச்சபையுடன் எபிகூரசையும் இணங்கிப் போகச் செய்யுமாறு முயல்கிறார். இது ஒரு பயனற்ற முயற்சி என்பது எளிதில் விளங்கும். இந்த முயற்சி, கிரேக்க லாய்சின் மதர்த்த உடம்பின்மீது ஒரு கிறிஸ்துவக் ‘கன்னியாஸ்திரி’ யைத் தூக்கிப்போடும் வழக்கத்தைப் போன்றது தான்.

எபிகூரசின் தத்துவத்தைப்பற்றி காஸெண்டி நமக்குக் கற்றுத்தர முயல்வதைக் காட்டிலும் எபிகூரசிடமிருந்து அவரே தத்துவத்தைக் கற்க முனையும் முயற்சியாகத்தான் அது விளங்குகிறது.

இந்த ஆராயச்சியை நான் எழுதவிருக்கும் பெரியதொரு நூலின் முன்னோடியாகத்தான் கருதவேண்டும். அந்தப் பெரிய நூலில் எபிகூரஸ், ஸ்டோயிக்வாதம், அசாத்தியவாதம் முதலிய தத்துவச் சக்கர வட்டத்தைக் கிரேக்க சிந்தனை முழுவதன் சம்பந்தத்தோடும் விரிவாக ஆராய்வேன். உருவ அமைதி முதலியவற்றில் இந்த ஆராய்ச்சியில் நேர்ந்துள்ள குறைபாடுகளை நான் அந்த நூலில் களைந்துவிடுவேன்.

மேற்கூறிய முறைமைகளின் பொதுவான அம்சங்களை ஹெகல் மொத்தத்தில் சரியாகவே விளக்கியுள்ளார். என்றாலும் தத்துவத்தின் சரித்திரம் அனைத்தையும் நாம் கால நிர்ணயம் செய்வதற்கு ஏதுவாக விளங்கும் அவரது ‘தத்துவத்தின் சரித்திரம்’ என்ற நூலின் வியக்கத்தக்க, விரிவான, துணிவான திட்டத்திலோ, ஒருபுறத்தில் விரிந்த வியாக்கியானங்களைக் காண்பது நமக்கு அசாத்தியமானது; இன்னொரு புறத்திலோ, ஈடு இணையற்ற சிந்தனாயூசம் என்று அவர் கருதிய - அந்தப் பெருஞ்சிந்தனையாளரின் கருத்தோட்டத்திலோ, கிரேக்க தத்துவ சரித்திரத்துக்கும், பொதுவான கிரேக்க சிந்தனைக்கும் உரியவையான அந்த முறைமைகளின் உயர்ந்த முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்வதினின்றும் அவரைத் தடுத்து நிறுத் தியது. இந்த முறை மைகள்தான் கிரேக்க தத்துவத்தின் உண்மையான சரித்திரத்தைக் காண உதவும் கருவியாகும்.

கிரேக்க வாழ்க்கைக்கும் இவற்றுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றிய ஆழமான குறிப்பினை எனது நண்பர் கோப்பென் எழுதிய ‘மகா பிரடரிக்கும் அவரது எதிரிகளும்’ என்ற நூலிலே காணலாம்.

எபிகூரசின் தத்துவத்துக்கெதிராக புளூடார்க்கின் தர்க்கம் பற்றிய விமர்சனம் இதில் ஓர் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்தத் தர்க்கம் தன்னிகரற்று விளங்கவில்லை; ஆனால் அதுவும் ஒருவகைப் போக்கையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதாவது தத்துவத்தின் இடத்தில் பகுத்தறிவை இறையியலாக்கும் ஒரு போக்கையே அது மிகவும் துல்லியமாகப் புலப்படுத்துகிறது.

மதத்தின் சன்னிதானத்தில் புளூடார்க்கின் தத்துவத்தை மேற்கோள் காட்டும்போது, அவரது பொதுவான அடிப்படையிலுள்ள தவறைப் பற்றி இந்த விமர்சனம் எதுவும் கூறவில்லை. இந்த விஷயத்தில் எந்தவொரு விவாதத்தையும்விட டேவிட் ஹ்யூம் எழுதியுள்ள சொற்றொடரே போதுமானதாகும்.

“தத்துவத்தின் ராஜ ரீகமான அத்தாட்சியை எங்கும் ஒப்புக்கொண்டாக வேண்டிய நிலையில் அதன் முடிவுகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பணிந்துபோகவேண்டிய நிலையில் அதனைப் பங்கப்படுத்த முனையும் ஒவ்வொரு குறிப்பிட்ட கலைக்கும் விஞ்ஞானத்துக்கும் எதிராக அதனை நியாயப்படுத்த வேண்டிய நிலையில் இத்தகைய செயல் நிச்சயமாகத் தத்துவத்துக்கு இழைக்கப்படும் அகௌரவம் தான்.

தனது குடிமக்களுக்கு எதிராக மாபெரும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதி விசாரணைக்கு நிறுத்தப்படும் மன்னனைத்தான் இது நினைவூட்டுகிறது!”

உலகையே வெற்றி கொள்ளக் கூடிய தத்துவத்தின் பரிபூரணமான சுதந்திர இதயத்தில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையிலும், தத்துவம் என்பது எபிகூரசுடன் சேர்ந்து அதன் எதிரிகளை நோக்கிப் பின்வருமாறு அறைகூவல் விடுப்பதை நிறுத்தாது:

“ஜனக் கூட்டத்தின் கடவுளர்களை நிராகரிப்பவன் பக்தியற்றவனல்ல; மாறாக, கடவுளரைப் பற்றிய ஜனக் கூட்டத்தின் கருத்தைத் தழுவி நிற்பவனே பக்தியற்றவன்.”

தத்துவம் இதனை எவ்விதத்திலும் மூடி மறைக்கவில்லை. பிராமிதியஸ் பின்வருமாறு ஒப்புக் கொள்கிறான். “உண்மையில் நான் எல்லாக் கடவுளர்களையுமே வெறுக்கிறேன்” (அச்சிலஸ் எழுதிய ‘கட்டுண்ட பிராமிதியஸ்’ என்ற நூலிலிருந்து)

இந்த ஒப்புதல்தான் தத்துவத்தின் சொந்த ஒப்புதல். மனிதனின் உணர்ச்சியை மகோன்னதமான தெய்வாம் சமாக ஒப்புக் கொள்ளாத விண்ணுலக, மண்ணுலகக் கடவுளர்கள் அனைவருக்கும் எதிராக வழங்கும் சொந்தக் குறிக்கோளும் இதுதான்.

தத்துவத்தின் சமுதாய நிலையின் கண்ணெதிரே நிகழும் சீரழிவைப் போற்றிப் புகழும் குட்டிபோடும் முயலையொத்த கூறுகெட்ட ஜென்மங்களுக்கும், கடவுளர்களின் தூதனான ஹெர்மெசுக்குப் பிராமிதியஸ் அளித்த பதிலைப் போலவே தத்துவமும் இங்கே மறுபடியும் பதிலளிக்கிறது.

“கொத்தடிமைப் புன்மைக்காக என் கொடு விலங்குகளை என்றும் மாற்றிக் கொள்ளமாட்டேன். ஜீயஸின் சேவையில் கட்டுப்பட்டிருப்பதைவிட, இந்தப் பாறைகளோடு விலங்கிடப்பட்டுக் கிடப்பது எவ்வளவோ மேலானது.”

தத்துவத்தின் கால அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஞானிகள், தியாகிகள் எல்லோரிலும் மிகவும் மகத்தானவன் பிராமிதியஸ்.

பெர்லின், மார்ச் 1841.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com