Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

இட இதுக்கீட்டில் புதுக் குழப்பம்! - ஒரு விளக்கம்

இரா. ஜவஹர்

இட ஒதுக்கீட்டில் மீண்டும் சிக்கல்!

Jawahar தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.

அடுத்து, இது தொடர்பான அரசமைப்புச் சட்ட விளக்கம் கேட்கப்பட்டதன் பேரில் தனியாக ஒரு விசாரணை வேறு இப்போது நடந்து முடிந்துள்ளது. இந்த விளக்கம் பற்றிய தீர்ப்பு முதலில் வெளியாகும்.

அதன்பிறகு, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகச் சட்டம் செல்லுமா, செல்லாதா என்ற வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டுச் சட்டத்தின் கதி என்ன ஆகும்? செல்லுமா, செல்லாதா?

செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
இவைதான் இப்போது எழுந்துள்ள சிக்கல்கள்.

இவற்றின் விவரம் என்ன?

படிப்படியாகப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் அரசுப் பணியிலும், கல்வி நிலையங்களிலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் அளிக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.

மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயே வசதியான பிரிவினருக்கு (க்ரீமிலேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

எனவே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது எப்படி என்று தமிழ்நாட்டில் விவாதம் எழுந்தது.
அப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி ஒரு கருத்தை முன் வைத்தார்.

அதாவது -

சில வகையான சட்டங்களில் நீதிமன்றம் தலையிடுவதைத் தடுத்து, அந்தச் சட்டங்களைப் பாதுகாக்க அடிப்படைச் சட்டமான அரசமைப்புச் சட்டத்திலேயே வகை செய்யப்பட்டு உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 31பி, 31சி ஆகிய பிரிவுகள் இத்தகைய பாதுகாப்பை அளிக்கின்றன.

31பி பிரிவின்படி அரசமைப்புச் சட்டத்தில் 9-வது பட்டியல் ஒன்று உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறும் எந்தச் சட்டமும் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறி, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று 31பி பிரிவு கூறுகிறது.

31சி பிரிவு கூறுவதாவது:

(சமூக ஏற்றத் தாழ்வை நீக்குவது, பொருள் வளத்தைப் பொது நலத்துக்காகப் பயன்படச் செய்வது, நலிந்த பிரிவினரின் நலன்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிகள் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்த) வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்துவதற்கான சட்டமானது,
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையையோ, தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமையையோ, பாதிக்கிறது என்று கூறி, நீதி மன்றம் தடையிட முடியாது என்று 31சி பிரிவு கூறுகிறது.

எனவே -

இடஒதுக்கீடு 69 விழுக்காடு அளிக்கப்படும் என்று ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.

இது அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்துவதற்கான சட்டம் என்று அதில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் 31சி பிரிவின் பாதுகாப்புக் கிடைக்கும்.

பிறகு இந்தச் சட்டத்தை, அரசமைப்புச் சட்டத்தின் 9-வது பட்டியலில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் 31பி பிரிவின் பாதுகாப்புக் கிடைக்கும்.

Students இப்படிச் செய்தால் இந்தச் சட்டத்தில் நீதி மன்றம் தலையிட முடியாது. சட்டம் பாதுகாக்கப்படும். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.

இத்தகைய கருத்தை கி.வீரமணி முன் வைத்தார்.

இதை ஜெயலலிதா அரசு ஏற்றுக் கொண்டது.

இதன் முதல் படியாக -

“தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்டம்” என்ற சட்டம் நிறை வேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தில், இட ஒதுக்கீடு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில், குறிப்பான சிலவற்றைச் செயல் படுத்துவதற்கானது இந்தச் சட்டம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.

பிறகு இந்தச் சட்டத்தை 9-வது பட்டியலில் சேர்ப்பதற்காக, அரசமைப்புச் சட்ட 76-வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி 9-வது பட்டியலில் தமிழ்நாடு இடஒதுக்கீட்டுச் சட்டம் இடம் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்தது.

ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கில் முன் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:

“நீதிமன்றம் தலையிட்டுப் பரிசீலனை செய்யும் உரிமையானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் (Basic Feature) என்றும், அடிப்படை அம்சங்களைத் திருத்த நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் கேசவானந்த பாரதி வழக்கில் 1973 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, தமிழகச் சட்டத்துக்கு 31பி பிரிவும், 31 சி பிரிவும் பாதுகாப்பு அளிக்க முடியாது. நீதி மன்றம் தலையிட முடியும். தலையிட வேண்டும்.

அடுத்து, இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் அளிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகச் சட்டமோ இதற்கு மாறாக 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கிறது. எனவே தமிழகச் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

அடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயே வசதியான பிரிவினருக்கு (க்ரீமிலேயர் - எடுத்துக் காட்டாக, மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு) இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று அதே தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அவர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. எனவே, இத்தகையோருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.”

- இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட குழு (பெஞ்ச்), மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு அளவு பற்றி மட்டும் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

மற்றபடி இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டத்தின் 31பி, 31சி பிரிவுகள் பற்றி கேள்வி எழுப்புவதால், இதற்கான விளக்கத்தை 9 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட பெஞ்ச் முதலில் அளிக்க வேண்டும் என்று 5 நீதிபதிகளின் குழு கூறியது.

இதன்படி 9 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த பெஞ்ச் இதுபற்றிய விசாரணையைக் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடத்தி முடித்து விட்டது.

இந்த விசாரணையின்போது தமிழக அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் கூட “அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் பாதிக்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம்” என்பதை ஏற்றுக் கொண்டே வாதிட்டு இருக்கிறார்கள்!

இந்த இடத்தில் ஒரு விளக்கம்.

அடிப்படை உரிமை வேறு. அடிப்படை அம்சம் வேறு.

அடிப்படை உரிமைகள் என்னென்ன என்பது பற்றி அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக, பேச்சு உரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படிப் பல அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

ஆனால், ‘அடிப்படை அம்சம்’ என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பில்தான் “அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் அல்லது அடிப்படைக் கட்டமைப்பு “(Basic Feature Or Basic Structure )” என்ற சொல்லை, கருத்தியலை, சித்தாந்தத்தை உச்சநீதிமன்றம் உருவாக்கியது.

அதாவது -

“அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. 368-வது இத்தகைய அதிகாரத்தை அளிப்பது உண்மைதான். ஆனால், திருத்துவது (amend) என்றாலே, மேலோட்டமாக மாற்றம் செய்வது என்றுதான் பொருள். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றினால் அது திருத்தம் ஆகாது. எனவே, அடிப்படையான அம்சங்களை மாற்றுவதற்கு நாடாளு மன்றத்துக்கு அதிகாரம் கிடையாது.

எந்தச் சட்டமும் அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லுமா, செல்லாதா என்று பரிசீலித்துத் தீர்ப்பு அளிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு என்பது ஓர் அடிப்படை அம்சமாகும். எனவே, இதைப் பாதிக்கும் வகையில் எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அது செல்லாது.”

- என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு 24-4-1973 அன்று அளிக்கப்பட்டது.

எனவே இந்தத் தேதிக்குப் பிறகு 31பி பிரிவின் படி 9-வது பட்டியலில் சேர்க்கப்படும் எந்தச் சட்டத்தையும் நீதிமன்றம் பரிசீலிக்க முடியும் என்று பிறகு மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் பின்னர் பல தீர்ப்புகள் வெளியாயின.

அரசமைப்புச் சட்டத்தின் பல அம்சங்களை, அடிப்படை அம்சங்கள் என்று இந்தத் தீர்ப்புகள் அறிவித்தன.

அதாவது -

1. அரசமைப்புச் சட்டமே மேலதிகாரம் கொண்டது.

2. சட்டத்தின்படிதான் ஆட்சி நடத்த வேண்டும்.

3. மதச்சார்பின்மை.

4. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

5. இந்திய ஒற்றுமையும், ஒருமைப்பாடும்.

6. அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிகளையும் சமநிலைப்படுத்த (Balancing) வேண்டும்.

- என்பவை உள்ளிட்ட பல அம்சங்கள், அடிப்படை அம்சங்களாகும் என்று தீர்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன.

எனவே, எந்த விஷயத்தையும் அடிப்படை அம்சம் என்று குறிப்பிட்டு, அதை ஒரு சட்டம் பாதிக்கிறது என்று கூறி, அந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டு உள்ளது.
ஒரு வகையில் பார்த்தால், வரம்பு இல்லாத, எல்லை இல்லாத அதிகாரம் தனக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறுகிறது!

“நாடாளுமன்றத்தின் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது தான்” என்று கூறும் உச்சநீதி மன்றம்தான், தன்னுடைய அதிகாரத்துக்கு வரம்பு இல்லை என்று கூறுகிறது!

இப்போதைய இடஒதுக்கீடு வழக்கில் வாதிடும் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் வழக்கறிஞர்களும் இந்த ‘அடிப்படை அம்சம்’ என்ற சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே பேசியிருக்கிறார்கள்.

“இடஒதுக்கீட்டுக்கான தமிழகச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் எதையும் பாதிக்கவில்லை; பலப்படுத்தவே செய்கிறது. 31 பிரிவின்படி 9-வது பட்டியலில் எந்தச் சட்டத்தை வேண்டுமானாலும் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றுதான் அவர்கள் வாதிட்டு இருக்கிறார்கள்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகளோ வேறு விதமாகக் கூறியிருக்கிறார்கள்!

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அடிப்படை அம்சம் ஆகும். (இட ஒதுக்கீடு என்பது முன்னேறிய சாதியினரையும், மற்றவர்களையும் சமமாகப் பார்க்காது. மற்றவர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கும்.)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை அம்சத்துடன் தொடர்புடையவைதான் இடஒதுக்கீடு அல்லது கல்வி தொடர்பான சட்டங்கள். எனவே இவற்றில் நீதிமன்றம் தலையிட முடியும்” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்!

“நாளை வேறு ஒரு மாநிலம் 90 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கக் கூடும்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்!

மேலும் “இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று இந்த நீதிமன்றம் ஏற்கனவே உச்சவரம்பு விதித்துள்ளது. அப்படி இருக்கும்போது, தமிழகச் சட்டம் 69 விழுக்காடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்தையே மோசடி செய்வது இல்லையா?” என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்!

ஆகவே, இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்?!

எனவே -

இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்து இடஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் முழுமையாகப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

“புரட்சி செய்வது ஒரு வழி” என்கிறார் அரசமைப்புச் சட்ட வல்லுநர் துர்க்கதாஸ் பாசு!

ஆனால், “புரட்சியைத் தடுப்பதற்காகத்தான் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான வாய்ப்பு 368-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளது” என்று நீதிபதி கன்னா கூறியுள்ளதையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

வேறு என்ன வழி?

மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, மக்களின் தீர்ப்பைப் பெறுவது ஒரு வழி என்கிறார் அவர்.
இதுபற்றி அனைவரும் சிந்திக்கலாம்.

அதாவது -

நலிந்த பிரிவினரைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிகள் அரசமைப்புச் சட்டத்தில் உள்ளன. இவற்றைச் செயல்படுத்துவதற்கான சட்டங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்த முன்வடிவை (மசோதா) மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இந்தச் சட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டு மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இந்தச் சட்டம் வேண்டும் என்று பெரும்பான்மையான கோடிக்கணக்கான மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பின் பேரில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

இப்படிச் செய்துவிட்டால் இந்த விஷயங்களில் நீதிமன்றத் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்.
இதுபற்றி அனைவரும் சிந்திக்கலாம்.

கூடவே மற்றொன்று -

இடஒதுக்கீடு மிகவும் தேவையான ஒன்றுதான்.

எனினும் நாட்டில் உள்ள வறுமை, விலை உயர்வு, வேலை இன்மை, கல்வி இன்மை, மருத்துவ வசதி இன்மை மற்றும் இவை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை, இட ஒதுக்கீட்டால் தீர்த்துவிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

எனவே இவற்றுக்குத் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சிந்திப்போமே!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com