Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

மன்னராய் சிற்பியாய் கலைஞர்
சிற்பச் சித்தர் வை. கணபதி ஸ்தபதியார்

டாக்டர் கலைஞர் அவர்களை பெரும்பாலோர் அரசியல் மேதையாகவே பார்க்கிறார்கள்; பேசுகிறார்கள். கலைஞர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கும் அவரை ஒரு மாபெரும் கலைஞராக எவரும் என்னிடம் சுட்டிப் பேசியதில்லை. என்னைப் பொறுத்த வரையில், அவரை ஓர் அரசியல்வாதியாக அன்றி ஒரு கலைஞராகவே பார்த்திடும் வாய்ப்புகள் எனக்கு நிரம்பக் கிட்டியிருக்கின்றன. எத்தனையோ பாகவதர்கள் இருந்திருந்தாலும் பாகவதர் எனும் சொல் எம்.கே.தியாகராஜ பாகவதரையே குறிப்பது போல, கலைஞர்கள் எத்தனையோ பேர் இருந்திடும் இந்நாளில், கலைஞர் என்றால் டாக்டர் கலைஞர் அவர்களை மட்டுமே அது சுட்டி நிற்கும்.

Ganapathy அவரைப் பார்க்கக் கொடுத்து வைத்திட்ட முதல் சந்திப்பே அவரை ஒரு பெரும் கலைஞராக எனக்கு உணர்த்திக் காட்டியது. டாக்டர் கலைஞர் அவர்கள் அப்பொழுது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்கள். அந்நேரத்தில் பூம்புகாரில் கண்ணகிக்குப் “பத்தினிக் கோட்டம்” ஒன்று கல்லால் செய்து, அங்கே கண்ணகியைப் பத்தினித் தெய்வக் கோலத்தில் சிலையாக நிறுவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. முதற்படியாக, கண்ணகிப் படிமத்தை ஆளுயர அளவினதாகச் செய்து கொடுத்திருந்தேன். அதனைப் பூம்புகாருக்கு அடுத்த மேலையூரில் “தாசீல் பண்ணை” திருமதி கௌரியம்மாள் வீட்டில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அப்படிமத்தை டாக்டர் கலைஞர் அவர்கள் பார்க்க வேண்டுமென்றும் அதற்கான பத்தினிக் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பினை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தொடர்புடையோர் உறுதி செய்திருந்தார்கள்.

அங்ஙனமே, குறிப்பிட்ட நாளில் டாக்டர் கலைஞர் அவர்கள் வந்தார்கள். மதிப்புமிகு ம.பொ.சி. அவர்களும், கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களும் உடன் வந்திருந்தார்கள். அம்மூவரும், மற்றும் பல உள்ளூர்ப் பிரமுகர்களும் அப்படிமத்தைப் பார்த்துச் சுவைத்துப் பாராட்டினார்கள். அவர் உள்ளத்திலே அப்படிமம் ஓர் அன்புணர்வைத் தோற்றுவித்து, “இதை யார் செய்தது?” என்ற வினாவையும் எழுப்பிடச் செய்தது. வெகுதொலைவில் நின்றிருந்த நான் அருகே அழைக்கப்பட்டு, டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். அவர்கள், ஒரு கண்ணால் படிமத்தைப் பார்த்துக் கொண்டு, அவருக்குப் பின்னால் நின்ற என்னை, மறு கண்ணால் அரைகுறையாகவே பார்த்தார்கள்.

அந்த அரைப் பார்வையிலேயே, அவரது அன்புணர்வை, அவர்தம் எதிர்காலத் திட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று முகிழ்ந்தது தான், கலைஞர் அவர்கள் பிறகு படைத்திட்ட பூம்புகார்க் கலைக் கூடமும் கலைமன்றங்களும் ஆகும். அக்காட்சிகளை ஒரு நொடியில் மனதிலே உருவாக்கிக் கொண்டு, அடுத்த நொடியிலே மேடை ஏறி, அவர்தம் அழகிய சொற்களாலே அவற்றை இலக்கியக் காட்சிகளாகவே சித்தரித்துக் காட்டினார்கள். ஆற அமர இருந்து சிந்தித்தாலே மாதம் இரண்டு ஆகும், ஒரு திட்டம் தயாரித்திட பலருக்கு. அங்ஙனம் வெகு விரைவில் கலைக் கூடங்கள் வரும் என்றும், பூம்புகார்பெருநகரமாக மலர்ந்திடும் என்றும் அப்பொழுதே சொன்னார்கள்.

மேடையிலே அன்று அவர் தீட்டிய ஓவியங்கள், இன்று அவை கண்கவர் காட்சிப் பொருள்களாக இருப்பதினால், அவர் மீது அன்பும் மதிப்பும் கொண்டு - நானே அவற்றையெல்லாம் செய்தேன் என்றாலும் - அவர் அதற்கான உணர்வாக - வழி காட்டியதாக - இருந்தமையால் அவருக்கு ஒரு பெரிய விழா எடுத்து “பூம்புகார் படைத்த பெருந்தச்சன் என்ற பட்டத்தை 3000 சிற்பிகள் கூடி, வழங்கி மகிழ்ந்தோம். அவற்றையெல்லாம் கல்லால் செய்வித்த அவருக்கு 3’.0” X 2’.0” அளவில் கற்பலகையில் அப்பட்டத்தை கல்வெட்டாகப் பொறித்து, இரண்டு தூண்கள் கொண்ட தோரணவாயில் அமைப்பொன்றையும் கல்லாலேயே செய்து, அதில் அக்கல்வெட்டைப் பொருத்தி, அவ்விழா மேடையிலேயே அவர்களிடம் வழங்கினோம்.

பண்டைக் காலத்தில் பல்லவ மன்னனுக்கு ‘சித்ரகாரப் புலி’ என்ற பட்டத்தை அறிஞர் பெருமக்கள் சூட்டியதை அந்நிகழ்ச்சி நினைப்பூட்டுவதாக, அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொல்பொருள் ஆய்வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் என்னிடம் சொல்லி, அவர்தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். இப்படித்தான் அந்த நாட்களிலும் கலை வளர்த்த மன்னர்களுக்கு சிற்பிகள் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்களோ என்று கேட்டு வியந்து, அதுவரை வினாக்குறியாக இருந்த வரலாற்றுச் செய்திக்கு ஒரு விடை கண்டிட்டதாகவே உளம் மகிழ்ந்தார்கள்.

கலைஞரைக் கலைஞராகக் கண்ட மற்றொரு சந்தர்ப்பத்தையும் இதோடு, இணைத்துக் காட்டிட விரும்புகிறேன். கலைஞர் அவர்களே சொல்லோவியமாக தீட்டிய சிலப்பதிகார இலக்கியக் காட்சிகளைக் கல்லிலே செதுக்கி அமைக்க வேண்டிய நேரம். அப்பொழுதுதான் கலைக்கூடக் கட்டடத்திற்குப் பொறியாளர்கள் அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அக்கட்டிடப் பணிக்கு பொறுப்பேற்றிருந்த செயல் பொறியாளரும், உதவிப் பொறியாளர் ஒருவரும் மாமல்லபுரத்திலே உள்ள என்னுடைய கல்லூரிக்கு வந்து கலைஞர் அவர்கள் திட்டம் பற்றிப் பேசினார்கள். “இக் காட்சிகளை உங்களால் செய்ய முடியுமா? தமிழக முதல்வர் ஒரு கலைஞராயிற்றே, அவரைத் திருப்தி செய்ய முடியுமா?” என்று ஒரு சிக்கலை என் முன் வைத்து அப்பொறியாளர்கள் பேசினார்கள்.

எனக்கு 10 நாட்கள் அவகாசம் தருமாறு கோரினேன். அதற்குள் ஒரு சில படங்களை வரைந்து கொண்டு அவரிடம் எடுத்துச் சென்று காட்டி, அவரது கலையுணர்வையும், விருப்பத்தையும், ஆதரவையும் நேரடியாகவே புரிந்து கொள்ளலாமே என்று அப்பொறியாளர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்களும் இசைந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து, நாலைந்து படங்களைத் தயாரித்துக் கொண்டு டாக்டர் கலைஞர் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். எப்படி இதனை வரவேற்று அங்கீகரிப்பாரோ என்று அப்பொறியாளர்கள் உள்ளூரப் பதறி வியர்த்து நின்றார்கள்.

பொறியாளர்கள் அங்ஙனம் பதறி நின்றதற்கு ஒரு காரணம் அப்பொழுது இல்லாமலுமில்லை. நாங்கள் கலைஞரைச் சந்தித்த இடம், நேரம், கலையுணர்வு சந்தித்த இடம், கலையுணர்வு பொங்கி வரும் நேரமல்ல; கலைஞர் அவர் களுக்குக் கோபம் பொங்கி வரும் நேரமாக இருந்தது. யாதெனில், தலைமைச் செயலகத்தில் கலைஞர் அவர்கள் கவர்னர் அறையில் இருக்கிறார்கள்.

Thiruvalluvar வெளியே மாணவர்கள் கிளர்ச்சி உச்ச நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. கடுமையான உத்தரவுகள் அங்கிருந்து பறந்து கொண்டிருக்கின்றன. இக்கால கட்டத்தில் பொறியாளரும் நானும், அவர் அறைக்குள்ளே நுழைகிறோம். “வாருங்கள்” என்று அருகே வரச் சொல்லி, “அது என்ன?” என்று கையிலிருந்த படச்சுருளை சுட்டிக் கேட்டார். படங்களை காட்டுவதற்கு சரியான நேரம் அதுவல்லவே என்ற நடுக்க உணர்வோடு அப்படங்களை விரித்துக் காட்ட முற்பட்டோம். வியர்வை படிந்திருந்த கலைஞர் அவர்கள் முகத்தில் வியப்பும் களிப்பும் படர்ந்திட்டதை பார்த்த நான் அவரிடம் நன்றாகவே அப்படங்களை விரித்துக் காட்டினேன். பேசினேன்.

முதற்படம், “சிலம்புக்குள் இளங்கோவடிகளை நின்ற கோலத்தில் காட்டி, சிலம்பின் அடியில் குன்றக் குறவர்கள் காட்சியை வைத்துச் சித்தரித்திருந்த படம் அது”. அதைப் பார்த்து, “ஏன் இளங்கோவடிகள் இங்ஙனம் வளைந்து நிற்கிறார்” என வினவினார்கள். ‘வளைவு கனிவைக் காட்டும்’ என்றேன். உடனே அருகிலிருந்த மாண்புமிகு அமைச்சர்களிடம் அதனைக் காட்டி “பார்ப்பதற்கு இக்காட்சி எத்துணைச் சுகம் தருகிறது பார்த்தீர்களா?” என்று பாராட்டினார்கள். “அரசுப் பதவிகளை எல்லாம் துறந்து, அவர் மக்கள் மீது கனிவு கொண்ட நேரத்தில் படைத்திட்ட இலக்கியம் அல்லவா சிலப்பதிகாரம்? ஆதலால் இக்காட்சி நன்றாகவே பொருந்துகிறது” என்று வாயாரப் புகழ்ந்தார்கள்.

அடுத்த காட்சி, கனகவிசயர் தம் தலையில் கல்லைச் சுமந்து வரும் காட்சியாகும். டாக்டர் கலைஞர் அவர்கள் மேடையில் அடிக்கடி தொட்டுப் பேசிடும் வரலாற்றுக் காட்சி இஃது ஆதலால் - அக்காட்சியினை மேடையிலே நன்றாகச் சுவைபடப் பேசி வந்தார்களே, அச்சுவை நான் வரைந்திட்ட காட்சியிலே படர்ந்திருக்கிறதா என்பதை அவர்கள் மூலம் கண்டறிவது எனது உள்நோக்கமாக இருந்தது.

படத்தில் கண்ட அக்காட்சியைக் கலைஞர் அவர்கள் நன்றாகவே சுவைப்பதை என்னால் பார்க்க முடிந்தது. பளுவான கல்லைத் தூக்கி வரும்போது உடலில் ஏற்படும் நெளிவு, சுளிவு ஆகியவை வலியுறுத்தப்பட்டு இருப்பதையும், அவர்கள் அரசர்கள் என்பதைக் காட்டிட அதில் காட்டியிருந்த தொழில் யுக்தியையும் தொட்டுக் காட்டி அகம் மகிழ்ந்தார்கள். மற்ற படங்களை மேலும் பார்ப்பதற்கு உரிய நேரம் அஃது இல்லையாதலால், அப்படங்களை எல்லாம் சுருட்டி என்னிடமே கொடுத்து விட்டு, பொறியாளர்களை நோக்கி, தமது முடிவைத் தெரிவித் தார்கள். “இப்பணியை இவரிடமே கொடுத்து விடுங்கள். இவரே செய்திடுவார்” எனக் கூறி எனக்கு விடை கொடுத்தார்கள். பொறியாளர்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போனார்கள்.

பிறகு பொறியாளர்கள் தமது ஜீப்பில் என்னை ஏற்றிக் கொண்டு, நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று, சிறப்பு விருந்து ஒன்றினை எனக்குக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

“கலைஞர் கலைஞராகவே இருப்பதைக் கண்டேன். அவர்தம் கலையுணர்வு ஓங்குக! அதனால் கலை மரபு வளர்க!” என்று உரத்த குரலில் உணவகத்திலேயே பேசிவிட்டு வெளியே வந்தோம். மரபுச் சிற்பக் கலையை டாக்டர் கலைஞர் ஏற்பார் என்பதை எப்படிக் கண்டு கொண்டீர்கள் என்பதை ரகசியமாக என்னிடம் கேட்டார்கள். மரபு வழிப்பட்ட கவிதையும் மரபு வழிப்பட்ட சிற்பமும் ஒன்றே என்றும், மரபுச் சிற்பமானது கண்ணால் பார்த்திடும் கவிதை என்றும், மரபு வழிப்பட்ட கவிதையை போற்றிடவும், சுவைத் திடவும் முடிகிற கலைஞர் அவர்களுக்கு இது எம்மாத்திரம் என்று சொல்லி முடித்தேன்.

கலைக்கூடப் பணிகள் நடந்து வரும் காலத்தில் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட வாரம் இருமுறை முன்னறிவிப்பின்றி வருவார்கள். 500 சிற்பிகள் வேலை செய்து கொண்டிருக்கும் பட்டறைக்குள் அவர்கள் நுழைந்தார்களானால், பணியாற்றும் சிற்பிகள், அவர்தம் உளி வழியாக முழக்கமிட்டு அவரை மகிழ்ச்சியுடன் வரவேற் பார்கள். சிற்பிகளிடம் சகஜமாகப் பேசுவார்கள். எங்களோடு நீண்ட நேரம் இருந்து பேசிட விரும்புவார்கள். ஆனால், அங்கு அவர் வந்தவுடன் வந்து கூடிடும் கூட்டம், பேசிடும் நேரத்தைக் குறைத்து விடும்.

என்னிடம் எத்தனையோ பேர் எத்தனையோ பணிகளைக் கொடுத்து விட்டு, கடைசி நேரத்தில் வந்து பார்த்து, எதைத் தொட்டு எப்படிப் பேசுவதென்று தெரியாமல், பிறர் பார்த்துப் பேசியதை மனதிலே வைத்திருந்து, எப்போதாவது என்னைக் கண்டால் பாராட்டிப் பேசியதை அனுபவித்திட்ட நான், அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டவராக டாக்டர் கலைஞர் அவர்களையே கண்டேன். அவருடைய கண்கள் கூரிய கண்கள். அவர்தம் உள்ளம் முழுக்க முழுக்க கலையுணர்வே மயமான உள்ளம். அவர்தம் சொற்களோ அந்தக் கலையுணர்வுக்கு சிங்கார வடிவம் தந்திடும் சொற்கள். அத்தகைய சிறப்பியல்பை அவரிடம் பலவிடங்களில் பல நேரங்களில் நான் கண்டிருக்கிறேன். எதையும் நகைச்சுவையோடு சொல்வதும், கிண்டல் செய்வதும் அவருக்கே கைவந்த கலையாகும்.

பூம்புகார்ப் பாவை மன்றத்தில் அவர் தேர்ந்து கொடுத்த குறள் பாக்களுக்கு வடிவம் செதுக்கிக் கொண்டிருந்த நேரம். அவற்றில் ஒரு காட்சி. தலைவன், அயல்நாடு சென்று விடுகிறான். தலைவி அவனை நினைத்து, உருகி - அவன் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் ஒற்றி ஒற்றிக் குறியிட்டு, அவள் விரலே தேய்ந்து விட்டதாம். இதுதான் அக் குறள் தரும் காட்சி. இச் சிற்பத்தைச் சுவைபட அமைக்க வேண்டும் என்ற நோக்கில் அத் தலைவியின் கூந்தலை விரித்துத் தொங்கவிட்ட பாவனையில், சுவைமிகு கோலத்தில், உடலை வளைத்து, ஒரு பக்கம் முகத்தைத் திருப்பி, வலது கையை சுவர் நோக்கி நீட்டி, தலைவன் சென்ற நாட்களை சுவரில் விரலால் ஒற்றியெடுக்கும் கோலத்தில் அச் சிற்பம் இருந்தது.

இதில் நயம் யாதெனில், அவ்வடிவத்தின் உடலை மெலித்து, வயிற்றையும், அரசிலை போல ஒட்ட வைத்து, தொப்பூழை ஆழமாகப் பதித்து, அடிவயிற்றை சிருங்கார பாவத்தில் சுவைபடச் செதுக்கியிருந்த நேரம், அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்துச் சுவைத்திடும் உணர்வைக் கிளறிடும் அளவுக்கு நன்றாகவே அமைந்திருந்தது. தனது இல்லத்தரசியோடு டாக்டர் கலைஞர் அவர்கள் பட்டறைக்குள் நுழைந்தார்கள். அவரைக் கவர்ந்த அந்தக் காட்சியை கவி நயத்தோடு தனது மனைவியார்க்கு விளக்கிச் சொல்லி மகிழ்ந்தார்கள். அச் சொல்லோவியத்தை நாங்களும் சுவைத்தோம்.

எதை அவர்கள் பார்த்துச் சுவைத்திட வேண்டுமென்று நாங்கள் திட்டமிட்டுச் செய்கிறோமோ அதனை அனாயாசமாகத் தொட்டுப் பேசிடும் உணர்வுத் துடிப்புடையவராகப் பல நேரங்களில் அவரைப் பார்க்க முடிந்தது. எனக்கு ஒரு வேதனை! சிற்பங்கள் மலிந்த இந்தத் திருநாட்டில், ஒரு சிற்பத்தைப் பார்த்தவுடன் அதன் தொழில் நயங்களை, கலை அம்சங்களைத் தொட்டுச் சொல்லக்கூடிய ஆற்றல் உடையவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நாட்டுச் சிற்பக்கலை மரபு பிறநாட்டுக் கலை மரபுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறதே, இது ஏன் என்பதைப் புரிந்து பேசக்கூடியவர்கள் மிகச் சிலரே. இதனாற்றான் பாராட்டு மேடை களிலே சிற்பிகளைப் பொதுமக்கள் பார்த்தார்கள் இல்லை!

ஆனால், டாக்டர் கலைஞர் அவர்களின் சுவையுணர்வோ, தொழில் செய்யும் சிற்பிகளுக்கு வியப்பூட்டுவதாகவே இருந்தது. புரிந்து பாராட்டுபவர்களைத்தான் சிற்பிகள் எப்போதும் மதிப்பார்கள். புரியாதோர் எத்துணை பெரிய பட்டமும், பதவியும், பணமும் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டதை வெளியே சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள். பூம்புகார் கலைக்கூடத்துக்கு நான் செய்தளித்த மாதவிச் சிலையைப் பார்த்து டாக்டர் கலைஞர் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்னால் வருணித்து சொல்லிவிட முடியாது. மாதவிச் சிற்பத்தை சென்னையில் பலவிடங்களில் ஆளுயர அளவில் புகைப்படமாக வைத்து, அதனை அவர்களாகவே பிரபலப்படுத்தினார்கள்.

அடுத்து, தமிழன்னைத் திருவுருவம் அவர்கள் கண்பட்டுப் பெருமையுற என் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள்! இது காரைக்குடி கம்பன் கழகத்துக்கு. இப்படைப்பிலும் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள். காதால் கேட்கும் தமிழின்பத்தைக் கண்ணால் பார்த்திடும் தமிழின்பமாக இது படைப்புற்றிருக்கிறது. பாடகர் ஒருவர் மேடையிலே அன்று நன்றாகப் பாடி விட்டார் என்றால் அன்று அக்கூட்டத்தில் யாரோ விஷயமறிந்த ஒருவர் இருந்திருக்கிறார் என்பது பொருள். கலைஞர் உள்ளம் இப்படித்தான் உணர்வு பெறும், இயக்கமுறும். டாக்டர் கலைஞர் அவர்கள் அப்படித்தான் எங்களோடு ஒன்றியிருந்தார்கள், உறவு கொண்டிருந்தார்கள்.

கலை வளர்த்த மாமன்னர்களும் இப்படித்தானே நேரடித் தொடர்புக் கொண்டு சிற்பிகளோடு சிற்பியாக இருந்து மகிழ்ந்திருக்கிறார்கள். தலைமுறைச் சிற்பியாக இருக்கக் கொடுத்து வைத்த நான், இதனை அனுபவிக்கவே செய்தேன். எனவேதான், டாக்டர் கலைஞர் அவர்கள் காலத்தைச் சிற்பக் கலையின் பொற்காலம் என்று அடிக்கடி சொல்லுவேன்.

வேலை செய்த என்னையும், என்னுடன் பணியாற்றிய சிற்பிகளையும் அவர்கள் எப்போதும் மறந்தார்களில்லை. பூம்புகார் கலைக்கூட இலக்கியக் காட்சிகளைச் சிற்பமாக வடித்துத் தந்த சுமார் 45 சிற்பிகளுக்கு தங்கத்தால் ஆன சிலம்பு மோதிரங்களைப் பரிசாக வழங்கி அம்மேடையிலேயே மனதாரப் பாராட்டினார்கள்.

பாவை மன்றத்தில் மற்றொரு சிற்பம். டாக்டர் கலைஞர் அவர்கள், சொல்லுக்குப் பதிலாக கல்லையே மீடியமாக வைத்துக் கொண்டிருந்தார்களானால், கற்பனை வளம் வாய்ந்த ஒரு சிற்பியாகத் தமிழ் நாட்டிலே அவர் திகழ்ந்திருக்க முடியும் என்பதை மனம் திறந்து இங்கே சொல்லிட விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இன்பத்துப் பாலிலே மிகப் பிடித்தமான குறள் இஃதென்று கவிஞர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்குரிய காட்சியும், பாவை மன்றத்தில் தூண் ஒன்றில் ஆளுயரச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண், கண்ணிற்கு மைதீட்டும் காட்சி. இடது கையில் கண்ணாடி பிடித்து, வலது கரத்தால் மை தீட்டிக் கொண்டிருக்கும் காட்சி. உடலை வளைத்து, தனது அங்கங்களை ஒய்யாரமாகக் காட்டி, ஸ்வஸ்திகமாக நிற்கும் கோலம்.

முகம், கண்ணாடியை நோக்கித் திரும்பிய நிலையில் இருந்ததால், முகமண்டலம் அரை குறையாகவே பார்ப்போருக்குக் காட்சியாகும். வழக்கமாக மேற்பார்வையிட வருகை தந்திட்ட கலைஞர் அவர்களுக்கு இச்சிற்பத்தைக் காட்டினேன்.

“எல்லாம் நன்றாகவே இருக்கிறது. அவள் உடல் நேர்த்திக்கீடான அவளுடைய முக மண்டலமானது முழுமையாகப் பார்வைக்குக் கிடைக்கவில்லையே!” என்று திறனாய்வு செய்த அவர், அடுத்த நொடியில் “அந்தக் கவின்மிகு முக மண்டலத்தை அந்தக் கண்ணாடியில் தெரியச் செதுக்கியிருக்கலாமே!” என்று சுவையுணர்வோடு அறிவுறுத்தினார்கள்.

உடன் இருந்த நாங்கள் அதனைக் கேட்டு வியந்து, நாங்கள் அவருடன் சேர்ந்து சுவைத்து, வாயார அவரைப் புகழ்ந்து பாராட்டினோம். அவ்வண்ணம் மற்றொரு இடத்தில் செய்து காட்டுகிறோம் என்று சொல்லி, அத்தகைய சித்தரிப்புக்கேற்ற ஒரு சிறிய உருவத்தை பூம்புகாரில் செய்திட்ட இலஞ்சி மன்றக் கதவில் செதுக்கி வைத்தோம்.

இப்படி, டாக்டர் கலைஞர் அவர்களுடைய கலை ஆற்றலை, கலையுணர்வை எடுத்துக் காட்டிடப் பலப் பல நிகழ்ச்சிகள் அந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. மேலும் ஒன்றை மட்டும் இங்கு எடுத்துச் சொல்லி, இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் கலைப்பணிகள் தமிழகத்தில் மிக விறுவிறுப்பாகவே நடந்தேறின. அவர் அடிக்கடி இப்பணிகளை மேற்பார்வையிட மாமல்லபுரம் வருவார்கள்.

“இப்பணியுணர்வு அவருக்கு உடன் பிறந்த உணர்வு. தொழிற் கொட்டகைக்குள் நுழைந்தவுடன் அச்சூழ்நிலை அவர்களை மாற்றிவிடும். உணர்வுகள் கொப்பளிக்கும். நினைத்தவுடன் செயலாற்றும் திறன் அவர்களிடம் இருப்பதால் காலத்தை அவர்கள் விரயம் செய்தார்களில்லை என்பேன்.

இஃது எப்படி எல்லார்க்கும் புரியும்? முதல்வர் அவர்கள் மாமல்லபுரம் வரப்போகிறார்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் அவரைப் பார்க்கப் பயப்பட்டோ மில்லை. வேறு எங்காவது, முதல்வர் வருகிறார் என்றால், ஒரே அச்சம், பதட்டம், பரபரப்பு, அரசு ஊழியர்களிடம் பரவி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா?

ஆனால், நாங்கள் வேறு. அவர்தம் வருகையினை நான் முதல் பட்டறைப் பையன் வரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அவர் மனம் திறந்து பேசுவதை, ‘விட்’ அடிப்பதைக் கேட்டு மகிழ்ந்திடச் செவிகளைத் தீட்டி வைத்துக் கொண்டிருப்போம். அந்த நாட்களை இப்பொழுது எண்ணிப் பார்க்கிறேன். இப்படித்தான் அந்தக் காலத்து மாமன்னர்கள் சிற்பிகளோடு நேரடித் தொடர்பு கொண்டு, அவர்களோடு ஒன்றி நின்று, அவர்களை ஊக்குவித்து, அவர்தம் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து, தமிழ்நாட்டைச் சிற்ப வளம் கொழிக்கும் திருநாடாக ஆக்கினார்களோ என்று எண்ணி எண்ணி மகிழ்வேன். அந்த நாட்கள், மீண்டும் வாராதோ என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கின்றன.

காரணம் அரசு அதிகாரிகள் கலை வளர்க்க முற்பட்டு, கலை பட்டுப்போன கதைகளைப் பிற மாநிலங்களில் பேசக் கேட்டிருக்கிறேன். இங்கும் எதிர்காலத்தில் அப்படி நடந்து விட்டால்? ஐயகோ! என்னால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Valluvar Kottam மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சிற்பக் கலைக் கல்லூரி சாதாரணப் பட்டறைப் பள்ளியாக இருந்ததை உயர்த்தி, பட்டயப் படிப்புகளையும் புகுத்தி, கல்லால் மட்டுமல்லாமல் செங்கல்லாலும், மரத்தாலும், செம்பாலும், வண்ணத்தாலும் சிற்பங்களை தீட்டுவதற்கு ஏற்ற பயிற்சித் திட்டங்களையும் கலைஞர் அவர்கள் புகுத்திக் கொடுத்தார்கள்.

வள்ளுவர் கோட்டம் கண்ட டாக்டர் கலைஞர் அவர்கள், வள்ளுவர் கோட்டக் கட்டிடப் பணியை ஒரு திருப்பணியாகவே - தெய்வீகப் பணியாகவே - கொண்டு செயலாற்றியதை நான் உடனிருந்து கண்டேன். இந்த நாட்டில், கோவில் கட்டிடமே தேர்க் கட்டிடத்திலிருந்து முளைத்தது தான்! பூம்புகார்ப் பணிகளைக் கலைக்கென்றே - வரலாற்றுச் சிறப்புக்கென்றே - இலக்கியத் திற்கென்றே ஒதுக்கியதுபோல், வள்ளுவர் கோட்டப் பணியைத் தனக்கென்றே - தம் ஆத்ம திருப்திக்கென்றே - ஒதுக்கிக் கொண்டதாக எனக்குப்பட்டது. இப்பணிக்கு யாதொரு களங்கமும் வந்திடக் கூடாதென்று கண்ணும் கருத்தும் கொண்டிருந்தார்கள்.

இந்த நாட்களையும் எண்ணிப் பார்க்கிறேன். மலையிலே - திருவண்ணாமலையிலே கல்லுடைக்கும் தொழிலாளர் முதல் சென்னையிலே கோட்டம் சேர்க்கும் சிற்பிகள் வரை சுமார் ஆயிரம் பேர்கள் பணியாற்றிய நாட்கள். இப்பணியை விரதமிருந்து முடிக்க, உணர்வு கொண்டவர் போல் டாக்டர் கலைஞர் அவர்கள் என் கண்களுக்குப் பட்டார்கள்.

கட்டிடத்தின் ஒவ்வொரு கூறையும் துருவித் துருவிக் கேட்டு, தன்னுடைய உணர்வையும் கருத்தையும் அதிலே வைத்துப் பதித்து, அக்கோட்டத்தைக் கட்டிக் கொண்டார்கள், என்றால் மிகையன்று. அவர்தம் கருத்தும் உணர்வும் அதில் பதிந்து விட்டதினால், அக்கட்டிடத்தை ஓர் உயிர்ப் பொருளாகவே அவர்கள் மதித்தார்கள். சிறப்பாக அதனைத் தனது பிள்ளையாகவே பார்த்தார்கள். பொதுவாகக் கலைஞர்தம் உள்ளங்கள் இப்படித்தான் உணர்ச்சியுறும்! கலையுள்ளமும் செயலாற்றும் திறனும் வாய்க்கப் பெற்றோர் இதனை நிச்சயம் ஏற்பார்கள். நான்கூட அப்படித்தான். என் படைப்புகளை என் குழந்தைகளாகவே காண்பேன். பதிமூன்றாவது நூற்றாண்டோடு இருபதாவது நூற்றாண்டை இணைத்திடும் சிற்பம் என்று எனது ‘மாதவிச் சிற்பத்தை’ ஓவியர் திலகம் கோபுலு அவர்கள் குமுதத்திற்கு அளித்த ஒரு பேட்டியின்போது என்னிடம் சொல்லிப் பாராட்டினார்கள்.

அதே சிற்பத்தை, நாட்டியக் கலாமணி பத்மஸ்ரீ டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தடவித் தடவிப் பார்த்து, சுற்றிச் சுற்றி வந்து, ஓகோ வென்று பாராட்டினார்கள். நாட்டிய மங்கையின் அகஉணர்வையும், உற்கூறுகளையும், வளைவு களையும் (ஆடற் கலையின் அரசியாய் விளங்கு வதினால்) அவர்கள் உணர்ந்தே பாராட்டினார்கள். அத்தகைய சிற்பத்தை எனது தொழிலகத்தினின்று பூம்புகாருக்குக் கொடுத்திட மனம் வராமல், சாக்குப் போக்குச் சொல்லிக் காலம் தாழ்த்தியே வந்த எனது பாச உணர்வு, நினைத்தால் இப்போதும் கொப்பளிக்கவே செய்கிறது. என் மகளாகவே, சிற்ப மாதவியை நான் இன்றும் பாசத்தோடு பார்க்கிறேன்.

இதற்கும் மேலாக ஒரு தூய உணர்வை வள்ளுவர் கோட்டப் பணியில் கலைஞர் அவர்கள் வைத்திருந்ததினால், அதனைத் திருப்பணி என்றே சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். ஆனால், இறுதி நேரப் பிரிவை எண்ணி மனமுருகி அவர்கள் எப்படிக் கதறியழுதார்கள் என்பதை இந்த நாடே அறியும்.


மானுடத்தின் பக்கம் ஒரு மகத்தான கலை!

சிற்பக் கலை பெரும்பாலும் புராண, இதிகாச, கடவுளரைச் சுற்றிய படியே பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. “காணாத கடவுளர்க்குக் கலை வடிவம் தந்ததே நாங்கள்தான்” என்று சிற்பக் கலைஞர்கள் பெரு மிதப்பட்டபடி இன்றும் இருக்கிறார்கள்.

மன்னர்களை மதபோதையில் ஆழ்த்திய ஆரியர்கள், ‘ஏ! ராஜன்!’ என்று ஒரு வேலைக்காரனை அழைப்பதுபோல அரசர்களை ஏவி அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

எதிரிகளைப் பந்தாடிய வேந்தர்களை ராஜ குருக்கள் பந்தாடி வந்தார்கள். ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த ராஜாக்களின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகம் எங்கும் ஏராளமானக் கோயில்களைக் கட்டச் செய்தபடியே இருந்தார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் மிரட்டியும் வந்தார்கள். முடியாட்சி சாய்ந்ததும் குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும், ஜமீன்தார்களையும் விரட்டி - கடவுள் பெயரால் அச்சுறுத்தி ஆலயங்களைக் கட்டியபடியே இருந்தார்கள் ஆரியர்கள்.

இப்படியே காலத்தைக் கடத்தி வந்த சிற்பத் துறை, கலைப் பெருமிதத்தை இழந்து ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது.

இந்தக் கால கட்டத்தில்தான் ஒருநாள் மாமல்லபுரம் வந்தார் கலைஞர் கருணாநிதி. அங்கே தமிழக அரசு நடத்தி வந்த சிற்பக் கலைக் கல்லூரிக்குச் சென்றார். கல்லூரி முதல்வராகப் பணியாற்றிவந்த கணபதி ஸ்தபதியாரைச் சந்திக்கிறார் பொதுப்பணி அமைச்சராக இருந்த கலைஞர்.

அங்கே பயிலும் கல்லூரி மாணவர்களின் கலைத்திறனைப் பாராட்டினார் கலைஞர். மாணவர்களுள் ஒருவர், “கலை உள்ளம் கொண்ட தங்களிடம் ஒரு கனிவான கோரிக்கை. ஏழை எளியவர்களாகிய நாங்கள் சிற்பப் பயிற்சி பெறுகிறோம். படித்து முடித்ததும் வேலை வாய்ப்பின்றி வேதனைப்படுகிறோம். நாங்கள் கற்ற கலை நாட்டுக்குப் பயன்பட வேலை கொடுத்து உதவுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். கவனிப்பதாகக் கூறி விடைபெற்று வந்த கலைஞர் சிற்பிகளுக்கு வாழ்வுதரச் சிந்தித்தார்.

ஆன்மீகத்தைத் தேடி அலைந்த சிற்பக் கலையைச் சமுதாயத்தின் பக்கம் திருப்ப முடிவெடுத்தார்.

சிற்பக் கலைச்செம்மல் கணபதி ஸ்தபதியாருடன் கலந்துரையாடினார்.

மக்கள் காவியமான சிலப்பதிகாரத்தைச் சொல்லிலே வடித்தார் இளங்கோவடிகள்; அதனைக் கல்லிலே வடித்து வேலையற்று இருக்கும் சிற்பிகளுக்குப் பெரிய அளவில் வேலை வாய்ப்பளிக்கலாமே என்று கலைஞரின் கலை உள்ளம் முடிவெடுத்தது.

பூம்புகார் படைத்த பெருந்தச்சன் கலை மா வளவன் என்று கலைஞரைச் சிற்பிகள் புகழ்ந்தேத்தினர்.

தலைநகர் சென்னையில், வான்புகழ் வள்ளுவருக்குக் கோட்டமும் அண்ணாந்து பார்க்க வைக்கும் கல் தேரும் சிற்பிகளைக் கொண்டு செய்வித்தார் கலைஞர்.

கடல் கொண்ட தென்குமரிக் கரை ஓரத்தில் குறள் தந்த கோமானுக்கு 133 அடி உயரத்தில் முழுவதும் கருங்கற்களால் ஆன பேருருவை எழுப்பி நிற்கச் செய்தார். ஏராளமான சிற்பிகள் கணபதி ஸ்தபதியார் சுட்டுவிரல் காட்டிய திசையில் சுறுசுறுப்பாய்ப் பணியாற்றிச் சிறப்பை அடைந்தனர்.

இவ்வாறாக, மரபுக்கலையை மனிதனுக்காக முதன் முதலில் பயன்படுத்திச் சிற்பிகளின் வாழ்வில் வசந்தத்தைக் காண வைத்தார் கலைஞர்.

கலைஞரால் சிற்பிகள் வாழ்வு பெற்றதும் சிற்பிகளால் கலைஞர் வரலாற்றுப் புகழ் சுமந்ததும் ஒரு சகாப்த சாதனையாகும்.

சிற்பச் சித்தர்

“பூம்புகார் எழில் மாடத்தை என் கருத்திற்கேற்ப அமைத்துத் தந்தவரும், பாஞ்சாலங்குறிச்சியில் இடிந்த கோட்டையை எழுப்பித் தருவதற்கு உடனிருந்து உதவியவரும், வள்ளுவர் கோட்டம் வையகம் புகழ்ந்திட, உருவாகிட சிற்பி திரு ஆச்சார் அவர்களுடன் இணைந்து கையில் உளி எடுத்தவரும், அண்ணா அறிவாலய முகப்பினை அழகுற அமைத்துத் தந்தவரும், சிற்பச் சித்தருமான கணபதி ஸ்தபதியார் அவர்கள் மூன்றாண்டுக் காலத்திற்கு மேலாக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, நமது அய்யன் வள்ளுவனுக்கு, காலத்தால் அழியாத சின்னத்தை என் இதயம் இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு, என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகின்ற அளவுக்கு, என் சுவாச கோசங்கள் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்குகின்ற அளவுக்கு வடித்தெடுத்து நிலை நாட்டிவிட்டார்.

வங்கமும் இந்துவும், அராபியும் என முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனைப் பாறை முற்றத்தில்!

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதன் அவன்கண் விடல்”

என்ற குறளை நினைவூட்டி, அதன்படி என் ஆய்வுக்கேற்ப வினை முடித்தமைக்காகச் சிற்பியாருக்கு ஆயிரம், பதினாயிரம், இலட்சோபஇலட்சம் நன்றி மலர்களைத் தூவுகிறேன்”

- கலைஞர் மு.கருணாநிதி
முரசொலி 20-12-1999


வானளக்கும் வள்ளுவர் சிலை

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்குச் சிலை வடித்து குமரிமுனையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அறத்துப் பாலில் உள்ள 38 அதிகாரங்களை மனத்தில் கொண்டு 38 அடி உயரத்தில் சிலையின் பீடம் அமைக்கப்பட்டு, அது அறப்பீடம் என்று அழைக்கப்பட்டது.

மீதமுள்ள 95 அடி உயரத்திற்குச் சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

சிலையின் தலைமட்டும் 20 அடியாகும். ஒரு மாடிக் கட்டட உயரம் கொண்டது. 180 டன் எடை, வள்ளுவனின் ‘தலைக்கனம்’ எனலாம்.

சிலையின் கட்டுமானத்திற்கு 3681 துண்டு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை 7000 டன் ஆகும்.

3 முதல் 6 டன் எடை கொண்ட கற்களாகப் படகில் ஏற்றிக் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இரவும் பகலும் 500க்கும் அதிகமானச் சிற்பிகளால் வள்ளுவர் சிலை 4 ஆண்டுக்காலத்தில் கணபதி ஸ்தபதியாரால் நிறுவப்பட்டிருக்கிறது.

கலைநுட்பம், கட்டுமான நுட்பம், கனபரி மாணம், மற்றும் அளவு முறையோடு படைக்கப்பட்ட வள்ளுவர் சிலை காலத்தால் அழியாமல் நிற்கும் கலைப்படைப்பாகும்.

அண்மையில் நிகழ்ந்த கடல்கோளினால் வள்ளுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது கணபதி ஸ்தபதியார் சொன்ன ஓரடிக் குறள் இது:

“அலை இருக்கும் வரை மலை இருக்கும்வரை
வள்ளுவர் சிலை இருக்கும்” என்றார்.

அமெரிக்காவில் ஆழ்கடலின் நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சுதந்திர தேவி சிலையோ கற்களாலும் உலோகத்தாலும் எழுப்பப்பட்டதாகும்.

தமிழரின் கலைத்திறனை உலகறியச் செய்யும் வள்ளுவர் சிலையோ, உலகிலேயே கல்லால் ஆன உயரமான சிலையாகும்.

மரபு சார்ந்த சிற்பக் கலை, மன்னர் காலத்தோடு மடிந்துபோனது முடிந்து போனது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் சிற்பக் கலைக்கு மறுவாழ்வு தரவே கலைஞர் பிறப்பெடுத்தார் போலும். கலைஞரின் கலை நெஞ்சம் சிற்பக் கலையை மீண்டும் வளர்த்தது.

சிற்பச் செம்மல் கணபதி ஸ்தபதியாரை உலகு அறியச் செய்துவிட்டது.

ஆடலரசி மாதவி

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் படைத்த மாமலர் நெடுங்கண் மாதவியை 8 அடி உயரத்தில் எழில் கொஞ்சும்படியாகக் கணபதி ஸ்தபதியார் படைத்து அளித்தார்.

கலையரசியான மாதவியின் உடலமைப்பு, உடல் நெளிவு சுழிவு கொள்ளும்போது வெளிப்படும் அபிநய அழகோடு சிலையானது சிறப்பின் உச்சமாகச் செதுக்கப்பட்டது.

தமிழ் மரபுக்கேற்ப ஆடை அலங்காரத்துடன் மாதவி பூண்டிருந்த 32 அணிகலன்கள் பொலிய அவள் ஒய்யாரமாக நிற்கும் அழகு எவரையும் மயங்க வைத்தது.

இந்த அழகிய சிற்பத்தை உருவாக்க இருபத்து நான்கு மணி நேரமும் சிற்பியார் சிந்தித்தபடியே இருந்துள்ளார். உணவை மறந்து உறக்கத்தைத் துறந்து ஓயாது உழைத்து உருவாக்கிய இச்சிற்பம் இவர் படைப்புகளில் தலைசிறந்தது என்று கலையுலகம் போற்றியது. மாண்பெழில் மிக்க இம்மாதவி சிலையைச் சிற்பியார் தம் உயிரினும் மேலான மகளாவே ஏற்றுள்ளார்.

மாதவிச் சிற்பத்தைக் கண்டு மனதைப் பறி கொடுத்த கவிஞர்கள் அவளது முன்னழகையும் பின்னழகையும் வியந்து கவிதை புனைந்து களித்தனர்.

இந்தச் சிலையைப் பெரிதாகப் படம் எடுத்து விமான நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் கண்ணாடிப் பேழைகளில் வைத்து மக்களைப் பார்க்க வைத்தது தமிழ்நாட்டரசு.

தில்லானா மோகனாம்பாளைத் திரைக்காவியமாக எழுதிய கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு மாதவி சிலையைக் கண்ணுற்றுக் கிறங்கி இவ்வாறு குறிப்பிட்டார்:

“மாதவியின் பின்னழகைக் கல்லில் கண்ட நானே பித்தாகிப் போனேன். நேரில் கண்ட கோவலன் மயங்கியதில் வியப்பேதும் இல்லை” என்றார். அருகில் இருந்தோர் சிரித்து ரசித்தனர்.

கலைஞர் நகைச்சுவை ததும்ப கூறினார்:

“மாதவி இவ்வளவு அழகாக இருந்தால் கோவலன் என்ன செய்வான் ‘பாவம்?’ என்றபோது அங்கிருந்தோர் கைதட்டி மகிழ்ந்தனர். மாதவிப் பொன் மயிலாளைத் தமிழகத்துக்குத் தந்து புகழ் சுமந்தார் கணபதி ஸ்தபதியார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com