Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

அண்ணா சொன்ன கதைகள்

ராமாயணமென்ன சாமானியமா?

பக்தர் ஒருவர் தினசரி ராமாயண பஜனைக் கூடத்துக்கு வருவதுண்டு.

பாகவதரின் சுருதிகளை ரசிக்கத்தான் வருவாரோ அல்லது சுண்டல் வாங்கத்தான் வருவாரோ நமக்குத் தெரியாது.

ஆனால், ராமபக்தி தினந்தோறும் அவரை ராமாயணம் கேட்க அழைத்து வந்தது.

இவரைப் போலவே,

இன்னொரு பக்தர் - அவர் ராமாயணக் கதை கேட்கவே வருகிறவர்.

அவர் உட்கார்ந்து பார்த்தால் அவருக்கு கதை சொல்லும் பாகவதரின் முகம்கூட சரியாகத் தெரியாது - அவ்வளவு குட்டையானவர்!

எனவே அவர் பார்த்தார் - ராம பக்தரின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டே வசதியாக ராமாயணக் கதை கேட்டார்.

தினசரி இந்த நிகழ்ச்சி நடந்தது!

கடைசியில் ராமரின் பட்டா பிஷேகம் முடிந்து விட்டது!

அன்று இரவு வீட்டுக்குப் போன ராம பக்தரை, அடுத்த வீட்டுக்காரர் சந்தித்தார்.

“எப்படி சார் இருந்தது ராமாயணம்?” என்று கேட்டார்.

“இராமாயணம் என்ன சாமானியமா? அதுகூட ஒரு ஆள் கனம் இருக்கே!” என்றார் ராமபக்தர்.

ராம பக்தரின் வீங்கிய தோளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் அடுத்த வீட்டுக்காரர்!

தலை(வலி) போனது!

தீராத தலைவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் ஒரு மன்னன். இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கு 10,000 வராகன் பரிசு வழங்கப்படும் என்று முரசறைவித்தான்.

ஆண்டு ஒன்று ஆயிற்று; எந்த மருத்துவனும் அவனது தலைவலியைப் போக்க முன்வரவில்லை. தலைவலி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

அடுத்து பரிசுத் தொகையை உயர்த்தினான். தனது இராஜ்யத்தில் பாதியைத் தருவதாக பறைசாற்றச் சொன்னான். இப்பொழுதும் ஒரு மருத்துவன்கூட வரவில்லை.

மூன்றாம் ஆண்டு, தன் தலைவலியைப் போக்குபவனுக்கு தன் மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தான். இப்பொழுதும் பலனில்லை.

மன்னனுக்கு தீராத கோபம் வந்து விட்டது. தலைவலியைப் போக்குகிற அளவுக்குக்கூடவா இந்த நாட்டில் ஒரு மருத்துவன் இல்லாமல் போய்விட்டான்? இனி எவன் வந்து என் தலைவலியைப் போக்கினாலும் அவனுடைய தலையைத் துண்டித்துவிட வேண்டியதுதான் என்று மனதிற்குள்ளேயே முடிவு செய்து கொண்டான்.

ஏனென்றால் - இப்பொழுது தலைவலியைப் போக்க வருபவன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் தலைவலியின் கடுமை அதிகரித்திருக்காதே என்று அவன் எண்ணினான்.

அவன் நினைத்ததைப் போலவே - ஒரு மருத்துவன் வந்து அவனது தலைவலியைப் போக்கினான். பதிலுக்கு மன்னன் மருத்துவனது தலையைப் போக்கிவிட்டான்.

முகராசி?

காலையில் கண்விழித்த அரசன், அரண்மனை மாடியில் வந்து நின்றான். அரண்மனைக்குக் கீழே, சாலையில் நின்றவாறு ஒருவன் அரண்மனையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த அரசன், வேறு ஒன்றும் கண்ணுக்குக் கவர்ச்சியான விருந்து இல்லையே என்று சலித்தவாறு உள்ளே திரும்பினான். வாசற்படி தூலத்தில் தலை மோதிக் கொண்டது. இரத்தம் கொட்டியது.

“அப்பப்பா!” என்று அலறினான். வலி தாங்காமல் துடியாய் துடித்தான். ஆட்கள் ஓடி வந்தார்கள். மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள், அமைச்சருக்கு ஆள் அனுப்பப்பட்டது.

“என்ன ஆயிற்று?” என்று எல்லோரும் ஒருசேரக் கேட்டார்கள்.

“காலையில் எழுந்ததும் போய் மாடியில் நின்றேன்; வீதியில் ஒரு சனியன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் விழித்து விட்டேன். அதனால்தான் இந்தக் கதி ஏற்பட்டு விட்டது” என்றான் மன்னன்.

ஒரு போர் வீரன் ஓடோடிச் சென்று, வீதியில் போய்க் கொண்டிருந்த - மன்னனால் சனியன் என்று விளிக்கப்பட்டவனை அழைத்து வந்தான்.

“மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால் இந்த மாபாவிக்கு மரணதண்டனை விதிக்கிறேன்” என்றார் அமைச்சர்.

தனக்கு மரண தண்டனை என்று கேள்விப்பட்டதும் தண்டனைக்குரியவன் மயங்கி விழுந்து விடவில்லை. ‘இடிஇடி’யெனச் சிரித்தான். அவையில் இருந்த எல்லோருக்கும் ஆச்சரியம்.

“இன்று மாலை உன் தலை துண்டிக்கப்படப் போகிறது; அது தெரிந்தும் எதற்கடா நீ சிரிக்கிறாய்?” என்றார் அமைச்சர்.

அதற்கு அவனோ, “அமைச்சரே! என் முகத்தில் அதிகாலையில் மன்னர் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக்காயம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ‘சனியன் பிடித்த முகம்’ எனக்கு. போகட்டும்; என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல் விளைவித்தது. நானும் முதன்முதலாக இன்று காலை இதே மன்னர் முகத்தில்தான் விழித்தேன். பலன் என்ன? உயிர் போகப் போகிறது. எனவே அரசனின் முகலட்சணம் எப்படிப்பட்டது என்று நினைத்துப் பார்த்தேன்; சிரிப்பு வந்துவிட்டது” என்றான்.

அரசன் உட்பட யாருமே வாய் திறக்கவில்லை.


மருந்து இதோ!

“ஊதுகுழல் வேண்டுமா, ஊதுகுழல்?” என்று கேட்டான். நடைபாதை வியாபாரி.

“வேண்டாமப்பா” என்று கூறினான், அவ்வழியே சென்றவன்.

“பொத்தான் வேண்டுமா?

பேனா வேண்டுமா?
சாக்லெட் வேண்டுமா?
சாயப்பவுடர் வேண்டுமா?

சோப்பு, சீப்பு, கண்ணாடி, ப்ரோச், பின் வேண்டுமா?” - என்று வியாபாரி, விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

அவ்வழி வந்தவருக்குப் பெருத்த தொல்லையாகி விட்டது. அவர் அங்காடி வந்தது எதையும் வாங்க அல்ல; யாரையோ சந்திக்க.

வியாபாரி விடாமல் தொல்லை கொடுக்கக் கண்டு, அவர் கோபத்துடன்,

“ஒன்றும் வேண்டாமப்பா, போய்த் தொலை! ஒரே தலைவலியாகி விட்டது உன்னாலே” என்றார்.

“அருமையான தலைவலி மருந்து இருக்கிறது! ஆறே அணா, வேண்டுமா?” என்று கேட்டானாம் வியாபாரி.

‘நல்ல’ ஓவியன்!

ஒருவன் தன்னை ஓவியன் என்று கூறிக்கொண்டு, ஒரு வெள்ளைத் தாளைக் காட்டி, “பார், பசுவும் புல்லும் என்ற படம் இது” என்றான்.

“புல்லைக் காணோமே!” என்றான் காகிதத்தைப் பார்த்தவன்.

“புல் எப்படித் தெரியும், அதைத்தான் பசு மேய்ந்து விட்டதே!” என்றான் ஓவியன்.

“அப்படியா! சரி, பசு எங்கே? அதையும் காணோமே!” என்று கேட்டதற்கு -

“புல்லைத் தின்ற பசுவை அடித்து விரட்டி விட்டார்கள்; அதனால்தான் படத்திலே பசு தெரியவில்லை” என்று ஓவியன் துணிந்து பதில் சொன்னான்.

தந்தை சொல் மந்திரம்!

கசபியான்கா என்ற சிறுவன் தன் தந்தையோடு கப்பலில் சென்றான். கடல் நடுவே கொடிய கப்பற் சண்டை நடந்தது.

கசபியான்காவின் தந்தையும் ஒரு கப்பல் தலைவன்.

அவன் தன் மகனைக் கூப்பிட்டு ஓரிடத்தில் நிறுத்தி, “குழந்தாய், நான் அழைக்குமளவும் இவ்விடத்தைவிட்டு நகராதே” என உரைத்து ஏதோ அலுவலாக அப்பாற் சென்றான்.

சிறுவன் கசபியான்கா நல்ல பிள்ளை. தந்தை சொல் தட்டாத தனயன். கடமையை உணர்ந்த பாலன்.

சண்டையில் தந்தை உயிர் நீத்தான். இது இச்சிறுவனுக்குத் தெரியாது. திடீரென்று கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலில் உள்ளவர் யாவரும் பலவற்றாலும் உயிர் தப்பி ஓடினர். பாலன் கசபியான்காவைப் பலர் அழைத்தனர். அவன் போக மறுத்தான். தீ நாற்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டது. அதுகாலை பலரும் அவனை அழைத்தனர், உடன் வருமாறு, அவன், தன் தந்தையின் கட்டளையை மீறி நடக்க முடியாதென உறுதியாகக் கூறிவிட்டான். அனைவரும் போய்விட்டனர்.

கசபியான்கா, “தந்தாய்! தந்தாய்! நான் போகலாமா? போகலாமா?” என்று பன்முறை கூவினான். தகப்பன் உயிரோடிருந்தாலல்லவா பதில் கிடைக்கும்? எனவே தந்தை சொல்லை தலைமேல் தாங்கி அவ்விடத்திலேயே நின்று சிறுவன் கசபியான்கா தீயிலே மடிந்தான்.

சிச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றான் - ஒரு நாள் காலை. அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டது மருத்துவனுக்கு.

‘காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; இதுதான் நம் தொழிலுக்கு ஏற்ற இடம்” என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தான்.

வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டது. கவலை பிடித்தாட்டிற்று. காரணம் என்னவென்றால், ஊர் மக்கள் மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்.

மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால் பித்தம் போய்விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினான்.

எங்கே அந்த மான்?

“ஆகா! அழகு! அழகு! அற்புதம்!” என்று - சொன்னது புலி.

“புலியாரே! புலியாரே! எதன் அழகு பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டது ஓநாய்.

“ஓநாயாரே! மானின் உடலிலே உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்” என்று புலி சொல்லிற்று!

“புலியாரே! நான்கூடப் பார்க்க வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளி மான்?” என்று கேட்டது ஓநாய் - பசியோடு!

“ஓ... அதுவா என் வயிற்றிலே!” என்று கூறிக் கொண்டே ஏப்பம் விட்டது புலி!

மன்னனும் மல்லனும்!

“என் திறமையை மாமன்னா! கூறிடப் பெருமைப்படுகிறேன். கேட்டிடின் தாங்களே பூரிப்படைவீர்கள்” என்றான் மல்லன்.

“கூறு, கேட்டிடுவோம்; வீரச்செயல் யாது செய்தனை?” என்றான் மன்னன்.

“ஒரே அறை - கன்னத்தில் ஒரே ஒரு அறைதான்; அதுவும் இலேசாகத்தான் - பற்கள் முப்பத்திரண்டும் பொல பொலவெனக் கீழே உதிர்ந்து விட்டன!” என்றான் மல்லன்.

“சபாஷ்! சபாஷ்!! ஒரே அறையில் 32 பற்களும் உதிர்ந்தனவா? அருமை! அருமை!! அமைச்சரே! மல்லனின் திறமையைக் கேட்டீரோ? அவனுக்கு முத்து மாலை பரிசு அளிக்கிறேன்” என்றான் மன்னன்.

அமைச்சர் குறுக்கிட்டு, “அரசே! மல்லன் திறம் கண்டு மகிழ்வது சரியே; பரிசுக்குரியவன் எனத் தாங்கள் உரைத்ததும் தங்களுக்கு அழகே; ஆனால், ஒரே அறையினால் எல்லாப் பற்களையும் இழந்தவன் யார்? ஏன் இழந்தான்? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்றார்.

மன்னன், “ஆமாம், ஆமாம், அதை மறந்தேன்; யார் அவன் சொல்?” என்று அமைச்சரைக் கேட்டான்.

“மன்னவா! மல்லன், தன் மதிமிக்க மகனுடைய பற்களைத்தான் அங்ஙனம் உதிரச் செய்தான். அவன் குற்றம் ஏதும் செய்யாதவன்; குடித்துப் புரளும் மல்லனைக் கண்டித்தான். அதனால் மல்லன் அவனது பற்களை உடைத்திருக்கிறான்; இதற்குப் பரிசா?” என்றார் அமைச்சர்.

வெட்கித் தலை குனிந்த மன்னன், மல்லனுக்கு பரிசுக்குப் பதிலாக தண்டனையை வழங்கினான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com