Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

குற்றவாளிகள்
கே.ஏ. அப்பாஸ்

“வா, மகனே, வா, வெளியே மழையில் எதற்காக நிற்கிறாய்? உள்ளே வந்துவிடு. இல்லா விட்டால் குளிரால்; சுரமும் வந்து விடும் - மழை நிற்கும் வரை நீ இந்த ஏழைக் கிழவியின் குடிசையில் ஓய்வு எடுத்துக்கொள். மழைவிட்ட பிறகு போகலாம்.”

Girl ...பகவானின் லீலை விசித்திரமானதுதான். எந்த மழையால் பூமி புதுவாழ்வைப் பெறுகிறதோ, விதை முளையாகவும், முளை பயிராகவும் மாறுகிறதோ அதே மழை வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களையும் பலி வாங்கிவிடுகிறது. கங்கை அன்னை சீறி எழும் போது பலபல ஊர்களை அடித்துச் சென்று விடுகிறாள். இதெல்லாம் எதனால்? நம் பாவச் செய்கைகளின் விளைவுகளால்தானே! வேறு என்னவாம்? எதை விதைப்பீர்களோ அதைத் தானே அறுவடை செய்வீர்கள். சோளத்தை விதைத்து நெல்லை அறுவடை செய்ய முடியாது அல்லவா? உலகில் நடப்பதை எல்லாம் சிவ பெருமானின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பாபங்களின் கொடுமைகள் அளவுக்கு மீறிப் போகும் போது அந்தக் கண் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.

பகவானிடம், அதி அற்புதமான பல்லாயிரம் ஆயுதங்கள் இருக்கின்றன. அவனுடைய ஆயுதங்களில் சப்தம் இல்லை. அது யார் மீது விழுந்தாலும் தனது வேலையைச் செய்து விடுகிறது. அது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால், எல்லாவற்றையும் விட பலம் வாய்ந்த ஆயுதத்தை ஆண்டவன், இந்திர தேவனுக்கு அளித்திருக்கிறான். அது அவருடைய சிறப்புக்கு உரித்தானதே. எல்லாத் தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அவர் வேந்தர் அல்லவா? தேவலோகத்தில் அவருடைய ஆட்சி தானே நடக்கிறது? ராட்சஸர்களை எதிர்த்துப் போரிடுபவர் அவர்தானே - இத்தகைய பயங்கரமான எதிரிகளை எதிர்ப்பதற்கு, அத்தகைய ஆயுதங்களும் இருக்க வேண்டும்தானே!

மேகங்களில் பளிச்சிடும் மின்னலைப் பார்க்கிறாயா மகனே! இது இந்திர தேவனின் வாளாகும். இதன் பிரகாசமும் இடியோசையும் வீராதி வீரர்களையும் சூரர்களையும் நடுநடுங்க வைக்கிறது. கண் இமைப்பதற்குள் இது தனது வேலையை முடித்து விட்டு மீண்டும் வானத்தில் இந்திர தேவனிடமே சென்று விடுகிறது. அதனால் இடியோசையைக் கேட்டதும் பாவம் செய்தவர்கள் நடுநடுங்கி விடுகிறார்கள். இந்திர தேவனின் இந்த வாள் எஃகு உலோகத்தால் செய்யப்பட்டது அல்ல மகனே! இரும்பு துருபிடித்து விடுகிறது.

கூர்மையும் மழுங்கிப் போகிறது. அது உடைந்தும் போக முடியும். ஆனால், இந்த விசித்திரமான ஆயுதம் விசித்திரமான உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறது... மிகப் பெரிய ரிஷி ஒருவர் அகோரத் தவம் செய்தார்; அவருடைய உடல் மாமிசம் முழுவதும் அழுகி விழுந்து விட்டது; எலும்புக்கூடு மட்டுமே எஞ்சி நின்றது. அந்த எலும்புகள் வைரங்களைப் போன்ற பிரகாசமும், பலமும் கொண்டு இருந்தன. பகவான் அதைக் கொண்டு ஒரு வாளைச் செய்து இந்திர தேவனுக்குக் கொடுத்து விட்டார்; பாவமும் அட்டூழியமும் அளவுக்கு மீறினால், இந்த ஒளிமிகு வாளால் அவற்றை அழித்து எரித்து விடும்படி ஆணையிட்டார்.

மின்னல் கருநிற பாம்பின் மீதே விழுகிறது என்று கேள்விப்பட்டு இருப்பாயே, மகனே? அது ஏன்? - ஏனென்றால் கருநிற சர்ப்பங்கள் போன ஜென்மத்தில் பாவிகளாகவும், கொடுங் கோலர்களாகவும் இருந்தார்கள். மற்றவர்களைச் சாகடித்து, உலகினில் விஷத்தைப் பரப்பினார்கள். அதனால் ஆண்டவன் அவர்களைக் கருநிற விஷப் பாம்புகளாகப் படைத்தான். ஆனால், மின்னல், பாம்புகள் மீது மட்டுமே விழுவதில்லை; இரக்கமில்லாத, விஷம் நிறைந்த மனிதர்களின் மேலும் விழுகிறது - சிவ பெருமானின் கண் வெள்ளை ஆடைகள், உயர்ந்த தலைப்பாகை செல்வத்தின் செருக்கு ஆகியவற்றைக் கண்டு ஏமாறுவதில்லை. இதயத்திலிருக்கும் கள்ளம், கபடம், அழுக்கு ஆகியவற்றை ஊடுருவிப் பார்க்கிறது. இந்திர தேவனின் வாள் தாக்கும் போது அது உயர்ந்த மரங்களின் மார்புகளைப் பிளந்தவாறு, பாவிகளின் கழுத்துக்கள் வரையிலும் செல்கிறது.

நீ கல்வியறிவு பெற்றவன், மகனே! ஒரு பைத்தியக்காரக் கிழவியின் பேச்சை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆனால், ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நான் சொல்வதெல்லாம் உண்மைதான். இது எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பது நினைவில்லை. இருபது, இருபத்தைந்து, முப்பது வருடங்கள் ஆகி இருக்கும். இந்த ஊரில் இந்தச் சம்பவத்தைக் கண்டவர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள். நீ உன்னுடைய கண்களால் பார்க்க வேண்டுமென்றால், ஏரியை அடுத்து, வயல்களுக்கு நடுவில் நிற்கும் வேப்ப மரத்தைப் போய்ப் பார்க்கலாம். ஒரு காலத்தில் இது மிகப் பெரிய அடர்த்தியான மரமாக இருந்தது. அதன் நிழலில் பலர் தங்க முடியும், மழை பெய்தால் ஒரு சொட்டு நீரும் கீழே விழாது. ஆனால், அன்று முதல் இன்று வரை அது கருகி எரிந்து விட்ட நிலையிலேயே நிற்கிறது. வானத்தை நோக்கித் தனது எரிந்து போன விரல்களை நீட்டியவாறு, அந்த நாளை எல்லாருக்கும் நினைவுப் படுத்துகிறது...

அந்தப் பேய் மழையும் இதுவரை எனக்கு நினைவு இருக்கிறது. இந்த ஆண்டு பொழிந்த மழையை விட அப்போது பலமடங்கு அதிகமாகவே பெய்தது; ஆக்ரா பெருஞ்சாலையிலிருந்து எங்கள் ஊருக்கு வரும் இந்தப் பாதை முழுவதுமே தண்ணீரில் மூழ்கி விட்டது; இங்கு வருபவர்களும், இங்கிருந்து செல்பவர்களும் வயல்களின் வழியாகவே நீந்தி வந்தார்கள்; போனார்கள். நம் தாழ்த்தப்பட்டோரின் சேரி ஊருக்கு வெளியில் இருந்தது. அங்கு எத்தனையோ குடிசைகளின் மண் சுவர்கள் ஈரத்தால் இடிந்து விழுந்தன. இருபது இருபத்திரண்டு நாட்களே நிரம்பிய ஒரு குழந்தையும் இடிபாடுகளில் சிக்கிச் செத்துப் போய்விட்டது...

இந்தக் கிழவியை மன்னித்து விடு மகனே! எனது இதயம் நோகும்போது கண்களில் நீர் தாரை தாரையாக வந்து கொண்டே இருக்கும் - ஆமாம்; அந்த மழையில் ஒரு நாள் - இரவு முழுவதும் பெருமழை பொழிந்தது. பிறகு காலையில்தான் சற்று நின்றது. பல நாட்களாக வேலை செய்யாமல் வீட்டில் அடைபட்டுக் கிடந்த ஊர்க்காரர்கள் வேலை செய்யக் கிளம்பினார்கள். சிலர் வயல்களுக்குச் சென்றார்கள். சிலருக்குப் பக்கத்து ஊரில் வேலை இருந்தது. அன்று திங்கட்கிழமையாகும். எதிரே இருக்கும் ராகாபூம் எனும் சிற்றூரில் வாரச் சந்தையும் கூடும். சிலர் அங்குச் சென்றார்கள்.

வானத்தில் அப்போதும் மேகங்கள் சூழ்ந்திருந்தன. மழையைப் பற்றி யார் யார் என்ன சொல்ல முடியும் மகனே? எந்த நிமிடமும் அது பெய்யலாம்; அதுவே நடந்தது. கொஞ்ச நேரம் வரை வெளிச்சம் பரவி இருந்தது. பிறகு, கருமேகங்கள் சூழ்ந்து விட்டன. பகல் நேரத்திலும் இரவு போன்ற இருள் பரவியது. அத்துடன், இருளில் யாரோ வாளை வீசுவது போல் மின்னல்கள் மின்னித் தெளித்தன. பிறகு திடீரென்று பயங்கரமாக மழை பொழிய ஆரம்பித்து விட்டது. இன்று போலவே அன்றும் பேய் மழை சாடியது. சூறைக் காற்றும் ஓவென்று வீசியது.

ஊரிலிருந்து பலர் வெளியே சென்றிருந்தார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நனைந்தவாறே உயிருக்குப் பயந்து ஊருக்குள் ஓடிவந்தார்கள்; இதர கிராமங்களுக்குச் சென்றவர்கள் அங்கே தங்கி விட்டார்கள் - ஆனால் தனித் தனியாகச் சென்றிருந்த நான்கு பேர்கள் மட்டும் ஒருவர் பின் ஒருவராக அந்த மரத்தின் அடியில் வந்து சேர்ந்தார்கள். அவர்களின் தலை விதி அவர்களை அங்குக் கொண்டு வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த நால்வரில் எவரையும் நீ பார்த்திருக்க முடியாது மகனே - அப்போது நீ பிறந்தும் இருக்க மாட்டாய். என்றாலும் அவர்களுடைய பெயர்களைக் கேள்விப்பட்டு இருப்பாய். இப்போது நமது ஜமீன்தாராக இருக்கிறாரே அவருடைய அண்ணன் டாக்டர் ஹரிராம் சிங் - பலம் வாய்ந்த வாலிபன் அவன். பரந்த மார்பு - பெரிய கம்பீரமான மீசைகள் - கல்யாணம் ஆகவில்லை. அக்கம் பக்கத்து ஜமீன்தார்களின் குமாரிகள் எத்தனையோ பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள். ஊரினுள் குதிரை மீதேறி அவன் வரும்போது பெண்கள் கதவுகளுக்குப் பின்னால் மறைந்து அவனைப் பார்ப்பார்கள். இனிமையாகப் பேசுவான். அவன் பேசும்போது, கேட்பவர்கள் மெய்மறந்து நிற்பார்கள். அத்தகைய மாந்திரீக சக்தி அவன் பேச்சுகளில் இருந்தது... இன்று என் கண்களுக்கு என்ன ஆகிவிட்டதோ மகனே! இவை கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கின்றனவே...

அவன் ஜமீன்தாரின் மகன்தான் என்றாலும் குடிமக்களிடம் இனிமையாகப் பழகுவான்; பரிசுகளும் வழங்குவான். ஊர்க்காரர்களும் அவனை விரும்பி வரவேற்பார்கள். ஜமீன்தாராக இருந்தால் ஹரிராம் சிங்கைப் போல் இருக்க வேண்டும் என்று மக்கள் பாராட்டுவார்கள். வேட்டையாடுவதிலும் அவனுக்குப் பிரியம் அதிகம். அன்றும் நீர்க்கோழிகளை வேட்டையாட அவன் கிளம்பியிருந்தான். ஆனால், ஏரியை அடைந்தபோது இடியோசைகளால் அவனுடைய குதிரை மிரண்டது. அது சகதியில் போய்ச் சிக்கிக் கொண்டது. டாக்டர் ஹரிராம்சிங் தப்பிவிட்டான். ஆனால், குதிரையின் கால் ஒன்று உடைந்து விட்டது. வாயில்லாப் பிராணி வேதனையால் துடிப்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அதைச் சுட்டுக் கொன்று விட்டான். நான்தான் சொன்னேனே, அவன் இளகிய மனம் படைத்தவன் என்று. அங்கிருந்து கால் நடையாகவே தன் மாளிகையை நோக்கித் திரும்பி வரும்போது தான் மழை வந்துவிட்டது. அதனால் ஓடோடியும் சென்று அந்த வேப்ப மரத்தின் கீழே தஞ்சம் புகுந்தான். அவனுக்கு முன்னால் அங்கு மூன்று பேர் நின்றிருந்தார்கள்.

அவர்களில் ஒருவன் பண்டித தருமதாசன். ஒல்லியான உடல் கொண்ட பிராமணன். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு, கழுத்தில் ஜெபமாலை. ஊரில் அவன் ஒருவன் மட்டுமே அதிகமான கல்வி பயின்றவன்; நல்ல புத்திமான் - அவனுக்கு வேதங்களும், சாஸ்திரங்களும் மனப்பாடம் என்று சொல்லிக் கொண்டார்கள். தரும ஈடுபாடு, சமூக பரிபாலனம் என்பதே அவனுடைய வேலையாக இருந்தது. அதன், காரணமாகவே அதர்ம, நாத்திக எண்ணங்கள் எங்கள் கிராமத்தில் பரவாமல் இருந்தன. ஒருமுறை எங்கிருந்தோ சீர்திருத்தவாதி ஒருவன் வந்துவிட்டான். இந்துக்கள் வகுப்பு வாதபேதங்களை மறந்து விட்டு தாழ்த்தப்பட்ட ஹரிசனங்களையும் சகோதரர்களாகக் கருதவேண்டும் என்று பிரசாரம் செய்தான்.

ஆனால், இந்தத் தருமதாசன் அவனுக்கு நாத்திகன் என்று பட்டம் சூட்டி ஊரை விட்டே துரத்தி விட்டான். தருமதாசன் திருமணமாகாதவன் என்றாலும், ஊரில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் நிலை நாட்ட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். ஊரில் எந்த வாலிபனும் எந்தப் பெண்ணும் ரகசியமாக எதுவும் பேசிவிட முடியாது. பஞ்சாயத்தில் அவர்களுக்குக் கடினமான தண்டனைகளை விதிக்கச் செய்வான். அதனால் பாவ வழியில் செல்லும் துணிவு யாருக்கும் பிறக்கவில்லை.

ஆனால், பெண் ஒருத்தி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தாள் - பொற்கொல்லன் மௌலுராமின் மகளான சந்தாதான் அவள். அந்த அபாக்கியவதி பாவத்தின் படுகுழியில் எப்படியோ வீழ்ந்து விட்டாள். கல்யாணமாவதற்கு முன்பே குழந்தையை ஈன்றெடுத்து விட்டாள்; பெற்றோர்கள் அவளைக் கொடுமைப்படுத்தினார்கள். பஞ்சாயத்துக்காரர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பயமுறுத்தினார்கள். ஆனால், அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்பதை அவள் கடைசிவரை வைராக்கியமாகச் சொல்லவே இல்லை; ‘நான் பாபம் செய்தவள் - என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு மட்டுமே கொடுங்கள்’ என்று அவள் சொல்லி விட்டாள். அதனால், இந்தப் பண்டிதனின் சொற்படி, அவளையும் அவளுடைய பாவத்தின் சின்னத்தையும் ஊரைவிட்டு வெளியேற்றி விட்டார்கள். அவளுக்குச் சேரிக்காரர்கள் புகலிடம் அளித்திருப்பதாகப் பிறகு தெரிய வந்தது. இதைக் கேட்டு இந்தப் பண்டிதன் சொன்னான்: “இதில் வியப்பிற்குரிய விஷயம் ஏதும் இல்லை; பாவிகளையும், தாழ்த்தப்பட்டோரையும் பகவான் ஒன்றாகவே பாவிக்கிறார்கள்; ஒதுக்கியே வைத்திருக்கிறார்...”

அங்கு, மரத்தின் அடியில் நின்றிருந்த இரண்டாவது மனிதன், லேவாதேவிக்காரனான முல்சந்த் என்பவன். அவன் ராஜபூரில் வசித்தான். ஆனால், இந்தக் கிராமத்திற்கு ‘கொடுக்கல் வாங்கல்’ செய்ய வருவான். அவசியம் ஏற்படும்போது அவனை நாடிச் சென்றால், பணம் எப்படியும் கிடைத்து விடும்; வட்டி மட்டும் அதிகமாக இருக்கும். அதுவும் முதல் வருட வட்டியை ஆரம்பத்திலேயே பிடித்துக் கொள்வான். ஆனால், இது லேவாதேவி நடைமுறையின் நியதி என்றே எல்லாரும் சொன்னார்கள் - மூல்சந்த் மிகவும் இனிமையாகப் பேசுவான்; சமய சந்தர்ப்பங்களில் உதவியும் செய்கிறானே!...

அவன் தரும காரியங்களில் பங்கு பெறுவதுண்டு; கதாகாலட்சேப நிகழ்ச்சி என்றாலும், பூஜை உற்சவம் என்றாலும், கீர்த்தனை என்றாலும், பக்தி பாடல்களின் நிகழ்ச்சி என்றாலும் எல்லாரையும்விட அதிகத் தொகையை நன்கொடையாக அளிப்பான். தான தருமங்களில் பெரிதும் உற்சாகம் காட்டுவான். பொற்கொல்லன் மௌலுராமின் மகள் சந்தாவை ஊரை விட்டு வெளியேற்றியபோது இந்த வட்டிக்கார மூல்சந்த், பண்டிதனை மிகவும் பாராட்டினான்; “பண்டிதரே! நீங்கள் பெரிதும் கருணை காட்டி விட்டீர்கள்; எங்கள் ஊரில் இப்படி நடந்தால் நாங்கள் இரண்டு கால்களையும் வெட்டி விடுவோம்” என்றான் அவன்.

ஒரு விசேஷம் என்னவென்றால் மூல்சந்த் எப்போதும் வெள்ளை ஆடைகளையே அணிவான்; சலவையிலிருந்து புதிதாக வந்தது போல் அவை பளிச்சென்று இருக்கும். மெல்லிய வெள்ளைச் சட்டை; கைகளில் சுருக்கங்கள் விழுந்து இருக்கும். வெள்ளை வேஷ்டி. நறுமணமும் எப்போதும் கமழும் - தூரத்திலிருந்தே வட்டிக்காரன் வருகிறான் என்பது சென்ட் வாசனையால் தெரிந்து விடும்; அவனுடைய வியர்வையின் துர்நாற்றம் அதிகமாக இருப்பதாகவும் அதனால் ‘சென்ட்டை’ அளவுக்கு மீறி அவன் பூசிக் கொள்கிறான் என்றும் பலர் பேசிக் கொண்டார்கள்.

“உம்முடைய ஆடைகள் இவ்வளவு சுத்தமாக எப்படி இருக்கின்றன. நீங்கள் ஒரு நாளில் இரண்டு மூன்று தடவை ஆடை மாற்றுகிறீரா?” என்று யாரோ கேட்டு வைத்தார்கள். “இல்லை சகோதரரே இது சலவையின் சிறப்பு அல்ல; இது இதயத்தின் சுத்தமாகும் - உமக்குத் தெரியுமே... இதயம் சுத்தமாக இருந்தால் உடலும் சுத்தமாக இருக்கும். உடல் சுத்தமாக இருந்தால் இதயமும் சுத்தமாக இருக்கும்” என்று பதிலளித்தான் இவன். மூன்றாவது ஆள், ரஹ் மத்கான் என்பவன் - இப்போது கிராம அதிகாரிகளுக்கு முன்னைப் போல் அத்தகைய முக்கியத்துவம் இருக்கவில்லை. ஆனால், அந்த நாட்களில் ரஹ் மத்கானே இந்த ஊரின் ‘ஐந்தா வது ஜார்ஜ்’ மன்னனாகவும், பெரிய துரை, சின்னதுரை, கலெக்டர் எல்லாமே அவன்தான் - நிலங்களை அளப்பது, சேர்ப்பது, கழிப்பது, எல்லாமே அவன் கையில் தான் இருந்தது.

கிராம மக்கள் அவன் சொற்படி ஸ்டாம்பு காகிதங்களிலும், அரசாங்க காகிதங்களிலும் கையெழுத்துப் போட்டு விடுவார்கள். நிலங்களைக் குறித்து எந்த வேலைகளாக இருந்தாலும், ரஹ்மத்கான் சந்தோஷமாகச் செய்து விடுவான். வேலை முடிந்த பிறகு மக்களும் அவனை மகிழ்வித்து விடுவார்கள். அதை ‘லஞ்சம்’ என்று சொன்னாலும் சரி, வேறு பெயருடன் குறிப்பிட்டாலும் சரி - ஆனால் அவன் கம்பீரமான மனிதனாகவே இருந்தான். நீண்ட தாடி இருந்தது. நோன்பு தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்தான். ஊரின் பள்ளிவாசலில் ஐந்து வேளையும் தொழுகைக்கு வருவான். ஒருமுறை ஹஜ்ஜுக்கும் போய் வந்தான். இந்த ஆண்டும் ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தான். ஆனால், அவனை மகிழ்விப்பதற்காக உழவர்கள் சிறிது அதிகமாகவே ‘காணிக்கைகளை’ச் செலுத்தினார்கள் அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.

அவர்கள் இருவரையும் கடுமையான பர்தாவிற்குள் வைத்து மூடி இருந்தான். இளைய மனைவிக்கு இருபது இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். அவனுடைய மகள் போலவே காட்சி தருவாள். பட்டாணிய வகுப்பைச் சார்ந்தவன் அவன் அதனால் கோபக்காரனாகவே இருந்தான். நல்ல உடல் கட்டு வாய்ந்தவன். ஒருநாள் ஆத்திரத்தில் நெசவுக்காரனான நூர்பக்ஷை அறைந்து விட்டான். அவன் தாடை வீங்கி மூன்று நாட்கள்வரை படுக்கையில் கிடந்தான். அவனுடைய குற்றம் என்னவென்றால், அவன் - ரஹ்மத்கானை சரியாக மகிழ்விக்கத் தவறிவிட்டான். ஒருநாள் சக்கிலியன் ருல்தூ என்பவன் மீதும் கோபம் வந்து விட்டது. அவனைத் தூக்கித் தரையில் வீசி எறிந்து விட்டான்; தாழ்த்தப்பட்டோருடன் அவன் இவ்வாறே ஆத்திரத்தை வெளிப்படுத்துவான்.

ஆனால், ஜமீன்தாருடனும் பண்டி தருடனும், லேவாதேவிக்காரனுடனும் அவன் பயபக்தியுடன் நடந்து கொள்வான். தாசில்தாரோ, உதவி தாசில்தாரோ, தாணாக்காரரோ, வேறு பெரிய அதிகாரிகளோ ஊருக்கு விஜயம் செய்யும்போது இவன் ஓடோடியும் சென்று அவர்களுக்கு வரவேற்பு அளிப்பான். தடபுடலாக உபசாரங்களும் செய்வான். அதைப் பார்த்து எல்லாருமே அவனைப் பாராட்டுவார்கள்; “நமது ரஹ்மத் பெரிய மனது படைத்தவன்; அவன் அதிகாரிகளைத் தெரிந்து வைத்து இருக்கிறான்...”

ஆமாம்; இந்த நால்வரும் அந்த மரத்தின் கீழே நின்றவாறு மழை நின்றுவிட வேண்டுமே என்று பிரார்த்தனை செய்தார்கள். அன்று இடியோசையும் மின்னலும் அதிகமாகவே இருந்தது. ஒருமுறை மின்னல் மின்னியபோது, அதன் ஒளியில், ருல்தூ சக்கிலியனும், அந்தப் பொற்கொல்லனின் மகளான சந்தாவும் மழையில் நனைந்தவாறு அந்த மரத்தை நோக்கி ஓடி வருவதை அவர்கள் பார்த் தார்கள்.

ஆம், மகனே! ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. வயோதிகனான ருல்தூ சக்கிலியனிடமே ஊர்க்காரர்கள் அனை வரும் காலணிகளைத் தைத்துக் கொள்வார்கள். அதனால் சிறுவர்கள் அனைவரும் ருல்தூ சித்தப்பா என்றே அவனை அழைப்பார்கள். சந்தாவை ஊரிலிருந்து வெளியேற்றி விட்டதும், அவள் சேரியின் வழியே அழுதவாறு சென்றாள். அவளைப் பார்த்ததும் ருல்தூ அவளிடம் சொன்னான்: “மகளே! நீ இந்த நிலையில் எங்கு செல்ல முடியும்? உனது தந்தையின் கோபம் தணியும் வரை நீ என்னுடைய வீட்டிலேயே தங்கி இரு.” குருடனுக்கு இரண்டு கண்களைத் தவிர வேறு என்ன வேண்டும்? சந்தா ருல்தூவின் குடிசையில் வசிக்கலானாள். இந்த விஷயத்தை அறிந்த அவளுடைய தந்தைக்கும் ஆறுதலாகவே இருந்தது.

“நல்லதாகப் போய்விட்டது. ருல்தூ தாழ்த்தப்பட்டவன் என்றாலும் எனக்குத் தெரிந்தவன், மிகவும் நல்லவன். இங்கும் அங்கும் அலைந்து திரிவதை விட அங்கு இருப்பது நல்லது தான்” என்று சொல்லி விட்டான். ஆனால், உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர், ‘நீசனின் வீட்டில் இருப்பதை விட சந்தா குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்’ என்று சொன்னார்கள். சில முரட்டு வாலிபர்கள் ருல்தூவின் குடிசைக்கு தீ வைத்து விட வேண்டும் என்று துடித்தார்கள். ஆனால், பெரியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். மழை வேறு இடைவிடாமல் பெய்தது; யாருமே வெளியே கிளம்ப முடியவில்லை. வானமே கிழிந்து மழை கொட்டும் போது தீ எப்படி பற்றி எரியும்?

நான்தான் சொன்னேனே மகளே, இவை எல்லாம் பகவானின் லீலைகள் என்று. ருல் தூவின் குடிசையைத் தீயிலிருந்து மழை காப்பாற்றி விட்டது. ஆனால், அதன் சுவர்கள் கரைந்து தரை மட்டமாகி விட்டன. அப்போது ருல்தூ தனது கடையில் காலணி ஒன்றைச் செய்து கொண்டு இருந்தான். சந்தாவின் குழந்தைக்குக் குளிர்சுரம் வந்துவிட்டது. அதனால் பக்கத்து குடிசைக்காரியிடம் ஏதாவது மருந்து கேட்டு வாங்கலாம் என்று அவள் வெளியே வந்தாள், குழந்தை மட்டும் குடிசையினுள் தனியாக இருந்தது. திடீரென்று சுவர்கள் இடிந்து விழ கூரையும் பெரும் சத்தத்துடன் விழுந்தது. ருல்தூவும் சந்தாவும் ஓடோடியும் வந்தார்கள். ஆனால், அதற்கு முன்பே குழந்தை நசுங்கிச் செத்துப் போயிற்று. பாவம், சின்னஞ்சிறு உயிர்; அது கூச்சலும் போடவில்லை. மௌனமாகவே உயிரை விட்டுவிட்டது. “மகனே! நான் யோசனை செய்கிறேன் - சந்தாவின் குழந்தை உயிருடன் இருந்திருந்தால் இன்று உன்னைப் போல் வாலிபனாக இருப்பான்!”

தன்னுடைய குழந்தையின் சடலத்தைப் பார்த்து சந்தா ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. கற்சிலைபோல் நின்று விட்டாள். அவள் தனது துக்கத்தை அடக்கிக் கொண்டதால் அவளுடைய மூளை கலங்கி விட்டது. அவள் பைத்தியகாரியாகி விட்டாள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

“இன்று என் கண்களுக்கு என்ன ஆகிவிட்டது மகனே; மழை நின்று விட்டால் உன்னால் முடிந்தால் பஜாரில் இருக்கும் வைத்தியர் கடையிலிருந்து மருந்து கொண்டு வந்து கொடு... நானும் என்னென்னவோ பேசுகிறேனே” ஆமாம் ருல்தூவும் களங்கம் அடைந்த சந்தாவும் அந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். பண்டித தருமதாசன் கூச்சலிட்டான் - “ருல்தூ! இங்கு எங்கே வருகிறாய்? - அங்கேயே நில்!!” - ருல்தூ தயங்கி நின்றான். அவன் கைகளைக் குவித்து மன்றாடினான். “கருணை காட்டுங்கள், பண்டிதர் ஐயா! புயலிலும் மழையிலும் எங்கு செல்வோம்? குடிசையும் இடிந்து தரை மட்டமாகி விட்டது. சந்தாவின் குழந்தையும் நசுங்கி இறந்து போய்விட்டது. நாங்கள் இருவரும் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொள்கிறோம்.”

இதைச் சொல்லி விட்டு அவன் முன்னோக்கி காலடி எடுத்து வைத்தபோது, “போதும், அங்கேயே நில் - சிறிய மரம்தான் இது. பெரிய மாளிகை ஒன்று மில்லை ஒரு மூலையில் ஒதுங்கி நிற்பதற்கு -” என்று தருமதாசன் உறுமினான்.

“டாக்டர் ஐயா, அவர்களை இங்கு வர விடாதீர்கள். இல்லாவிட்டால் நாம் அனைவருமே கொல்லப்படுவோம் - இது சத்தியம்” என்று டாக்டர் ஹரிராம் சிங்கிடம் சொன்னான்.

“என்ன பண்டிதரே என்ன ஆபத்து?” என்று கேட்டான் ரஹ்மத்கான்.

“உங்களுக்குத் தெரியும். பாவிகள் மீதும். கொடுமை இழைப்பவர்கள் மீதும் இடி விழும் என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ஒருவன் ஒதுக்கப்பட்டவன்; மற்றொருத்தி களங்கம் அடைந்தவள்; இவர்களை இங்கு விட்டால் நாமும் இவர்களுடன் சாக வேண்டியதுதான்” என்றான் பண்டிதன்.

ரஹ்மத்கான் “து ஆ’ அப்படியென்றால் இவர்களை இங்கு வர அனுமதிக்கக் கூடாது.”

“வேறு என்னவாம்?” வட்டிக்காரனும் பேசினான். “இவர்களுக்காக உயிரை விட்டுவிட முடியுமா?”

பைத்தியக்காரிபோல் டாக்டர் ஹரிராம் சிங்கை இமைகளை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சந்தா இப்போது நடுங்கினாள். அவளுடைய இந்த நிலையைக் கண்ட ருல்தூ மீண்டுமொரு முறை மன்றாடினான். “ஐயா! இவளுக்கு நிமோனியா பிடித்து விடும் - இவளும் செத்துப் போவாள்; இவள் குழந்தை முதலிலேயே குடிசை விழுந்து செத்து விட்டது.”

சந்தா இப்போதும் டாக்டரை வெறித்து நோக்கினாள். ஆனால், அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். தனது துப்பாக்கியை எடுத்து அதன் குழாயை ஆராய்ந்தான். இந்தப் பேச்சுகளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று அலட்சியமாக இருப்பவன் போல் காட்டிக் கொண்டான் - மகனே! அவன் ஜமீன்தார் இல்லையா? நீசர்களின் வாழ்வு - மரணப் பிரச்சினைகளைப் பற்றி அவனுக்கு என்ன அக்கறை?

சந்தாவின் குழந்தை செத்து விட்டது என்பதைக் கேட்ட தருமதாசன், “நல்லதாகப் போய்விட்டது - பாபத்தின் சின்னம் அழிந்து விட்டது” என்றான்.

“ஆமாம், பண்டிதர் ஐயா, நடக்க வேண்டியது நடந்து விட்டது...” ருல்தூ பேசினான். “நான் சந்தாவை அவளுடைய தந்தையிடம் அழைத்துச் செல்கிறேன். எந்த காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டாளோ, அந்தக் குழந்தையே இருக்கவில்லை. அதனால் பிராயச்சித்தம் செய்த பிறகு வீட்டில் வைத்துக் கொள்ளலாமே -”

வட்டிக்காரன் வழக்கம்போலவே தனது இனிமையான வார்த்தைகளால் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்தான் - “அதெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், ருல்தூ, இப்போது இங்கிருந்து போ - வேறு மரத்தைத் தேடு - இந்த மரத்திற்குக் கீழே இடம் இருக்கவில்லை -”

“ஐயா, இங்கு வெகுதூரம் வரை வேறு மரம் இல்லை என்பது தங்களுக்குத் தெரிந்ததே” என்று கெஞ்சினான் ருல்தூ -

வட்டிக்காரன் சமாதானம் சொல்ல முயன்றான் “ருல்தூ! சற்று யோசித்துப் பேசு. தரும சாஸ்திரங்களில் எழுதி இருப்பதை நினைத்துப் பார் - உங்கள் இருவர் மீதும் இடி விழுந்து விடக்கூடும்; எங்களையும் சேர்த்துக் கொல்ல விரும்புகிறாயா? என்னைப் பற்றி ஒன்றும் கவலை இல்லை. ஆனால், பாரேன், இங்கு டாக்டர் ஐயா இருக்கிறார்கள் - பண்டிதர் இருக்கிறார், - கிராம அதிகாரி இருக்கிறார் -”

இதனிடையில் அந்த அபாக்கியவதி சந்தா குளிரால் நடுங்கியவாறு, சேற்றில் நழுவி விழுந்து எழுந்து நின்று அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டார்கள். அவளுக்குப் பின்னால் ருல்தூ ஓடோடியும் வந்தான்; “மகளே என்ன செய்கிறாய்? நின்று விடு மகளே” என்று அவன் கத்தினான். அதே நேரத்தில் அவர்களுக்கு எதிரில் மேகங்களுக்கு இடையில் மின்னல் மின்னியது. இடியோசையால் பூமி நடுங்கியது.

பண்டிதன் உரத்த குரலில் கூவினான் - “டாக்டர் ஐயா! துப்பாக்கியை எடுங்கள் இல்லாவிட்டால் நாம் அனைவரும் செத்து;...”

டாக்டர் துப்பாக்கியை எடுத்து தோள் மீது வைத்தான். ஆனால், அவனுடைய கைகள் நடுங்கின. தன்னை நோக்கி துப் பாக்கிக் குழல் நீண்டு இருப்பதைக் கண்டு சந்தா ஆவேசமடைந்து விட்டாள்; “நீங்கள் முதலிலேயே என்னைக் கொன்று விட்டீர்கள், டாக்டர் இப்போது குண்டு சுட விரும்பினால் இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள், நானும் எனது குழந்தையிடம் சென்று விடுகிறேன்” என்று கத்தினாள் அவள், பிறகு மெதுவாக, “உங்கள் குழந்தையிடம் -” என்று சொன்னாள்.

இந்த விசித்திர பேச்சைக் கேட்டு, அவளுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லாரும் உறுதியுடன் நம்பினார்கள். தூரத்தில் மேகங்கள் மீண்டும் கர்ஜனை புரிந்தன. இடி விழுவதற்கான ஏற்பாடுகள் நடப்பது போல் - சந்தா முன் நோக்கி ஓர் அடி எடுத்து வைத்ததும் வட்டிக்காரன் கூச்சலிட்டான்; “ஐயா, என்ன பார்க்கிறீர்கள்? துப்பாக்கியால் சுடுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பைத் தியக்காரி எங்களுக்காகவும் சாவைக் கொண்டு வந்து விடுவாள் -”

ஆனால் மகனே, டாக்டரின் துப்பாக்கி சுடவில்லை. அதற்கு முன்பே பகவானின் வாள் வீச்சு நடந்து விட்டது. அவன் துப்பாக்கியின் விசையை அழுத்த முயன்றபோது பயங்கரமான பிரகாசம் தோன்றியது.

கதிரவன் தரையின்மீது வந்துவிட்டது போல் இருந்தது. ருல்தூவும் சந்தாவும் அச்சத்துடன் தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். பலம் வாய்ந்த இடியோசை கேட்டது; ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள் முழங்குவதுபோல் இருந்தன. தரை நடுநடுங்கி விட்டது.

ருல்தூவும் சந்தாவும் கீழே விழுந்து விட்டார்கள். மின்னல் தங்களைத் தாக்கி விட்டது என்று அவர்கள் நினைத்தார்கள்...

ஆனால் மகனே! பகவான் யாரை வைத்து இருக்க விரும்புகிறாரோ அவர்களை யாரால் அழிக்க முடியும். அவர்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது எதிரே அந்த மரம் எரிந்து விட்டதைக் கண்டார்கள். உச்சி முதல் வேர் வரை அது கறுத்து விட்டது - கீழே நான்கு சடலங்கள் பொசுங்கிக் கிடந்தன; டாக்டரின் கையில் அவனது துப்பாக்கி இருந்தது - ஆனால், அதன் குழாயை இடி தாக்கி விட்டது! அதனால் அது பல கோணங்களில் மெழுகு வர்த்தியைப் போல் - முடங்கி விட்டது.

“ஆமாம் மகனே! இந்திரதேவனின் வானத்து வாளுக்கு எதிரில் நமது மனிதர்களின் வாட்கள் என்ன செய்து விட முடியும்? இவை எல்லாம் நமது கருமங்களின் வினையாகும்; வேறு என்னவாம்? எதை விதைப்பியோ, அதைத்தானே அறு வடை செய்வாய்! சோளத்தை விதைத்து நெல் விளைச்சலை அறுவடை செய்ய முடியுமா? உலகில் என்னென்ன நடக்கின்றனவோ அவற்றைச் சிவபெருமானின் கண் பார்த்துக் கொண்டே இருக்கிறது. வெள்ளை ஆடைகளும், உயர்ந்த தலைப்பாகைகளும் செல்வத்தின் செருக்கும் அவரை ஏமாற்றி விட முடியாது. மனங்களின் அழுக்கும் கள்ளமும் கபடமும் மறைந்துவிட முடியாது. எனவே இந்திரதேவரின் வாள் உயரமான மரங்களின் மார்புகளைப் பிளந்தவாறு பாவிகளின் கழுத்துகளை அடைந்து விடுகிறது... என் பேச்சை நீ ஒரு வயோதிக மாதுவின் வெற்றுரைகள் என்று நினைக்கிறாயா, மகனே! அவர்கள் எல்லாம் அங்கே செத்து விட்டார்கள் என்றால் எனக்கு எப்படித் தெரிந்தது என்று நினைக்கிறாயா? ஆனால், நான் பேசுவது பொய் அல்ல, மகனே...

ஓ, மழை குறைந்து விட்டது. இப்போது வெளியே போனால் கடைத்தெருவிற்கு, வைத்தியர் கடைக்குச் சென்று, ‘என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது, மருந்து கொடுங்கள்’ என்று சொல்லு, பைத்தியக்காரி சந்தா அனுப்பி இருக்கிறாள் என்று சொல்லு.

ஆனால் நீ முதலிலேயே சென்று விட்டாயே, என் வெற்றுரைகளைக் கேட்டு அலுத்து விட்டாயா? இறுதியில் நீயும் என் கதையைக் கேட்கவில்லை - யாரும் என் கதையைக் கேட்பதில்லை - நான் பைத்தியக்காரி அல்லவா...” மழை நிற்கும் வரை தங்கி இருக்கலாமே, மகனே


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com