Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2008

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் ஆண்டு எது?

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.

`நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்'

என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் தருகிறது.

தொடர் ஆண்டு

தலைநகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு, அரசர்கள் முடிசூட்டிக் கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைபிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட் டயங்கள் மூலம் தெரிகின்றன.

நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது.

தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துக் கூறியதாகவும் தெரியவில்லை.

60 ஆண்டு வந்த வழி

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக்கிடந்த கடவுள், மதம், சாதி, மூட நம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள
நெருக்கத்தையும் பயன்படுத்திப் `பிரபவ' முதல் `அட்சய' வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்குமேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.

அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக்கதை வருமாறு:

‘ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைளுடன் கூடி இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன் `நான் இல்லாப்பெண்ணை வரிக்க' என்றான்.

இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார். எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காணமுடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன், நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமா பதம் பெற்றனர்.

இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவான்கள் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. 70 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் மிகக் குறுகியதினாலும் சரித்திர நூற்குப் பயன்படாது.

ருத்ரோத்காரி என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியப்படாமையால் இந்த அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை.

மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, சரித்திர நூலுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறியமுடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குமாரர்கள்தாம் 60 தமிழ் வருடங்கள் என்பது கதை. எல்லாரும் குமரர்கள்; குமரியே இல்லை. ஆண்டுக்கதையிலும் ஆண் ஆதிக்கமே! ஆணும் ஆணும் கலவி செய்தால் பிள்ளை பிறக்குமா? `எய்ட்சு' நோய் பிறக்குமா?

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது; ஆபாசமானது; அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது; கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது' மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எந்தச் சொல்லும் தமிழ் இல்லை; தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல; அனைத்துச் சொற்களும் வடமொழி வடிவங்களே. தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறானவையே.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிடு வதற்கு முடியவில்லை.

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டு மிராண்டி மொழி; தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் தாம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவும் தமிழ் அறிவு மொழி என்றும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் விளங்கச் செய்வதற்குத் தங்கள் இறுதி மூச்சுவரை எழுத்து, பேச்சு, பரப்புரை (பிரச்சாரம்) போராட்டம் முதலியவை மூலம் பாடுபட்டார்கள்.

திருவள்ளுவர் ஆண்டு

இந்த ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள்.

திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம சுந்தர பாரதியார், முந்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவார்கள்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை: இறுதி மாதம் மார்கழி; புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு.31 எனவே, ஆங்கில ஆண்டன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2008+31=2039.

தமிழ் நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது.

அரசு அறிவிப்பு

தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட முன் வடிவு 29-1-2008 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலமைச்சர் கலைஞர் இந்த சட்ட முன் வடிவை அறிமுகம் செய்து வைத்தார். இந்தச் சட்ட முன்வடிவுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்தச் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப் பட்டதற்குப் பின்னர், இச் சட்டம் 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம் என அழைக்கப்படும்.

இது சட்டம் ஆனதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் சட்ட முன் வடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனித் தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் சட்ட முன் வடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும், மாநில அரசின் வாரியங்களும், கழகங்களும், தொழில்துறை நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும், உள்ளாட்சி அதிகார அமைப்புகளும் இனி தைத் திங்கள் முதல் நாளையே தமிழ் ஆண்டுத் தொடக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

அனைத்து அரசு ஆணைகள், தமிழ்நாடு அரசிதழ், மாவட்ட அரசிதழ்கள் மற்றும் பிற அரசு வெளியீடுகள் ஆகியவற்றிலும் ஆங்கில நாள்காட்டி ஆண்டுடன் தைத் திங்கள் முதல் நாளே தொடங்கும் தமிழ் ஆண்டையும் குறிப்பிட வேண்டும்.

இதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கு இந்தச் சட்ட முன்வடிவு வகை செய்கிறது.

சனவரி மாதம் 23 ஆம் தேதி மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சட்டப் பேரவையில் உரையாற்றினார். தைத் திங்கள் முதல் நாள் தான் இனித் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பினை அவரது உரையின் மூலம் அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பிற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் கலைஞர் 29-1-2008 அன்று இந்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டிருக்கும் உண்மை என்றும் சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேண்டுகோள்

தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றின் நலமும் வளமும் நாடும் அனைவரும் சாதி, மதம், கட்சி, அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு நின்று 60 ஆண்டு ஆபாச முறையை அகற்றவும் தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டுமுறையைத் தம் வாழ்வில், வழக்கில், வரலாற்றில் பின்பற்றவும் பரப்பவும் வேண்டுகிறோம்.

தமிழ் ஆண்டு முறையைப் பின்பற்றுவோம் நாம்
தமிழர் என்று
நிலை நாட்டுவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com