Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2008

இராஜபக்சே அரசின் மூர்க்கமும் குயுக்தித் திட்டமும்

இராசபக்சே அரசால் அண்மையில் திடீரெனக் கைவிடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் அமல்படுத்துமாறு, விடுதலைப்புலிகளின் சார்பில் செய்து கொள்ளப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்திருப்பதன் மூலம், இப்பிரச்னையில் இலங்கை அரசு காட்டுகின்ற மூர்க்கமும் - பிடிவாதமும் வெளிப்படுகின்றன.
.
நார்வே தூதரின் சமரச முயற்சிகளின் மூலம் 2002ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்பாடு அமலில் இருந்துவந்தபோதிலும், அதைச் சட்டை செய்யாமல் - விடுதலைப்புலிகளை ஒடுக்கப் போவதாகக் காரணம்காட்டி, ஈழத்தில் மனம் போனபடியெல்லாம் முப்படைகளைக் கொண்டு இராபக்சே அரசு தாக்குதல் நடத்திவந்திருக்கிறது.

இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். எனினும், ஈழத்தில் கடந்த சில நாட்களில் இலங்கைப் படைகள் ஓரளவுக்கு முன்னேறிச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதால், இராணுவத்தைக் கொண்டே இப்பிரச்னையை ஒரேயடியாகத் தீர்த்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான முடிவுக்கு கொழும்பு வந்துவிட்டதோ என்று சந்தேகிக்கக் கூடிய விதத்தில், அதன் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

இலங்கையில் நடைபெற்று வருவது கொரில்லாப் படைகளுக்கும் - இராணுவத்துக்கு இடையிலான மோதல் ஆகும். இத்தகைய போரில் திட்டவட்டமான - அறுதியிட்ட வெற்றியை எந்தத்தரப்புமே பெறுவதென்பது அசாத்தியம், அப்படியிருக்க, போர்நிறுத்த உடன்படிக்கையைப் புதுப்பிக்க முடியாது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெகீலியா ராம்புக் வெல்லா என்பவர் கூறியிருப்பதன்மூலம் எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் கால வரையறையின்றிப் போரை நீடிப்பதென இராசபக்சே அரசு தீர்மானித்து விட்டதுபோலும்.

திடீரென ஒருதலைப்பட்சமான தீர்மானத்துடன் இராசபக்சே அரசு போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைவிட்டதற்கு - அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, போரினால் சிதைவுண்டு கிடக்கும் வட்டாரங்களைச் சீரமைக்க நிறுவப்பட்டுள்ள இலங்கைக்கான சர்வதேச நிதியுதவி வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள சப்பானும் - இராசபக்சே அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது

இந்த முடிவு குறித்து, விரிவாகக் கலந்துரையாடுவதற்காக சப்பானின் அமைதித்தூதராக யாசுஷி அகாஷி கொழும்புக்கு வந்துகொண்டிருக்கிறார். இவர் இராசபக்சேவுடன் இப்பிரச்சனை குறித்து விரிவான விவாதங்களை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறத்தில், ஈழத்தின்மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திபடியே - இன்னொருபுறத்தில், ஈழத்துக்கான அதிகாரப் பங்கீடு குறித்த திட்டம் ஒன்றை - அவசர அவசரமாகத் தயாரித்து, அதற்குப் பெரிய இனமான சிங்களர்களின் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தின் ஆதரவைத் தேடிப்பெறவும், அதன்பிறகு - அத்திட்டத்தைப் புலிகள்மீது திணிப்பதென்பது இராசபக்சே அரசின் நோக்கமென கொழும்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதிலிருந்து பெறப்படும் உண்மை என்னவென்றால், ஈழத்தின் பிரதிநிதிகளாக இராசபக்சே அரசு அங்கீகரித்து உடன்பாடு காண விரும்பும் புலிகளுடன் சமத்துவ அடிப்படையில் - அந்தரங்க சுத்தியுடன் கலந்துரையாட ஆட்சிமுறைக் கட்டமைப்பில் முழுசுயாட்சி உரிமையுடைய ஈழம்' என்ற ஈழத்தமிழர்களின் கோரிக்கைக்குப் பதிலாக, இராசபக்சே பலமுறை வெளிப்படையாகக் கூறியதுபோல - ``ஒருமுக ஆட்சிக் கூட்டமைப்பில் ஈழத்தமிழருக்கென ஒரு மாகாணம்'' என்ற உப்புச் சப்பில்லாத உதவாக்கரைத் திட்டத்துக்கு - மக்களின் முத்திரை பதிந்த ஆவணம் என்ற போலிப் பட்டத்தோடு - அதிகாரப் பகிர்வு ஆவணம் என்பதுபோன்ற நாடகத்தை நடத்த இராசபக்சே அரசு துடிக்கிறதுபோலும்.

ஆக மொத்தத்தில், ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு - சனநாயக உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து, இப்பிரச்னைக்குத் தீர்வுகாண இராசபக்சே அரசு தயாராக இல்லை என்பது இந்தக் குயுக்தித் திட்டத்தின்மூலம் வெளிப்படுகிறது. இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுஇந்திய அரசு வாளாவிருக்கப்போகிறதா?

இதுதான் தாய்த்தமிழகத்துக்குத் தமிழினம் எழுப்புகிற கேள்வியாகும். ஏனெனில், ஈழத்தமிழர் தாய்த் தமிழகத்தோடு, குருதியிலும் - சுவாசத்திலும் - நாடித்துடிப்பிலும் சம்பந்தமுடையவர்கள். அவர்களை இராசபக்சே அரசு நசுக்கி வருவதுடன், புழுபூச்சிகளைப்போல நடத்தத் துணிந்துவிட்டது கண்டு தமிழினம் கொதிப்படைந்திருக்கிறது. இத்தருணத்தில், தமிழ்மக்களின் உணர்வுகளை இந்திய அரசு அங்கீகரித்து - ஈழப்பிரச்சனையில், ஈழத்தமிழர் சார்பாகத் தலையிடுவது அவசியமாகும்.

முதலில், போரை நிறுத்திவிட்டு, மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கையை அமலாக்குவதுடன் - ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை, அரசியல்ரீதியாக ஈடுசெய்யும் விதத்தில் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைக் காலம் தாழ்த்தாமல் தொடங்குமாறு இராசபக்சே அரசை நெருக்குவதற்கு - இந்திய அரசு தயங்கக்கூடாது.

இந்தத் தாயகம் ஈழத்தில் தமிழினத்தின் ஓர் அங்கம் அழிக்கப்படுவதற்குப் பச்சைக்கொடி காட்டுவதுபோல ஆகிவிடும் என்பதைத் தில்லி மறக்கக்கூடாது.
நன்றி: `தமிழ் ஓசை’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com