Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2008
தோழர் இரா.நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எந்தவிதமான தியாகத்திற்கும் தயாராயிருப்பவர்கள்தான் பொதுவுடைமைக் கட்சியினர் என்பதை நல்லகண்ணு மூலம் நான் அறிந்தேன். அதனால் தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் விருதினை அவருக்கு அளிப்பது மிகப் பொருத்தமான காரியம் என்றார் முதல்வர் கருணாநிதி. தமிழக அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ் மொழிக்கும், சமுதாயத்திற்கும் பெரும் தொண்டாற்றிய பெருமக்களை நன்றியோடு நினைவு கூரும் வகையில் அப்பெருமக்கள் பெயரிலான விருதினைத் தமிழறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் வழங்கி கௌரவித்து வருகிறது.

அவ்வகையில் 2007 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணுவிற்கு இதற்கான அரசின் உயர்மட்டக் குழு அறிவித்திருந்தது. இவ்விருதினை வழங்கும் அரசுவிழா 16.1.2008 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. விருதினை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது :

தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரா. நல்லகண்ணு செய்துள்ள சேவையை, தியாகத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

சில தினங்களுக்கு முன்பு என்னை சந்தித்த சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினரான பீட்டர் அல்போன்ஸ் இரா.நல்லகண்ணு தொடர்பான ஒரு தகவலை என்னிடம் கூறினார்.

ஒருமுறை தஞ்சை மாவட்டத்தில் வகுப்புக் கலவரம் இரு சமூகத்தினரிடையே நடந்தது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். வீடுகளைத் தீக்கிரையாக்கினர். அமைதியை நிலைநாட்ட அரசுத் தரப்பில் அனைத்துக் கட்சியினரையும் கொண்ட சமரசக் குழு ஏற்படுத்தப்பட்டது. அதில் நல்ல கண்ணுவும் இடம் பெற்றிருந்தார். எதிர்பாராதவிதமாக நல்ல கண்ணுவின் மாமனார் அச்சமயத்தில் இறந்து விட்டார். அத்துயரச் செய்தி நல்லகண்ணுவிற்குக் கிடைத்தது. உடனே அவர் தனது உறவினர்களிடம் மாமனாரின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்யும்படி கூறி, தான் வர முடியாது. சூழலையும் விளக்கி விட்டுத் தொடர்ந்து அங்கேயே இருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் படும் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இரா.நல்லகண்ணு நல்லவராக இருந்தாலும் இந்த அம்பேத்கர் விருதினை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கே தர வேண்டும் என சிலர் எனக்குத் தெரிவித்தனர். கடிதமும் எழுதினர்.

அம்பேத்கரை ஒரு சாதி வளையத்திற்குள் அடக்கக் கூடாது. இரா.நல்லகண்ணு அனைத்துத் தரப்பு மக்களும் சாதி வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பாடுபடுபவர். அதற்காகக் குரல் கொடுக்கிற கட்சியில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர். அதனால் இவ்விருதினை அவருக்குத் தருவதில் எந்தவிதத் தவறும் கிடையாது. இரா.நல்லகண்ணு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தவர் என்று சொல்லப்படுவதை அவரும் ஏற்றுக்கொண்டது கிடையாது. நானும் ஏற்க முடியாது. ஏனெனில், பொதுவுடைமைக் கட்சியில் இருப்பவர்களும், திராவிடக் கட்சியினரும் இதனை ஏற்கமாட்டார்கள்.

தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் பட்ட வேதனை, கொடுமை, சாணிப்பால் தண்டனைக்கும், சவுக்கடிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி ஆளாக்கப்பட்டார்கள், அனுபவித்தார்கள் என்பதை நானும் அதே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் அவற்றைக் கண்டு கொதித்திருக்கிறேன், வேதனைப்பட்டிருக்கிறேன். அந்த குறிப்பிட்ட மக்களுக்காக உழைத்தவர், பாடுபட்டவர், அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் என்ற அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் பெயரிலான இந்த விருது நல்லகண்ணுவிற்குத் தரப்படுவது மிகப் பொருத்தமானது என்றார் முதல்வர் கருணாநிதி.

தோழர் இரா.நல்லகண்ணுவைப் பற்றி சிறுகுறிப்பு

திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு ஆண்கள், ஆறு பெண்கள். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே இரா.நல்லகண்ணு பாரதி பாடல்களில் ஈர்க்கப்பட்டார். தூத்துக்குடிக்கு வரும் தேசியத் தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் வழியாகச் செல்வார்கள். அவர்களை வரவேற்று நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆர்வத்தோடு செயல்பட்டார்.

மெகபோன் பிரச்சாரம் செய்தல் - கூட்டம் நடக்கும் போது பெட்ரமாக்ஸ் விளக்கை சுமத்தல் என இரா.நல்லகண்ணுவின் தேசபக்த பணி தொடங்கியது. உலக மகா யுத்தத்தின் போது யுத்த எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட்டார். அன்றைய உணவுக் கமிட்டி ஒன்றை அரசு அமைத்தது. இந்தக் கமிட்டியில் மிராசுதாரர்கள் வசதி படைத்தவர்கள் ஆகியோருடன் பள்ளி மாணவன் இரா.நல்லகண்ணுவும் இணைக்கப்பட்டார். ஏழை எளிய மக்களுக்கும் தலித்துகளுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப் பாடுபட்டார்.

போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்தில் நாங்குனேரி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரை உள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார். இப்போது திரு. இரா.நல்லகண்ணுவிற்கு 83 வயது நிறைவு பெறுகிறது.

வயது, பதவி ஆகியவற்றையெல்லாம் கடந்து இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர் டாக்டர் அம்பேத்கர் - ஒளி வீசும் சுடர், வெண்மணி தியாகிகள் கவிதை (தொகுத்தவர்), டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை, மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு), தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள், பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள், விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு), தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆம் தோழர் இரா.நல்லகண்ணுவின் தியாகப் பயணம் இன்னும் தொடர்கிறது. இனியும் தொடரும்.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளாக 25 ஆண்டுகள் பணியாற்றினார். கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கும், தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்டிருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com